Wednesday, February 20, 2013

இசையமைப்பாளர் டிரோன் பர்னான்டோ ( துருவம் )

http://www.thuruvam.com/2013/02/diron.html





இலங்கையின் முன்னனி இசைக்கலைஞராக வலம்வரும் டிரோன் பெர்னாண்டோ கீபோர்ட் வாத்தியக் கலைஞராக அறிமுகமாகி தனக்கென்று இசைத்துறையில் ஆழமான ஓர் இடத்தினை செதுக்கிக்கொண்டிருக்கும் ஓர் துடிப்புள்ள கலைஞர். சினிமா சாராத இசைப்பயணத்தில் தன்னை தனித்துவமாக அடையாளப்படுத்த துடிக்கும் இவர்  இசையமைப்பாளர், சவுன்ட் எஞ்சினியர், பாடலாசிரியர், பாடகர், வாத்தியக் கலைஞர், மொழிபெயர்ப்பாளர், குரல்பதிவுக் கலைஞர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என பல திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ளார். காலமாற்றத்துக்கும் ரசனை மாற்றத்துக்கும் ஏற்ப இலங்கையிலும் புரட்சிகளை செய்துகொண்டிருக்கும் டிரோனை துருவ நட்சத்திரம் பகுதிக்காக சந்தித்தபோது அவர் எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்கள் துருவம் வாசகர்களுக்காக...



கேள்வி: உங்களின் இசைப் பயணத்தின் ஆரம்பம் பற்றிக் கூறுங்கள்?


பதில்: பள்ளி நாட்களிலேயே ஆரம்பித்துவிட்ட இசைப்பயணம் உயர்தரப் பரீட்சையின் பின்னர் தொழில் ரீதியான பயணமானது. கீபோர்ட் வாத்தியக் கலைஞனாக இசைக்குழுக்களில் வாசிக்க ஆரம்பித்த நான் படிப்படியாக இசைத் தொழில்நுட்பம் மற்றும் தேவையான அளவு இசையையும் கற்றுக்கொண்ட பின்னர் படிப்படியாக இசை அமைத்தலில்  ஈடுபடத் தொடங்கினேன். இந்தப் பயணத்துக்கு இவ்வருடத்துடன் 15 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 


கேள்வி: நவீன இசையுலகில் பல புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுவரும் இச்சூழலில் உங்களது முயற்சிகளில் எவ்வகையான புதிய மாற்றங்களை புகுத்திக் கொண்டிருக்கின்றீர்கள்?


பதில்: புதிய மாற்றங்கள் என்பதை நான், ரசனையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் இசைத் தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் என இரு பிரிவுகளாகப் பார்க்கின்றேன். ரசனை மாற்றம் காலத்தின் கட்டாயம். வர்த்தக ரீதியான இசையில் ஈடுபடும் எம் போன்றவர்கள் அந்த ரசனை மாற்றத்தை அவதானித்து அதற்கு ஈடுகொடுத்து எமது படைப்புக்களை உருவாக்கும் கட்டாயத்தில் இருகின்றோம். அதேவேளை ரசனை மாற்றம் என்கிற பெயரில் வெளிவரும் குப்பைகளுக்குள் சிக்காவண்ண‌மும் எம் படைப்புக்களை பாதுகாப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறேன். 

தொழிநுட்ப ரீதியிலான மாற்றங்கள் தினம்தினம் அரங்கேறுகின்றன. அவற்றை கற்றறிந்து நான் உருவாக்கும் படைப்புகளில் அவற்றை முடிந்தவரை உபயோகித்து வருகிறேன். என்னுடைய ஆரம்பகால படைப்புகளினதும் அண்மைய படைப்புகளினதும் ஒலி துல்லியத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் அதில் ஒரு முன்னேற்றம் தென்படுவதை நிச்சயமாக உணரலாம். அதற்கு மிக முக்கிய காரணம் அண்மைகால தொழில்நுட்பங்களை உடனுக்குடன் உள்வாங்கி என் படைப்புகளில் வெளிப்படுத்துவதேயாகும்

கேள்வி: இன்று பல புதிய இசைக்கலைஞர்கள் உருவாகிக்கொண்டு வருகின்றார்கள். இசைத்துறையில் அவர்களின் வேகமும் தாக்கமும் எவ்வாறு காணப்படுகிறது?


பதில்: நான் இசைத்துறைக்குள் காலடி எடுத்து வைக்கையில் குறிப்பிட்டு சொல்லத்தக்க ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்களே ஈடுபட்டிருந்தனர். ஆனால், இன்று நிலைமை மாறி தொழில்நுட்பத்தில் இளையவர்களுக்குள்ள ஈடுபாடு மற்றும் இலகுவாக பாடலொன்றை உருவாக்கிக்கொள்ள தற்போதுள்ள வசதிகள் என்பவற்றால் ஏராளமானவர்கள் இத்துறைக்குள் காலடி எடுத்து வைக்கின்றனர்.

ஆயினும் நான் சந்திக்கும் பெரும்பாலான இளைஞர்கள் இசையை கற்பதை விட இசையை விற்பதில் மும்முரமாக இருப்பது கொஞ்சம் கவலைக்குரிய விடயம். சில கட்டுக்கோப்புகளுக்குள் கனணி மூலம் கிடைக்கும் சில வசதிகளினால் ஒரு குறுகிய  வட்டத்துக்குள்ளேயே தம் இசையமைப்பை செய்யும் இளையவர்கள் அடுத்த கட்டம்  நோக்கி நகர்வதில் மிக ஆறுதலாகவும்  கவனக்குறைவாகவும் இருப்பது ஏமாற்றத்தைத் தரும் விடயமாக இருக்கிறது.

தொழில்நுட்பம் என்பது எமது இசையறிவை ஒரு படைப்பாக மாற்ற உதவும் ஊடகமே அன்றி இல்லாமையில் இருந்து இசையை உருவாக்கத்தக்க அமுதசுரபி அல்ல என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். 


கேள்வி: அதிகமான கிறிஸ்தவப் பாடல்களை இசையமைத்து பாடியுள்ள உங்களது மற்றுமொரு படைப்பான "Dimensions" என்ற இசைத்தொகுப்பு பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அதுபற்றிய உங்களது அனுபவ‌ங்கள்...?


பதில்: "Dimensions" என்பது முற்றுமுழுதாக எனது தயாரிப்பில் வெளியான எனது இசைத்தொகுப்பு. இலங்கை மற்றும் இந்தியக் கலைஞர்களின் பங்களிப்போடு உருவான இத்தொகுப்பு. இது எனக்கு ஒரு அடையாளமாக இன்று வரை இருந்து வருவதில் பூரண திருப்தி. சினிமா சாராத எம் போன்ற சுயாதீனமான கலைஞ‌ர்களுக்கு இதுபோன்ற இசைத்தொகுப்புகளே அடையாளங்கள் என்ற வரையில் "Dimensions" இசைத்தொகுப்பு என் இசை வாழ்கையின் மிக முக்கியமானதொரு வெளியீடாகும். 


கேள்வி: இந்தியக் கலைஞர்களோடு இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் பற்றி கூறுங்கள்?

பதில்: எனது சொந்த தயாரிப்புக்களுக்காக அடிக்கடி நான் இந்தியக் கலைஞ‌கர்களுடன் கடமையாற்றியிருக்கின்றேன். என் வியாபார‌ தேவைகளுக்காக அவர்கள் என் இசையில் பாடுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் இலங்கை இந்தியக் கலைஞர்கள் என்ற பாகுபாடு என்னிடம் இல்லை. என் படைப்புக்கு தேவையான கலைஞ‌ர்கள் எவராக இருப்பினும் எந்த நாட்டவராக எந்த மொழி பேசுபவராக இருப்பினும் அது ஒரு பொருட்டல்ல. ஆயினும் நம் எலோருக்கும் தெரிந்த 'இக்கரைக்கு அக்கரை பச்சை' என்கிற மனப்பான்மையுடன் இயங்கும் எம்மவர்களிடையே எமது இசையை வியாபாரம் செய்ய இந்தியக் கலைஞ‌ர்களை அடிக்கடி நாடவேண்டியிருக்கிறது. 

இலங்கை கலைஞ‌ர்களைப் போலல்லாது அங்கே ஏறக்குறைய அனைத்து கலைஞ‌ர்களும் முழுநேரமாக இசைக்குள் மூழ்கியிருப்பதால் அனுபவமும் பாண்டித்தியமும் அவர்களிடையே சற்று தூக்கலாக இருப்பதொன்றும் ஆச்சரியமல்ல. தொழில்நுட்பம் சம்பந்தமான பல முக்கிய விடயங்களை அங்கு பணியாற்றும் போது கற்றுக்கொள்ள கிடைப்பதும் ஒரு குறிப்பிடத்தக்க விடயம். 


கேள்வி: துடிப்பும் தேடலுமுள்ள படைப்பாளியான உங்களுக்குள் இசை மட்டுமல்லாது இன்னும் பல திறமைகள் இருப்பதாக அறிந்தோம். அதுபற்றியும் கூறுங்களேன்?

பதில்: அடிப்படையில் இசைக்கலைஞ‌னாக என்னை நான் இனம்காட்டினாலும் ஊடகம் சம்பந்தமான பல துறைகளில் என் பங்களிப்பு இருக்கிறது. பத்திரிகைத்துறை, விளம்பரத்துறை, பின்னணிக் குரல்கொடுத்தல் என பல துறைகளில்  பங்களிப்புச் செலுத்தி வருகிறேன். 


கேள்வி: சகோதர மொழி படைப்புகளுக்கு கிடைக்கும் வாய்ப்பும் வரவேற்பும் ரசனையும் போல எமது படைப்புக்களுக்கு எம்மவர்களிடையே வரவேற்பு போதியளவில் இல்லை. இதற்கு காரணம் என்ன? இவ்விடயத்தில் ஊடகத்தின் பங்கு எவ்வாறு காணப்படுகின்றது?

பதில்: சகோதர மொழி இசைக்கான பிறப்பிடம் எங்கள் நாடு மட்டுமே. 99% வீதமான சிங்கள மொழிப்பாடல்கள் இலங்கையிலேயே உருவாகின்றன. வேறு எந்தத் தெரிவுகளும் அவர்களுக்கு இல்லை மற்றும் அவசியமும் இல்லை. சிங்கள மொழி பேசும் ஊடங்களுக்கும் அப்பாடல்கள் மட்டுமே பிரதானமானது. எனவே அவர்களின் பூரண பங்களிப்பு இருப்பதில் எந்தவித ஆச்சரியங்களும் இல்லை.

ஆனால் தமிழ் என்று பார்க்கும்போது, இந்தியத் திரையிசைப் பாடல்களுடன் சிக்கிக்கொண்டு எம் படைப்புகள் முட்டி மோதிக்கொண்டிருப்பது மிகப்பெரிய சவால். ஊடகங்கள் தங்களால் முடிந்தளவுக்கு பங்களிப்பு வழங்கி வந்தபோதும் எம் இசை ரசிகர்களின் மனப்பான்மையில் மாற்றங்கள் வரவேண்டும் என்பதே மிக முக்கியமான விடயம். 


கேள்வி: இந்திய இசையுடன் ஒப்பீட்டு ரீதியாக பார்க்கும்போது இலங்கையின் இசைத்துறையானது இன்னும் பல தூரம் பயணிக்கவேண்டியுள்ளதா?

பதில்: தென்னிந்திய சினிமா பாடல்களுக்கு கொட்டிகொடுக்கப்படும் நிதி மற்றும் அதிநவீன வசதிகள் என்பன இன்னும் எங்களிடம் இல்லை. இருப்பினும் முடிந்தளவுக்கு ஒலித்தரத்தை அவர்களுக்கு நிகராக கொண்டுவருவதில் எமது கலைஞர்கள் கணிசமானளவு வெற்றி கண்டுள்ளார்கள். தென்னிந்தியாவுடன் ஒப்பிடுகையில் சிறந்த பாடகர்கள் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், தொழிநுட்பவியலாளர்கள் இங்கும் இருக்கின்றனர். இவர்கள் சரியாக இனங்காணப்பட்டு, அடையாளப்படுத்தப்படாமைதான் இலங்கை தமிழ் இசைத்துறையின் வீழ்ச்சிக்கு காரணமாகும். 



கேள்வி: வளர்ந்துவரும் படைப்பாளிகள், கலைஞர்களுக்கு நீங்கள் வழங்கிவருகின்ற பயிற்சிகள், பங்களிப்புக்களை பற்றி...? 

பதில்: திறமையான இளையவர்களுக்கு என்னால் முடிந்தளவு பங்களிப்பை செய்து வருகிறேன். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியான பயிற்சிகள், ஊடகங்களில் அறிமுகம் செய்தல் போன்று பல விடயங்களை செய்து வருவதோடு இசைக் கலைஞர்களுக்கான ஒன்றியம் ஒன்றையும் உருவாக்கும் முயற்சியில் நானும் சக கலைஞர்கள் சிலரும் தற்போது ஈடுபட்டு வருகின்றோம்.


கேள்வி: உங்களுடைய 'ஸ்ருதி' இணைய வானொலி பற்றிக் கூறுங்களேன்?

பதில்: இணைய வானொலிகள் எண்ணற்றவை இருந்த போதும், அவையும் சினிமா பாடல்களை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகின்றன‌. சினிமா சாராத சுயாதீனமான படைப்புகளுக்காக இந்த இணைய வானொலி உருவாக்கப்பட்டு தற்போது இயங்கி வருகின்றது.

சுயாதீனமான படைப்புகள் எனும்போது, இசை மட்டுமின்றி இலக்கியம் நாடகம் போன்ற‌ பல்வேறு வகையிலான படைப்புக்களும் இதில் அடங்குகின்றன. இது எப்படி இயங்கப் போகின்றது இவ்வானொலிக்கும் கலைஞர்க‌ளுக்கும் ரசிகர்களுக்குமிடயிலான நவீனமுறை தொடர்பாடல் முறைகள் மற்றும் படைப்புகளுக்கான விற்பனை உத்திகள் போன்றவை பற்றி வெகுவிரைவில் அறியத்தரவிருக்கின்றோம்.

கேள்வி: இறுதியாக, நீங்கள் சாதிக்க நினைக்கும் துறை எது? எவ்வகையான இலக்குடன் சாதிக்க நினைக்கின்றீர்கள்? இன்று வரையான சாதனைகளின் வெற்றிகள், விருதுகள் பற்றியும் கூறுங்கள்?

பதில்: இசைத்துறையிலே அதிகமான பங்களிப்பு இருப்பதால் சாதிக்க விரும்பும் துறையும் அதுவாகவே இருக்கிறது. என் படைப்பு அடங்கலாக சுயாதீனமான கலைஞர்களின் படைப்புகள் சினிமா என்னும் மாயையை தாண்டி தனித்துவமாக இயங்க வேண்டுமென்ற நோக்கில் நான் ஆரம்பித்திருக்கும் பல்துறை முயற்சிகளில் வெற்றியடைவதே இப்போதைய எனது இலக்கு. இந்த இலக்கை அடைவதன் மூலமாக எனது மற்றும் என் சக கலைஞர்களின் படைப்புகள் இலகுவில் மக்கள் மத்தியில் சென்று வெற்றி பெரும். 

சாதனைகள் என்று ஒரு பட்டியலிட இன்னும் நான் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. என் பாடலுக்குக் கிடைக்கும் விமர்சனங்கள் வரவேற்புக்களை வெற்றிகளாக கருதுகிறேன். எதிர்மறை விமர்சனங்களிலும் கூட சில வெற்றிகள் அடங்கியிருப்பதை நான் உணர்ந்திருக்கின்றேன். இலங்கையை பொறுத்தவரையில் தேடிவரும் விருதுகளை விட நாமாக தேடி போய் பெற்றுக்கொள்ளும் விருதுகளும் பட்டங்களும் பொன்னாடைகளுமே அதிகமாக இருப்பதால் விருதுகள் தான் ஒரு கலைஞ‌னுக்கு அங்கீகாரம் என்பதில் எனக்கு எப்பொழுதுமே உடன்பாடில்லை.

"உங்க பாட்டு கேட்டேன் ரொம்ப நல்ல இருந்துச்சு" என்று கிடைக்கும் பாராட்டுகளே மனதில் சுமக்கத்தக்க உண்மையான விருதுகள். அப்படியான விருதுகள் அடிக்கடி கிடைப்பதில் திருப்தி.


(நேர்காணல்: ராஜ் சுகா)

No comments: