Friday, January 25, 2013
நாளை எதுவும் நடக்கலாம் (02)
கவிவடிக்கும் மையினை
காலம் உறிஞ்சித்துப்பிடலாம்
புவியதிரும் புரட்சிசெய்த
பேனையது உடைக்கப்படலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...
உடைத்து எறியப்பட்டது
உணவுசமைப்பதற்காய் எரிக்கப்படலாம்
உடைகளை துவைப்பதற்கு
உயிருள்ள விரல்கள் குறைக்கப்படலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...
எழுதிட நினைக்கும் நிமிடங்களில்
அழுதபடி யடுப்பூதிட நேரிடலாம்
தொழுதிடா வென் கரங்களில்
தொய்ந்துபோன ஈனக்குரலொலிக்கலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...
சுதந்திர சாம்ராஜ்யத்து சுவாசங்களில்
சுருதிகள் மரிக்கப்படலாம்
வதங்களால் வென்றெடுத்த வரிகளில்
வரட்சிகள் தென்படலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...
நாளையிதுபோல் எதுவும் நடந்திட்டால்
நானுந்தான் காரணம் இல்லை
நானேதான் காரணம்!
திருமணவுறவு இருமன நிறைவாய்
திங்களொலிபோல எழிலேற்றிட
வருகின்ற துன்பமெறிந்து தான்
வாழ்வினை படித்திடலாம்
புரிதலின் தொடக்கமும்
விட்டுக்கொடுப்பின் இறுதியுமே
விடைகாணா விவாகரத்துகளுக்கு
விதிசெய்திடும் வினையமென்கின்றேன்
ஏட்டில் பதித்தவள் நான் என்
வீட்டில் வித்திடுவதில் பிழையென்ன
இல்லறஞ்சிறக்க விட்டுக்கொடுத்தலின்
எல்லைவரை செல்வதில் தப்பென்ன
நாளை எதுவும் நடக்கலாம்...
விட்டுக்விட்டுக்கொடுத்ததா லவ் முற்றுப்புள்ளி
இன்னொரு புள்ளியிட்டு தொடங்கப்படலாம்
தட்டிக்கொடுத்து என்னையது
தனித்துவமாக எழுப்பியும் விடலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...
இரண்டில் ஒன்று
எப்படியும் நடக்கலாம்
திரண்டிடும் சவால்கள்
திறமையால் வெல்லப்படும் என்னால்
வாழ்தலுக்கான உத்தரவாதம்
வழங்கப்பட்டாயிற்று ஏனெனில்
இன்னு மோ ரிருமா தங்களில்
எனக்கு திருமணமாம்...!!
ஊருக்கெல்லாம் தெரியும்
நாம் காதலர்களென்று
உனக்கு மெனக்கும் மட்டுந்தான் புரியும்
நமக்குள் மோதலென்று
நாலும் ஐந்தும் அருகருகே
நானும் நீயும் பிரிவுக்குள்ளே
வீழும் துளிகள் அதிகமிங்கே
விடைகறியா வேள்விக்குள்ளே...
தயவுசெய்து என்
கல்லறைக்கு வந்துவிடாதே
உயிரின் உணர்வறியா உனக்கு
பிணத்தின் உறுதியை
உள்வாங்கிக்கொள்ள முடியாது
காதல்தான்
துரோகம் செய்தது ஏனோ
கடவுளை
கோபித்துக்கொள்கின்றோம்
மலடியின் மனதைகூட
புரிந்த உன்னால்
நீயறிந்த இந்த
மங்கையின் மனதை
புரியமுடியவில்லையா?
இப்போதும் அழகானது!!
நமதான காதல் அழகானது
நமைமீட்டிய நிமிடங்கள் அற்புதமானவை
இப்போதும் சுகமான ஸ்பரிசங்களோடு
இமைகளுக்குள் உலவுகின்றன..
உனக்கு ஞாபகமா,
நம்முடைய பயணங்களெல்லாம்
நிறத்திலும் நினைவுகளிலும்
ஒன்றாகவே இருக்கும்
பூகம்பமாய் கிளம்பும் கோபங்களும்
புன்னகையில் உதிர்ந்துபோகும்
சந்திப்புக்களின் கடைசி நிமிடந்தரும்
பிரிவின் வலிகளுக்கு
வந்துநிற்கும் வாகனத்தையெல்லாம்
தவறவிட்டு
கடைசி வண்டியில் தாவிச்செல்வாயே
இன்று மது இதயத்தில்
ரணத்தோடு ரம்யத்தையும்
தடவிச்செல்கின்றது
நம் காதல் எப்போதும் அழகானது...
நான் காட்டுக் செல்லங்களும்
நீ தந்திடும் கொஞ்சல்களும்
குழந்தையுலகில் நாமிருப்பதான
குதூகல நிமிடங்கள்
அடிக்கடி கண்ணடிக்குமுன்
கண்ணாடிக்கண்களுக்குள்
தொலைந்துபோகு மென் வெட்கங்களும்
அதிர்ந்துபோகு மென் இமைகளுக்குள்
அலையலையாய் புகுந்திடு முன்
சிங்கார சேஷ்டைகளும்
இப்போதும் அழகானதுதான்...
மிச்சமான எனதுணவை
அச்சமின்றி ருசிப்பாயே
நான் பருகியதை
நீயும் பருகி யென்னைபார்ப்பாயே
எல்லாமின்னும்
புயலாய் நெஞ்சத்தை தாக்குகின்றது...
வருங்கால திட்டங்களனைத்தும்
வரலாறு காணாத கானலாய்
வழி தொலைந்து போகின்றது நம்
வாழ்வுக்காய் சேமித்த
சுவாரஸ்யங்கள் ஒவ்வொன்றும்
சுட்டுப்பொசுக்குகின்றது இந்த
வெறுமையான வெட்டாந்தரையில்
என்றாலும் நம் காதல்
அழகான அழகுதான்...
நம் நினைவுத்தடங்கள்
நினைத்து மகிழுமளவுக்கு
நிஜமான அற்புதங்கள்தான்
அதிகபட்ச கோபங்கள்
அரைநாளேனும் நீண்டதில்லை
குறைந்தபட்ச பிடிவாதங்கள்
குழப்பத்தினை தந்ததில்லை இப்போதும்
எப்போதும் நம் காதல்
எழில் மிக்கதுதான்...
உன் குழந்தை தனங்களில்
நான் தொலைந்துபோவதும்
என் குளறுபடிகளில் நீ
குதூகலித்துது மகிழ்வதும்
ஆயிரம் ஜென்மங்களுக்கும்
ஆறாத இவ்வானந்தங்கள் போதும்
என்றென்றும் நம்காதல்
அழகான ஆரோக்கியம்தான்..!!
கொலையினை புரிந்திடாதே!!
உயிர் கொல்லுதலை விட
மனங்கொல்லுதலே
மா பெருங் கொலையென்கின்றேன்
நொந்து நொந்து மரணித்திடும்
நோவினை தந்துவிடாதே -எவருக்கும்
உன் வார்த்தையில்
உன் குணத்தில்
உன் கோபத்தில்
உன் வெறுப்பினில்
உன் வேடிக்கையிலென்று
எதிலுமோர்
மர்மக் கொலையினை புரிந்திடாதே!!
படிக்க முயலாதே...
தயவுசெய்து
மனிதனை படிக்க முயலாதே
பாவம் நீ
சந்தர்ப்பம் வரும்வரை காத்திரு
சட்டென முடிவுகொள்ளாதே எவரும்
நல்லவரே வேளை வரும்வரையில்...
உடனடியாய் உறுதிபடுத்தாதே
உறவுகளெல்லாம்
உயிராய்த்தான் விம்பம் காட்டும்
தயவுசெய்து
மனிதனை படிக்கமுயலாதே..
காற்றெனத் தழுவும்
கத்தியாயும் வீசும் இலாபமில்லையெனில்
கசக்கியுமெறிந்திடும் கடதாசியாய்
வானவில் திரைபோடும்
வாயார வாழ்த்துரையுமீந்திடும் நீ
வலுவிழந்த தறிந்தால் வழியிலே
விடைகொடுத்து மனுப்பிடும்
தயவுசெய்து
மனிதனை படிக்க முயலாதே..
உண்டது ஓரிலையில்

என்றாலும்
உதவியொன்று நீ தரதவறின்
உன்நிலை பரிதாபமே
தயவுசெய்து
மனிதனை படிக்க முயலாதே...
சாதித்துக்கொண்டேயிருப்பேன்!
உதிர்ந்து விழும் நீர்க்கொப்புளங்கள்
உயிரின் வலிகளை உணர்த்திச்செல்கின்றது
உணரப்படாத அந்த ஆத்மார்த்த நேசம்
உருப்பெறா கர்ப்பமாய் கலைந்துபோனது!
நிஜங்கள் அழிந்துபோவதில்லை
நீர்த்தும் போவதில்லை
வாதித்த வலிகளெல்லாம்
போதித்த வழிகளினூடாக
சாதிக்க அழைத்ததென்னை நானும்
வீதிக்கு வந்த விதி நினைந்து
சாதிப்பேன் சாதிப்பேன் சாதித்துக்கொண்டேயிருப்பேன்!
இடிக் குறங்கும் விழிகளாய்
அடிக்கு விடுபட்டு வந்தேன்
தடுக்கி விழுந்த தடயம்
முடக்கிய வழி திறந்தது
முயல்வேன் முயல்வேன்
எதுவந்தபோதும்
முயன்றுகொண்டேயிருப்பேன்!!!
Thursday, January 24, 2013
01.வாழ்தல் பற்றிய புரிதல்
வா வென்றவுடன் வருவதில்லை
வீழ்ந்து எழும்போதும்
விபத்தில் தப்பும்போதும்
தா னாய் வந்துவிடுகின்றது!!
02.பலவந்தமாய்
உமைவிட்டுப் போகும் எதையும்
துரத்திப்பிடிக்காதீர்
சிலநேரங்களில்
அதுவே உனக்கான
அதிஸ்டக்கதவாகவும் இருக்கலாம்!!
03.உன்னால்

கொடுக்கமுடியும்
என்னால்
வழிகளை
கொடுக்கமுடியும்
ஏனெனில் நான்
துரோகங்களிலிருந்து
புதிதாய் முளைத்தவள்!!
04.சிலருக்கு
முகமூடிகள்தான் அழகு
நிஜங்கள் வெளிப்படும்போது
நிலமைகள் கலவரப்பட்டுவிடுகின்றது
அவர்களுக்கு
மாயைகள்தான் அழகு!!
05.துன்பத்தில் உன்னால்
சிரிக்கமுடியுமா
ஏன் முடியாது
முடியும்!
துளியளவு துரோகத்தில் கூட
துவண்டுவிடும் நானே
முதன்முதலாய் சிரிக்கின்றேன்
வலிகளுக்குள்தான் வாழ்க்கை
வழிகளுக்கதுதான் நம்பிக்கை!!
Thursday, January 17, 2013
கல்லறைப் பிணமாய்
நினைவுகளுக்குள் அடைபட்டு
மீளமுடியாதவளாய் நான்
விண்மீனாய் புன்னகைத்து
வண்ணமயிலாய் மகிழ்ந்தாலும்
சிறகையுடைத்து சிறைசெய்யும்
உன் கோபங்களில் நான்
கல்லறைப்பிணமாய்...
வேண்டுமென்றே வெறுத்தாலும்
வேண்டாமென்றே போகின்றது வாழ்க்கை
கரையுமில்லை ஓடமுமில்லை
கரைசேரமுடியா ஆழமென்று
கண்டவர்கள் சொல்லியும்
தரைவழியே சென்றிட
துளிக்கூட விரும்பியதில்லை தீயை
தொடத்துணியும் குழந்தையாய்...
உனதான அலட்சியங்கள்
எனக்கான மரணவாசல்கள்
ஏனிந்த ஒற்றாஇ நேசத்துக்காக
உலகமே சொற்பமானது
ஏனுனது அன்பிற்காய் மட்டும்
உறவுகள் கூட அற்பமானது?
இத்தனை வியாகுலங்கள் பொழியுமென்
இதயவேதனையை அற்பாமா யெண்ணாதே
உன் கோபங்களில் நான்
கல்லறைப் பிணமாய்...
நாளை எதுவும் நடக்கலாம்
சுவாசிக்கும் மூச்சுக்காற்றை
திடீரென அறுத்துவிடலாம் -அது
துடிக்கின்ற இதயவாசலை
துண்டித் தெறிந்து விடலாம்
நாளை எதுவும் நடக்கலாம்....
பிரகாசித்த விளக்குத்திரியை
ஊதியணைக்கலாம் -அது
முளைவிட்ட இளங்குருத்தை
முறித்து வீசிவிடலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...
அலங்கரிக்கப்பட்ட ம(ன)ணவறை
அடுத்தநொடியே கல்லறையாக்கப் படலாம்
வழமையான புன்னகைக்குரல்கள்
உடனடியாக ஒப்பாரியாக்கப்படலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...
கிளியை எதிர்பார்த்த கூடு
குயிலை நிராகரித்துவிடலாம்-சிலநேரம்
வழியை தொலைத்த குயிலோ
வலியில் மரித்துவிடலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...
பறக்கும் சிறுபறவையை
பருந்து தாக்கிவிடலாம்
சிறகை முறித்துவிட்டு கீழே
தள்ளியும்விடலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...
சிலந்தி வலையாய் பின்னப்பட்ட
கனவுச்சுவர்கள் கிழித்தெறியப்படாம்
குழந்தையாய் மகிழ்ந்த மனம்
குற்றுயிராய் புதையுண்டு போகலாம்
நாளை எதுவும் நடக்கலாம்....
நிரப்பிவைக்கப்பட்ட காற்றுப்பை
வெடித்து சிதறலாம் -இல்லை
வரப்பில் விழுந்த மோதிரமாய்
வசந்தம் மூழ்கித்தொலையலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...
தவறவிட்ட சிறுதானியம்
தனியே முளைத்து எழலாம் -சிலநேரங்களில்
வெட்டியெறியப்பட்ட காயத்திலிருந்து
அரும்பொன்று துளிர்விடலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...
பிடிக்கவில்லையென்றது -நாளை
பிடிகம்பாய் எழுந்துநிற்கலாம்
பிடிமானம் இல்லாமல் துவண்டது
பிரபஞ்சமாய் நிமிர்ந்து பிரகாசிக்கலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...
ஆத்மார்த்தம் நிலையானது
ஞானமழிக்கும் மோகந்தேடாதே
காதலில்
வானமிஞ்சும் மேன்மையை நாடு!
அற்பமிந்த தேகம்
ஆழமானதே நேசம்
புரிந்துகொண்ட வாழ்தலில்
பரிவாய் வந்திடும் வசந்தம்
இந்த நிமிடங்கள் அழகு
இந்த நேசக்காதல் ஆச்சரியம்
இந்த இதய உணர்வுகள் இன்பம்
இந்த ஆத்மார்த்தம் நிலையானது
அணுவணுவாய் காதல்ஸ்பரிசங்களை
ஆழமாய் அநுபவித்திடு
வெற்று தேகம் மட்டும் காதலல்ல
நிறைந்த அன்பே காதல்
நிராகரித்திடாதே ஓர்நாள் உன்னையே
நிந்தித்து வருந்தாதே
பெண்ணால் நிமிர்ந்தவர் ஏராளம்
பெண்ணால் சரிந்தவரும் ஏராளம்
இரண்டிலும் உண்மைகள்தான்
கொப்பளிக்கின்றன -அது
உண்மைக்காதலையே
ஒப்புவித்து நிற்கின்றன
ஞானமழிக்கும் மோகந்தேடாதே
காதல் புனிதமானது அதை
காமத்தால் கறையாக்கி
கன்னியர்பால் பழிசூடாதே...!!
கண்ணீர்!!
கண்ணீர் ஒரு மந்திரம்!
கண்ணீர் ஒரு வரம்!
கண்ணீர் இதய ஊற்று!
கண்ணீர் இன்ப ஸ்பரிசம்!
ஆத்திரம் பெருகும்போதும்
ஆனந்தத்தில் உருகும்போதும்
கண்ணீர் ஒரு வரம்...
துரோகத்தை தாங்கி
துளித்துளியாய் மறந்துபோக
கண்ணீர் ஒரு வரம்...
தாளாத உணர்வுகளை
தள்ளிவிட்டு சுவாசிக்க
கண்ணீர் ஒரு இதய ஊற்று...
தோல்விகளின் ஈரத்தை
துடைத்துவிட்டு எழுந்திட
கண்ணீர் ஒரு இன்பஸ்பரிசம்...
இதயபாரத்தின் இறுக்கங்கள் குறைந்து
இன்ப உறக்கந்தழுவிட
கண்ணீர் ஒரு மந்திரம்...
துணையும் தேவையில்லை
தோழனும் தேவையில்லை -தனிமை
கண்ணீர் ஒரு வரம்!!
(தினகரன் 04.11.2012)
அழிந்தே போனது...
ஒரேநொடியில் எல்லாமே
உதிர்ந்து போனது
விண்ணை முட்டிய
வாலிபக் கனவுகள்
விதையாய் விழுந்த
வாழ்க்கை கவிதைகள்
வகை வகையாய் சேர்த்த
எதிர்கால கதவுகளத்தனையும்
அக்கினியாய் விழுந்துதெரித்த
அந்த ஒற்றைவார்த்தையில்
சிதந்தே போனது...
எதிர்பார்ப்புக்கள் மட்டுமல்ல
எனதான எல்லாமே
அடையாளமில்லாது அணுவணுவாய்
அழிந்தே போனது...
எல்லாமே அறிந்திருந்தும்
எனக்குள் ஒரு
இதயமிருப்பதை மட்டும் நீ
அறியாமல் விட்டது அநியாயம்தான்!!
பஞ்சருகே தீவினையாய்!!
வாய்மொழி வீரர்தாமவர்
வழக்கங்களில் இனிமையில்லை
பொய்மையின் வித்தகரா யவர்
பொறித்ததெதிலும் சத்தியமில்லை...
சொல்லடி கல்லடிகளென்று
சொந்தவிடயமெல்லாம் தெருவினில்
வல்லவர் நல்லவரென்று
வார்த்தையில் மட்டும் சுத்தராய்...
பண்பில்லாக் கயவரெல்லாம்
பார்போற்றும் பதவியிலாம்
அன்பேயில்லா அக்கிரமத்தாரெல்லாம்
அழகான மேடையிலாம்...
ஊருக்கெல்லாம் உபதேசமாய்
உருக்கும் மொழியிறைப்பார்
பெயருக்காக சபைநடுவினில்
பொய்யாயவர் புன்னகைப்பார்...
நெஞ்சிலே வஞ்சனையும்
நேர்மையிலா எண்ணங்களும்
பஞ்சருகே தீவினையாய்
பச்சையாக வதைமறைப்பார்..
எத்தனைதான் புகழ்சேர்ந்திடினும்
ஏராளந்தான் பூத்துமலர்ந்திடினும்
தப்பான வழிப்பயணங்கள்
தரணியிலென்றும் நிலைத்திடுவதில்லை...!!!
31st of October 2012
வருடமொன்று கழிந்துபோகின்றது!
வாழ்க்கை ரசத்தில் கொஞ்சம்
கரைந்து போகின்றது!
முதுமையின் சாயம் பூசப்படுகின்றது!
இளமையின் மாயம் உறிஞ்சப்படுகின்றது!
மரணவாசலுக்கான வழியில்
ஓரடி முன்னே நகரப்படுகின்றது!
மகிழ்ந்துகொள்ள முடியவில்லை!
மனதார வாழ்த்தினை ஏற்றமுடியவில்லை!
இது விழாவல்ல
வாழ்வின் விபரீதம்!
குழந்தை மணம் கழுவப்பட்டு
குழப்பத்திற்கான ஆரம்பம்!
இனிப்பை பங்கிட்டு
இன்பம் பகரேன்!
இளமையின் விபத்தை
இயற்றி மகிழ்வேன்!
கடந்துபோன காலந்தனில்
கால்பதிக்கா இடமெல்லாம்
தரிசாய் காய்ந்து கிடக்கின்றது!
இது பூரிப்பின் நிமிடங்களல்ல
ஆயுளின் பகுதியொன்று
இறந்த காலம்!
உணர்த்தப்படுகின்றேன்
உருவேற்றப்படுகின்றேன்!
ஓடுகின்றேன் எனைவிட்டு
ஓடிய நிமிடங்களை கொய்திட...
அந்தோ பரிதாபம் கடந்தவை
தூரத்து நிலவாய் தொலைந்துபோகின்றது
எனை மறுத்துப்போன
அவனைப்போல...!!!
முடியுமென்ற நாதம்
சிரித்துக்கொண்டே அழுவது பற்றி
அத்தனை சீக்கிரத்தில் அறிந்துகொண்டேன்
மரித்துக்கொண்டே உயிர்ப்பதுபற்றிய
மாநுடவியலையும் உணர்ந்துகொண்டேன்...
தோல்விகளெல்லாம் மரணமல்ல
எழுதல்பற்றியதான விளக்கங்கள் எனும்
வாழ்தல் நுட்பங்களை
வலிகளினூடாக கண்டடைந்தேன்...
வெற்றிப்பாதைகள் எப்போதும்
வெட்டாந்தரையும் வெறுமையுமே
பற்றிப்பிடித்தலொன்றே
பசுமையினையடையும் பிரகாசங்கள்...
நம்பிக்கை எப்போதாவது
நலிவடைந்தே போகும் நம்மீது
நம்பிக்கை இல்லாதவரையில்
நன்மையே ந்டக்கும் நம்மால்
முடியுமென்ற நாதம்
ஒலித்துக்கொண்டிருக்கும் வரையினில்...
'ஒற்றையடிப்பாதை' கவிதை நூலுக்கான எனது பார்வை
இயற்கையோடும் எளிமையோடும் புதிய பரிணாமம் எடுத்துள்ள 'ஒற்றையடிப்பாதை' கவிதை தொகுப்பு சித்திரக்கைவண்ணம் என்று அழைக்கக்கூடிய வகையில் நம் கைகளில் மிளிர்கின்றது.தர்கா நகரைச்சேர்ந்த கவிஞர் பஸ்லி ஹமீட் அவர்களின் கன்னித்தொகுப்பாக கவிநயம் காட்டியுள்ள இத்தொகுப்பானது நம் எதிர்பார்ப்பினை முற்றும் உடைத்து புதிய மிரட்சியுடன் வாசகனை சந்தித்திருப்பது உண்மையில் கவிஞரை பாராட்டச்செய்வதோடு வாசகர் மத்தியில் கவிதை நேசிப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது என்றே கூறலாம்.
வழமையாக புதுக்கவிதை மரபுக்கவிதை ஹைக்கூக்கவிதை என்ற வரையறையிலேயே நாம் கவிதைநூல்களை வாசித்து வந்திருக்கின்றோம்.படங்களுக்கு கவிதையெழுதும் முறைமையினை பத்திரிகையில் வாசித்திருக்கக்கூடும் ஆனால் அதே பாணியில் இயற்கையோடும் நம் வாழ்வியலோடும் பின்னிய படங்களை தெரிவுசெய்து அதற்கு தன் உணர்வுகளை கவியாக தீட்டி நூலாக தந்திருப்பது கவிஞரின் புதிய முயற்சி புதுமையான முயற்சி பாரட்டுக்கள்.
இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இன்று வயது வித்தியாசமின்றி அதிகரித்துள்ளது.அந்த வகையில் முகநூலில் எழுதுவரும் கவிஞர் பஸ்லி ஹமீட் இதுவரை இணையத்தள வாசகர்களின் கண்களுக்கு விருந்தளித்து வந்திருந்தார். அதற்கு கிடைத்த வரவேற்பும் ஆதரவும் வாழ்த்துக்களுமே இந்நூல் பிரசவமாவதற்கு வித்தாக அமைந்தது எனக்கொள்ளலாம்.'ஒற்றையடிப்பாதைக்குள்ளே நம் பயணத்தை தொடங்கினால், வண்ணப்பூக்களாய் வகைவகையான படங்கள் மணம்வீசி நிற்கின்றது.அவ்வண்ணப்படங்களுக்கு அவரின் எண்ணக்கவிதைகள் வார்ப்புக்களாய் வரலாறு படைக்கின்றது.
"பட்டம் வானில் பறக்கின்றது
படைத்தவன் கையில்தான்
நூல் இருக்கின்றது"
பறக்கும் பட்டத்தின் படத்துக்குக்கான இக்கவிதை,வாழ்வியலை படம்பிடித்து காட்டுகின்றது. மிக எளிய சொல்லாடலில் எல்லா கவிதைகளும் இருப்பதே சிறப்பம்சமாக காணப்படுகின்றது.
"வானில் இருள் சூழ்ந்துவிட்டால்
மதியை யாரும் நேசிக்கின்றார்கள்
வாழ்வில் இடர் சூழ்ந்துவிட்டால்
விதியை ஏனோ தூசிக்கின்றார்கள்
என்ற வரிகளில் நம்மை நாமே ஒரு நொடி உணரமுடிகின்றது. மதியை விதிக்கு ஒப்பிட்டு நம் அறியாமை இருளை சுட்டிக்காட்ட விரும்புகின்றார் கவிஞர்.வரிகளை கொண்டே அதற்கான படங்களும் நம் மனக்கண்முன்னே திரையிடுகின்றது.
"மலையே
நெஞ்சுக்குள் நெருப்பை
வைத்துக்கொண்டு
உன்னால் எப்படி நிம்மதியாக
உறங்க முடிந்தது..? என்றும்
"இடைவிடாது புகைத்து
இறுதியில்
இரத்த வாந்தி எடுத்தது"
என்றும் எரிமலையின் படத்துக்கு வரிகளமைத்து சிந்திக்க வைத்திருப்பது ஆழமான படிப்பினையை போதிக்கின்றது. இவ்வாறு இயற்கையோடு மிக நெருக்கமான ஈர்ப்பிலே அநேகமான என்று சொல்வதை விட அனைத்து கவிதைகளும் படைக்கப்பட்டிருப்பது கவிஞரின் இயற்கை மீதான பாதிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றது. விரல்விட்டு கூறக்கூடிய விடயங்களே இயற்கைக்கு அப்பாற்பட்டு கவிதைகளாய் அழகுசெய்கின்றது.
"உச்சியினை தொட்டிடவே
உலகமும் நாடுது
உச்சியிலே உள்ளநதி
பள்ளமதை தேடுது"
என்ற கவிஞரின் நதி பற்றியதான வாழ்வியற் கலையை, உயர்ந்த சிறந்த எண்ணங்களை கொண்ட மனிதர்களுக்கு ஒப்பிடலாம். எவ்வளவுதான் உயர்ந்த இடத்தில் இருந்தாலு எளிமையையும் தாழ்மையையும் விரும்புபவர்கள் மிகச்சிலரே. நன்றாக காய்த்திருக்கும் கிளையானது எப்போதும் கீழ்நோக்கியே வளைந்திருக்கும் அதுபோலத்தான் சிறந்த பண்பும் குணங்களும் எளிமையுமுள்ளவர்களின் வாழ்வும் இவ்வாறே தாழ்மையான நிலமையினை கொண்டிருக்கும் என்பதனை இப்படத்துடன் கூடிய கவிதையின் படிப்பினையாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.
"வானமே நீ
நீலத்திரையை நீக்கியபோதுதான்
தெரிகின்றது உனக்குள்ளும்
ஆயிரம் ஓட்டைகள்"
எத்தனை அழகிய வரிகள். 'ஒரு மனிதனின் அந்தரங்கம் தெரியாதவரைதான் அவன் எல்லாருக்கும் நல்லவனாக தெரிவான்' என்று கவிஞர் கிண்ணியா அமீர் அலி தன்னுடைய புத்தகவெளியீட்டு விழாவில் கூறியது நினைவுக்கு வருகின்றது.உண்மைதான் ஒருவனுடைய சுயரூபம் தெரியாதவரைதான் அவன் நல்லவனென்ற போர்வைக்குள் நடமாட முடிகின்றது இந்தச்செய்தியை இருளோடு ஒப்பிட்டு இதயம் தொடும் வரிகளை தந்திருப்பது ரசிக்கவைக்கின்றது.
"ஓடங்களே
ஓய்வெடுக்கவேண்டாம் எம்
குமரியர்கள் கரைசேர
காத்திருக்கின்றார்கள்"
நான்கே வரிகளில் ஏழைக் குடும்பங்களின் ஏழ்மையினை எத்தனை அருமையாக வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார். உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் ஏழைகளின் நிலமையினையும் சீதனப்பிரச்சனையுட்பட எத்தனையோ பிரச்சனைகளினால் இன்னுமே திருமணமாகாத பெண்களின் நிலமையினையும் இப்படி நான்கே வரிகளில் கூறமுடியுமா என ஆச்சரியப்பட வைக்கின்றது இக்கவிதை.
காதலுக்கும் கண்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கின்றது அதேபோல காதலுக்கும் கவிதைக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கின்றது. இந்த தொடர்பினை தொடாத கவிஞர்களே இல்லை காதலில்லாத கவிதையும் கவிதையுமில்ல என்றே கூறவேண்டும். மொழி மீதும் இயற்கை மீதும் சமூகத்தின் மீதும் கொண்டுள்ள பற்றும், காதலும், ரசனையுமே ஒருவனை கவிஞனாக்குகின்றது. அப்படிப்பட்ட காதலை தரும் கண்கள் பற்றி நம் கவிஞர் தரும் வரிகள்,
" ஊரையே மேய்கின்றது
உன்னை மட்டும்
அசைபோடுகின்றது
என் கண்கள்" என்றும்
"அவனை காதலில்
விழவைத்தேன்
என்னை காலமும்
அழ வைத்தான்"
என்றும் காதலின் வலியை கண்களினூடாக வெளிப்படுத்துகின்றார்.
இவ்வாறு சின்னச்சின்ன கவிதைகளினூடாக வண்ணப்படங்களை கோர்த்து பென்னம்பெரிய கலை வாழ்வினை காட்சிப்படுத்திக்காட்டியுள்ள இக்கவிதை நூலானது சிறுவர்களை குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியிருப்பதை சிறு அநுபவத்தினூடாக அவதானித்தேன்.எதையும் இலகுபடுத்தி நோக்கக்கூடிய காலத்துக்குள் நாம் ஓடிக்கொண்டிருக்கின்றோம் அதுபோல மாணவர்களை பொருத்தவரையில் புதுமையான சுவாரஸ்யமான விடயங்களிலே தம்மை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புவார்கள். வாசித்தலுக்கு மிக இலகுவான இத்தொகுப்பை சில பள்ளிமாணவர்கள் விரும்பி வாசித்ததை அவதானிக்கமுடிந்தது. இந்த நிகழ்வானது கவிஞரின் புதுமை முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியினை எடுத்துக்காட்டுகின்றது. சகல தரப்பினரிடையேயும் ஈர்ப்பையும் ஆவலையும் ஏற்படுத்தியிருக்கும் ஒரு நல்ல வித்தியாசமான தொகுப்பை தந்த கவிஞரை உளமார பாராட்டுவதோடு இதுபோன்று சிறந்த புதிய முயற்சிகளில் அவருடைய படைப்பை காண வாசகர்களாகிய நாங்களும் ஆவலாக இருக்கின்றோம் என்பதனையும் மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கின்றோம்.
நூல்: ஒற்றையடிப்பாதை
ஆசிரியர்: கவிஞர் பஸ்லி ஹமீட்
முகவரி:48,லோடஸ் வீதி, தர்காநகர்.
இணைய முகவரி:fazlyhameed@gmail.com
விலை:200/=
இன்னும் உன் குரல் கேட்கின்றது' கவிதை நூலுக்கான விமர்சனம்
உள்ளம் உடைந்து உணர்வுகள் பெருக்கெடுக்கும்போது அணையிட்டு அடக்கமுடியாத பிரவாகமாய் பெருக்கெடுக்கும் தமிழின்பத்தை கவிதையாகக் கொள்ளலாம். அந்த உன்னத உணர்வினை வார்த்தைக்கற்களால் வரிகளாக்கி வாசகர்களுக்கு விருந்தளித்துள்ளார் தியத்தலாவையை சேர்ந்த கவிதாயினி எச்.எஃப்.ரிஸ்னா. கவிதை சிறுகதை நூல்விமர்சனம் என இலக்கியத்தில் தடம்பதித்துக்கொண்டிருக்கும் இவரது, 'இன்னும் உன் குரல் கேடிகின்றது' கவிதை நூலானது புரவலர் புத்தகப்பூங்கவின் 30வது வெளியீடாக வெளிவந்துள்ளது.
வசனக்கவிதை, புதுக்கவிதையாக பூத்துநிற்கும் கவிதைகளில் ஆங்காங்கே சந்தம் சந்தோஷம் நாதம் மீட்டியுள்ளது.இலகுவான மொழிநடையில் இயல்பான விடயங்களை தொட்டிருக்கும் கவிஞர் காதல் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது அநேக கவிதைகளில் புலப்படுகின்றது. அத்தோடு சகலரும் வாசித்து விளங்கக்கூடிய நடையில் உணர்வினை வெளிப்படுத்தியிருக்கும் விதம் நூலுக்கு வலிமை சேர்த்திருக்கின்றது.
"நேர்மையாய் உன்
வாழ்வைவாழு பிறர்
கவலையை காது கொடுத்து கேளு
திக்கற்று வாழ்வோரை
தீமைகள் சூழ்கையிலேஅயராது
அவருக்காய் மாளு
தரணியிலே நீவாழ்வது மேலு"
என 'நீ வாழ்வது மேல்' என்ற தலைப்பில் மிக அருமையான அறிவுரைகளை கூறி நம் அகங்களை தொடமுனைந்த கவிஞரின் சொல்லாட்சி வாழ்த்தச்செய்கின்றது.வாசிக்கும் போதே எம்மை உணர்ந்துகொள்ளவும் நாம் கடந்துவந்த அல்லது கடந்துகொண்டிருக்கும் நிலமைகளை மிக இலகு நடையில் சொல்லியிருப்பது சொல்லில் செதுக்கியிருப்பது ஆச்சரியம். அத்தோடு கவிஞரின் கற்பனைத்திறன் பல கவிதைகளில் பிரமிக்கச்செய்கின்றது.
"உன்
அன்பெனும் ஆலையிலே
நித்தமும் சாறுபிழியப்படும்
கரும்பல்லவா நான்
அப்படியே காதலுடன்என்னை
ருசி பார்த்து மகிழும்
எறும்பல்லவா நீ"
என 'இதயத்தின் முகவரி' எனும் கவிதை போல பல கவிதைகளில் காதலும் கற்பனையும் ததும்பும் குவைமிக்க வரிகள் சுவைக்கவைக்கின்றன.
"உள் மனசில் நீ
உறைந்து கிடந்த போதேல்லாம்
இளகி பிரிவாய் என்று
சத்தியமாய் நினைக்கவும்
முடிந்ததா என்னால்"
'புதைகுழி நோக்கி புறப்படுகின்றேன்' என்ற கவிதை மணவறைக்கு அழைத்துசெல்லப்படும் மணப்பெண்ணின் உள்ளக்குமுறலை சொல்லியிருக்கின்றது. 'மனங்கவர் மணவாளன்' எனும் கவிதை முதிர்கன்னி களின் முகத்திரையிட்ட குமுறல்களுக்கு ஆற்றுப்படுத்தலாகவும் 'ஒரு வீணை அழுகின்றது' எனும் கவிதை மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் ஓர் கணவன் தன் காதல் மனைவியின் எதிர்கால விளக்கை கொளுத்தி வைக்கும் வரிகளாய் சிறப்பு புரிகின்றது.இவ்வாறு பெண்மையின் பல பக்கங்களை இலகுவாக சென்றடைந்துள்ளார் கவிஞர்.
" எரிமலையில்
பூத்துப்போன மலர்களுக்கு
வேர்களின்வேதனை
புரிவதேயில்லை"
'கறையான் பக்கங்கள்'எனும் தலைப்பில் மிக ஆழமாக சிந்தனைக்கருவை சிதறவிட்டிருக்கின்றார். கவிதைக்கு பலம் சேர்க்கும் விடயங்களில் இவ்வாறான படிமக்குறிகள் முக்கிய இடம்வகிக்கின்றது. அதனை இதுபோன்ற வரிகள் பல இடங்களில் தடம் பதித்திருக்கின்றது.
மலையக வாழ்வியலைப்பற்றியும் 'மலையக மாதுவின் மனக்குமுறல்' என்ற தலைப்பில் ஆதங்கப்பட்டிருக்கும் ஆசிரியர், ஒவ்வொரு தலைப்பிலும் மனித மனங்களில் உருண்டோடிக்கொண்டிருக்கும் உணர்வுகளை லாவகமாக பிடித்து விளக்கியுள்ளார். மனதை உருக்கும் வார்த்தை பிரயோகங்களால் சில நிதர்சனங்களை ஆணியடித்தாற்போல பளிச்சென்று சுட்டிக்காட்டியுள்ளார்.
.
இவ்வாறு இளமை கவியால் ஆட்கொண்டிருக்கும் 'இன்னும் உன் குரல் கேட்கின்றது' கவிதை நூலானது 68 தலைப்புக்களை பொருளடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால், 56 கவிதைகளே நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரும் குறையாக தெரியாவிட்டாலும் கவித்தேடலுக்கு ஓர் ஏமாற்றமாக இருந்தது என்பதே நிஜம்.கவிஞர் எச்.எஃப்.ரிஸ்னா, இளவயதில் சந்திக்கும் அல்லது அவ்வயதில் கடந்து வருகின்ற உணர்வலைகளுக்கு ஒளியூட்டியிருக்கின்றார் என்றே கூறவேண்டும் ஏனெனில், அவ்விளவயதின் மன உளைச்சல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புக்கள் என்ற அத்தனை பக்கங்களையும் விபரமாக வெளிப்படுத்தியுள்ள விதம் இளையவர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதோடு மூத்தவர்களின் கடந்த கால நிஜங்களை நிழற்படமாக காட்டியுள்ளதால் சகல தரப்பினரையும் கவரும் என்பதில் எவ்வித ஐயங்களுமில்லை என்பதனை குறிப்பிட்டாக வேண்டும்.
'இன்னும் உன் குரல் கேட்கின்றது' கவிதை தொகுதியானது வாசகர்கள் மனதிலும் குரலாய் நின்று ஒலித்துக்கொண்டிருக்கும் அளவுக்கு சிறப்பிடம் பெறுகின்றது. நூலினை பிரசவித்த ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை பகர்ந்துகொள்வதோடு அவரிடமிருந்து இன்னும் பல இலக்கிய படைப்புக்களை எதிர்ப்பார்க்கின்றோம்.
நூல்: 'இன்னும் உன் குரல் கேட்கின்றது' கவிதை நூல்
ஆசிரியர்:எச்.எஃப்.ரிஸ்னா
தொடர்புகளுக்கு:riznahalal@gmail.com
விலை:180/=
Subscribe to:
Posts (Atom)