Thursday, March 7, 2013

ஏழைத்தாயின் இதயவீணை


கூடைச் சுமையழுத்தி கூன்வீழு மிளமையிலே
கூவுஞ் சேவலுக்கு முதலெழுந்து படித்திடு
ஆடைகூட நனைந்திடு மாறாத பனியிலே
ஆசைமகளே இதுவேண்டாம் கற்றிடு...

தேயிலை சாற்றோடு தேகத்தை சூடேற்றி
தேர்போல கொழுந்தை தோளிலே சுமந்து
நோயிலே வீழ்ந்தாலும் நோவினை தாங்கிடும்
நிந்தையது நீங்கிடட்டும் கற்றிடு...

ஏறாத மலையெங்கிலும் ஏறிநான் சென்றது
ஏற்காத கல்வியை ஏழையுனக்கு ஈந்திட
ஆறாய்ப் பெருகிய அத்தனையுந் தாங்கியது
ஆளாக்கியுனை பார்த்திடவே கற்றிடு...

பொங்கிடும் வறுமையும் பொசுக்கிடும் வேதனையும்
பொற்காலந் தந்திட்டு புதுவழி காட்டிடட்டும்
அங்கஞ் சுருக்கியென் அரைவயிறு பொறுத்ததும்
அறிவுலகம் பார்த்திடத்தான் கற்றிடு...

பொன்னோப் பொருளோ பொக்கிஷமில்லை யுனக்கு
பெருவாழ்வு கொண்டிடும் பெறுமைகளு மில்லை
மண்ணிலே உயர்ந்திடும் மகத்துவமே கல்வி
மனதிலே கொண்டுநீ கற்றிடு...

(ஜீவநதி இலக்கிய சஞ்சிகையின் மகளிர்தின சிறப்பு இதழில் பிரசுரமான கவிதை. March 2013)

No comments: