Monday, February 3, 2014

மலைகள் இணைய இதழில்( 02.02.2014)

http://malaigal.com/?p=3962


தீயென்பதால் நா சுடுவதில்லை

நாளையென் மரணத்தை இன்றே
உணர்வதில் தவறுமில்லை
இந்நொடி இல்லையென்றாலும்
காலந்தாழ்த்திய ஓர் நொடியில்
இது நிகழ்ந்தேயாக வேண்டும்
கண்மூடி அத்தருணத்தில் என்
நினைவுகளை சங்கமிக்கின்றேன்...

அலறல்களும் அழுகுரல்களுமாய்
எனதில்லம் ஓலமிடும்
அற்பாயுளில் போய்விட்டதாய்
ஆதங்கப்படும் அனைவரிலும் என
தன்னையின் கதறல்களென்
நெஞ்சத்தைப் பிழிகின்ற்து
இத்தனை வருடங்களில்
எனைதாங்கிய தந்தை
வேதனையை விழுங்கமுடியாதவராய்
விம்மியழும் காட்சி ஐயகோ…

சங்கறுந்துவிழு மளவுக்கென்
சகோதரர்களின் வீறிட்ட அழுகை
அன்பென்ற ஆச்சரியத்தை
ஆழமாய் பிரதிபலித்துக்கொண்டிருந்தது
ஊரிலுள்ளவர் குழுமியிருக்க‌
உறவினர்கள் கலங்கிநிற்க‌
எனை பிடிக்காத சிலர்கூட‌
கன்னத்தில் கரம்வைத்ததும்
இப்போதுதான்
‘பாவம் நல்ல பிள்ளை’
இறுதியில் எல்லாருக்குமான‌
மரண சான்றிதழ் எனக்கும்
கிடைக்கலாம்…

பழகிய உறவுகள்
நெருங்கிய சொந்தங்கள்
அறிந்த பந்தங்கள்
தெரிந்த நட்புக்களென‌
எல்லாரும் கலந்துகொள்ளலாம்
இறுதுயூர்வலத்தில்
வாய்வழிச் செய்தியறிந்து
அநுதாபங்கள் சில‌
வந்துவிழலாம்
ஆச்சரிய செய்தியாய் முகநூலில்
நட்புக்களின் கண்ணீர்துளிகள்
கவிதை வடிக்கலாம்

இதயம் நெகிழும் இறுதியூர்வலத்தில்
இளகாத நெஞ்சம் ஒன்றில்லாதிருக்கலாம்  ஆனால்
எனதிதயமறியா ஓர்நெஞ்சம் மட்டும்
இச்செய்தியறியாமலிருக்கலாம்
கதறல்களோடு கல்லறையாக்கப்பட்ட‌
எனதுடலம்
மலர் வளையங்களினால்
அலங்கரிக்கப்படும்
சாஸ்திர சம்பிரதாயங்கள்
சமய வழிபாடுகளுடன் என்
பூலோக வாழ்வின் பூரணமும்
ஆறடி நிலத்துக்குள் நிரப்பப்படும்
ஆறாத சோகங்களுடன்
நிறைவேறிய என்
வாழ்வியல் யாத்திரையுள்
முடிந்துபோனது எல்லாமே
நினைவுகளோடூ திரும்பிப்பாராமல்
திரும்பி போகுமுறவுகள்
நாற்பதாவது நாளை நினைவுகொள்வார்கள்
நிஜங்களுக்குள் தொலைந்துபோகும்
நிமிடங்கள்  நிஜமாயென்
ஞாபக சுவடுகளை தொலைத்துக்கொண்டிருக்கும்

No comments: