Tuesday, May 31, 2016

கனகேஸ்வரன் அவர்களின் “துளிர்” என்ற கவிதை நூல் பற்றிய விமர்சனம் கல்குடா_நேசன்‬ தளத்தில் 31.05.2016









http://kalkudahnation.com/

இலக்கியப்பரப்பில் இடைவெளியில்லாது தொடரும் நூல் வெளியீடுகளில் மலையக மைந்தரொருவரின் கன்னி வெளியீடும் இணைந்து கொள்கின்றது. பொகவந்தலாவையைச் சேர்ந்த அவுஸ்திரேலியா வாழ் KG என அறியப்பட்ட கனகேஸ்வரன் அவர்களின் “துளிர்” என்ற கவிதை நூல் வெளியீடு 09.04.2016 அன்று வெளியிடப்பட்டது. 

முற்றுமுழுதாக வர்ணத்தாள்களில் பதிக்கப்பட்டுப் பிரசுரமான இந்நூலுக்கு ஆசியுரையினை டென்மார்க் ரதிமோகன் அவர்களும் அணிந்துரையினை எழுத்தாளர் வவுனியூர் இரா.உதயணன் அவர்களும் வாழ்த்துரைகளினை லோஜினி அவர்களும் மித்திரன் வாரமலர் ஆசிரியர் பொன்மலர் சுமன் அவர்களும்  கவிஞர் வே.முல்லைத்தீபன் அவர்களும் வழங்கியுள்ளதோடு, இந்நூலினைச் சிறப்பாக வடிவமைத்துள்ள விஜய் அச்சுப்பதிப்பகத்தின் என்.விஜய் அவர்கள் பதிப்புரையினையும் வழங்கியுள்ளார். பின்னட்டைக்குறிப்பினை செல்லமுத்து வெளியீட்டக இயக்குநர் யோ.புரட்சி அவர்கள் தந்திருக்கின்றார். 


இக்கவிதை நூலினை கையிலெடுத்ததும் வாசிக்கும் ஆர்வத்தினை அதிகப்படுத்துவதே இந்நூலின் வடிவமைப்புத்தான் பசுமை போர்த்தப்பட்ட அட்டைப்பட வர்ணம், கவிதைகளுக்கு ஏற்றாற்போல  கருத்தாழம் கொண்ட படங்களுமே. நறுக்கென்று நான்கைந்து வரிகள் ஆழமான கருத்துக்களைக் கொண்டுள்ள கவிதைகள் அனைத்தும் மிக அருமை. கூற வந்த விடயத்தைச் சுற்றி வளைக்காமல் தந்திருப்பதே இந்நூலுக்கு அதிக கனதியைத் தந்துள்ளது.


 ‘மலையகத்தில் பல பெண்கள் குடும்பச்சுமை பாரம் அழுத்தியே சீக்கிரம் பூப்பெய்தி விடுகின்றனர்..” கவிஞர், தனது வரிகளில் கற்பனைக்கு அதிக இடங்கொடாமல் யதார்த்தமாக சமூக அவலங்களைப் படம் பிடித்திருப்பதைச் சிறப்பாகக் கூறலாம். ஏழ்மை, பசி, துரோகங்கள், மூடநம்பிக்கை எனப்பல்வேறு விடயங்களைத் தொட்டுக்காட்டியுள்ளார். சாதாரணமாக நாம் பார்க்கும் கோணத்தை விட, கவிஞர்கள், கலைஞர்கள் ஒரு விடயத்தைப் பார்க்கும் கோணம் வேறாக, வித்தியாசமானதாக இருக்கும். அந்த அநுபவத்தை கவிஞர் கனகேஸ்வரன் அவர்களின் எல்லாக் கவிதைகளிலுமே காணலாம்.

 “நிழலைப்பார்த்து குரைக்கிறது நாய் ஏன் நாய்க்கு பேயை பட்டும் தான் அடையாளம் தெரியுமா? அது கடவுளைக்கூட கண்டிருக்கலாம்” தொட்டுக்காட்டிட கவிதைகள் முட்டி மோதிக்கொண்டு முன்னால் வருகின்றது. எனினும், வாசகர்களின் பொறுப்பில் ஏனையவற்றை விட்டு விடுகின்றேன். வாசிப்பார்வம் கொண்ட சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் வாசித்து மகிழக்கூடிய எளிமையான சொல்லாடலுடன் மிக அழகான நூல். 

அட்டைப்படம் முதல் அனைத்தும் ஓர் வித்தியாசத்தை நோக்கிப் புறப்பட்டுள்ளது. கவிஞரின் முதல் படைப்பென்பதால் சிறு சிறு குறைகளைத் தவிர்த்து காத்திரமான ஆலோசனைகளாலும் கருத்துக்களாலும் அவரை ஊக்கப்படுத்த வேண்டும். ஈழத்து இலக்கிய வரலாற்றிற்கு புது வரவான “துளிர்” கவிதைத்தொகுப்பைத் தந்த கவிஞர் இன்னும் பல நல்ல படைப்புக்களைத் தர வேண்டுமென வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 




நூல் வகை: கவிதைத்தொகுப்பு 
நூலின் பெயர்:  துளிர் 
நூலாசிரியர்: ப.கனகேஸ்வரன் (KG) 
விலை : 250 ரூபாய் 

No comments: