Thursday, October 3, 2013

க‌விதாயினி திருமதி மணிமேகலை கைலைவாசன்...


"வாழ்கின்ற காலம் கொஞ்சம் வாழ்ந்து தான் பார்ப்போமே...
இனம் ,மதம்,மொழி வேறுபாடற்ற ஓர் இனிய உலகத்தில் அன்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வாழ்வது சிறப்பு என்பதை வலியுறுத்த  விரும்புகிறேன்" என்ற மனிதத்துடன் கூடிய சிந்தனைகளோடு மித்திரன் வாயிலாக இணைந்துகொள்கின்றார், இலங்கையை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி மணிமேகலை கைலைவாசன் அவர்கள். இலக்கியவாதியாக அறியப்பட்ட இவர் சிறந்த சமூக சிந்தனைகளையும் மற்றவர்களுக்கு உதவுவதில் அதிகமான ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவராக நம்மத்தியில் பெறுமை பெறுகின்றார். அண்மையில் இலங்கைக்கு வந்த அவரை அணுகியபோது பகிர்ந்துகொண்ட விடயங்கள் வாசகர்களுக்காக‌.....





01.தங்களின் இலங்கைக்கான திடீர் விஜயம் குறித்து?


அன்னை மண்ணுக்கு வணக்கம் அன்புத் தமிழுக்கு வணக்கம்
என்னை நேர்காணல் செய்யும் தங்களுக்கும் வாசகர்களுக்கும் அன்பு வணக்கம். என்னுடைய   கவிதைத்தொகுப்புக்களான  தாயுமானவன்,சிந்தனைத் தொகுப்பு, இந்த நாள் இனிய நாள்   வெளியீடு சம்பந்தமாகவும் சில இலக்கிய ஆர்வலர்களைச் சந்திக்கும் நோக்கமாகவும் சில சமூக நோக்கங்களுக்காகவும் எனது பிரயாணம் அமைந்தது.


02. வெளிநாட்டு வாழ்க்கை அநுபவங்கள் பற்றி?

காலை மாலை வேலை  என்று இயந்திரம் போல இயங்குகின்ற வாழ்க்கை.
சுகபோகம் என்று சொல்வதற்கில்லை குளிர் நாடு என்பதனால் அதற்கான பாதுகாப்புகளுடன் இருக்கவேண்டிய சூழ்நிலை. போர்ச் சூழலில் இருந்து எம்மைப் பாதுகாத்த நாடு என்றபடியால் எனது தாழ்மையான வணக்கங்களும் நன்றியும் கனடாவுக்கு நான் எப்போதும் வழங்குவேன்.இங்கு எனது கணவர் மகாராஜா ,3 பிள்ளைகள்  ,அம்மாவுடன் வசித்து வருகிறேன் இங்கே ஒரு தபால் திணைக்களத்தில்  [clerk ]  லிகிதராக இருக்கிறேன்.முதியோர் பராமரிப்பிலும் பட்டம் எடுத்துள்ளேன்.



03.நீங்கள் வாழ்ந்த காலத்து இலங்கைக்கும் தற்போதுள்ள இலங்கைக்குமிடையில் எவ்வாறான‌ மாற்றங்களை அவதானித்தீர்கள்?

போர்ச்சூழலில் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
போக்குவரத்துகள் ,தொலைத்தொடர்புகள் ,கடிதப்போக்குவரத்துக்கள் ,கல்வி வசதிகள் சீரற்று இருந்தன. இப்போது அந்த நிலைமை மாறியுள்ளது.
பாரிய மாற்றங்களைக் காண்கிறேன் போக்குவரத்துகள் இலகுவாக உள்ளன. வீதிப் பரிசோதனைகள் தளர்த்தப்பட்டுள்ளன பாடசாலைகளில் கல்விக்கான தரம் சிறப்பாக இருக்கிறது பாராட்டப்படக்கூடிய விடயம்
இலக்கிய வெளியீடுகளும் சிறப்பாக உள்ளன.



04.இலக்கியப்பிரவேசம் அதன் ஆர்வம் என்பன பற்றி கூறமுடியுமா?

சிறுவயதில் இருந்தே  கலைகளில் ஆர்வம் இருந்தது.என்னுடைய பேரன் v .மார்க்கண்டு கலைமாமணிப் பட்டம் பெற்ற நாடக நடிகர்
v.v.வைரமுத்துவின் நெருங்கிய நண்பர்.என்னை 8 வயதிலேயே எழுத வைத்தவர் என் சிறிய தந்தையார் v .m .குகராஜா எழுத்தாளர்.
நான் பாடசாலை விழாக்களில் எழுதியிருக்கிறேன் கதைகள்,கட்டுரைகள் எழுதிப் பரிசுகள் பெற்றிருக்கிறேன் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை.தற்போது முகப்புத்தகத்தில் நிறையவே எழுதுகிறேன் நல்ல சிந்தனைகளையும் எழுதுகிறேன் தமிழ் மொழிமீது தீராக் காதல் எனக்கு எப்போதும் உண்டு அதன் இலக்கியப் பணிக்காக நான் என்னையே அர்ப்பணிப்பேன்.



05. ஈழத்து இலக்கியங்களின் மீதான ஆர்வம் வெளிநாட்டுவாழ் தமிழர்கள் மத்தியில் எவ்வாறு காணப்படுகின்றது?

தமிழன் எங்கு சென்றாலும் தன் கலாச்சாரம் ,பண்பாடு, மொழி என்பவற்றையும் காவியே செல்வான்.அதேபோல இலக்கிய ஆர்வமும் அவனுடனே நிறைந்திருக்கும்.கனடாவிலும் ஏராளமான கல்விக்கூடங்கள் உள்ளன கலைநிகழ்ச்சிகள்,பரீட்சைகள் ,பரிசுகள், விருதுகள் என்று ஏராளம். பல வானொலிகள் தொலைக்காட்சிகள் 24 மணி நேரமும் இங்கே இயங்குகின்றன சேவை செய்கின்றன தமிழ் மாநாடுகளும் இங்கே இடம்பெற்றன. தமிழைத் தெளிவாகப் பேசுகின்ற குழந்தைகள் கனடாவில் அதிகம் என்பேன் நான்.ஆசிரியர்களின் பங்களிப்பும் புலம்பெயர் நாடுகளில் பாராட்டத் தக்கது.



06. கனடாவில் தங்களுடைய இலக்கிய பங்களிப்புக்கள், செயற்பாடுகள் குறித்து?

வீட்டிலேயே பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதில் இருந்து ,வானொலி நிகழ்சிகளில் ,தொலைக்காட்சி நிகழ்சிகளில் கலந்து கொள்வது வரை சொல்லலாம்.பல நூல் வெளியீடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.இன்று உலகம் முழுவதும் என்னைத் தெரிகிறது என்றால் அது முகப்புத்தகம் ஊடாகத் தான்.அதிகமான இலக்கியப் பங்களிப்பு முகப்புத்தகமூலம் தான் செய்கிறேன்.தொடர்ந்தும் எழுதுகிறேன்.



07.இலக்கியம் தவிர்ந்த உங்களுடைய ஏனைய ஆர்வங்கள் திட்டங்கள் பற்றி?

இயற்கையை அதிகம் ரசிப்பேன்.இசையை  நிறையவே கேட்பேன்.
சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு நீண்ட காலமாகவே உள்ளது.தாய் தந்தையை இழந்த குழந்தைகளின் கல்விக்கும் அவர்கள் மீது அன்பு காட்டவும் எனக்கு கொள்ளை ஆசை.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களையும்பராமரிக்க  'தாயுமானவன் கருணை இல்லம்' என்ற பெயரில் அமைத்திட எண்ணியுள்ளேன். பொருளாதாரம் சரியான முறையில் அமைந்தால் நிச்சயம் என் எண்ணங்கள் நிறைவேறும்.எனது முதல் புத்தக வெளியீட்டில் வரும் நன்கொடைகள் அனைத்தையும் இவர்களுக்காகச் செலவிட எண்ணியுள்ளேன் இறைவன் ஆசியுடன் .



08.உங்களது ஊரிலும் இலக்கிய நண்பர்கள் மற்றும் ஏனையவர்களிடம் உங்களுடைய‌ வருகையின்போதான‌ வரவேற்பு பற்றிய அநுபவத்தினையும் பகிர்ந்துகொள்ளுங்கள்?

இம்முறை நான் ஊர் வந்த போது என் முகப்புத்தகஅன்பு நெஞ்சங்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.சிலரது கலைப்படைப்புகளை நேரடியாகப் பார்க்கக் கூடியதாக இருந்தது.எனது தயாரிப்பில் தோட்டி எனும் குறும் படம் முகிலனின் படைப்பாக வெளிவந்தது.இலங்கையிலும் சிறந்த கலைஞர்கள் இருக்கிறார்கள்.தட்டிக்கொடுத்தால் தமிழ்க் கலைகளும் வளர்ச்சிபெறும் என்ற தன்னம்பிக்கை வருகிறது. தொலைக்காட்சியில் இருந்து வானொலி, பத்திரிகை வரை எனக்கு நல்ல வரவேற்பைத் தந்தன.


09. பெண்களுக்கெதிரான வன்முறைகள், மேலைத்தேய நாடுகளில் மட்டுமன்றி வளர்ந்துவருகின்ற நாடுகளிலும் அதிகளவாக காணப்படுகின்றது அதற்கான காரணம் என்னவென்று நினைக்கின்றீர்கள்?

புரிதல் என்ற சொல் மறக்கப்பட்டமையே காரணம்.பெண் என்பவளும் ஓர் உயர்திணை உயிரினம் என்பதை மறந்து விடுகிறார்கள்.அவளுக்கும் சில தனிப்பட்ட ஆசைகள், கொள்கைகள் இருப்பதை மறுக்கிறார்கள்.
பெண்களும் தம் தன்னம்பிக்கையை  இழந்து போவது அதிகமாக உள்ளது.வரும் தடைகளை உடைத்தெறியும் வல்லமை வேண்டும்.
தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் தைரியம் வேண்டும்.மேலை நாடுகளை விட வளர்முக நாடுகளில் தான் பெண்களுக்கான வன்முறைகள் அதிகமாக உள்ளன.பெண்கள் விழிப்புணர்வு கொள்ளவேண்டும் என்பது என் கருத்து.



10.பெண்ணியம் என்பதில் எவ்வாறான விடயங்கள் வளர்க்கப்பட அல்லது தீவிரப்படுத்தப்படவேண்டும் என நினைக்கிறீகள்?

ஆணுக்குப் பெண் எந்த வகையிலும் சளைத்தவள் அல்ல சகல திறமைகளும் உள்ளவள் சமையல் அறையில் இருந்து சட்டசபை வரை ஆள்கிறாள் பயம் என்பது தேவையற்றது அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற நினைப்பை விடுத்து நான் என்ன நினைக்கிறேன் என்பதை முதலில் தெளிவு படுத்த வேண்டும்.சாதிப்பேன் என்ற தன்னம்பிக்கையும் ,நல்ல சிந்தனைகளும் பெண்களையும் ,பெண்ணியத்தையும் உயர் நிலையில் வைக்கும் என்பது என் கருத்து.




11.வெளிநாட்டில் வசிக்கும் நீங்கள், தற்போது இலங்கையுடன் எவ்வாறான தொடர்புகளை  கொண்டுள்ளீர்கள்? இவ்விஜயத்தின் பின்னர் எதிர்காலத்தில் எவ்வகையிலான தொடர்புகளை பேண வேண்டுமென நினைக்கிறீர்கள்?

இலங்கையில் எனது சகோதர சகோதரிகள்  உள்ளனர் ஏராளமான நட்புள்ளங்கள் உள்ளனர் கலை இலக்கிய ஆர்வம் உள்ளவர்களும் உள்ளனர் முகப்புத்தக  உறவுகளும்  ஊடகங்களும்  எனக்கு நல்ல உதவியும் பங்களிப்பும் தருகிறார்கள்.சில சமூக சேவைகளும் செய்ய எண்ணியுள்ளேன். இறைவன் ஆசி கொண்டு.சில நூல் வெளியீடுகளை யாழ்மண்ணில் தான் செய்ய வேண்டுமென ஆசைப்படுகிறேன்.


12.இலங்கை தமிழர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?


வாழ்கின்ற காலம் கொஞ்சம் வாழ்ந்து தான் பார்ப்போமே...
இனம் ,மதம்,மொழி வேறுபாடற்ற ஓர் இனிய உலகத்தில் அன்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வாழ்வது சிறப்பு என்பதை வலியுறுத்த  விரும்புகிறேன் அனாதைகள் என்ற சொல்லும் வேண்டாம் அகதி என்ற நிலைமையும் வேண்டாம் ஆன்மீகத்துடன் அன்பும் கலந்து வாழவும்
தமிழின் பெருமையும் புகழும் வளரவும் வாழ்த்துக்கள். என்னையும் ஒரு பொருட்டாக மதித்து நேர்காணல் நிகழ்த்திய  மித்திரன் பத்திரிகைக்கும் எனது வாழ்த்துக்கள்.