Monday, September 30, 2013

'கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை' நூலுக்கான கருத்துரை



வாசிப்பின் அநுபவங்கள் ஒவ்வொருவருக்கிடையிலும் வேறு வேறு 
திர்வுகளை தந்துவிடுகின்றது.சிலருக்கு நுனிப்புல் மேய்வதும் சிலருக்கு ஆழமாக வாசித்து உள்வாங்கிக்கொள்வதும் சிலருக்கு தமது வாசிப்பநுபவத்தை வரிகளாக்குவதும் விபரிப்பதுமென்று இன்னும் பலவாறு வேறுபடலாம். வாசிப்பின்பால் கொண்ட  ஈர்ப்பினாலும் எழுத்துக்களின் மீதான ஈடுபாடுகளினாலும் தாம் சுவைத்த நூல்கள் பற்றிய ரசனைக்குறிப்புக்களோடு நல்ல வாசகியாக அறிமுகமான ரிம்ஸா முகமட் அவர்கள் அக்குறிப்புக்களை தொகுத்து நூலுருவாக்கி நம் மத்தியில் ஒரு விமர்சகராக அறிமுகமாகின்றார்.

2004ம் ஆண்டு 'நிர்மூலம்' என்ற கவிதையோடு அறிமுகமான கவிதாயினி ரிம்ஸா அவர்கள் இலங்கையின் சகல பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வலைதளங்களிலும் தனது படைப்புக்களை வெளியிட்டு வருகின்றார். கவிதை சிறுகதைஇலக்கியம், விமர்சனம் எனும் இலக்கிய தளங்களில் கால்பதித்துள்ள இவர் கணக்கீட்டுத்துறையில் பல பட்டங்களைப்பெற்ற பன்முகத்திறமை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழத்து இலக்கிய பரப்பில் தனியொரு முத்திரையோடு வலம்வரும், வளர்ந்துவரும் இளம்படைப்பாளியான இவரின் நூலுக்கு அணிந்துரையினை திறனாய்வாளர் திரு கே.எஸ். சிவக்குமாரன் அவர்கள் எழுதியிருப்பது சிறப்பாகும் நூலாசிரியரின் முழுவிபரங்களோடும் பின்னட்டைக்குறிப்பை கவிஞர் நஜ்முல் ஹுசைன் அவர்களும் எளிமையான அழகுடனும் நயத்துடனும் முன்னட்டையினை அலங்கரித்திருக்கின்றார் கவிதாயினி ரிஸ்னா அவர்கள்.

கவிதை சிறுகதை நூல்களை மட்டுமன்றி சஞ்சிகை,நினைவுமலர், பாடல்தொகுப்பு, குறுங்காவியத்தொகுதி என ஏனைய நூல்களினையும் விமர்சனரீதியாக இத்தொகுப்பில் காணமுடிகின்றது. ஆழமான வாசிப்பினையும் விரிவான ரசனையுணர்வும் பரந்த தேடலும்கொண்ட நூலாசிரியர் இலங்கையின் சகல பகுதிகளிலுமுள்ள எழுத்தாளர்களின் நூல்களை படித்து விமர்சித்திருப்பது நூலுக்கு மேலும் வலுசேர்த்துள்ளதோடு வாசகர்களாகிய எமக்கும் ஈழத்து எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகத்தினையும் அவர்களின் எழுத்துக்களை படிக்கும் வாய்ப்பினையும் ஆர்வத்தைனையும் பெற்றுத்தந்துள்ளது. ஆவணப்படுத்தப்படவேண்டிய இந்நூலானது ஆய்வுகளுக்கும் ஆர்வமுள்ள வாசகர்களின் நூல் தெரிவுகளுக்கும் சிறந்த வழிகோலாகவும் காணப்படுகின்றது ஆனாலும் ஒவ்வொரு நூல்விமர்சனத்தின்போதும் அந்நூல் வெளிவந்த காலப்பகுதியினை குறிப்பிட்டிருப்பின் பிற்காலத்தில் மேற்குறிப்பிட்டவர்களுக்கு உபயோகமாயிருந்திருக்கும் என்பது முக்கியமானதாகும்.

விமர்சனம்/ திறனாய்வு போன்ற எண்ணக்கருக்களுக்கு வித்திட்டிருக்கும் இவ் ரசனைக்குறிப்புக்களோடு மேலும் பல புதிய புதுமையான எழுத்துக்களோடு எம்மை சந்திக்கும் ஆற்றலுள்ள நூலாசிரியர் ரிம்ஸா முகமட் அவர்களை வாழ்த்துவதோடு இலங்கையின் எழுத்தாளர்கள் பற்றிய தேவையுடையோர் ஐயமற இந்நூலினை பெற்று பயன்பெறலாம் என்ற உறுதிமொழியுடன் விடைபெறுகின்றேன்.



நூல்: 'கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை' விமர்சனநூல்
ஆசிரியர்: ரிம்ஸா முகமட்
வெளியீடு: எஸ். கொடகே நிறுவனம்
வெளியிட்ட தினம்:07.07.2013
விலை:500/=





No comments: