Wednesday, December 26, 2012


தாய்மை

அழியாத பாசமும்
ஒழியாத நேசமும்-இந்த
தெளிவில்லா ஜீவனுக்கீந்தாய்
அமுதம் பருக்கி ஆளாக்கிய
அன்னையுன் பாதம் பணிய
அகிலமளவு காணிக்கை வேண்டுமே
பெற்றகடன் தீர்ப்பதெப்படி …..

சுமைகளைத்தான் சுமந்தாய்
கருவாய்
சுகமாய் ஈன்றாய்
சிசுவாய்
சுகங்களை துறந்தாய்-எனக்காய்
துக்கங்கள் பக்கங்களாய் சேர்ந்தும்-என்
புன்னகையில்
புதைத்துக்கொண்டா யிதையத்தினை…..

உனக்குமெனக்கும் இடைவெளி
தூரமில்லை
உதிரம் தந்த உனதுறவில்
உறுத்தல் ஒன்றும் சொல்வதற்கில்லை
சுயநலமென்ற சொல்லுக்கு
பொருளுமில்லை-நீ
சுமையாயெனை பார்த்ததுமில்லை

பாசத்துக்கீடாய்-நற்
பண்பைக்கேட்டாய்
உன் சொந்தத்துக்கீடாய்-கல்விச்
சொத்தைக்கேட்டாய்
தாயன்புக்கீடாய்
தனயன் யான் எதைத்தருவதம்மா

அன்பைத்தேடி அலையவில்லை
நீயென் அருகிலிருப்பதால்
இழந்த தந்தையன்பும்
குறையாய் தெரியவில்லை-நானுந்தன்
குழந்தையானதால்
தேற்றமில்லா
தோழமைக்கண்டு கலங்கவில்லை-நீயெனக்கு
தோள் கொடுத்ததால்

உனதுதிரத்தில்
உணவும் தந்தாய்
உறவும் தந்தாய்-இந்த
உலகையும் தந்தாய்
உன் கடன் தீர்க்க-எந்த
உதவி கைமாறாகுமம்மா…???

No comments: