Thursday, December 8, 2016

49வது படைப்பாளி

வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். 

அந்தவகையில் கல்குடா நேசனின் 49வது படைப்பாளி அறிமுகத்திற்காக  மலையகத்தின்  கொக்காகலை எனும் ஊரைச்சேர்ந்த கிருஷ்ணசாமி அருள் என்ற இளம் படைப்பாளியை அண்மையில் சந்தித்தோம். இவரது  கவிதைகளை பத்திரிகைகளிலும் முகநூலிலும் வாசித்து  வியந்த பின்னரே  இக்கவிஞரை  அடையாளமிட்டோம்.எழுச்சி மிக்க  உணர்வுபூர்வமான இலக்கியம் படைக்கும் ஆற்றல் கொண்ட  இவர்  ஆசிரியராக கடமையாற்றுவதும் குறிப்பிடத்தக்கது. 


//சாமானிய மக்களின் வாழ்வியல் தளத்தில் நின்று அவர்களுக்கு குரல் கொடுப்பவனாக வலிகளை சுகங்களை அரசியல் பிரச்சனைகளை எழுதுபவர்களே காலம் கடந்து நிற்கிறார்கள் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்// எனக்கூறும்  கவிஞர்,

"நீண்டு கிடக்கும்
மௌனச் சாலையில்
பதிந்து கிடக்கிறது
பெருமூச்சு தடங்கள்" என வரிகள் மூலம்  உணர்ச்சிக் க‌விஞராக நம்மிடையே  வெளிப்படுகின்றார். இவரின் கவிதைகளை  அடிக்கடி  பத்திரிகைகளில் வாசிக்கும் சந்தர்ப்பமும் எமக்கு  கிடைக்கும் அதேவேளை  முகநூலிலும் தொடர்ந்து எழுதிவருகின்றார்.

 10  வருடங்களுக்கும் மேலாக கலைத்துறையில்  ஈடுபட்டுவரும் அருள், கவிதை மீதான காதலினால் தன்னையும் தனது  கவிதைகளையும் இலக்கியத்தளத்தில் அடையாளமிட  முயற்சிகளை மேற்கொண்டு  வருகின்றார்.  இவரது சகல முயற்சிகளும் வெற்றியடைய கல்குடா  நேசன் இணைய  வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு   இவரது  நேர்காணலோடு இணைந்துகொள்வோம்




01.தங்களது  குடும்பம் தொழில் பற்றி?

மலையகத்தின் இயற்கை எழில் நிறைந்த மடுல்சீமை நகரத்திற்கு அண்மையில் உள்ள  ஊரே எனது பிறப்பிடமும்,வசிப்பிடமும்.மி கச் சிறிய குடும்பமெனது.அம்மா சந்திரா,அப்பா கிருஷ்ணசாமி,தம்பி கிருஷ்ணா, எமது குடும்ப நந்தவனத்தில் வாசம் வீசும் குட்டிப்பூக்கள்  பூஜா,சுஹா,நிது. ஆசையாய் நேசிக்கும் ஆசிரிய பணியில் நான்  கல்வி கற்ற பாடசாலையான பது/மடுல்சீமை தமிழ்.மகா வித்தியாலயத்திலே பணி புரிகிறேன்.


02.இலக்கிய உலகிற்குள் பிரவேசித்த சந்தர்ப்பம்?

என் சிறு வயதிலிருந்தே புத்தகங்கள்,பத்திரிகைகள் வாசிப்பதே எனது பொழுதுபோக்கு.படிக்கும் காலத்திலேயே பத்திரிகைகள் என் உலகத்திற்கு பரிச்சயமாகி விட்டது.எனவே,எழுத்துகளை சுவாசிக்க தொடங்கிய காலமே,இலக்கிய உலகத்தில் அடியெடுத்து வைத்த காலமென எண்ணுகிறேன்.தொடர்ந்து வாசிப்பதும்,அவ்வப்போது எழுதுவதுமாய் நகர்கிறது என் காலங்கள்.



 03.எவ்வாறு கவிதையில்  ஈடுபாடு ஏற்பட்டது?


நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல வாசிப்பு தான் கவிதை மீது ஈர்ப்பு ஏற்பட காரணமாக அமைந்திருக்க வேண்டும்.ஒற்றைப் புல்லாங்குழல் தனது வலிகளை கீதமாய் பரப்புவது போல வலிகள்,அழுத்தங்கள்,நிராகரிப்பு கள்,அவமானங்கள், அனைத்தையும் இறக்கி வைக்க ஏதோ ஒரு வடிக்கால் தேவைப்பட்ட சந்தர்ப்பத்திலே எனக்குள்ளே கவிதையின் ஊற்றெடுப்பு நிகழ்ந்தது.




 04.தங்களது கவிதைகளை  தொகுப்பாக வெளியிடும் எண்ணம் பற்றி?

கடந்த 10 வருடங்களாக வானொலி,சஞ்சிகைகள், பத்திரிகைகளில் எனது கவிதைகள் வெளிவந்திருக்கிறது.எழுதிய கவிதைகளை பத்திரப்படுத்தி வைக்காததால்,பல கவிதைகள் இல்லாமல் போய் விட்டது.அத்தோடு, கவிதைகளை நூலுரு செய்ய முனையும் போதெல்லாம் ஏதோ ஒரு காரணத்தால் அது தடைப்பட்டிருக்கிறது.
    
   அதையெல்லாம் கடந்து தற்போது எனது கவிதைகளை "மோகன முழக்கம்" என்ற தலைப்பில் வெளியிடுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறேன்.



05.உங்களை வளர்த்துவிட்ட  உந்துசக்திகள் பற்றி எம்மோடு பகிர்ந்துகொள்ள முடியுமா?


எனக்குள் கவித்துவம் உண்டென்பதை இனங்கண்டு எழுத தூண்டிய எனது மரியாதைக்குரிய அதிபர்(பது/ சரஸ்வதி தேசிய கல்லூரி) திரு.திருலோக சங்கர் அவர்களும்,உயர்தரத்தில் தமிழ் பாடம் கற்பித்த ஜசிக்கலா ஸ்ரீதரன் ஆசிரியையுமே என் எழுத்தாக்க பயணத்திற்கு தொடக்கப் புள்ளியிட்டவர்கள்.அகில இலங்கை தமிழ் மொழித்தின கவிதைப்போட்டியில் நான் பரிசு பெற வழி நடத்தியவர்கள்.இவர்களுக்கு என்றுமே என் சிரந் தாழ்ந்த தாழ்பணிவுகள்.



06)கவிதை  தவிர  நீங்கள் ஈடுபடும் வேறு இலக்கிய  வடிவங்கள் ஏனைய  திறமைகள்? 


கவிதைகள் தவிர சிறுகதைகள் விமர்சனங்கள் எழுதுவதில் ஆர்வமுண்டு.எனது பல சிறுகதைகள் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி இருக்கிறது.


07.உங்கள் லாவகம் புதுக்கவிதையிலா மரபிலா?

மரபில் புலமை இருப்பினும் இங்கு வாசகனே தீர்மானிக்கிறான் படைப்பின் தன்மையை. மரபு நம் கற்றதின் உயரத்தை காட்டினாலும் சமகால வாசகர்கள் மனதில் பதிய புதுக்கவிதையே இன்றைய தேவை


08. இளம் தலைமுறையினருள் மரபுப்பாணியில் வேரூன்றி நிற்பது குறிப்பிட்ட  சிலரே. ஏன் இந்த  எண்ணிக்கைக்  குறைவு என நினைக்கின்றீர்கள்?

😎 மரபுக்கவிதை அளவுக்கு புதுக்கவிதையில் இலக்கியநயம் அவசியப்படுவதில்லை. அதில் தேர்ந்த கவிஞர்கள் மிக சொற்பமே. வாசக மனோநிலையில் எழுதுவதும் ஒரு காரணம் என்று கருதுகிறேன்.



09. மரபுப்பண்புகள் இலக்கியத்திற்கு தேவையானதாகவா  அல்லது அவசியமில்லை என்றா கருதுகின்றீர்கள்?


இலக்கியம் என்பது மனித சமூகம் கடந்து வந்த பாதையின் வரலாற்று குறிப்புகள் தானே? 
அது எப்படி அவசிமற்றதாகும்? நாம் நம் மொழி கடந்து வந்த பாதையினை அறிந்து கொள்வது கடமையல்லவா?



10.  உங்களை கவர்ந்த  இலங்கை  படைப்பாளிகள்? நீங்கள் விரும்பி வாசித்த  ஓர் படைப்பு  பற்றி?


மூத்த படைப்பாளிகள் பலரது படைப்புகளை வாசித்திருக்கிறேன்.தெளிவத்தை ஜோசப்,நீர்வை பொன்னையன்,டொமினிக் ஜீவா, என பட்டியல் நீள்கிறது.அண்மையில்  ஹட்டன் சிவனு மனோகரன் எழுதிய "மீன்களை தின்னும் ஆறு" என்ற சிறுகதை நூல் எனது மனதில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.



 11.முகநூலில் வெளிவரும் படைப்புக்களின்  வளர்ச்சி, அதன்  நன்மை தீமை பற்றி கூறமுடியுமா?


முகநூல் வாயிலாக தமிழ் மொழியில் நிறைய கவிஞர்களை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்கள் வெறும் உணர்வு சார்ந்து இயங்குபவர்களாக மட்டுமே இருப்பது தற்போதைய நிலை எனினும் மொழி மற்றும் இலக்கியத்தில் ஆர்வமிக்கவர்ளாக வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாளைய தமிழ் கூறும் நல்லுலகை தீர்மானிக்கும் ஒரு இலக்கியக்காரர்கள் குழுவே இருப்பதை மறுப்பதற்கில்லை. அவசர உலகில் இதில் நன்மைகளே அதிகம்.



12.இலக்கிய  நட்புக்கள் பற்றி?

எழுத தொடங்கிய காலம் தொட்டு இலக்கிய நட்புகளின் ஆதரவும்,அன்பும் என் இலக்கிய பயணத்திற்கு கிடைத்த ஆசிர்வாதங்களாக கருதுகிறேன்.உடனுக்குடன் படைப்புகளை செம்மைப்படுத்தி கருத்திடும் முகநூல் நட்புகளுக்கும் என் பிரியங்கள்.



13.நீங்கள் எதிர்கொண்ட  தங்கள் படைப்புக்களுக்கான  விமர்சனங்கள் பற்றி?


விமர்சனங்கள் படைப்பாளனை செம்மைபடுத்தும். 
அவ்வகையில் மிக கவனமுடன் எதிர்கொள்வேன். நம் தரப்பு நியாயங்களை எடுத்துரைப்பது படைப்பினை மீண்டும் மீண்டும் அசைபோட ஆகச்சிறந்த வழி விமர்சனமே. புன்முறுவலுடன் எதிர்கொள்வேன். பக்குவமாக விவாதிப்பேன்.



 14. கவிதைகளில் எவ்வகையான  விடயங்களுக்கு முன்னுரிமை வழங்க விழைகின்றீர்கள்?


எதையும் எழுதலாம். ஆனால் சாமானிய மக்களின் வாழ்வியல் தளத்தில் நின்று அவர்களுக்கு குரல் கொடுப்பவனாக வலிகளை சுகங்களை அரசியல் பிரச்சனைகளை எழுதுபவர்களே காலம் கடந்து நிற்கிறார்கள் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். படைப்பாளிகளின் சமூக அக்கறை இங்கிருந்து தொடங்குகிறது.




 15. பாடசாலை மாணவர்கள் இளைஞர்களிடம் வாசிப்பு  பழக்கம் எவ்வாறு காணப்படுகின்றது?  வாசிப்பு  பழக்கத்தை  அதிகரிக்க செய்யவேண்டியது  பற்றி?

வாசிப்பு ஆழ்மனதின் தேடல். உண்மையான தேடல் வரும்போது தான் வாசிப்பு அர்த்தமுள்ளதாகிறது.  இன்றைய கல்விமுறையில் மதிப்பெண் தேவை மட்டுமே மாணவனுக்கு வாசிப்பை தேவையாக்குகிறது. மதிப்பெண் கடந்த தேடல் ஒன்றை உருவாக்குவதே மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க செய்வதுடன் பண்பட்ட ஒரு தலைமுறையை உருவாக்கும் ஒரே வழி.



16.பெண்களுக்கெதிரான வன்முறைகள் அடிமைப்படுத்தல்களில் ஈடுபடும் ஆண்கள்  பற்றி?


பெண்கள் மீதான அடக்குமுறை ஒன்றும் இன்று புதிதாக நிகழ்த்தப்படவில்லை.
காலங்காலமாக மனித சமுதாயம் அவர்கள் மீது ஒரு அழுத்தத்தை செலுத்தியே கோலோச்சியிருக்கிறது. நமது குடும்ப அமைப்பு முறை அப்படி. பெண்களும் தம்போன்ற சக ஜீவன் தான் என்ற மனநிலையை குழந்தை பருவத்தில் இருந்தே கற்று வருகிற ஆண் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதில்லை. பெண்கள் மீது வன்முறைகள் செய்யும் ஆண்களின் குடும்ப அமைப்பை ஆராய்ந்தால் இவ்வுண்மை புலப்படும். 
பொதுவாக அத்தகையவர்கள் மனிதன் தவிர்க்க வேண்டிய காட்டு விலங்குகளுக்கு ஒப்பானவர்கள் என்பதை தவிர வேறென்ன சொல்வது




17. இன்றைய நாகரிக பெண்கள், பல்துறைகளில்  சாதிக்கும் பெண்கள் பற்றி தங்களது  பார்வை?

 பொறாமையாக இருக்கிறது. வானம் எல்லோருக்குமானது. எத்தனை அடக்குமுறைகள் இருப்பினும் தம் குடும்பத்தினர் தம்மீது வைத்த நம்பிக்கையை சுதந்திரத்தை மிக சாதூர்யமாக கையாண்டு விஞ்சி நிற்கும் பெண்களே நாளைய உலகின் தூண்கள். தன் வளர்ச்சி ஒன்றே நோக்கமென்று இருந்திடாமல் ஒட்டுமொத்த பெண்கள் நலனுக்காக பாடுபட வேண்டிய கடமையை நிறைவேற்ற வேண்டும்.


18.இலக்கியத்தில் சாதிக்க நினைப்பது?

ஒவ்வொரு ஆன்மாவின் அடித்தளத்திலும் எத்தனையோ நுண்ணிய மென்னுணர்வுகள் அலை மோதி கிடக்கின்றன. ஆழக் கீறிய ரணத்தின் தடங்கள் அடி வரை வேரூன்றி கிடக்கிறது.அத்தனை வலிகளையும்,எழுத்துகளால் கடைப் பரப்ப வேண்டும்.என் எண்ணமும்,மொழியும் யதார்த்தங்களில் முகிழ்த்து கவிதைகளை பிரசவிக்க வேண்டும்.இவைகள் இலக்கிய தடத்தில் என் பெயர் கூற வேண்டுமென்ற ஓர் கனாவும்,அவாவும் இதய ஓரத்தில் துளியாய் கிடக்கிறது.


19.வாழ்க்கையில் நீங்கள் சவாலாக சந்தித்து சாதித்த  ஓர் விடயம் பற்றி  எம்மோடு பகிர்ந்துகொள்ளமுடியுமா?

வாழ்க்கையே ஒரு சவாலென நினைக்கிறேன்.நான் எதை சாதித்திருக்கிறேன் என்ற வினாக்கள் எனக்குள்ளும் எழுகின்றன.சோர்ந்து மனமொடிந்த காலங்களிலும்,வாழ்வே சுமையென்று கரைதேடிய நொடிகளிலும், வெறுமைகளில் கை குழுக்கும் கணங்களிலும்,எழுத்தும்...இசையு மே என்னை துவண்டு போகாமல் மீள தருகின்றன.கனதியான சுமையை கூட மென் புன்னகையால் கடந்து வருகையில்  எதையோ தோற்கடித்த கர்வமும், சாதித்த உற்சாகமும்....


20. சமகால படைப்பாளிகளுடனும் வாசகர்களுடனும் பகிர்ந்துகொள்ள  நினைப்பது?


 தமிழ் ஒரு கடல். கரை கடந்தவர் யாருமில்லை.  இது தான் கவிதை என்று வாசகனை நம்ப வைக்க முயற்சி செய்யாமல் மாணவ மனோநிலையில் எழுதுங்கள்.  மென்மேலும் பல தரமான படைப்புகள் தமிழில் உருவாகும். சக படைப்பாளிகளை ஊக்குவித்து அவர்களின் உச்சபட்க திறமைகளை வெளிக்கொணர துணையாயிருங்கள்.

No comments: