Wednesday, March 20, 2013

புரிந்துகொண்ட மணங்களும் பிரிந்துசெல்லும் மனங்களும்





ஆயிரங்காலத்துப் பயிரென ஆரஅமரப்பேசி ஆய்ந்துமுடிவெடுத்து இணைத்துவைத்திடும் திருமண பந்தங்கள் இன்று வெகுசாதாரணமாக பிரிந்துகிடப்பதையும் வேறு உறவுகளுக்குள் போலியாக தம்மை இணைத்துக்கொள்வதனையும், இதன்மூலம் சமூகம் குலைந்து சின்னாபின்னமாக சிதறிப்போவதற்கான அத்திவாரத்தினை இட்டுக்கொண்டிருப்பதையும் அன்றாட சமூகவாழ்வியலில் நாம் காண்கின்றோம்.






ஆண் பெண் உறவுமுறையில் உருவாக்கப்படும் குடும்பம்,சமூகம், தேசம், உலகமென்ற பிணைப்பு இரண்டு இதயங்களின் இணைப்பிலேயே ஆரோக்கியமான சூழலொன்றை உருவாக்கிடக்கூடிய வல்லமை காணப்படுகின்றது எனலாம். இன்றைய மிதமிஞ்சிய தொழிநுட்ப வளர்ச்சியில் இலகுவாகவும் மலிவாகவும் கிடைக்கக்கூடிய ஒன்றாக இந்த உறவுமுறைகளும் காணப்படுவதுதான் வியப்பு ஆனால் அதில் உண்மைத்தன்மை இல்லையென்பதனை மட்டும் உறுதியாக சொல்லிடமுடியும். இந்த சமூக கட்டமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பலம் ஒரு சிறந்த கணவன் மனைவி உறவு முறைக்குள் காணப்படுவதனை அவதானிக்கலாம். ஆனால் இதற்கும் புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, போன்ற விஷேட கொள்கைகள் இல்லாவிட்டால் இந்நிலமை சாத்தியப்பட வாய்ப்பில்லை.






அன்பில் ஆரம்பிக்கும் உறவுகள் சிறந்த ஆளுமையுடன் வளர்க்கப்படும் ஏனெனில் தியாகங்கள் சகிப்பு பொறுமை போன்ற குணாதிசயங்களை நாம் நமது உறவுக்குள் பேணப்பேணத்தான் அது ஆளுமைமிக்கதாக பலப்படும். குறிப்பாக காதல் திருமணங்களே மிக விரைவாக தனது நிலையின் எல்லைகளை தொட முனையும் ஒரு பந்தயமாக காணப்படுகின்றது. எதையும் ஆராயாமல் வெறும் இதய ஏவல்களுக்கு அடங்கிநடப்பதாக இருக்கின்றது. அநேக விவாகரத்து பிரச்சனைகள் காதல் தம்பதிகளிடமிருந்துதான் வருகின்றது என்ற வேதனையான செய்தியும் ஆய்வுகள் கூறுகின்றது. உண்மையில் இதற்கான காரணம் என்னவென்று ஆரய்ந்துபார்த்தால்


* ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமை

*தான்தான் பெரியவர் அல்லது தனது 'தனிப்பட்ட' பலத்தை துணையிடம் காட்டவும் நிரூபித்திடவும் முனைதல்

*விட்டுக்கொடுத்திடும் மனப்பாங்கு இல்லாமை

*ஒருவரின் குறைகளை மற்றவர் தாங்குதல் பொறுத்தல், சகித்தல் போன்ற பண்புகள் இல்லாமை

*அதிகமான எதிர்பார்ப்பு

*துணைக்கு கொடுக்கவேண்டிய தனிப்பட்ட முக்கியத்துவம் செலவழிக்கும் நேரம் போன்றவற்றில் அசமந்தம்

*தம்பதிகளின் தனிப்பட்ட பிரச்சனைகளை மூன்றாம் நபருடன் விரிவாக பகிர்ந்துகொள்ளுதல்

*தன் துணையிடம் தனக்குமட்டுமே முன்னுரிமை கிடைக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு

*ஆணுக்கு இன்னொரு பெண்ணிடமோ பெண்ணுக்கு இன்னொரு ஆணிடமோ காணப்படும் நட்பு

என்று பட்டிடல் நீள்கின்றது. பொதுவாக இவ்விடயங்கள் பலகுடும்பங்களை சிதைத்துவிட்டு வேடிக்கை பார்ப்பதில் மும்முரமாக செயற்படுகின்றது உண்மையில் குடும்ப உறவில் இவ்விடயங்கள் கவனிக்கப்படவேண்டியதும் மிக அவசியமாகிறது.




கணவன் மனைவி மீதோ, மனைவி கணவன்மீதோ அதீத அன்பும் அக்கறையும் கொள்ளும்போதுதான் சிறுசிறு பிரச்சனைகளும் கூடவே எழும் அதற்காக நிறைய சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். அத்துடன் 'புரிந்துணர்வு' என்ற ஒரு விஷேட இயல்பு தம்பதிகளிடையே உருவாகும்போது மற்ற எல்லா சிக்கல்களும் சுக்குநூறாகி அவர்கள் உறவு பலப்படும் பாலமாக அமைகின்றது.  அதேவேளை சின்ன‌ சின்ன ஊடல்களுக்குள்ளும் அவர்களின் அன்பு இன்னுமின்னும் அதிகரிக்கும்.எனவே குடும்ப உறவை பேணிக்கொள்ளவும் தம்பதிகளின் அன்பை இன்னும் ஆழப்படுத்திக்கொள்ளவும் ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்கிடவும் சில கடமைகளை செய்யவும் சில குணாதிசயங்களை வளர்த்துக்கொள்ளவும் சில விடயங்களை விட்டுக்கொடுக்கவும் பல விடயங்களை சேர்த்துக்கொள்ளவும் வேண்டியுள்ளது.





இந்த விடயங்களில் நீங்களும் உங்கள் கவனத்தை செலுத்தினால் ஆரோக்கியமான குடும்ப உறவாக உங்கள் இல்லங்களிலும் குதூகலம் கொண்டாடும்.

*உங்கள் துணைக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்ற உள்ளுணர்வை எப்போதும் உயிர்ப்பித்துக்கொண்டிருங்கள்

*நீங்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் விடயங்களில் உங்கள் துணையையும் இணைத்துக்கொள்ளுங்கள்/ இணையுங்கள்

*உங்கள் துணைக்காக ஒரு நாளில் அரைமணிநேரமேனும் ஒதுக்குங்கள்

*அதிகமான நண்பர்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் குறிப்பாக பெண் ஆணிடமோ ஆண் பெண்ணிடமோ வைத்திருக்கும் நட்பு இருவருக்கும் பொதுவானதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்கட்டும்.



*எவ்விடயமானாலும் இருவரும் ஒருவரிடமொருவர் பகிர்ந்துகொள்ளும் வழக்கத்தினை கடைபிடியுங்கள்.

*ஒருநேர உணவையேனும் சேர்ந்து உண்ணுங்கள்

*ஒருவரையொருவர் பாராட்ட மறவாதீர்கள்


*மற்றவர்கள் முன்னிலையில் உங்கள் துணையின் பலவீனத்தையோ குறைகளையோ சுட்டிக்காட்டி கண்டிப்பாக பேசாதீர்கள்

*இருவரும் ஒரே நிறத்தில் ஆடையணிதல்,அடிக்கடி I LOVE YOU சொல்லுதல்,தேவையான நேரங்களில் SORRY , THANKYOU சொல்லிக்கொள்ளுதல் சின்ன விடயங்களையும் பாராட்டுதல் போன்ற விடயங்களை செய்து பாருங்கள் அதில் கிடைக்கும் சந்தோஷங்கள் இன்னும் உங்கள் உறவினை மிகைப்படுத்தும் (இதுவே உளவியலாளர்களின் கருத்தும்கூட)


*உங்களுக்குள் ஏற்படும் கோபத்தினை ஒரே நாளுக்குள் முடிவிற்கு கொண்டுவந்துவிடுங்கள் வைராக்கியமாக மனதுக்குள் பூட்டிவைக்காதீர்கள்

*மிக முக்கியமாக சின்ன சின்ன பிரச்சனைகளுக்கும் மூன்றாம் நபரின் உதவியையோ அவர்களை நடுவர்களாகவோ நாடாதீர்கள்

*தவறு செய்திருப்பின் மன்னிப்புக்கேட்க தயங்கவேண்டாம் இதில் 'ஈகோ' என்ற குணத்தை கொன்றுவிடுங்கள்

*கணவன் மனைவியின் மனைவி கணவனின் குடும்பத்தை மதிக்கவும் உதவி செய்வதற்கும் மறவாதீர்கள்

இவ்வாறான பண்புகளை கடைப்பிடித்துப்பாருங்கள் உங்களுக்குள் அடிக்கடிவரும் அவசர சண்டைகள் பிரச்சனைகளின் வாசம் வராமல் விலகியே ஓடிவிடும். இன்றைய குடும்ப உறவுகள் குறிப்பாக கணவன் மனைவிக்கிடையில் நேரத்தை ஒதுக்கி அவர்களுடன் செலவுசெய்யாமையினாலேயே அதிகமான பிரச்சனைகள் உருவாவதாக கூறப்படுகின்றது. எனவே சிலவரையறைகளை தாமாகவே உருவாக்கிக்கொள்ளவேண்டும் சின்ன சின்ன விட்டுக்கொடுப்புக்களுடன் ஆரம்பியுங்கள் அதுவே ஆழமான அன்பினையும் விசாலமான புரிந்துணர்வினையும் தந்து உங்களின் நேசபந்தத்தினை நீடிக்கச்செய்யும்.








இல்லற வாழ்வின் சிறப்புக்களிலேயே உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியமான அறிவான வளர்ச்சி குடும்ப அங்கத்தவர்களின் மகிழ்ச்சி வளமான சமுதாயம் என சிறப்பான ஒரு உலக சிருஷ்டிப்பிற்கு அடித்தளமிடுகின்றது. ஆக ஒரு கணவன் மனைவிக்கிடையிலான ஆரோக்கியமான உறவுமுறையே அனைத்திற்குமான ஆதாரமாக காணப்படுகின்றது. என்ன சகோதரர்களே நீங்களும் இவற்றைபற்றி சிந்திக்க ஆயத்தம்தானே?









No comments: