Thursday, January 17, 2013

நாளை எதுவும் நடக்கலாம்


சுவாசிக்கும் மூச்சுக்காற்றை
திடீரென அறுத்துவிடலாம் -அது
துடிக்கின்ற இதயவாசலை
துண்டித் தெறிந்து விடலாம்
நாளை எதுவும் நடக்கலாம்....


பிரகாசித்த விளக்குத்திரியை
ஊதியணைக்கலாம் -அது
முளைவிட்ட இளங்குருத்தை
முறித்து வீசிவிடலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...

அலங்கரிக்கப்பட்ட ம(ன)ணவறை
அடுத்தநொடியே கல்லறையாக்கப் படலாம்
வழமையான புன்னகைக்குரல்கள்
உடனடியாக ஒப்பாரியாக்கப்படலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...

கிளியை எதிர்பார்த்த கூடு
குயிலை நிராகரித்துவிடலாம்-சிலநேரம்
வழியை தொலைத்த குயிலோ
வலியில் மரித்துவிடலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...


பறக்கும் சிறுபறவையை
பருந்து தாக்கிவிடலாம்
சிறகை முறித்துவிட்டு கீழே
த‌ள்ளியும்விடலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...

சிலந்தி வலையாய் பின்னப்பட்ட‌
கனவுச்சுவர்கள் கிழித்தெறியப்படாம்
குழந்தையாய் மகிழ்ந்த மனம்
குற்றுயிராய் புதையுண்டு போகலாம்
நாளை எதுவும் நடக்கலாம்....

நிரப்பிவைக்கப்பட்ட காற்றுப்பை
வெடித்து சிதறலாம் -இல்லை
வரப்பில் விழுந்த மோதிரமாய்
வசந்தம் மூழ்கித்தொலையலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...

தவறவிட்ட சிறுதானியம் 
தனியே முளைத்து எழலாம் -சிலநேரங்களில்
வெட்டியெறியப்பட்ட காயத்திலிருந்து
அரும்பொன்று துளிர்விடலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...


பிடிக்கவில்லையென்றது -நாளை
பிடிகம்பாய் எழுந்துநிற்கலாம்
பிடிமானம் இல்லாமல் துவண்டது
பிரபஞ்சமாய் நிமிர்ந்து பிரகாசிக்கலாம்
நாளை எதுவும் நடக்கலாம்... 

1 comment:

த.எலிசபெத் (ராஜ் சுகா) said...

Fazly Hameed சொன்னது

எத்தனையோ எச்சரிக்கைகளுக்கு நடுவில் ஒரு சிறிய எதிர்பார்ப்பு நாளை. அருமையான கவிதை. நாளை நடக்கவிருப்பது நல்லதாக நடக்கட்டும்.

Razana Manaf சொன்னது

புன்னகைகளைக்கொண்டு சோகங்களை கழுவி விடுங்கள் சுகா ....உங்கள் வாழ்வில் நடப்பதெல்லாம் நன்மையாக அமையட்டும்...!! அழகாக இருக்கு கவிதை பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள் வாசிப்பதற்கு பல நண்பர்கள் உண்டு.


Ashroff Shihabdeen சொன்னது

ராஜ்சுகா கவிஞர் கண்ணதாசன் கவிதைகளைப் படியுங்கள். உங்களுக்கு இன்னும் சிறப்பாகக் கவிதை வரும்.
October 29, 2012 at 7:06am ·


Memon Kavi சொன்னது

அருமை!
October 29, 2012 at 7:09am ·


Shuhanth Shuhumar சொன்னது

எதிர்பார்ப்புக்கள் எல்லாம் நடப்பதில்லை. எதையும் எதிர்கொள்ளும் மனநிலை இருந்தால் நாளை நமதே
October 29, 2012 at 9:24am ·


Amalraj Francis சொன்னது

நாளை என்பது கையில் இல்லை
கையில் இருக்கும் நாளோ நாளை இல்லை..
இதுதான் யதார்த்தம். அனைத்திற்கும் காலம் மருந்திடும்.
October 29, 2012 at 9:49am ·



Rajakavi Rahil சொன்னது

பாடு பொருள் மிக அருமை .
கவிதை சொல்லும் முறையில் சிறிது கவனம் செலுத்தினால்
எதிர் காலத்தில் நல்ல கவிதைகளைப் படைக்கலாம்.
சொற்கள் மீண்டும் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் !
உங்கள் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள் !அண்மையில் உங்களுக்கு விருது கிடைத்ததை அறிந்தேன்
இன்னும் பலப் பல விருதுகள் பெற என் வாழ்த்துப் பூத்தூவல்கள் !
October 29, 2012 at 9:35pm ·

Ramasamy Ramesh சொன்னது

நாளை எதுவும் நடக்கலாம்...
அருமையான வரிகளால் அழுவான நடையில் படைக்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள் அக்கா.