Friday, January 29, 2016

கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் (29.01.2016) வேலணையூர் தாஸ்

பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. 

வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது. 

இதன் தொடரில், இன்று 29.01.2016 வெள்ளிக்கிழமை எம்மோடு 25வது படைப்பாளியாக இணைந்து கொள்கின்றார்  இலங்கை, யாழ்ப்பாணம் கொழும்புத்துறையை சேர்ந்த  சித்த மருத்துவரும் எழுத்தாளருமான திரு. கந்தையா சோதிதாசன்அவர்கள். 

வேலணையூர் தாஸ்  என்ற பெயரில் எழுதி வரும் இவர், இலக்கியச் செயற்பாடுகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டு, வளரும் படைப்பாளிகளையும் ஊக்குவிக்கும் ஓர் வழிகாட்டியாகத் திகழ்கின்றார் “வாசகர்களின் பாராட்டே சிறந்த விருதென்பதே எனது நிலைப்பாடு. பொதுவாக பாராட்டு, பட்டங்கள் பெறுவதை நான் விரும்புவதில்லை. தீவிர செயற்பாடே ஒருவரை முதன்மைப்படுத்தும் என நம்புகிறேன்” என்று பண்பட்ட எழுத்தாளருக்கே உரிய பண்புகளோடு இணைகின்றார். இவரின் முழுமையான நேர்காணலைக்காணலோடு இணைந்து கொள்வோமா...



http://kalkudahnation.com/







01. தங்களைப்பற்றி…

நான் கந்தையா சோதிதாசன். வேலணையூர் தாஸ்  என்ற பெயரில் எழுதி வருகிறேன்.  சித்த மருத்துவராகத் தொழில் செய்கிறேன். வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட நான். தற்போது யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் வசித்து வருகிறேன்.  சிறு வயது முதல் கவிதைகள் எழுதி வருகிறேன். எனது கவிதைகள் தினக்குரல், உதயன், வலம்புரி போன்ற பத்திரிகைகளிலும் ஞானம், ஜீவநதி, கலைமுகம் போன்ற இதழ்களிலும் வார்ப்பு, யாழ் ஓசை, உயிர் மெய் ஆகிய இணையத்தளங்களிலும் வெளியாகியுள்ளது. எனது கவிதைத்தொகுதி மழைக்கால குறிப்புக்கள் 2014ல் வெளி வந்தது. 


ராஜ் சுகா:  உங்களது எழுத்துத்துறைப் பிரவேசம் பற்றி? 


வேலணையூர் தாஸ்: சிறு  வயதிலிருந்தே எனக்கு இலக்கியத்தில் ஈடுபாடு அதிகம். நிறைய சஞ்சிகைகள், புத்தகங்கள் வாசிப்பேன். இந்த வாசனைத்தேடல் தான் என்னை எழுதத் துாண்டியதெனலாம். பாடசாலையில் உயர் தர மாணவனாய் இருக்கிற காலத்தில், கையெழுத்துப் பிரதியொன்றில் எனது முதற்கவிதையை எழுதினேன். பின்பு பல்கலைக்கழகத்திலிருக்கின்ற காலத்தில் முரசொலிப் பத்திரிகையில் அதிகமான கவிதைகளை எழுதினேன். இப்படி என் எழுத்துப்பிரவேசம் ஆரம்பமாகியது.


 ராஜ் சுகா:  ‘யாழ் இலக்கிய குவியம்’ அமைப்பின் நிறுவுனராகச் செயற்படுகின்றீர்கள். இதன் ஆரம்பம், வளர்ச்சி, நோக்கங்கள் பற்றி எம்மோடு பகிர்ந்து கொள்ள முடியுமா? 


வேலணையூர் தாஸ்:  தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக செயற்பாடுகளை முன்னெடுத்தலே இலக்கியக் குவியத்தின் பிரதான நோக்கம். அந்த வகையில், யாழ்  இலக்கியக்குவியம் ஆரம்பத்தில் முகநுாலிலே தான் ஆரம்பிக்கப்பட்டது. பின் இதன் செயற்பாட்டு விரிவாக்கத்தின் தேவை கருதி ஓர் அமைப்பாக  30-07-2011ல் உருவாக்கப்பட்டது. இடையிலே சில நிர்வாக மாற்றங்களுடன், இன்று வரை இயங்கி வருகின்றது. தற்போது அமைப்பின் செயலாளராக ஜெ.வினோத், பொருளாளராக நெடுந்தீவு யோகேஸ் ஆகியோர் செயற்படுகிறார்கள். பல இளந்தலைமுறையினரும் மூத்த கலைஞர்களும் எம்மோடு இணைந்து செயற்படுகிறார்கள். இளம் கலைஞர்களை அறிமுகம் செய்தல், மூத்த எழுத்தாளரோடு இணைந்து தமிழ்ப்படைப்பாற்றலை விருத்தி செய்தல், இலக்கியக் கருத்தரங்குகள், நுால் வெளியீடுகள் மற்றும் கலை நிகழ்வுகளை நடாத்துதல். இதோடு, இணையத்தமிழ் வளர்த்தல் என்பன இலக்கியக்குவியத்தின் செயற்பாடுகளாகும். 



ராஜ் சுகா இவ்வமைப்பினூடாக நீங்கள் முன்னெடுத்த செயற்பாடுகள் குறித்து விவரிக்க முடியுமா? 


வேலணையூர் தாஸ் : நான் முதற்ச்சொன்னது போல் பல இலக்கியக் கருத்தரங்குகளை நடாத்தியுள்ளோம். பல நுால் வெளியீட்டுவிழாக்களை நடத்தியுள்ளோம். மேலும், புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் தாயகத்திற்கு வரும் போது, அவர்களைச் சந்தித்து உரையாடுகிற களமாகவும் இலக்கியகுவியம் செயற்படுகிறது. நாம் என்கிற கவிதை இதழை நடாத்தினோம். பொருளாதாரக் காரணங்களால் தற்போது நிறுத்தப்பட்டிருகிறது. தொடர்ச்சியாக வெளியிட முயற்சிகள் எடுக்கிறோம் 


ராஜ் சுகா: இளம் எழுத்தாளர்களின் படைப்புக்கள் பற்றி?


 வேலணையூர் தாஸ்:  இளந்தலைமுறையினா் கூடுதலாக எழுதத் தொடங்கியுள்ளார்கள். இது வரவேற்க வேண்டிய ஒரு விடயம். ஆனாலும், பலா் கூடுதலாக கவிதையே எழுதுகின்றார்கள். இதில் தரமானவையாக சிலருடைய கவிதைகளையே கவனம் கொள்ள முடிகிறது. கவிதை, சிறுகதை, கட்டுரை, இலக்கியமென பல துறைகளில் எழுதுகின்ற இளந்தலைமுறையினரில் கிரிஷாந், அனோஜன், ஆதிபார்த்தீபன், யாதார்த்தன், யோகேஸ், நெதா, மதுசாமாதங்கி, பிரியாந்தி, பிறை நிலா, கெளதமி போன்ற இளம் படைப்பாளிகள் யாழப்பாணத்தில் கவனத்துக்குரிய படைப்புக்களைத் தருகின்றனர். இதை விட, கொழும்பு, மன்னார், மட்டக்களப்பு மாவட்டங்களில் பலர் சிறப்பாக எழுதுகின்றனர். 


ராஜ் சுகா ஒரு படைப்பாளியின் ஆரம்பத்தைச் சரியாக அடித்தளமிடுவது ஏதோ ஒரு ஊடகமாகத்தான் இருக்கும். அந்த வகையில், இன்றைய ஊடகங்கள் பற்றி? 


வேலணையூர் தாஸ்:  உண்மை தான். ஒரு படைப்பாளியின் வளர்ச்சியில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. தினசரிகள், வார இதழ்கள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் என்பன படைப்பாளிகளுக்கு களமமைத்துக் கொடுக்கிறது. வார இதழ்கள் இலக்கியப் பக்கங்களைத் தயாரிக்கும் போது, இடம் நிரம்பினால் காணுமென பொறுப்பில்லாமல் செயற்படுகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாகவே முன் வைக்கப்படுகிறது. இதுவும் ஒரு வகையிலே உண்மை தான். ஊடகங்கள்  தரமான படைப்புக்களை வெளிக்கொணருவதில் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். தங்களது கல்குடா நேசன் இணையத்தளம் போல, ஏனைய இணையத்தளங்களும் இலக்கியத்தை ஊக்குவிக்குமுகமாக தீவிரமாகச் செயற்பட வேண்டும். 




ராஜ் சுகா: தமிழரின் கலை, கலாசார பண்பாடுகளைப் பாதுகாப்பதில், இன்றைய நவீன நாகரிக வளர்ச்சி எவ்வகையான ஆதிக்கத்தினைச் செலுத்துகின்றது.?


 நாகரீக வளர்ச்சியென்பது தவிர்க்க முடியாத நிகழ்வாகும். தமிழரின் கலை, கலாசாரப் பண்பாடுகளை சில நாகரீக உள்ளீடுகள் சிதைக்க முயன்றாலும் உதாரணம் புதிய இசைவடிவம் நாகரீகவளர்ச்சியோடு சேர்ந்து கலை, கலாசார அம்சங்களும் பேணப்படுகின்றன என்பது தான் உண்மை. 


ராஜ் சுகா:  நூலுருவில் வரும் எல்லாப் படைப்புக்களும் தரமானதாக இருக்கின்றதா? அல்லது ஓர் நல்ல வழிகாட்டலினூடாக, பட்டைதீட்டப்பட்டு தரமானதா இருக்கின்றதா? 


வேலணையூர் தாஸ் எந்தவொரு மொழியிலும் அச்சாகும் படைப்புக்கள் எல்லாம் தரமாய் அமைவதில்லை. ஆளுமையுள்ளவர்களால் படைக்கப்படுகின்ற படைப்புக்கள் கவனத்துக்குரியனவாகின்றன. 


ராஜ் சுகா:  மூத்த, இளைய படைப்பாளிகளுக்கிடையிலான உறவு, வழிகாட்டல்கள் தட்டிக்கொடுப்புக்கள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? 


வேலணையூர் தாஸ் எந்தவொருகாலத்திலும் இது அவசியமென உணருகின்றேன். மூத்தபடைப்பாளிகளே, இளையவர்களுக்கு வழிகாட்டியாகவும் மாதிரியாகவும் இருக்கிறார்கள். இளமைக்கே உரிய வேகமாகச் செயற்படுகின்ற எதையும் கேள்விக்குட்படுத்துகின்ற குணாம்சம் சில மூத்தபடைப்பாளிகளால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம். இருப்பினும், ஈழத்தைப் பொறுத்த வரை பல மூத்த படைப்பாளிகள் இளையவர்களுக்கு வழிகாட்டியாகச் செயற்படுகின்றார்கள். இலக்கியக்குவியத்தால் நடாத்தப்படும் அனேக கருத்தரங்குகளில் இடம்பெறும் கருத்தாடலில் மூத்த படைப்பாளிகளோடு சேர்ந்த இளையவர்களும் பங்கெடுக்கிறார்கள்.


ராஜ் சுகா:  உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் விருதுகள் ?


வேலணையூர் தாஸ்:  வாசகர்களின் பாராட்டே சிறந்த விருதென்பதே எனது நிலைப்பாடு. பொதுவாக பாராட்டு, பட்டங்கள் பெறுவதை நான் விரும்புவதில்லை. தீவிர செயற்பாடே ஒருவரை முதன்மைப்படுத்தும் என நம்புகிறேன். 2015ஆம் ஆண்டு தேசிய விருதிற்காக சிறந்த கவிதை நுாலுக்காக  தெரிவு செய்யப்பட்ட  மூன்று நுால்களில் ஒன்றாக எனது மழைக்கால குறிப்புக்களும் தெரிவு செய்யப்பட்டது.


 ராஜ் சுகா உங்களை சீர்தூக்கிப்பார்க்கக்கூடிய அல்லது உங்கள் வளர்ச்சிக்கு உதவியது என நீங்கள் நினைக்கும் விமர்சனங்கள்? 


வேலணையூர் தாஸ் ஆரம்பத்தில் எனது கவிதைகள் மரபுத்தளத்தில் அமைந்தன. சு.வி என அழைக்கப்படும் கவிஞர் சு.வி. வில்வரத்தினம் அவர்களுடைய வழிகாட்டலும் விமர்சனமுமே எனது கவிதைகள் புதிய தளத்தில் செல்லக் காரணமாய் அமைந்தது. 



ராஜ் சுகா தாங்கள் எழுதிய கவிதைகளில் தங்களை அதிகம் கவர்ந்த கவிதை எது? 


வேலணையூர் தாஸ்:  தழிழ்க் கவிதையின் அழகு காதல் கவிதைகளில் தான் அதிகமெனக் கருதுகிறேன். அதனால், காதல் கவிதைகளை அதிகம் எழுதினேன். “மழைக்காலக் குறிப்புக்கள்” தொகுதியில் இடம் பெற்ற இந்தக் காதல் கவிதை எனக்கு மிகவும் பிடித்தது. 


உன்னைபற்றிய கவிதைகள்.
 எங்காவது ஒளித்து வைக்க வேண்டும்
 உன்னைப்பற்றிய கவிதைகளை. 
உன்னைப் பற்றிய கவிதைகளை
 எங்கு ஒளித்து வைத்தாலும்
 காணாமல் போய் விடுகிறது. 
மேற்கு வானத்தின் கடை கோடியில்
 சொருகி வைத்திருந்தேன் 
காற்று எடுத்து சென்று விட்டது 
அந்த அழகிய சொற்கள்
 காலையின் மலர்களிலும் 
பனித்துளி முகங்களிலும் படிந்திருந்தது. 
வண்ணத்து பூச்சிகளும் சூரியனும் 
அதை வாசித்துக் கொண்டிருந்தது. 
ஒளிர்ந்து கொண்டிருந்த வானவில்லிலும்
 கவிதையின் இறுதிபகுதியிருந்தது. 
எங்கு வைக்கலாம் இசையில்
 இணைத்து வைத்தேன் அது 
சிறகு முளைத்து பறக்கிறது 
எண்ணற்ற வயலின் நரம்புகளாகி 
அதிர்ந்த காதல் மொழி 
காற்றில் பரவி 
உலகின் அழகான இடங்களில் 
தங்கி விடுகிறது.
 நதிகளில் கரைந்த சொற்களை 
மீன்களும் பாடுவதாக சொல்கிறார்கள்.
 இறுதியாக உனது பாடல்களை 
கனவுகளில் சேமித்தேன் 
இதை கனவும் களவவாடி சென்றிருக்கிறது 
அதிகாலை துாக்கத்தில் இருந்தவர்களுக்கு 
அன்பளிப்பாக கொடுத்திருக்கிறது. 
தேவ அமிர்ததத்தை உண்டவர்களாய் 
அதை கண்ட்வர்கள் மாறிப்போனார்கள்.
 கூடுகளில் ஒளித்தேன்
 பறவைகளின்  பாடலாயிற்று 
நிலத்தில் மறைத்தேன் 
சோலையாயிற்று 
நிலவில் ஒளிக்கலாம் 
மேகங்கள் விடப்போவதில்லை. 
இப்பொழுது உன்னைப்பற்றிய கவிதைகளை 
நெருப்பில் ஒளித்தேன் 
இளைஞர்கள் நெருப்பில் இறங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.



ராஜ் சுகா நீங்கள் வாசித்து மகிழ்ந்த படைப்பு பற்றி? 

வேலணையூர் தாஸ்: அண்மையில் வந்த நிலாந்தனுடைய யுகபுராணம் என்னை மிகவும் பாதித்த கவிதைத்தொகுதி தமிழருடைய போர்க்கால வாழ்வின் அக விமர்சனமாய் அமைந்த நல்லதொரு படைப்பு. 


ராஜ் சுகா வளரும் படைப்பாளிகளுக்கு நீங்கள் தரும் ஆலோசனைகள்? 


வேலணையூர் தாஸ் இத்தகைய கேள்விகளை தவிர்க்கிறேன் ஏனைய படைப்பாளிகளை போலவே தான் நானும் இதற்கு மேல் அவர்களுக்குச் சொல்ல என்ன இருக்கிறது. எழுத்தை நேசியுங்கள். கூடுதலாக வாசியுங்கள். 

ராஜ் சுகா வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புவது? 



வேலணையூர் தாஸ்: என்றும் உங்கள் ஆதரவே என் போன்ற படைப்பாளிகளைத் தொடர்ந்து எழுத வைக்கிறது. உங்கள் பாரட்டும் விமர்சனமும் தான் நல்ல படைப்பாளிகளைக் கட்டமைக்கிறது என நம்புகிறேன். இயந்திரமயமாய் ஆகிவிட்ட வாழ்க்கைக்குள்ளும் தமிழ் இலக்கியம் வளரப் பணி புரிகின்ற உங்களுக்கும் உங்கள் இணையத்தளத்திற்கும் எனது  நன்றிகள்.

No comments: