Thursday, October 3, 2013

இசைபோதையின் கைகளில் உயிராபத்துக்கள்

இசைக்குள் ஒன்றிப்போகாத இதயங்கள் இங்கில்லை இசைக்கு மயங்காத செவிகளுமில்லை எனலாம். சினிமாப்பாடலை விரும்பாத இதயங்கள்கூட வேறு இசைக்குள் தொலைந்துவிடுவதை எவரும் மறுக்கமுடியாது. ஆனால் இச்சினிமா சார்ந்த அதுவும் துள்ளிசைப்பாடல்களால் வாகனப்பிரயாணங்களில் விபத்துக்கள் ஏற்பட அநேக சந்தர்ப்பங்கள் ஏதுவாக அமைகின்றது என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?

சில காலமாக மனதுக்குள் உழன்றுகொண்டிருந்த விடயமிது. குறிப்பாக தனியார்பேரூந்துகள், முச்சக்கரவண்டிகளில் அதிகமான ஒலியுடன் இயக்கிவிடப்படும் துள்ளிசைப்பாடல்களினால் இவ்வாறான அசம்பாவிதம் நடைபெற வழிவகுக்கின்றது. இந்த இசையில் தம்மை மறந்து லயித்துவிடுவது சாதாரணமான இயல்பான ஒரு விடயமே இது இவ்வாறு இருக்க,

முச்சக்கரவண்டி தனியார் பேரூந்துகளை எடுத்துக்கொண்டால், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி, பயணிப்பவர்களுக்கு இடைஞ்சலாக அல்லது அசெளகரியமாக இருக்கின்றதா என்ற எந்தவிதமான அக்கறையுமின்றி அதிக ஒலியுடன் இயக்கிவிடப்படும் பாடல்களால் ஓட்டுநர் ஏதோ தான் ஒரு கதாநாயகன் என்ற நிலைப்பாட்டோடு மிக வேகமாக வாகனத்தை செலுத்துவார். முன்னால் பின்னால் வரும் வாகனங்களின் சமிக்ஞை ஒலி கேட்பதும் குறைவு அத்துடன் முன்னால் செல்லும் வாகனத்தை முந்திக்கொண்டு சென்றுவிட வேண்டுமென்ற கதாநாயகத்தனத்தோடு பல உயிர்களை பணயம் வைத்து வாகனத்தை ஓட்டுவது பயணிகளுக்கு மரணபீதியை கிளப்பிக்கொண்டிருக்கும். வாகன ஓட்டுநர்கள் இளைஞர்களாக இருப்பின் இதுபற்றி சொல்லவே தேவையில்லை இளம்பெண்கள் வண்டியில் ஏறிவிட்டால் அவர்களை பக்கக்கண்ணாடிகளில் பார்ப்பதும் பாடலுக்கு ஏற்ப தமது அசைவுகளை வாகன ஓட்டலில் காட்டப்படுவதும் எரிச்சலை மட்டுமல்ல மரணபயத்தையே அதிகமாக உணர்த்திக்கொண்டிருக்கும்.

வாகன பிரயாணங்களில் அதிக ஒலியிடனான பாடல்கள் எத்தனையோ பிரயாணிகளுக்கு இடைஞ்சலாகவே காணப்படுகின்றது குறிப்பாக வயோதிபர்கள், நோயாளிகள், இன்னும் இதுபோன்ற இசைகளை விரும்பாதவர்கள் என பட்டியல் நீள்கின்றது. முக்கியமாக இறங்கவேண்டிய இடங்களில் இறங்குவதற்கு முடியாமல் (பாடலில் அதிக சத்தம் காரணமாக)பயணிக்கும் நடத்துநருக்குமிடையில் வாய்த்தர்க்கங்களும் ஏற்பட்டுவிடுகின்றது.

ஆக வாகனப்பிரயாணங்களின்போது மதுபாவனை போலவே அதிக இரைச்சலுடனான துள்ளிசைப்பாடல்களும் உயிருக்கும் எமது உடமைகளுக்கும் உத்தரவாதமில்லா ஒரு அபாயமாகவே காணப்படுகின்றது. முச்சக்கரவண்டி, பேரூந்துகள் மட்டுமன்றி எல்லா வாகனங்களிலும் இதுபோன்ற அசாதாரண இயல்புகளை மாற்றுவது அல்லது தடைசெய்வது சாலச்சிறந்தது என தோன்றுகின்றது.









No comments: