Monday, August 12, 2013

ஆண்களின் இதய அகராதியில் பெண்களின் அர்த்தம் இதுவா? (பகுதி 2)




ஏற்கனவே இதே தலைப்புடன் இதுபோன்ற மூன்று சம்பவத்தினூடாக உங்களை சந்தித்திருந்தேன் மறுபடியும் இடியிறங்கியதுபோல ஒரு நிகழ்வு அதனை கட்டாயம் எழுதிவிடவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும் போதே இதயத்தில் ஆணியடித்தது இவ்விடயம். இவ்வலியினை உங்களோடும் பகிர்ந்துகொள்வதோடு இது,  தவறு செய்தவர்களை திருத்துவதோ அல்லது அவர்களை மற்றவர்கள் முன் அவமானப்படுத்துவதற்கோ அல்ல மாறாக இப்படியொரு அநுபவம் இனி ஒருவ‌க்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே. ஏமாற்றுபவர்களை குறை சொல்வதாலோ அல்லது அவர்களை திருத்தசெல்வதோ இப்போதைக்கு ஒரு முட்டாள்தனமாகவே தோன்றுகின்றது. நாம் காப்பாற்றப்பட வேண்டுமாயின் நம்மை முதலில் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்ற படிப்பினையை மட்டும் பெற்றுக்கொண்டேன்.


இன்றைய காலகட்டத்தில்  சமூக வலைத்தளங்களுக்குள் சிக்கிக்கொண்டுள்ள நம் இளைய சமூகம் தம்மை அதற்குள்ளேயே தொலைத்துக் கொண்டிருக்கின்றது என்ற உண்மையினை யாரும் மறுத்துவிடமுடியாது இதற்குள் எத்தனையோ முகமூடி கொள்ளையர்கள் உலவிக்கொண்டிருப்பதும் நாம் அறியாமலில்லை. முகமும் முகவரியுமில்லாது பல முகமூடிகள் வெறும் ஏமாற்றுதலுக்காகவே உலவிக்கொண்டிருக்கின்றது என்பதனை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும் இவ்வாறு சிக்கிக்கொண்டபின் உணர்ந்துகொண்ட‌ ஒரு பெண்ணால் கூறப்பட்ட‌ சம்பவத்தைனையே நான் சொல்லவிழைகின்றேன்.






மூன்று வருடங்களுக்கு முன்பு நண்பர்களாக அறிமுகமான இவர்கள் முகநூலில் பரிமாறக்கூடிய அத்தனை விடயங்களையும் நண்பர்களாகவே பகிர்ந்துகொண்டார்கள் விருப்பங்கள்(Like), கருத்துக்கள் (Comment) என அடிக்கடி ஒன்றுவிடாமல் தெரிவித்துக்கொண்டார்கள். மனதளவில் புரிதலுள்ள நண்பர்களான இவர்களின், 'இவர் அவர் என சொல்ல கஷ்டமாக இருக்கின்றது இவர்களுக்கு பெயரொன்று வைத்துவிடுவோம் ம்ம்ம்ம்ம்... நிஷா, சுகுமார்)


வருடமொன்றைத்தாண்டிய அவர்களுறவில் காதல் முளைத்துவிட்டிருந்தது பெரிய அதிசயமேயில்லை. முதலில் சுகுமார்தான் காதலை சொல்லியிருக்கின்றான். சுகுமார் முகநூலில் இடும் அனைத்து இடுகைகளுக்கும் தவறாமல் நிஷா கருத்திடுவாள் இது அவனது நண்பர்களுக்கு சந்தேகத்தை உண்டுபண்ண நிஷாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் (ஆண் நண்பர்கள் என்று தவறாக நினைக்காதீர்கள் பெண் நண்பிகள் ஹி ஹி) இதனை அவனிடம் தெரிவிக்க " இதெல்லாம் அவர்கள் பொறாமையில் சொல்லுகின்றார்கள் தங்கம், நீ என்னை சந்தேகப்படாத நான் உன்னை மட்டும்தான் விரும்புறன். என்னை நிறையபேர் விரும்புவதாக சொன்னார்கள் ஆனால் எனக்கு உன்னை மட்டுந்தான் பிடிக்கும்" என்றாராம் சுகுமார். இதனை உண்மை என்று நம்பிய இந்த அப்பாவி நிஷா பெரிதாக இதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. உண்மையில் நிஷாவை விட சுகுமாருக்கு கிட்டத்தட்ட பதினைந்து வயது வித்தியாசம் இருந்தது அதனை தெரிந்தேதான் அவள் விரும்பியிருக்கிறாள்     (காதலுக்கு கண் இல்லை என்று சொல்வது இதற்குதான் என்பது இப்போதான் புரிகின்றது)





சுகுமாரின் முகச்சாயம் அதிகநாட்களுக்கு தாக்குப்பிடிக்கவில்லை சாயம்வெளுக்கும்போதுதான் தெரிந்தது அவன் ஏற்கனவே திருமணம் முடித்த குழந்தைகளின் தந்தை என்று.  (எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நீர் என்னை விரும்புவீரா விட்டிட்டு போகமாட்டீரே.. என்று சுகுமார் கேட்க 'இல்லை' என்று சொன்னபிறகே தான் திருமணமான விடயத்தினை ஒத்துக்கொண்டிருக்கின்றான்) . உன்னோடு கதைப்பதால்தான் நான் எனது பிரச்சனைகளிலிருந்து கொஞ்சம் நிம்மதியாக இருக்கின்றேன் என்றானாம் அதற்காகவே நிஷா அவனை காட்டிக்கொடுக்கவோ பழிவாங்கவோ அவனை தவிர்க்கவோ முடியாமல் தவித்ததாக கூறினாள். இப்போதும் இந்த அப்பாவிப்பெண் அவனுக்கெதிராக ஒரு வார்த்தைகூட பேசாமல் இருப்பது அவளின் தூய அன்பினையும் அப்பாவித்தனத்தையுமே வெளிக்காட்டிநிற்கின்றது.





தனது முதல் காதல் இப்படி சீரழிந்துவிட்டது, நான் ஏமாந்துவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சியில் தள்ளாடிக்கொண்டிருக்கும் நிஷா வழமைக்கு திரும்பமுடியால் தவித்துக்கொண்டிருக்கின்றாள். தான் இப்போதும் அவனை மறக்கமுடியாமலும் எந்த விடயத்திலும் ஈடுபடமுடியாமலும் இருப்பதாக தெரிவிக்கும் அவள், " அவன் என்னோடு பேசிய அன்பான பேச்சுதான் இதற்கு காரணம். அம்மா, செல்லம், தங்கம் என்றெல்லாம் என்னை அழைக்கும்போது நான் அதற்குள் தொலைந்துவிடுவேன்"என்கின்றாள். தாங்கள் ஒரு கணவன் மனைவியாகத்தான் பேசிக்கொண்டோம் என்று விம்முமவளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் தேடி அலைகின்றேன். சில ஆலோசனைகளோடு மன ஆறுதல் சொல்லமுடிந்த எனக்கு இதே நிலைக்கு இன்னும் ஒருவர் ஆளாகக்கூடாது என்பது மட்டுந்தான் இப்போதைய ஆதங்கம்.   இப்போது சுகுமார் தன்னை முகநூலில் தடைசெய்துவிட்டதாக (Block) கூறும் நிஷா அவனை தொடர்புகொள்ள வேறுவழிகளில் முயற்சித்தும் பலனில்லை என கூறுகின்றாள். இன்னும் சில நாட்களில் வெளிநாட்டுக்கு போகநினைக்கும் அவளின் வாழ்க்கைக்கு  நல்ல வெளிச்சமான எதிர்காலம் அமைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.







இன்னொரு விடயத்தையும் கண்டிப்பாக கூறியே ஆகவேண்டும் இதுபோன்ற கயவர்களால் காதல் என்ற புனிதத்தின் பெயரால் நடத்தப்படும் நாடகத்திற்காக உங்களின் வாழ்க்கையை அழித்துக்கொள்வதோ அல்லது உங்களின் உண்மைக்காதலை நிரூபிப்பதற்காக எதிர்க்காலத்தினை தீர்மானிக்காமல் குடும்பத்திற்கு உங்களை சுமையாக்கிக்கொள்வதாலோ எந்த ந‌ன்மையும் கிட்டிவிடப்போவதில்லை. மாறாக ஏதோ வரப்போகும் ஒரு விபரீதத்திலிருந்து நீங்கள் தப்பிவிட்டீர்கள் என்ற பாதுகாப்பு உணர்வுமட்டும் உங்களுக்கு இருந்தால் போதும். உண்மையில் மனதளவில் இதனை இலகுவாக ஏற்றுக்கொள்வது கடினமானதே ஆனால் அவ்விடயங்களை தவிர்த்து நடப்பதனால் நாளடைவில் இதயம் இயல்பாகிவிடக்கூடிய சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றது. உங்களது வாழ்க்கையினை துரோகத்துக்கு பலியாக்கிவிடாதீர்கள்



சில சுயநலங்களுக்காகவும் சுவாரஸ்யங்களுக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் பெண்களின் வாழ்க்கையினை கையிலெடுக்கும் இவ்வாறான மிலேச்சத்தனமானவர்கள் நம்மத்தியில் இருக்கின்றார்கள். இங்கு நான் அனைத்து ஆண்களையும் சாட வரவில்லை (தொப்பி சரியாக இருந்தால் போட்டுக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் உண்மையில் இவ்வாறானவர்கள் இருக்கின்றார்கள் அவர்களிடமிருந்து உங்கள் சகோதரிகள் நண்பிகளை காப்பாற்ற உதவிசெய்யுங்கள்)





வெறும் 'நம்பிக்கை' 'அன்பு' என்ற பலவீனத்தை பகடைக்காயாக வைத்து பாசங்களை இப்படி பைத்தியக்காரத்தனமாய் மாற்றிவிடும் இந்த மானங்கெட்ட உறவுகளால் எத்தனை மனங்கள் ஊமைக்காயங்களோடு உலவித்திரிகின்றது என்பதனை இவர்கள் புரிந்துகொள்ள வாய்ப்பில்லைதான். வீட்டாரிடம் ஏன் நண்பர்களிடம் கூட இதனை தெரிவிக்கமுடியாமல் இவர்கள் படும்பாடு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. எப்படி இவர்கள் துணிகரமாக துரோகிகளாக வாழ்கின்றார்கள் என்பது ஆச்சரியமடைய  வைக்கின்றது. மிகச்சுருங்கிப்போன இன்றைய நவீன உலகில் அவர்களது முகவரியினை கிழித்துக்காட்டமுடியாதென்று எவ்வாறு நினைக்கின்றார்கள்? எந்த மூலையில் முக்காடு போட்டு ஒளிந்துகொண்டாலும் முகத்திரையை உரித்துக்காட்டமுடியுமென்பதனை  ஏன் இவர்களால் உணரமுடியவில்லை? ஒரே ஒரு காரணம்தான் பெண் என்பவள் தன் குடும்ப கெளரவத்துக்காகவும் சமூகத்துக்கு பயந்தும் வெளியில் வரமாட்டாள் என்ற தைரியம் தான். உண்மையில் இவ்வாறு பல உண்மைகள் மறைந்துகிடப்பதும் அதனால்தான்.


முகநூலில் நண்பர்களாக அறிமுகமாகிக்கொண்டிருக்கும் அல்லது ஏற்கனவே அறிமுகமாகி நல்ல நண்பர்கள் என்ற போர்வைக்குள்ளிருக்கும் அல்லது அது காதலாக மாறிவிட்டிருக்கும் நண்பிகளே, ஒரு சகோதரியாக என்னால் சொல்லக்கூடிய ஒரே ஒரு விடயம், எடுத்த எடுப்பிலேயே நம்பிக்கைக்குள் தொலைந்து உங்களை தேடவேண்டிய சூழ்நிலைக்குள் சென்றுவிடாதீர்கள். எப்போது உங்களது உறவை மற்றவர்கள் முன் சொல்லத்தயங்குகின்றார்களோ,  தவிர்க்கின்றார்களோ அப்போதே உஷாரடைந்துவிடுங்கள்.  ஏமாற்றுபவர்களை தேடி அவர்களை திருத்துவதோ தண்டனைகள் பெற்றுக்கொடுப்ப‌தனைவிட எம்மை நாம் காப்பாற்றிக்கொள்வதே புத்திசாலித்தனமானது. மணிக்கணக்கான நேரங்களை செலவிட்டு மனதை கெடுத்துக்கொள்ளவேண்டாம்.



இது இப்படியிருக்க இக்கதையில் வரும் நாயகன்  சும்மா சாதாரண ஒரு ஜொல்லுப்பாட்டி இல்லைங்க‌ அதுதான் கவலை. இவர் ரொம்ப கெளரவமானவர் அதாங்க இவர் ஒரு ஊடகத்துறையைச்சேர்ந்தவர். சமூசத்தின் அவலங்களை கண்டு ஆதங்கப்படும், சீரழிவுகளை தடுக்கநினைக்கும் அல்லது உலகுக்கு வெளிச்சம்போட்டுக்காட்டி எச்சரிக்கும் மிகப்பொறுப்புவாய்ந்தவர் சொல்லவே வெட்கக்கேடு. இப்படியானவர்கள்தான் இன்றைய நாயகர்கள் தம்மை வெளியில் நல்லவர்களாக காட்டிக்கொண்டு நரித்தனமான காரியங்களை செய்யுமிவர்களை நாக்கைப்பிடிங்கிக்கொண்டு சாகுமளவுக்கு நாலுவார்த்தை கேட்கவேண்டும் போலத்தான் இருக்கு ஆனால் என்ன செய்ய அந்த நாலுவார்த்தையினால் உடைந்துபோன, காயப்பட்டுப்போன மனங்களுக்கு மருந்திடமுடியாமலுள்ளதே. அதானால்தான் இந்த எச்சரிக்கை. கவனம் கவனம் பெண்களே கவனம் எந்த முகமாவது அறிமுகமாகும்போதே முகத்திரைகளையும் சற்று அவதானித்துப்பாருங்கள். அவை போலியாகவும் இருக்கலாம் உங்கள் அதிஷ்டமென்றால் பொன்னாகவும் இருக்கலாம்.









முன்னைய கட்டுரையை படிக்க இங்கே அழுத்தவும்.

http://suga-elizabeth.blogspot.com/2013/04/blog-post_27.html


No comments: