Tuesday, February 16, 2016
விடுதலையில்லையே!! .
நினைவுகளை தூக்கிலிடும்
நிகழ்காலம் செய்தேன்
அணையாக கவிதையிடம்
அடைக்கலமானேன் -இருந்தும்
வனைந்து வைத்த உன்
கனவுகளிடமிருந்து விடுதலையில்லையே!!
.
Friday, February 12, 2016
வாசிப்பனுபவத்தில் தமிழர்களை விட சகோதரமொழி பேசுபவர்கள்.....
சில காலங்களாக மேற்கொண்ட ஒரு சிறிய அவதானிப்பின்
மூலம் ஓர் விடயத்தினை அறிந்துகொண்டேன்.
அதாகப்பட்டது,
வாசிப்பனுபவத்தில்
தமிழர்களை விட சகோதரமொழி பேசுபவர்கள்
(சிங்களவர்கள்) முன்னிலையில் இருப்பதாக தோன்றுகின்றது. பெரும்பாலான சகோதர மொழி பேசுபவர்கள்,
வேறு மொழி அனுபவமில்லாததால் சிங்கள
மொழியே கதியென்று கிடக்கின்றனர் அதனால் சிங்கள் நூல்,சினிமா, பாடல் என்று
அனைத்திலும் கொடிகட்டி பறக்க முடிகின்றது என்ற
கூற்று உண்மையாக இருப்பினும் தமிழர்களைப் பொறுத்தவரையில் இலங்கை மட்டுமல்லாது பிறநாட்டு
தமிழ் படைப்புக்களோடு ஆங்கிலம், சிங்களம் போன்ற நூல்களை வாசிக்கக்கூடிய
சந்தர்ப்பம் அதிகமாக இருக்கின்றது.
இருப்பினும்
இவ்வாசிப்பனுபவத்தில் நம்மவர்கள் மிக பின்தங்கிய
நிலையில்
இருப்பதாகவே காண்கின்றேன். அதற்கான பல உதாரணங்கள்
உண்டு எடுகோலாக ஒன்றைச்சொல்லுகின்றேன், பேரூந்து பயணங்களின்போது அதிகமாக ஆசிரியர்கள் மற்றும்
நல்ல தொழிலில் உள்ளவர்கள் ஏதோ ஒர் நூலுடன்
உறைந்து கிடப்பதையும்
ஒரு பெட்டிக்கடை வைத்திருக்கும் பெண்மணி
ஒருவர் தினமும் புத்தகமொன்றை கையில்
வைத்து வாசிப்பதையும் கண்டிருக்கின்றேன். அப்போதெல்லாம் மெய்சிலிர்த்துப்போவேன். அத்துடன் முக்கியமாக அவர்கள் மனப்பாடமாக கவிதைகளை
சொல்லி சிலாகிப்பதை பார்த்து வியந்து வாய்பிளந்த சந்தர்ப்பங்கள்
பல எனக்கு.
பெரும்
பெரும் விமர்சனமெல்லாம் எழுதி பத்திரிகையில் போடாத
அந்த வாசக விமர்சகர்கள், படைப்பாளர்களின்
பெயர்சொல்லி ஒப்பீட்டு தரம் பிரித்து ரசிப்பதில்
வல்லவர்களான இவர்கள் பெரிய படிப்பாளிகளுமல்ல
நூல் விமர்சகர்களும் அல்ல வெறும் சாதாரண பிரஜைகளே.
இது இப்படியிருக்க, பல்கலைக்கழகத்தில் ஓர் டிப்ளோமா கற்கைநெறியில்
இணைந்திருக்கும் ஓர் மாணவன், அப்துல்
ரகுமானை யாரென்று தெரியாது என்று சொன்னபோது நான்
அதிர்ந்து பார்த்தது ஏதோ உண்மைதான். விரிவுரையாளர்,
"அப்துல் ரகுமானின் கவிதைகள் என்ன ஒரு அற்புதம்
எனக்குள் பல மாற்றங்கள் நடந்தது
அவரின் கவிதைகளை வாசித்த பிறகுதான்" என
அவர் நீட்டிக்கொண்டுபோய் "அவரின் கவிதைகளை வாசித்திருக்கின்றீர்களா"
என கேட்டதற்கு தெரியாது.... இல்லை என கோமாளித்தனமாய்
பதில் சொன்ன அந்த பையனை
பார்த்து பரிதாபப்படத்தான் முடிந்தது.
இப்படி
சிறியவர் பெரியவர் படித்தவர் படிக்காதவர் உயர்ந்தவர் தாழ்ந்தவரென்ற பேதமின்றி வாசிப்பனுபவத்தில் முன்னிலை வகிப்பவர்களாய் சகோதர இனத்தை என்னால்
காணமுடிந்தது. இணையம், மற்றும் முகநூலில்
மட்டுமே மூழ்கிக்கிடக்கும் நம் இளைய தமிழ்
சமூகம் கொஞ்சம் கண்விழித்து நூல்களை
பார்க்குமா வாசிப்பில்
தன்னை முழுமனிதனாய் மாற்றிக்கொள்ளுமா என்ற கேள்வி இதயத்துக்குள்
கறையானாய் அரித்துக்கொண்டிருக்கின்றது. இது வெறுமனே கட்டுரை
மட்டுமல்ல, உணர்வு,ஏக்கம், கவலை,
எதிர்பார்ப்பு என்று ஏராளமான மனச்சுமைகளை
கொண்டுள்ளது.
இந்திய
படைப்புக்கள் மட்டுமல்ல இலங்கை படைப்புக்களையும் அதற்கீடாய்
மதித்து வாசித்து காலத்தை பிரதிபலிக்கவேண்டும், அது வாசிப்பறிவுள்ள
எம் தமிழர் ஒவ்வொருவரினதும் கடமையும்
பொறுப்புமாகும்.
இன்றிலிருந்தாவது
புத்தகங்களை வாசிக்க தொடங்குவோம். புதிதாய்
சிந்திக்க ஆரம்பிப்போம் புத்தகப்புரட்சியினை மேற்கொள்ளுவோம் இளையவர்கள் முதல் அனைவரும் இதற்காய்
கைகோர்த்திடுவோம்.
போனவருடம் போலத்தான் (14.02.2016)
காதலில்லை
கண்ணீருமில்லை
காதலர்தினத்திற்கு
காசுசெலவழிக்க
தேவையுமில்லை......
மோதலில்லை
முறைப்புமில்லை
மெளமான
யுத்தங்களின்
மொழிபெயர்ப்புமில்லை.....
பார்க்
இல்லை பீச்சும் இல்லை
பார்ப்போர்
கண் கூசுவதுமில்லை
பயமென்றால்
கொஞ்சமுமில்லை....
போனவருடம்
போலத்தான் இவ்வருடமும்
மாசிமாத
பதினான்காம் நாள் விஷேட நிகழ்வு
மாங்குமாங்கென்று
வேலைக்கு போவது!!
நம் நேசம் சேர்க்கிறாய்!!
கண்களால்
கவிதை பேசினாய்
கவிதையால்
காதல் பேசினாய்
காதலால்
மெளனம் பேசினாய்
மெளனத்தால்
வார்த்தை பேசினாய்
வார்த்தையால்
வாழ்க்கை பேசினாய்
வாழ்க்கையால்
வசந்தம் பேசினாய்
வசந்தத்தால்
வழிகள் பேசினாய்
வழிகளால்
நல் மனிதம் பேசினாய்
மனிதத்தால்
மகிழ்வை தேடினாய்
மகிழ்வால்
என் மனதில் வாழ்கிறாய்
மனதால்
நம் நேசம் சேர்க்கிறாய்!!
“கல்குடா நேசனின் 26 வது இலக்கிய நேர்காணலில் இந்திய ஹைக்கூ கவிஞர் கவிஞர் தக்ஷன் (12.02.2016)
பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது.
வெற்றிகரமாகப் பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது.
இதன் தொடரில் இன்று 12.02.2016ம் திகதி வெள்ளிக்கிழமை எம்மோடு 26 வது படைப்பாளியாக இணைந்து கொள்கின்றார் எமது அயல்நாடான இந்தியாவைச்சேர்ந்த ஹைக்கூ கவிஞர் தக்ஷன் அவர்கள்.
இளம் எழுத்தாளர்கள் புதுக்கவிதையை புடைசூழ்ந்து ஆக்கிரமித்துக்கொண்டிருக்கையில், ஹைக்கூ, லிமரைக்கூ, மகிழ்வூட்பா, லிமர்புன் போன்ற இலக்கிய வடிவங்களில் தனது ஆர்வத்தைச் செலுத்தி, அதில் தனக்கென ஓர் தனியிடத்தை தக்க வைத்துக்கொள்ளப் போராடும் இளம் படைப்பாளியான தக்ஷன் அவர்களை கல்குடா நேசனுக்காக சந்தித்தோம்.
இத்துறையில் பல சாதனைகளைப் புரிய வேண்டுமென்ற கனவில் உழைத்துக்கொண்டிருக்கும் இக்கவிஞருக்கு கல்குடா நேசன் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இந்நேர்காணல் கவிஞரைப் பற்றி தெரிந்து கொள்வது மட்டுமல்லாது, மேற்கூறப்பட்ட பா வடிவங்களின் அடிப்படை அறிவைப் பெற்றுக்கொள்ள உதவுவதாகவும் அமைகின்றது. எனவே, இந்நேர்காணல் பலருக்குப் படிப்பினையாக இருக்குமென்பதில் ஐயமில்லை.
தங்களைப் பற்றிய அறிமுகத்தோடு எமது வாசகர்களுடன் கைகுலுக்கிக்கொள்ளலாமா?
கவிஞர் தக்ஷன் :வணக்கம். என் பெயர் தக்ஷன். நான் தஞ்சாவூர் தமிழ் நாட்டைச்சேர்ந்தவன். பொறியல் துறையில் பணி புரிந்து வருகிறேன். கல்குடா நேசன் இணையத்தினூடாக உங்களைச் சந்திப்பதில் நான் பெருமைப்படுகிறேன். பல கவிஞர்களின் நேர்காணலை நான் இத்தளத்தில் கண்டு மகிழ்வடைந்திருக்கிறேன்.
எப்படி இந்த இலக்கியத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது?
கவிஞர் தக்ஷன் இலக்கியங்கள் என்பது என் பள்ளிப்பருவத்திலேயே வந்த ஆசை. நான் ஆங்கிலப் பள்ளியில் பயின்றவன். இருப்பினும், தமிழ் மீதும் தமிழில் இயற்றப்படும் துளிப்பாக்கள் என்ற வடிவம் தான் என்னைப் பெரிதும் வசியம் செய்தது. அணில் வரிக்கவிதைகள் என்று சொல்வார்கள் மூன்று வரிக்கவிகளை அவ்வபோது ஏற்பட்ட அணில் வரிகள் தான் இன்றும் எனது பெரிய ஆர்வம். சாதியம், இன, மதவாதம் மறைந்த ஓர் இலங்கை உருவாகட்டும். இலங்கையர் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்
படைப்புக்களை சமூகத்திடன் சேர்ப்பதில் உங்களுக்கான களத்தினை எவ்வாறு அமைத்துக்கொள்கின்றீர்கள்?
கவிஞர் தக்ஷன் படைப்புக்களை சமூகத்திடம் சேர்ப்பதில் இன்றைய நிலையில் எனக்கு என் ஆசிரியரான கவிஞர்கள் பெரிதும் ஊக்கப்படுத்துகிறார்கள். படைப்பாளிகளை உருவாக்கவும் நிறைய கவிஞர்கள் இன்று முன்வருகிறார்கள் என்பதில் தமிழ் இலக்கியம் நல்ல ஆரோக்கியமான நிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனக்கான களத்தினை சற்று போராடியே அமைத்துக்கொள்கிறேன்.
உங்களைப் பாதித்த இந்தியப் படைப்பாளிகள்?
கவிஞர் தக்ஷன் என்னை பாதித்த இந்திய படைப்பாளிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள், வைரமுத்து அவர்கள், கவிஞர் இரா. இரவி அவர்கள்.
எவ்விலக்கியத்தில் அதிகமான ஈடுபாடுள்ளது? ஏன்?
கவிஞர் தக்ஷன் கவிதை இலக்கியத்தில் ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, லிமர்புன், மகிழ்வூட்பா என்ற பா வகைமைகளை என் உயிராக நேசிக்கிறேன். இவற்றில் தான் என் முழு ஈடுபாடும். கவிதாயினி ராஜ் சுகா நீங்கள் கூறிய “ஹைக்கூ” பற்றிய விளக்கம் எமது வாசகர்களுக்காக கவிஞர் தக்ஷன் ஹைக்கூ பற்றிய விளக்கம் என்றால்… ஹைக்கூ என்பது ஒரு கண நேர காட்சியாகும். எவரும் கண்டிராத கோணத்தில் 3 வரிகளில் சொல்லப்படும் அதிகளவு பொருள் கொண்டதாகும். -மூன்றடிகளால் பாடுவது. -ஹைக்கூ கற்பனையை ஏற்காது. -ஹைக்கூ உவமை, உருவகங்களைப் பயன்படுத்தாது. -ஹைக்கூ உணர்ச்சியை வெளிப்படையாய்க் கூறாது. -ஹைக்கூ தன்மைப் பாங்கினைத் தவிர்க்கும். -ஹைக்கூ கவிதைக்குள்ளே ஒரு சொல் மட்டும் குறியீடாய்ப் பயின்று வருதல் இல்லை. -ஹைக்கூ இருண்மையை மேற்கொள்ளாது. -ஹைக்கூவில் நுண்பொருண்மை இல்லை. -கவிஞன் தன் கருத்தை ஏற்றிச் சொல்லாமை. -பிரச்சாரமின்மை. -எளிமையாகக் கூறுவது. -சொல்லுவதைக் காட்டிலும் சொல்லாமல் விடுவது. -சின்ன உயிர்களையும் சிறப்பித்துப் பாடுவது. -மின்னல் என வரும் ஈற்றடி அமைப்பினைக் கொண்டதாக இருப்பது. -மெல்லிய நகைச்சுவையுணர்வு இழையோடியிருக்கும்படி அமைவது. -இயற்கையைப் பாடுவதுடன் இயற்கையை மனித உணர்வுகளோடு இணைத்துப் பாடுவது. -ஆழ்மன உணர்வுகளும் மெல்லிய சோகமும் இழையோடும்படி அமைவது. -பிற உயிர்களைத் தனக்கு இணையாக மதித்துப் பாடுவது. என்ற கருத்தை ஹைக்கூ படைப்பாளர்களும், வாசகர்களும் கருத்திற்கொண்டு ஹைக்கூ கவிதைகளை அணுக வேண்டும்.
லிமரைக்கூ, மகிழ்வூட்பா, லிமர்புன் எனும் வடிவங்கள் பற்றிக் கூற முடியுமா?
கவிஞர் தக்ஷன் லிமரைக்கூ என்பது 3 வரி கவி வடிவம். ஆங்கிலத்தில் லிமரிக் எனப்படும் 5 வரி கவிதையின் வடிவத்தை ஹைக்கூ போலவே 3 வரிகளில் இயைபு பொருத்தி எழுதுவது லிமரைக்கூ எனப்படும். இதற்கு கடைப்பிடிக்க வேண்டிய இலக்கணமானது சீர் பிரித்து எழுதுதலே ஆகும். முதல் வரியில் மூன்று சீர்களும் இரண்டாம் வரியில் நாங்கு சீர்களும், மூன்றாம் வரியில் மூன்று சீர்களும் பொருத்தி எழுத வேண்டும். முதல் வரியின் கடைசி சீர் இயைபு மற்றும் மூன்றாம் வரியின் கடைசி சீர் இயைபும் பொருத்தி எழுதுதலே லிமரைக்கூ ஆகும்.
மகிழ்வூட்பா என்பதும் இயைபு பொருத்தி எழுதும் ஒரு வித கவி வடிவம் தான். ஆங்கிலத்தில் Clerihew என்பார்கள். 4 வரி கவி வடிவம், முதல் வரியின் கடைசி சீரும் இரண்டாம் வரியின் கடைசி சீரும் இயைபு இருக்க வேண்டும். மூன்று மற்றும் நாங்காம் வரியின் கடைசி சீரில் இயைபு பொருந்தி இருக்க வேண்டும்.
லிமர்பும் என்பது ஒரு உரைநடை போலவோ அல்லது சிறு கட்டுரை போலவோ 15 வரிகளில் ஒரு பாடுபொருளைப்பற்றி எழுதி, அதன் முடிவில் கட்டுரைக்கு ஏற்றாற்போல் லிமரைக்கூ எழுதி முடித்தல் ஆகும். லிமர்புன் மற்றும் மகிழ்வூட்பா எழுதி கவிதைப்போட்டியில் நான் பரிசு பெற்றுள்ளேன் என்பதையும் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஹைக்கூ என்பதற்கும் மேற்கூறிய இலக்கிய வடிவங்களுக்கும் என்ன ஒற்றுமை வேற்றுமை காணப்படுகின்றது?
கவிஞர் தக்ஷன் ஹைக்கூ என்பதை வாசித்து பொருள் புரிந்து கொள்ள வாசகர்களும் சிறு கவித்தன்மை ஏனெனில், ஹைக்கூ என்பது நம்மைத் தட்டி அழைக்கும் கை… 3 வரியில் எத்தனை எத்தனை பொருள் விரிகிறது என்பது வாசகர்களின் கவித்தன்மையை பொருத்து அமையும். இதுவே மற்ற வடிவங்களுக்கும் ஹைக்கூவுக்குமான வேற்றுமை.
‘இன்றைய சமகால எழுத்தாளர்கள் புதுக்கவிதைக்குள் புகுந்து விளையாடுகின்றார்கள் மரபு சார்ந்த இலக்கியங்களை புறந்தள்ளுகின்றார்கள்’ எனும் குற்றச்சாட்டு இருக்கின்றது ஏன்? இவ்வாறான நிலை எனக் கருதுகின்றீர்கள்?
கவிஞர் தக்ஷன் மரபு மற்றும் மேற்கூறிய கவிதைகளைப் படைப்பதற்கு இலக்கண வரைமுறைகளை நன்கறிந்து கையாள வேண்டும். புதுக்கவிதைகளில் கற்பனையை அழகாக வடிவமைத்து அனைவரையும் வசியம் செய்து விட முடிகிறது என்பதே காரணமாக இருக்கிறது. ஹைக்கூ கவிதைகளை பொறுத்த வரை கற்பனையை ஏற்காது, அசைகள் கடைப்பிடித்தல் போன்ற இலக்கணங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். புதுக்கவிதைகளுக்கு கற்பனை தான் கரு என்பதால் அனைவராலும் எழுதிடவும் முடிகிறது. மரபு சார்ந்த இலக்கியங்களின் தெளிவில்லாமையே புறந்தள்ளக் காரணமாகும். மரபு சார்ந்த கவிதைகளை எளிதில் படைத்து விட முடியாது என்பதும் காரணமாகும்.
இலங்கைப் படைப்புக்களை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதா?
கவிஞர் தக்ஷன் இலங்கைப் படைப்புக்களை வாசிக்கும் சந்தர்ப்பம் அதிகமுண்டு. முகநூலில் அதிகளவிலான படைப்புகளை என்னால் காண முடிகிறது. அதிகளவிலான கவிஞர்களையும் காண முடிகிறது. ஹைக்கூ பற்றிய ஆர்வம் இலங்கை கவிஞர்களில் அதிகளவில் கண்டேன். குறிப்பாக, அதிகளவு இலங்கைப் படைப்புகளைக் கண்டு தான் ஹைக்கூவில் ஆர்வமாகிறேன்.
அப்படியாயின், இலங்கைப் படைப்பில் எவ்வகையான வித்தியாசங்கள், அநுபவத்தினை உணர்கின்றீர்கள்?
கவிஞர் தக்ஷன் ஹைக்கூ பற்றிய சிந்தனைகள் இலங்கை படைப்பாளிகள் அருமையாக தூவுகின்றனர். புதுப்புது வடிவங்களைக் கற்கவும் வலைத்தளங்களில் அதிக இளம் கவிஞர்களைக் காண்கிறேன். மரபு, ஆசிரியப்பா, வெண்பா, துளிப்பா போன்ற படைப்புகளில் நான் வித்தியாசமான அனுபவத்தினை உணர்கிறேன்.
உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள்? எவ்வாறு உங்களை இலக்கியத்தில் வளப்படுத்திக்கொள்கின்றீர்கள்?
கவிஞர் தக்ஷன் கவர்ந்த எழுத்தாளர்கள். நா.முத்துக்குமார் அவர்களின் ஹைக்கூக்கள், முனைவர் கவியருவி ம. ரமேஷ் அவர்கள், கவிஞர். நாகை ஆசைத்தம்பி அய்யா, கவிஞர். தா. துளசி, ஹைக்கூ கவிஞர் கி.சார்ல்ஸ் அய்யா. இவர்களின் இலக்கியங்கள் என்றென்றும் நின்று பேசும். இவற்றை வாசித்தே என்னை இலக்கியத்தில் வளப்படுத்திக்கொள்கின்றேன்
ஹைக்கூ இலக்கியங்களில் இன்றைய இளையவர்களின் ஆர்வம் எவ்வாறு இருக்கின்றது? அதனை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த நீங்கள் எவ்வகையான முயற்சிகளை மேற்கொள்கின்றீர்கள்? அதில் பெற்றுக்கொண்ட வெற்றிகள் பற்றிக்கூற முடியுமா?
கவிஞர் தக்ஷன் ஹைக்கூ இலக்கியங்களில் இன்றைய இளையவர்களின் ஆர்வம் மிக அதிகமாக இருக்கின்றது. கற்றுக்கொள்ள ஆர்வமும் அதிகளவிலுள்ளது. ஹைக்கூவில் எவ்வாறான விடயங்களைச் சொல்ல முடியும்? எவற்றை ஹைக்கூவாகப் பார்க்கலாம் எனப் பல கேள்விகளுடனும், ஆர்வத்திடனும் இன்றைய இளையவர்கள் இருகின்றார்கள். இதனை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தவும், கற்பிக்கவும் முகநூல் குழுமங்கள் என்னை நாடினர். கவிஞர் கவியருவி, கவியன்பன் கலாம் அய்யா அமைத்துக் கொடுத்த களத்தின் மூலமாக நான் ஹைக்கூ பற்றிய அறிமுகத்தையும் நான் பெற்ற தெளிவுகளையும் மற்றவர்களுக்கும் கற்பிக்க எளிமையாகவுள்ளது. இவற்றைக்கற்று ஹைக்கூ படைத்து பிரபல இலக்கிய இதழ்களிலும் மற்றவர்களின் படைப்பை காண்கிறேன். மகிழ்ச்சியடைகிறேன்.
இத்துறையில் நீங்கள் வளர தங்களது ஆசான்களாக கருதுவது?
கவிஞர் தக்ஷன் இத்துறையில் நான் எனது ஆசான்களாக கருதுவது முனைவர் ம. ரமேஷ் அய்யா மற்றும் மகிழ்நன் மறைக்காடு அய்யா, தா. துளசி, எஸ். நாகலிங்கம் தென்னம்பூவயல் ஆவார்கள்.
எதிர்காலத்திட்டம்?
கவிஞர் தக்ஷன் சிறந்த ஹைக்கூவை உருவாக்குவது. ஹைக்கூ கவிதைகளைப் புத்தகமாக வெளியிட்டு, அனைவரிடமும் ஹைக்கூ இருக்கிறது என்பதை உணர வைப்பது. ஹைக்கூ பற்றிய தேடலில் வெற்றியடைந்து அனைவருக்கும் மென்மேலும் கற்பித்து சிறந்த ஹைக்கூ கவிஞர்களை உலகிற்கு அறிமுகஞ்செய்வது
மித்திரன் வாரமலர் சஞ்சிகையில் பிரசுரமான நேர்காணல் (14.02.2016) ரூபன்



1.தங்களைப் பற்றி
தம்பிராசா- தவரூபன் ஆகிய நான் வலையுலகில் ரூபன் என்றே அறியப்பட்டேன். நான்பிறந்து தவழ்ந்த இடம், திருகோணமலை மாவட்டத்தில் வயலும் வயல் சார்ந்த இடமானமருதநிலம் எனும் ஈச்சிலம்பற்றையில் தான். அழகிய இயற்கை எழில் கொஞ்சும் பசுமைநிறைந்த பச்சை வயல்களும், அவற்றை சுற்றி இனிய தென்னை, பனை, கமுகு ஆகியமரங்களும் நிறைந்தது பார்ப்பவர் எவரையும் கொள்ளை கொள்ளும் வண்ணம்அமைந்திருக்கும் எம் ஊர். அவ்விடம் என் பிறப்பிடம் என்பதில் எனக்கு மட்டற்றமகிழ்ச்சியே. மேலும் என் கல்வியை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை தி மு/ ஸ்ரீ சண்பகமகாவித்தியாலத்திலேயே பயின்றேன். உயர்தர வகுப்பில் கலைப் பிரிவில் முதல்முறையிலேயே சித்தியடைந்து பெற்றோரின் கனவை நிஜமாக்கி நானும்பெருமையடைந்தேன். மேலும் தி மூ/ மாவடிச்சேனை வித்தியாலத்தில் ஆசிரியாராக சிலகாலம் கடமையாற்றினேன். வேலை தேடி வெளிநாட்டிற்கு செல்ல வேண்டியதாயிற்று,ஆசிரியத் தொழிலை விட்டு விட்டு குடும்பத்தையும் தாயகத்தையும் விட்டு தனியாக புறப்பட்டேன். முன்னோர்கள் சொன்னபடி திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு இணங்க.
2. இலக்கிய பிரவேசம் குறித்து?
இலக்கிய பிரவேசம் என்னும் போது நான் பாடசாலையில் கல்வி கற்கும் போது பல மேடைப் பேச்சாளராக இருந்து கவிதைகள், கட்டுரைகள் என்றும் இலங்கை வானொலி தென்றலுக்கு இசையும் கதையும் எழுதுதல் சின்னச் சின்னக் கவிதைகள் மாத ஏடுகளுக்கு எழுதிய வண்ணம் இருந்தேன். நான் படிக்கும் காலத்தில், அப்போதே இலக்கியத்தில் பிரவேசம் ஆகிவிட்டேன்.
பின்பு கடந்த 10 ஆண்டுகள் இலக்கிய துறையில் என்னை முழுமையாக அர்பணித்த வண்ணம் இருக்கிறேன். வலைப்பூக்கள் வழி எனது எண்ணற்ற படைப்புகளை அன்று தொடக்கம் இன்றுவரைக்கும் எழுதிக்கொண்டு தான் வருகிறேன் இதுதான் என்னை முழுமையாக உலக அரங்கிற்கு எடுத்துக்காட்டியது.
3.இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்கள் வெளிவர இருக்கும் நூல்கள் பற்றி கூறமுடியுமா?
நான் முன்பு இரவைத்தேடும் விடியல் என்ற மின்நூல் வெளியீடு செய்தேன். பின்பு தான் நான் யோசித்தது அச்சு வடிவில் வந்தது. அதுதான் எனது 'ஜன்னல் ஓரத்து நிலா' என்ற கவிதைத் தொகுதி.
இரண்டாவது நூல் அச்சுவடிவில் அமைக்கத் தற்போது அச்சகத்தில் இருகிறது. அதுதான் ஆயுதப்பூ என்ற சிறுகதை நூல் 15.5.2016 மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் ஆதிகுமணன் அரங்கில் வெளியீடு செய்ய இருக்கிறேன்.
4. நீங்கள் முன்னெடுக்கும் இலக்கிய செயற்பாடுகள்?
நாம் பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இருப்பதை விட தமிழுக்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்ற உணர்வு என்மனதில் ஊறியது. அதன் விளைவுதான் ஊற்றுவலையுலக எழுத்தாளர்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கினேன். இதற்கு நான் தான் பொறுப்பாக இருக்கிறேன்.
இந்த அமைப்பின் வழி தற்போது தமிழர்களின் பண்டிகை காலங்களில் அதாவது தைப்பொங்கல். சித்திரை வருடப்பிறப்பு தீபாவளி போன்ற விசேட தினங்களை மையப்படுத்தி உலகம் தழுவிய கவிதைப்போட்டி, சிறுகதைப்போட்டி, நகைச்சுவைப்போட்டி, கட்டுரைப்போட்டி என இப்போது வரைக்கும் செய்து கொண்டு வருகிறேன்.
இலங்கையில் சகல மாவட்டங்களிலும் இலக்கிய பயிற்சி பட்டறை நடத்த திட்டம் உள்ளது மாசி மாதம் இதுசம்மந்தமாக ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்ற நிருவாக குழுவினர் வினாத்தாள்கள் தயாரித்த வண்ணம் இருக்கிறோம் கீழ்வரும் விடங்கள் கற்பிக்க இருக்கிறோம்.
கணினி வன்பொருள், மென்பொருள் அறிமுகம்.
கணினி வலையமைப்புகள், இணையம், சமூக வலையமைப்புகள்.
Html மொழியறிவு, Domains, Hostings பற்றிய தெளிவு.
வலைத்தளம் (Web), வலைப்பூ (Blog), கருத்துக்களம் (Forum) வடிவமைத்தல்.
ஊடகங்கள் பற்றிய அறிவு, வலைப்பதிவுகளும் கட்டுரைகளும்.
நகைச்சுவை, நாடகம், கதைகள் புனைதல்.
புதுக்கவிதை, மரபுக்கவிதை, பாடல் புனைதல்.
5.எல்லா துறைகளையும் போலவே இலக்கிய துறையிலும் பல காழ்ப்புணர்வுகளால் ஒருவர்மீது ஒருவர் சேறுபூசிக்கொள்கின்றார்கள் என பரவலாக பேசப்படுகின்றது இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
காய்க்கும் மரங்கள் கல்லெறி வேண்டுவது வழக்கம் அது போல ஒரு படைப்பாளன் மற்றறைய படைப்பாளனுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். இப்படியான காழ்ப்புணர்வுளால் ஒருவர் மீது ஒருவர் சேறு பூசுவதை நான் விரும்பமாட்டேன்.
என்னைப் பொறுத்தவரையில் ஒரு படைப்பாளன் அவனது படைப்புக்கு மக்கள் மத்தில் வரும் திறனாய்வுகளை ஏற்க வேண்டும் அப்போதுதான் அடுத்த இலக்கை அடைய முடியும்
காழ்ப்புணர்வுகளால் ஒருவர்மீது ஒருவர் சேறு பூசிக்கொள்கின்றார்கள் என்றால்இலக்கியத்தை விரும்பாதவன் மற்றும் வியாபாரமாக நினைப்பவனாகத்தான் இருக்க முடியும். இப்படியான செயலில் இறங்குபவார்கள்
சந்திரனை பார்த்து நாய் குலைத்தால் நாய் நாய்தான் சந்திரன் சந்திரந்தான் சந்திரனை தொடமுடியாது.உச்சத்தில் இருப்பவன் அதைப்போலதான் நல்ல படைப்பாளி.
6.இலக்கியம்,படைப்பாளர்கள் என்ற விடயங்கள் சமூகத்தால் எவ்வாறு நோக்கப்படுகின்றது அவர்களின் ஈடுபாடுஎவ்வாறானது?
சிற்பி கல்லை சிலையாக்குவது போல மக்களின் பண்பாடு நாகரீக வளர்ச்சிகளை இலக்கியங்கள் வழி படைப்பாளன் சமூகத்திற்கு கொடுக்கிறான்
அது கடந்த காலங்களை விட இளையோர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் எங்கோ ஒரு மூலையில் இலக்கிய படைப்புக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்த இலக்கியங்கள் வெளிவருவதால் சமூகத்தில் படைப்பாளர்கள் மேல் நம்பிக்கையும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது சொல்லப்போனால் சமூகத்தில் நகமும் தசையும் போலதான்.
.7.நீங்கள் வாசித்து வியந்த இலங்கை படைப்பு, படைப்பாளர்கள் பற்றி?
நான் பல படைப்பாளிகளின் நூல்களைப் படித்திருக்கிறேன். அதிலும் சில்லையூர் செல்வராசா அவர்களின் படைப்புகளை நான் விரும்பிப் படிப்பேன். அவருடைய சிறுகதைகள், கவிதை நூல்கள்களை படிப்பவர்கள் நிச்சயம் மீண்டும் மீண்டும் படிக்கத்தான் சொல்லும், மிக அழகாக சொல்லியுள்ளார். அத்தோடு இளம் படைப்பாளிகளின் படைப்புகளையும் வாசித்த வண்ணம் வாழ்கிறேன்
8. இலக்கியம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?
இலக்கியம் மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவனவாக இருக்க வேண்டும். இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை நெறிகள் வெளிப்பட்டு இருப்பதை காணமுடியும். நல்ல இலக்கியம் மக்கள் மத்தியில் அழியாது பேணப்படுகிறது.
9. மலேசிய இலங்கை இலக்கிய தொடர்புகள் குறித்து?
மலேசியா எழுத்தாளர்கள் 2015ம்ஆண்டு இலங்கைக்கு வந்தரா்கள் அவர்களையும் இலங்கை எழுத்தார்களையும் வைத்து மாபெருவிருது வழங்கும் விழா நடத்தினோம் தடாகத்தின் ஊடாக அதன் போதுபல தொடர்பாடல்கள் இலங்கையில் வாழ்கிற இலக்கியவாதிகளுக்கு அறியக்கிடைத்து. அது மட்டுமா 2016.5.15 அன்று மலேசிய எழுத்தாளர்கள் இலங்கை எழுத்தாளர்கள் புலம்பெயர்ததேசத்தில் வாழும் எழுத்தாளர்களை சேர்த்து நிகழ்வு நடாத்த திட்டம் இட்டுள்ளேன் இவற்றை முன் நின்று தலைமை தாங்கி நடத்துவதும் நானே. இதன் வழி மேலும் நல்ல நட்புணர்வு வளரும் என்பதில் ஐயமில்லை..
10. மித்திரன் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள நினைப்பது?
பல முதுபெரும் படைப்பாளிகளின் நூல்களைப் படித்து அவர்கள் கையாண்ட நுட்பங்களை அறியலாம். தேடல் உள்ளவரை படைப்பாற்றலில் சிறந்து விளங்க இடமுண்டு. அதற்காக அடுத்தவர் பாணியைப் பின்பற்றாமல், தமக்கென ஒர் தனிப் பாணியைப் பின்பற்றுதல் நல்லது.
-----------------------------------------------------------
வணக்கம்
வலைப்பூ முகவரி
தொடர்புக்கு:-+60105217640
http://2008rupan.wordpress.com
http://2008rupan.wordpress.com
-நன்றி-
-அன்புடன்-
-கவிஞர்.த.ரூபன்-
Subscribe to:
Posts (Atom)