Friday, February 12, 2016

வாசிப்பனுபவத்தில் தமிழர்களை விட சகோதரமொழி பேசுபவர்கள்.....

சில காலங்களாக மேற்கொண்ட ஒரு சிறிய அவதானிப்பின் மூலம் ஓர் விடயத்தினை அறிந்துகொண்டேன். அதாகப்பட்டது,






வாசிப்பனுபவத்தில் தமிழர்களை விட சகோதரமொழி பேசுபவர்கள் (சிங்களவர்கள்) முன்னிலையில் இருப்பதாக தோன்றுகின்றது. பெரும்பாலான சகோதர மொழி பேசுபவர்கள், வேறு மொழி அனுபவமில்லாததால் சிங்கள மொழியே கதியென்று கிடக்கின்றனர் அதனால் சிங்கள் நூல்,சினிமா, பாடல் என்று அனைத்திலும் கொடிகட்டி பறக்க முடிகின்றது என்ற கூற்று உண்மையாக இருப்பினும் தமிழர்களைப் பொறுத்தவரையில் இலங்கை மட்டுமல்லாது பிறநாட்டு தமிழ் படைப்புக்களோடு ஆங்கிலம், சிங்களம் போன்ற நூல்களை வாசிக்கக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாக  இருக்கின்றது.



இருப்பினும் இவ்வாசிப்பனுபவத்தில் நம்மவர்கள் மிக பின்தங்கிய
நிலையில் இருப்பதாகவே காண்கின்றேன். அதற்கான பல உதாரணங்கள் உண்டு எடுகோலாக ஒன்றைச்சொல்லுகின்றேன், பேரூந்து பயணங்களின்போது அதிகமாக ஆசிரியர்கள் மற்றும் நல்ல தொழிலில் உள்ளவர்கள் ஏதோ ஒர் நூலுடன் உறைந்து கிடப்பதையும்
ஒரு பெட்டிக்கடை வைத்திருக்கும்  பெண்மணி ஒருவர் தினமும் புத்தகமொன்றை கையில் வைத்து வாசிப்பதையும் கண்டிருக்கின்றேன். அப்போதெல்லாம் மெய்சிலிர்த்துப்போவேன். அத்துடன் முக்கியமாக அவர்கள் மனப்பாடமாக கவிதைகளை சொல்லி சிலாகிப்பதை பார்த்து வியந்து வாய்பிளந்த சந்தர்ப்பங்கள் பல எனக்கு.

பெரும் பெரும் விமர்சனமெல்லாம் எழுதி பத்திரிகையில் போடாத அந்த வாசக விமர்சகர்கள், படைப்பாளர்களின் பெயர்சொல்லி ஒப்பீட்டு தரம் பிரித்து ரசிப்பதில் வல்லவர்களான இவர்கள் பெரிய படிப்பாளிகளுமல்ல நூல் விமர்சகர்களும் அல்ல வெறும் சாதாரண  பிரஜைகளே.

இது இப்படியிருக்க, பல்கலைக்கழகத்தில் ஓர் டிப்ளோமா கற்கைநெறியில் இணைந்திருக்கும் ஓர் மாணவன், அப்துல் ரகுமானை யாரென்று தெரியாது என்று சொன்னபோது நான் அதிர்ந்து பார்த்தது ஏதோ உண்மைதான். விரிவுரையாளர், "அப்துல் ரகுமானின் கவிதைகள் என்ன ஒரு அற்புதம் எனக்குள் பல மாற்றங்கள் நடந்தது அவரின் கவிதைகளை வாசித்த பிறகுதான்" என அவர் நீட்டிக்கொண்டுபோய் "அவரின் கவிதைகளை வாசித்திருக்கின்றீர்களா" என கேட்டதற்கு தெரியாது.... இல்லை என கோமாளித்தனமாய் பதில் சொன்ன அந்த பையனை பார்த்து பரிதாபப்படத்தான் முடிந்தது.


இப்படி சிறியவர் பெரியவர் படித்தவர் படிக்காதவர் உயர்ந்தவர் தாழ்ந்தவரென்ற பேதமின்றி வாசிப்பனுபவத்தில் முன்னிலை வகிப்பவர்களாய் சகோதர இனத்தை என்னால் காணமுடிந்தது. இணையம், மற்றும் முகநூலில் மட்டுமே மூழ்கிக்கிடக்கும் நம் இளைய தமிழ் சமூகம் கொஞ்சம் கண்விழித்து நூல்களை பார்க்குமா வாசிப்பில் தன்னை முழுமனிதனாய் மாற்றிக்கொள்ளுமா என்ற கேள்வி இதயத்துக்குள் கறையானாய் அரித்துக்கொண்டிருக்கின்றது. இது வெறுமனே கட்டுரை மட்டுமல்ல, உணர்வு,ஏக்கம், கவலை, எதிர்பார்ப்பு என்று ஏராளமான மனச்சுமைகளை கொண்டுள்ளது.




இந்திய படைப்புக்கள் மட்டுமல்ல இலங்கை படைப்புக்களையும் அதற்கீடாய் மதித்து வாசித்து காலத்தை பிரதிபலிக்கவேண்டும், அது வாசிப்பறிவுள்ள எம் தமிழர் ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்புமாகும்.


இன்றிலிருந்தாவது புத்தகங்களை வாசிக்க தொடங்குவோம். புதிதாய் சிந்திக்க ஆரம்பிப்போம் புத்தகப்புரட்சியினை மேற்கொள்ளுவோம் இளையவர்கள் முதல் அனைவரும் இதற்காய் கைகோர்த்திடுவோம்.





No comments: