Friday, March 15, 2013

அமல்ராஜ் துருவ நட்சத்திரத்துக்காக

http://www.thuruvam.com/2013/03/php_1458.html



எனது சிந்தனையை முட்டாள் தனமாக்கியது பாடல்: அமல்ராஜ்

Print Friendly and PDF

வேகமாக வளர்ந்துவரும் இளம் படைப்பாளிகளில் ஒருவரும் காத்திரமான சிந்தனைப் புரட்சிகளோடு எழுத்துலகில் தடம்பதித்துக் கொண்டுவரும் ஓர் துடிப்புள்ள இளைஞருமான அமல்ராஜை துருவ நட்சத்திரத்துக்காக சந்தித்தோம்.


"காலத்திற்கு காலம் மொழி தன்மை புதுப்பித்துக்கொள்வது போல கவிதையிலும் தன்னை வளர்த்துக் கொள்கிறது மொழி. உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தும் கவிதைகள் அல்லது இலக்கியங்கள் நவீனத்துவத்தோடு போராடாவிடில் எப்படி இன்னுமொரு வருங்கால அவசர வாசக தலைமுறையை சமாளிக்க முடியும்?" என்று கூறும் இவர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நிகழ்ச்சி திட்டமிடல் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வருகிறார்.

சிறந்த மேடைப் பேச்சாளராகவும் நாடகக் கலைஞராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ள இவர் 'தாளம்' பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பன்முகத்திறமை கொண்ட இவரின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு இவரது முழுமையான கருத்துக்களோடு இணைந்துகொள்வோம்.

கேள்வி: மிகவும் இளவயதில் கவிதை புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளீர்கள். இதற்கான அடித்தளம் எவ்வாறு இடப்பட்டது?

பதில்: கிறுக்கல்கள் சித்திரமாகின்றன என்னுடைய முதலாவது கவிதைத் தொகுப்பு. 2011ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதன் அடித்தளம் என்பது மிகவும் எளிமையான விடயம்தான். சிறு வயது முதல் எழுத்துத் துறையில் அதிலும் கவிதை எழுதுவதில் எனக்கு அதிகம் ஆர்வம் இருந்து வந்தது. படிப்பு, வீட்டாட்களின் எதிர்ப்பு போன்றவற்றிற்கு மத்தியிலும் கள்ளமாக கவிதை எழுதிய அந்த நாட்கள் என்னால் ஒரு கவிதைத் தொகுதியை என்றோ வெளியிட முடியும் என்கின்ற ஒரு நம்பிக்கையை கொடுத்திருந்தது. கவிதையை நான் பெற்றெடுக்கவில்லை. அதுதான் என்னுள் பிறந்தது.

அதனால் கவிதையின் மீதான மோகம் ஒரு இயல்பியலாக மாறிப்போனது. சிறுவயதில் அம்மா, கல்வி, கடவுள் என அமைத்துக் கொண்ட எனது கவிதையின் தலைப்புக்கள் நான் உயர்தரம் படிக்கும் போது அதிகம் காதலாயும் கொஞ்சம் போரியலாகவும் மாறிப்போனது.

பெண்களை விட காதல் கவிதைகளையே நான் அதிகம் காதலித்திருக்கிறேன். காதல் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த காலம் இலக்கிய உலகு என்கின்ற ஒரு பாரிய பக்கத்தை காட்டத்தொடங்கியது. உயர்தரத்திற்கு பின்னரான எனது கவிதை வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாய் ஆளுமை அடையத் தொடங்கியத்தை கொஞ்சம் உணர்ந்தேன். அதற்கு எனது 'காதல்' கவிதைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி சமூகம், போர், அடக்குமுறை, மனித அவலம், இலட்சியம் சார்ந்து கவிதைகள் பிறக்க ஆரம்பித்ததை சொல்லலாம்.


அதன் பின்னர்தான், சில பெரிய மனிதர்களின் தூண்டலின் பேரிலும், எனக்கான ஒரு இருப்பை இலக்கிய உலகின் எங்காவது ஒரு மூலையில் நிறுத்தியாகவேண்டும் என்கின்ற ஒரு ஆசையிலும் கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிடலாம் என்கின்ற ஒரு முடிவிற்கு வந்தேன். படிப்பு, வேலை, இளமைத் துடிப்பு போன்ற காரணிகளோடு சண்டையிட்டு இறுதியில் என்னால் பிரசவம் கொடுக்கப்பட்டதே இந்த கிறுக்கல்கள் சித்திரமாகின்றன.

இன்னுமொரு விடயத்தையும் சொல்லியே ஆகவேண்டும். இளவயதில் கவிதை நூல்கள் வெளியிடுவது என்பது மிகவும் பயங்கரமான ஒன்று. கவிதைகள் சராசரி கவித்துவ தரத்தை பெற்றிருக்க வேண்டும். வாசகர்களை திருப்திப்படுத்துவதோடு மூத்த கவிஞர்களையும் கொஞ்சமேனும் திருப்திப்படுத்தியாக வேண்டும். இது இலக்கிய இருத்தலில் கட்டாயமாகிப்போன ஒன்று. கவிதையும் நாமும் ஓரளவேனும் இலக்கிய ஆளுமை

கொண்டவர்களாக இருக்கவேண்டும். இல்லையேல் கவிதைத்தொகுதி மீதான விமர்சன தாக்குதல்களிற்கு மடிந்துபோக கூடும். இவ்வாறான பல சவால்கள் சக இளம் எழுத்தாளர்கள் போல எனக்கும் வந்துபோனதுதான் எனது இந்த முதலாவது தொகுப்பின் வெளியீட்டில்.

கேள்வி: கவிதைகள் மட்டுமன்றி சமூகப் பார்வையுள்ள உங்களது கட்டுரைகளும் பேசப்படுகின்றது. இதில் எவ்வகையான ஆக்கங்கள் வாசகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படுகின்றது. உங்களால் எவ்விதமான  மாற்றங்களை ஏற்படுத்த முடிகிறது?

பதில்: கவிதையைப்போல கட்டுரைகளிலும் பத்தி எழுத்துக்களிலும் ஆளுமை இல்லாவிட்டாலும் ஓரளவு ஆர்வம் இருக்கிறது. அதிகமான எனது ஆக்கங்கள் எனது வலைப்பூவிலேயே இடம்பெறுகின்றன. சமூக, கலாசசார, இளைஞர் சார்பான கட்டுரைகள் ஓரளவு அதிக வாசகர்களையும் எனது எழுத்து மீதான எதிர்பார்ப்பையும் கொண்டிருக்கிறது. கட்டுரைகளில் சொல்ல வரும் விடயங்களை நான் விரும்பும் வழியிலேயே சொல்ல எத்தனிப்பவன் நான். அவ்வாறான நேரடியாக விடயங்களைப் பேசும் கட்டுரைகள் ஓரளவு தரமாக இருப்பதாக சில வாசகர்கள் சொல்கிறார்கள். கவிதையின் மேல் பிரியம் இல்லாத கட்டுரை, கதைகளில் ஆர்வம் உள்ள பல வாசகர்களையும் என்னால் சேகரிக்கமுடிகிறது எனது இந்த வகையறா படைப்புக்களின் மூலம்.

விசேஷமாக இளைஞர், காதல் சார்ந்த எனது சில கட்டுரைகளும் பலரை கவர்ந்திருக்கிறது. விசேடமாக இளைஞர்களை. வாசகர்களிலே இந்த இளைஞர் கூட்டத்தை காண்பது இப்போதெல்லாம் மிகவும் அரிது. வாசனைக்கும் இவர்களுக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. இவ்வாறான சூழலில் அவர்களை வாசிக்க தூண்டும் படைப்புக்களை நாம் படைப்பது மிகவும் கடினமானது, இந்த காலகட்டத்திற்கு தேவையானதும் கூட. எனது சில இளைஞர்சார் கட்டுரைகளை வாசித்து என்னோடு அவற்றை சிலாகித்துப் பேசும் பல இளைஞர்களை காணுகின்ற பொழுது எனது எழுத்து ஓரளவேனும் இவர்களை வாசிக்கத் தூண்டியிருக்கிறது என எண்ணத்தோணும். இது எனக்கும் இன்னும் இன்னும் இளைஞர் தொடர்பான பல சமூக கலாசார விடயங்களை எழுதுவதற்கு தூண்டுகோலாக அமைந்துகொண்டிருக்கிறது.

அதேபோல, எனது சில போரியல் சார்ந்த கட்டுரைகளும் பல மட்ட விமர்சனங்களை தோற்றுவித்ததை  என்னால் மறக்க முடியாது. பல தடவைகள் எனது வீட்டாட்களும் இவ்வாறான கட்டுரைகளை, கதைகளை எழுதுவதை நிறுத்துமாறு சொல்லியிருக்கிறார்கள் அரசியல் பீதியினால். அதிலே எனது வலைப்பூவில் எழுதிவரும் 'மலரவன் முதல் மணிகண்டன் வரை' என்கின்ற நெடுந்தொடர் குறிப்பிடத்தக்கது.


கேள்வி: இணையத்தளப் பாவனை அதிகரித்துள்ள இக்காலத்தில் நூல்களின் வருகை, வாசிப்புகளில் அது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது?

பதில்: உண்மையைச் சொல்வதேயானால் அபாயம் நிற்சயமாக இருக்கிறது. புத்தகங்களை சஞ்சிகைகளை தேடிச்சென்று வாங்கி அதை வாசித்து முடிக்கும் காலம் மறைந்துகொண்டிருக்கிறது என்றே சொல்லுவேன். அதிகம் பேசத்தேவையில்லை. நான் கூட பல நூல்களை, வலைப்பூக்களை, இணைய சஞ்சிகைகளை எனது கணணியிலும், தொலைபேசியிலும் வாசிப்பதையே அதிகம் விரும்புகிறேன். இதுதான் இன்றைய இளைஞர்களின் நிலை. வாசகர்களை தேடிச்சென்றுதான் எங்கள் படைப்புக்களை கொடுக்க வேண்டியிருக்கிறது. எனது கவிதை நூலைக்கூட மின்னூலாக மாற்ற மாட்டீர்களா என கேட்கிறார்கள் வெளிநாடுகளில் இருக்கும் பல நண்பர்கள். இனிவரும் காலங்கள் நூல்வெளிட்டிற்கு பதிலாக மின்னூல் வெளியீடு கலாச்சாரத்தையே கொண்டுவரப் போகிறது. அதற்கும் நம்மை தயார் செய்துகொள்ளவே வேண்டியிருக்கிறது.

இதை நான் ஒரு எதிர்மறையான தாக்கமாக சொல்லமாட்டேன். இது எனது தனிப்பட்ட கருத்து. வாசகனை எப்படி என்னுடைய படைப்புச்போய் சேரப்போகிறது என்பதை வரையறுத்த பின்னரே இனிவரும் காலங்களிலான இலக்கிய வெளியீடுகள் அமையப்போகிறது. விக்கிப்பீடியாவை தனது அறையினுள் விரல் நுனிகளில் வைத்திருக்கும் ஒருவனை இனியும் வாசிகசாலைக்கு எம்மால் அழைத்துப்போக முடியாது. எமது படைப்பு அவனை சென்றடைய வேண்டுமெனில் அவனது விரல் நுனியில் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய தந்திரத்தை நாம் கற்றுக்கொள்ளவே வேண்டும். இருந்தும் நூல்களை கையில் எடுத்து வாசிக்கும் அந்த சந்தர்ப்பம் எனது காலத்திலும் எனக்கு கிடைத்ததை எண்ணி சந்தோசப்படுகிறேன். எமது பிள்ளைகளிற்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்குமா என என்னால் சொல்ல முடியாது.

கேள்வி: சமூக தொண்டார்வ (ICRC) நிறுவனத்தில் பணிபுரியும் உங்களுக்கு சமூகத்தில் பல்வேறுபட்ட மக்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. அவர்களது பிரச்சினைகளில் குறித்து நீங்கள் ஆதங்கப்பட்டதுண்டா?

பதில்: நீங்கள் சொல்வதுபோல எனது தொழிலில் பல மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. வடக்கு முதல் தெற்கு வரை பல வகையான மனிதர்களை படிக்கும் சந்தர்ப்பத்தை பெறுகிறேன். ஒவ்வொரு மனிதர்களினதும் சிக்கல் நிறைந்த வாழ்க்கைகளை என்னால் படிக்க முடிகிறது. இந்த அனுபவங்கள் சிக்கின் பர்கர்ருக்காக சண்டைபோடும் ஒரு சிறுவனையும், ஒரு பிடி சோற்றிற்காய் காத்திருக்கும் ஒரு சிறுவனையும் என்னால் சரிவர கண்டுகொள்ள முடிகிறது.


அதிலும் என்னை அதிகம் பாதிக்கும் ஒரு விடயம் வடக்கில் யுத்தத்தினால் தங்கள் கணவனை இழந்த பல பெண்களின் வாழ்க்கை போராட்டம். பொருளாதார, கலாசார, உடலியல், மனவியல் நலிவுத்தன்மைகளோடு போராடும் அவர்களை சந்திக்கும் பொழுது நான் அதிகம் மனமுடைந்து போனதுண்டு. இவர்களுக்கான இந்த புதைகுழிகளை யார் வெட்டினார்கள், இவர்கள் வாழ்க்கை சீரழிக்கப்பட்ட விதம் யார் செய்த சாபம் என்பனவற்றை எல்லாம் அடிக்கடி நான் எண்ணி எனக்குள்ளே வருந்தியதுண்டு. இவர்கள் வாழ்க்கை மாறவேண்டும். வாழ்வியல் தரம் உயரவேண்டும் என்பதே எனது எப்போதுமான வேண்டுதல்.

கேள்வி: இலக்கியத்தினூடாக எவ்வகையான சமூக எழுச்சிகளை முன்னெடுக்க முடியுமென நினைக்கின்றீர்கள்?

பதில்: எனது தகுதிக்கு மீறிய கேள்வி ஒன்றை கேட்கிறீர்கள். எவ்வளவோ செய்யலாம். இலக்கியம் என்பதை தவிர்த்து எழுத்தினால் எவ்வகையான சமூக எழுச்சிகளை முன்னெடுக்க முடியும் எனக் கேட்டால் என்னிடம் போதுமான பதில்கள் இருக்கின்றன. இலக்கியம் சமூக எழுச்சிகளை இற்றைக்கு பல காலங்களுக்கு முன்னதாகவே முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டது. புதுமைப் பெண் என்கின்ற ஒரு புதுமையான சமூக எழுச்சியும் ஒரு சீமார்ந்த இலக்கியம் கொடுத்த எழுச்சிதானே? இவை அந்தக்காலத்திலேயே சாத்தியம் என்றால் ஏன் இப்பொழுது முடியாது என்கிறேன்.

என்னைப் பொறுத்த வரையில் இதற்கு முதல் எழுத்தாளர்களின் சமூக அக்கறை நிறைந்த படைப்புக்களை கொடுக்க வேண்டும் என்கின்ற சிந்தனை ஓட்டம் வரவேண்டியது மிக முக்கியமான ஒன்று. எழுத்துகளின் சக்தியை உலகம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறது.

எழுத்து போராட்டங்களின் முடிவுகள் வரலாற்றில் எழுச்சிகளாகவே இறுதியில் முடிந்திருக்கிறது. 
ஆக, இலக்கியத்தை அதிகமானோர் தங்களின் இலக்கிய இருப்பிற்காகவும், இலக்கிய சாணக்கியத்தை காட்டி பெயர் பெறுவதிலும் காட்டும் முனைப்பை சமூக அக்கறையோடு வெளிக்காட்டினால் உங்கள் இந்த சமூக எழுச்சி விரைவில் சாத்தியமாகும். சமூக இலக்கியங்கள் வரலாறுகளில் அனேகமாக முக்கிய மாற்றங்களை செய்திருக்கிறது.

உதாரணமாக பாரதியின் சமூக இலக்கிய படைப்புக்களை மிகவும் இலகுவாக சொல்லிவிட முடியும். அவை எழுச்சிகளை நிகழ்த்தின. இப்பொழுதெல்லாம் நான் முதல் சொன்னது போல சமூக அக்கறையோடு புனையப்படும் இலக்கியங்கள் மிகவும் குறைந்துகொண்டே செல்கின்றன. இவற்றை இளையவர்கள் மீண்டும் தங்கள் கைகளில் எடுத்துகொள்தல் மிக அவசியமான ஒன்றாகி விட்டது.

கேள்வி: இன்றைய நவீனபோக்கு, புதிய சிந்தனை மாற்றம் என்ற வளர்ச்சிக்கேற்ப இலக்கியத்திலும் மாற்றங்கள் அவசியமா? அல்லது அவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நினைக்கின்றீர்களா?

பதில்: நான் அடிக்கடி எனது நண்பர்களுடன் பேசிக்கொள்ளும் விடயம் இது. டார்வினின் அந்த கூர்ப்புக் கொள்கை உயிரியளிற்கு மட்டுமல்ல இலக்கியம் உட்பட சகல விடயங்களிற்கும் பொருந்தும். 'தக்கன பிழைக்கும் தகாதவை அழியும்' காலத்தோடு ஒன்றிப்போகாத எந்த விடயமும் காலப்போக்கில் அழிந்தே போகும் என்பது இந்த உண்மை. இதற்கு இலக்கியமும் எழுத்துக்களும் விதிவிலக்குகள் அல்ல என்றே
சொல்லுவேன்.

காரணம் வாசகனின்  எதிர்பார்ப்புக்கள் மாறிக்கொண்டிருக்கிறது என்றால் இலக்கியம், படைப்புக்கள் மாறாமல் இருப்பது சாத்தியமா? படைப்புக்களின் இலட்சியம் வாசகன் தானே. அந்த வகையில் நவீனப் போக்குகளும், புதிய சிந்தனை மாற்றங்களும் நிச்சயமாக இலக்கியத்தை இந்தக்காலத்திலும் இனிவரும் காலங்களிலும் தூக்கி நிறுத்தும். இல்லையேல், அடுத்த சந்ததி இலக்கியத்தின் இருப்புக்களை வரலாறுகளில் மட்டுமே படிக்க முடியும்.

இப்பொழுதெல்லாம், வாசகன் எழுத்துக்களில் ஒரு நவீனத்துவத்தையும், மாற்றத்தையும், புதிய போக்கையுமே விரும்புகின்றான். இதற்கேற்றாற்போல் படைப்புக்கள் படைக்கப்படும் பொழுது அந்த படைப்புக்கள் வெற்றி பெறுகின்றன. காலத்திற்கு காலம் மொழி தன்மை புதுப்பித்துக்கொள்வது போல கவிதையிலும் தன்னை வளர்த்துக் கொள்கிறது மொழி. உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தும்

கவிதைகள் அல்லது இலக்கியங்கள் நவீனத்துவத்தோடு போராடாவிடில் எப்படி இன்னுமொரு வருங்கால அவசர வாசக தலைமுறையை சமாளிக்க முடியும்? வரலாற்றை பாருங்கள். கல்வி, அறிவு, விவேகம் போன்றன மக்களின் உடமைப்பொருளாகிய  போதுதானே உரை நடை இலக்கியமும், உரை நடை சார்ந்த புதுக்கவிதையும் இவ்வுலகத்தில் பிறந்தது. மரபுக் கவிதைகளை விட இக்கால இளைஞர்கள் இந்த புதுக் கவிதைகளைத்தானே அதிகம் விரும்புகின்றனர். இது நவீனத்துவத்தின் மாற்றம் இல்லையா? நூற்பா செய்யுள், விருத்தம், பண், கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ என்கின்ற இந்த இலக்கிய மாற்றம் நவீனத்துவத்தால் உருவாகியதுதானே.

இப்பொழுதெல்லாம் பல ஈழத்து, இந்திய இளம் படைப்பாளிகளின் கவிதைகள் இந்த நவீன சிந்தனை ஓட்டத்திலேயே நிகழ்கின்றன. அரைத்த  மாவை மீண்டும் மீண்டும் அரைத்துக்கொண்டிருக்கும் இலக்கியவாதிகளும் எம்முடன் இல்லாமல் இல்லை. இலக்கியத்திற்கு பாரமேற்றுபவர்களாக இவர்கள்
இருப்பார்களே தவிர வரும் புத்திலக்கியத்தின் தளத்தில் நிலைத்து நிற்றல் என்பது இவர்களிற்கு எட்டாக்கனியாகவே போய்விடும்.

கேள்வி: எழுத்துத்துறையில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்களை எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்?

பதில்: கற்றுக்கொண்ட பாடங்கள். உங்களுக்கு மிகவும் சுவாரசியமான கேள்வி இது. எனக்கு சிக்கலானதும் கூட. இலக்கியத்தில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் பல. அனைத்தையும் இவ்விடத்தில் பகிரங்கமாக சொல்லுவிட முடியாது. சிலவற்றை பேசலாம். எனக்கு இந்த எழுத்து துறையில் இருக்கும் அனுபவம் மிகவும் சொற்பமே. எழுத்துலகில் இன்னும் என்னை முதலாம்  ஆண்டு மாணவனாகவே என்னை கருதுகிறேன். முதலாம் வகுப்பில் அப்படி என்னங்க கற்றுக்கொண்ட பாடங்கள்.

இருந்தும், இலக்கியவாதிகள் அனைவரும் நல்ல 'மனிதர்கள்' என்கின்ற எனது முந்தைய சிந்தனை, நான் இலக்கியத்துறைக்குள் வந்து பார்த்ததும் சுக்குநூறாய் போனது. பல நல்ல மனிதர்கள் இலக்கியவாதிகளாய் இருக்கிறார்கள். அவர்களை எனக்குத்தெரியும். அவர்களுடனான எனது உறவும் தூய்மையானது. அதற்காய் இலக்கியவாதிகள் எல்லாரும் நல்ல 'மனிதர்கள்' என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

இது முதலாவதான எனது கற்றுக்கொண்ட பாடங்கள். அதேபோல இளைய தலைமுறை படைப்பாளிகளுக்கும் மூத்த படைப்பாளிகளிற்குமான இலக்கியத்தூரம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. மூத்த எழுத்தாளர்கள் மேல் பழியாக நான் என்றுமே இதை சுமத்தப்போவதில்லை. இதை இளம் தலைமுறையினரே சீர்செய்ய வேண்டும். வேறு வழியில்லை என்பது நான் கற்றுக்கொண்டது. அதேபோல, இப்பொழுதெல்லாம் எண்ணிக்கையில் அதிகமான கவிதை நூல்கள் வெளியாகின்றன.

தரத்தில் வைக்கும் கவனத்தை விடவும் புத்தகங்களின் எண்ணிக்கையில் வைக்கும் கவனம் இப்பொழுது இளம் தலைமுறையினரிடத்தில் அதிகரித்தே தெரிகிறது. தரமான கவிதைகளை, படைப்புக்களை மட்டும் தேடிப்போய் பிரசவிக்கும் ஒரு தலைமுறையாக நான் வாழும் தலைமுறை இருக்க வேண்டும் என்பதும் எனது அவாக்களில் ஒன்று.. இப்படி பல அவாக்கள், அனுபவ பாடங்கள் இந்த சிறிய கால எழுத்து அனுபவத்தில் எனக்கு கிடைத்தவை.

கேள்வி: ஆங்கில மொழியில் பரீட்சயமுள்ள உங்களுக்கு, அதில் ஏதாவது செய்யவேண்டுமென்ற  திட்டங்கள் ஏதும் இருக்கின்றதா?

பதில்: எழுத்துக்காய் நான் செலவழிக்கும் நேரம் மிகவும் சொற்பம். நான் எனது வாழ்வில் அதிகம் போராடும் விடயங்களில், இந்த இலக்கியத்திற்காய், எழுதுவதற்காய் நேரத்தை ஒதுக்குதல் என்பதும் ஒன்று. அதற்கு எனது வேலைப்பளு, சோம்பேறித்தனம், அதிக பிரயாணம் போன்றவற்றை காரணங்களாக சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இருந்தும், கிடைக்கும் நேரங்களை, அதுவும் அதிகமாக நான் பயணம் செய்யும் வேளைகளில் கிடைக்கும் நேரங்களை மூட்டை கட்டி இந்த வாசிப்பு, எழுத்து என்பனவற்றிற்கு தாரைவார்ப்பதே இப்பொழுது எனக்கு சாத்தியம். அதையே செய்துகொண்டிருக்கிறேன். இதற்குள் மொழிபெயர்ப்புத்துறையில் ஆசைகொள்ள எனக்கு அதிகம் பயமாய் இருக்கிறது.

மொழி தெரிந்தவர்கள் எல்லோரும் மொழிபெயர்ப்பு துறையில் சாதிக்க முடியாது என்கின்ற சித்தார்ந்தமும் எனக்கு தெரியும். மொழிபெயர்ப்பு துறைக்கு சரியான வாசிப்பு ஆளுமையும், மொழிப்புலமையும், நீண்ட அனுபவமும் கட்டாயம் என்பதும் நான் அறிந்தவையே. இவை அனைத்தும் எனக்கு என்று கைகூடுகிறதோ அன்றுதான் நான் இந்த மொழிபெயர்ப்பு துறைக்குள் செல்லலாம் என்பதை மட்டுமே என்னால் சொல்லிக்கொள்ள முடியும்.

கேள்வி: கவிஞரான உங்களுக்கு பாடலாசிரியர் என்ற இன்னுமொரு பக்கமும் இருக்கிறது. அதுபற்றியும்,  தென்னிந்திய திரைப்படங்களுக்கு பாடலெழுதிய அனுபவம் பற்றியும் கூறுங்கள்?

அது ஒரு அருமையான அனுபவம். கவிதை எழுதுவதை விட ஒரு பாடல் எழுதுவது எனக்கு அன்று அதிகமாக பிடித்திருந்தது. அந்த முதல் பாடல், இரண்டு இரவுகளை குடித்திருந்தது. பாடல் எவ்வளவு சுலபம் என்கின்ற மூடத்தனமான எனது சிந்தனையை முட்டாள் தனமாக்கியது அந்த முதல் பாடல். நான்கு தடவைகள் எழுதியும் இசையமைப்பாளரை என்னால் திருப்திப்படுத்த முடியாமல் போனது என்னை இன்னும் இன்னும் ஒரு நல்ல பாடலாசிரியராக வருவதற்கு உதவியதோ என்னவோ தெரியவில்லை அன்று.

அந்த முதல் சந்தர்ப்பத்தை கொடுத்தவர்கள் இலங்கையின் மிகப் பிரபல இசையமைப்பாளரும், 2011 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதையும் பெற்றுக்கொண்டவருமான பிரநீவும் அந்த திரைப்பட இயக்குனர் சமிந்தனும். இறுதியில் அந்தப்பாடல் சிறப்பாக பேசப்பட்டது அதை கேட்டவர்களால். ஆனால் அந்த பாடல் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு பின்னர் பல பாடல்களை எழுதும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனது வரிகளை இசையில் ஒருவரது குரலோடு கேட்கும் பொழுது கிடைக்கும்  சந்தோசம் வார்த்தைகளால் விபரிக்க முடியாத ஒன்று. அதேபோல, லண்டன் தமிழ் வானொலிக்கும் ஒரு பாடல் எழுத கிடைத்த சந்தர்ப்பம் என்னை இன்னும் சந்தோசம் கொள்ள வைத்தது.

கவிதைகளை மட்டும் எழுதும் எனக்கு இந்த பாடலாக்கம் ஒரு புதிய இரசனையைக் கொடுத்தது. புதிய திருப்தியைக் கொடுத்தது. இன்னும் இதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறேன்.

(ராஜ் சுகா)

No comments: