Friday, January 8, 2016

கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் (18.12.2015) கவிஞர் மன்னார் பெனில்

பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது.

வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது.





இதன் தொடரில் இன்று 18.12.2015ம் திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் 19வது இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார். இலங்கையின் இளம் படைப்பாளியான கவிஞர் மன்னார் பெனில் அவர்கள். “ஒரு படைப்பானிளன் படைப்பு வெளிவந்து விட்டால், அதற்கு ஆரோக்கியமான விடயம் நல்ல அறிமுகம். அந்த அறிமுகம் அவன் சார்ந்த சமூகத்துக்குள்ளே நின்று விடுகின்றது. அதனை பல்வேறுபட்ட சமூகங்களுக்கிடையில் கொண்டு சேர்க்க முன்வருபவர்கள் அரிதிலும் அரிது. அதனால், அவனது வளர்ச்சி முடங்கிப்போய் விடுகின்றது. ஊக்குவிப்பு இல்லையென்றே கூறுவேன்” என  ஆதங்கப்படும் இவர், இன்னும் பல விடயங்களையும் பகிர்ந்து கொள்ளுகின்றார். அவருடன் நாமும் இணைந்து கொள்வோம்.





01. தங்களைப் பற்றி கல்குடாநேசன் வாசகர்களுக்காக

* மாதோட்டம் மண்ணிலே கருவென்ற விதையாகி பிறந்திட்ட நான் மன்னார் மண்ணிலே முளையரும்பி பயிராக வாழ்கின்றேன். 2002ம் ஆண்டு நடந்த விபத்தினால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு நெஞ்சுப்பகுதிக்கு கீழ் உணர்வில்லாமல் எழுந்து நடமாட முடியாமல் சக்க‌ர நாற்காலியின் உதவியுடன் வாழ்கின்றேன். இந்நிலையில், வாழ்வதென்பது எவ்வளவு துயரம் என்பதனை எழுத்துலே எழுதிட முடியாது. காரணம் அது உணர்வோடு சம்பந்தப்பட்டது. உணர்வ‌ற்ற என் தேகத்துக்குள்ளிருக்கும் இதயத்திலும் காதல் மலர்ந்ததின் காரணமாக 2013ம் ஆணடு திருமணம் முடித்து, இன்று இல்லாளுடன் வாழ்கின்றேன். “இல்லை எனக்கில்லை இல்வாழ்க்கை எனக்கில்லை என் இல்லாள் லீனு என்னுடன் இல்லையெனில்”

02. நீங்கள் காலடிவைத்துள்ள துறைபற்றி? 

* 2002இ ஆண்டு உணர்வுகளின் வெளிப்பாடாய் கண்ணீரோடு பிரசவமான வார்த்தைகளைச் செதுக்கி கவிதைத்துறைக்குள்ளே காலடி வைத்துள்ளேன். “விழிகளை வ‌லியத்தேடி வலிகளுடன் வாழ்ந்தாலும் வாலிபன் நான் வ‌லிகளுடன் வாழ்ந்தாலும் வருந்தாமல் வாழ்கின்றேன் வலியே என் வாழ்வானதினால்…”

03. இவ்விலக்கியத்துறைக்குள் வர ஏதுவாயிருந்தது? 


* ஏக்கம், கவலை, கண்ணீர், வலி, எதிர்ப்பார்ப்பு இவைகள் “சிறகுடைந்த இளஞ்சிட்டு” என்ற புனைப்பெயருடன் என்னை இவ்விலக்கியத் துறைக்குள்ளே அழைத்துவந்தது. இப்போது மன்னார் பெனிலாக.

04. உங்கள் படைப்புக்களில் எவ்வகையான  விடயங்களை உள்ளடக்க விரும்பிகின்றீர்கள்?

 *உயிருள்ள உணர்வின் வெளிப்பாடுகளை. அது என் சார்ந்ததாகவும் இருக்கலாம் சமூகம் சார்ந்ததாகவும் இருக்கலாம்.


 05. நவீனம், மரபு, புதுக்கவிதை, பின் நவீனத்துவம் போன்றவ‌ற்றில் உங்களுக்கு லாவகமானது? 

*புதுக்கவிதைகளையே அதிகம் எழுதுகின்றேன்.


06. இலங்கை படைப்புக்களுக்கு இருக்கும் வாசகர்களின் ஆர்வம்?


 *ஆர்வம் அதிகமாக இல்லை. காரணம் இந்தியப் படைப்புக்களையும் படைப்பாளிகளையுமே வாசகர்கள் நாடுகின்றனர்.


07. பின் நவீனத்துவம் என்ற வரையறையில் வெளிப்படையாகவும் பச்சையாகவும் பல விடயங்கள் கவிதைகளில் பேசப்படுகின்றது. இது பற்றி தங்களது அபிப்பிராயம்? 


*வ‌ரையறை என்ற ஒன்று எல்லா விடயங்களுக்கும் உண்டு. அத்துமீறி நுழைந்து விட்டு அதற்கு ஒரு தலைப்பு வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு நல்ல வாசகனிடத்தில் அது நிலைத்து நிற்காது.

08. இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளீர்கள். முதலாம் நூல் வெளியீட்டுக்கும் இரண்டாம் நூல் வெளியீட்டுக்குமிடையில் நீங்கள் பெற்றுக்கொண்ட அநுபங்கள்? 


*அநுபவம் என்று சொன்னால் ஏராளம் உண்டு. அதனை வாழ்வின் பாடங்களாக எடுத்துக்கொள்கின்றேன். ‘வலியின் விம்பங்களில்’ எனது வலியையும் ‘ஈர நிலத்தை எதிர்பார்த்து’ கவிதைத்தொகுப்பில் எம் ஈழ மக்கள் பட்ட சொல்லொண்ணா துயரங்களையும் வெளிப்படுத்தியுள்ளேன்.

09. சமூக வலைத்தளங்களினூடாக ஏராளமான படைப்பாளிகள் உருவாகிக்கொண்டிருக்கின்றார்கள். இலக்கிய வளர்ச்சியில் இதன் ஆரோக்கியத்தன்மை எவ்வாறு காணப்படுகின்றது?


 *இலக்கியம் என்று சொன்னால் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த இலக்கியத்துக்குள் இணையத்தினூடான பிரவேசம் என்பது காலத்தின் தேவை. ஆகவே, அதுவும் நன்றே இது என் கருத்து.

10. உங்களைக்கவர்ந்த இலங்கை எழுத்தாளர்கள் இலக்கியம் பற்றி?


 *பலர் இருந்தாலும் நன்கு அறிந்தார்களென்று சொல்லுவ‌தனால் பொன் விளையும் புண்ணிய பூமியாகிய மன்னாரில் பலரும் அறிந்தவரும் இலக்கியப்பயணத்தில் பல களம் கண்டாருமான குழந்தை மாஸ்டர் என்று அழைக்கப்படும் செபமாலை மாஸ்டரும் வவுனியாவிலிருக்கும் மூத்த படைப்பாளியுமான தமிழ்மணி அகளங்கன் அவர்களும் நான் அறிந்த இலக்கியவாதிகள் எனக்குறிப்பிடலாம்.


11. உங்கள் படைப்புக்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் விருதுகள் பற்றி? 


*விருதுக்கு நான் இன்னும் தகுதிபெறவில்லை. இலக்கியப் பயணத்தில் இப்போது நான் சிறியவன். பாராட்டுக்கள் பல்வேறு தரப்பட்டவர்களால் கிடைத்திருக்கின்றது. என் எழுத்துக்கள் பலருக்கு நற்பாதை காட்டியுள்ளதை பலரின் வாயிலாக அறிந்துள்ளேன். அதையே வெற்றியாகக் கருதுகின்றேன்.


 12. ஒரு நல்ல “கவிதை” எவ்வாறு பட்டை தீட்டப்பட வேண்டுமென நினைக்கின்றீர்கள்? 


*ஒரு நல்ல கவிதையை எதற்காகப் பட்டை தீட்ட வேண்டும்.


13.ஏன் இலங்கை படைப்பாளிகளுக்கு அதிகமான நூலுருவாக்கம் செய்ய முடியாமலிருக்கின்றது என நினைக்கின்றீர்கள்? 


*ஆம். ஒரு படைப்பாளனின் படைப்பு வெளிவந்து விட்டால், அதற்கு ஆரோக்கியமான விடயம் நல்ல அறிமுகம். அந்த அறிமுகம் அவன் சார்ந்த சமூகத்துக்குள்ளே நின்று விடுகின்றது. அதனை பல்வேறுபட்ட சமூகங்களுக்கிடையில் கொண்டு சேர்க்க முன்வருபவர்கள் அரிதிலும் அரிது. அதனால், அவனது வளர்ச்சி முடங்கிப்போய் விடுகின்றது. ஊக்குவிப்பு இல்லையென்றே கூறுவேன்.


 14. கவியரங்கம், இலக்கிய அமர்வுகள், மூத்த இளைய படைப்பளிகளுக்கிடையிலான சந்திப்புக்கள் என்பன எவ்வாறான வளர்ச்சி நிலையில் காணப்படுகின்றது?


மந்த கதியில் இருப்பதாகவே உணர்கின்றேன். மூத்த படைப்பாளிகளின்  வ‌ழிகாட்டல் இளைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியம்.


 15. நீங்கள் சந்தித்த, சிந்தித்த உங்கள் படைப்புக்கள் மீதான விமர்சனங்கள் பற்றி?


விமர்சனம் என்பது ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கும் விருதாக எண்ணுகின்றேன். அந்த வகையில், அநேக விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. அந்த விமர்சனத்தின் வெளிப்பாடாக எனது இரண்டாவது படைப்பாக வெளிவந்த “ஈர நிலத்தை எதிர்பார்த்து” என்ற தொகுப்பில் காணலாம்.


16. தங்களது வேறு திறமைகள்?



நாடகங்கள் பழக்குவது, நடிப்பது, நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிப்பது போன்றவ‌ற்றில் ஈடுபாடு அதிகம்.


 17. இணைய வாசகர்களோடும் இளைய படைப்பாளிகளோடும் பகிர்ந்து கொள்ள நினைப்பது?


படைப்பாளர்களுக்கு இருக்க வேண்டிய நற்பண்புகள் அதிகம். அந்தப் பண்புகளை பின்பற்றி நடக்க வேண்டும். பண்பாடு, கலாசாரம் போன்றவற்றை கலையினால் பேணிக்காக்க வேண்டும். தனித்து நிற்பதை தவிர்த்து ஒரு அழகான குழுமமாகச் செயற்பட வேண்டும். அப்போது தான் பல அநுபவங்களை நாம் பெற முடியும். வாசக உறவுகளே! உங்களது விமர்சனங்கள் ஒரு படைப்பாளனின் வளர்ச்சிக்கு வழி வகுப்பதாக அமையட்டும்.


நன்றி-கவிதாயினி த.ராஜ்சுகா -

No comments: