Monday, September 12, 2016

'வெந்து தணிந்தது காலம்' சிறுகதை நூல் பற்றிய ரசனைக்குறிப்பு

ஈழத்து  இலக்கிய வரலாற்றில்  மலையகம் தொடர்பான‌ இலக்கியங்கள் தனித்துவமானது. இவ்விலக்கிய  பதிப்புகள் மலையகத்தின் பல காத்திரமான படைப்பாளிகளை சந்தித்திருக்கின்றது அதற்கு ஓர்  பிரபலமான  ஆளுமைமிக்க மூத்த எழுத்தாளரான  மு.சி எனப்படும் மு.சிவலிங்கம் அவர்களை அடையாளப்படுத்தலாம் இவருடைய படைப்புக்கள் ஈழத்து  இலக்கியத்தில் தனிச்சிறப்பு வாய்ந்தவை  என்பதை  வாசகர்கள் நன்கறிவர்.

 சிறுகதை இலக்கியத்தில் தனக்கான ஒரு  இடத்தினை பலமான  தன் படைப்புக்களால் பத்திரப்படுத்திக்கொண்ட இவரின்  ஆழமாகவும் அழகாகவும் செதுக்கப்பட்ட  எழுத்துக்களில் உருவானதே  "வெந்து  தணிந்தது  காலம்"  எனும் சிறுகதை நூல். இது  நூலாசிரியரின்  6வது  வெற்றி வெளியீடாகும்.


பல தலைப்புக்களில் மலையக வாழ்க்கை முறை, கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கங்களின் பிணைப்பால் அச்சூழலை அவ்வாறே  படம்பிடித்து  திரையிட்டிருக்கின்றார். நூலிற்கு முன்னுரையினை மலையக எழுத்தாளர்மன்ற  தலைவரும் மலையகத்தின் மூத்த  எழுத்தாளருமான தெளிவத்தை ஜோசப் அவர்களும் பதிப்புரையை அரசியல்வாதியும் எழுத்தாளருமான  மல்லியப்பூ சந்தி திலகர் அவர்களும் அணிந்துரையினை தமிழ்நாட்டைச்சேர்ந்த நாவலாசிரியர்  திரு.பொன்னீலன் அவர்களும் வழங்கி சிறப்பித்துள்ளனர்

'எலிகளும் பூனைகளும்' என்ற   அரசியல் பிண்ணனியுடனான கதை மூலம் நூலின் கதைகள் ஆரம்பமாகின்றது. இதில் நூலாசிரியரின் அரசியல் ஈடுபாடு அதன் தந்திரமந்திரங்கள் கபடங்களின்  தெளிவு, நடைமுறை அரசியல் பற்றியதான ஆழ்ந்த ஞானம் என்பன புலனாகின்றது. அரசியல்வாதிகளின் கபடத்தனங்களை எள்ளி நகையாடும் இவரின் போக்கில் இயல்பான நகைச்சுவையோட்டம் மிளிர்ந்து ரசிக்கவைக்கின்றது.


அடுத்து  'வெந்து  தணிந்தது  காலம் ' காலத்தால்  அழிக்கமுடியாத  காயத்தையும், மனதால் நீக்கமுடியாத வடுவையும் அள்ளிவைத்த முள்ளிவாய்க்கால் சம்பவம், அல்லோலகல்லோலப்பட்ட அந்த‌ மனித  அவலங்களை கடந்து எந்த  எழுத்தாளனாலும் எழுதிவிட முடியாது. மு.சி அவர்கள் இதற்கு  விதிவிலக்கல்ல உணர்ச்சிப்பூர்வமான  இவரது  எழுத்துக்கள்  அந்த  சூழலை மிக அழகாக படம்பிடித்து  வெளிப்படுத்துகின்றது.


பார்வதி ஆச்சியின் பாத்திரம் இக்கதைக்கு உயிரூட்டியுள்ளது தன் கணவனை மகனை மகளை மருமகளை  என் அனைவரையும் இழந்து தனிமரமாய் மாமரத்து நிழலில் அமர்ந்திருக்கும் அவரது வாழ்க்கையூடாக சகல விடயங்களையும் விபரித்திருக்கின்றார். இறுதிவரை அவரது சேலை முடிப்பிலிருக்கும் பொட்டலம் கதையை   இன்னும் இறுக்கமாக வலி(மை)சேர்த்திருக்கின்றது  மிக முக்கியமாக இச்சிறு இலங்கைத்தீவுக்குள் 'தமிழன்' என்ற  ஒரு வார்த்தைக்குள் ஒன்றுபடாத நம் தமிழ் சமூகம் குறித்ததான  குறைபாட்டை மிக அருமையாக வெளிப்படுத்தியிருப்பது  சாட்டையடி என்றே கூறவேண்டும்.

 "அவன் பார்வதி ஆச்சியிடம்போய், நீ  மலை நாடே? எப்ப வந்த நீ? ஏன் வந்த நீ? உங்கட  சனங்களுக்கும்   எங்கட சனங்களுக்கும் என்டைக்குமே பிரச்சனைதான்.." என்ற  வாசகத்தினூடாக அதனை  உறுதிப்படுத்தலாம். பிரதேசவாதத்தால் பிரிந்து, மனிதனை பிரித்தறியும் மனநிலை இன்றும் நம் தமிழ் சமூகத்திடம் காணப்படுவது  கவலைக்குரிய விடயம். இதனை 'கேட்டிருப்பாயோ காற்றே' என்ற கதையும் தெளிவாகவும் உணர்வுபூர்வமாகவும் வெளிப்படுத்திச்செல்கின்றது.

சமூகத்துக்கு  தேவையான  சமூகத்திலுள்ள விடயங்களை மிக  நேர்த்தியாக சொல்வதற்கு விஷேட  ஆளுமை தேவை அதனை எவ்வித  சிதைவுமின்றி நாசூக்காக  நாகரிகமாக நெத்தியடியாக சொல்லில் சொல்வதற்கு மு.சி அவர்கள் கைதேர்ந்தவர். அவரின் முதிர்ச்சியான  படைப்புக்கள் இலக்கியத்துக்கு  வலுசேர்ப்பதோடு சமூகத்திற்கு பாடமாக வழிகாட்டியாக அமைந்திருப்பதே நூலினை கனதியாக  தூக்கி  நிறுத்தியிருக்கின்றது.



வழமையாக நாம் எல்லோருமே  ஒரு சில விடயங்களில் ஒத்த சிந்தனையுடையவர்களாய்  இருப்போம். ஆனாலும்  அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டோம் இந்த  கவிஞர்கள் எழுத்தாளர்களோ அவ்விடயத்தை  ரசனை மிகுந்த படைப்பாக ஆக்கிவிடுவார்கள். அதற்கு  எடுகோலாக இந்நூலின் 'உத்தியோகம் புருஷலட்சணம்' எனும் கதையினை கூறலாம். பேரூந்து பயணங்களில் நாம் சந்திக்கும் யாசகர்கள், கடலை வியாபாரி, அதிஷ்டலாபச்சீட்டுக்காரி, பொது மலசலக்கூட  அதிகாரி என அவர்களின் தொழில் வருமானத்தோடு  ஒப்பீடு செய்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவரை  கதை  நாயகனாக்கி அவரது  நியாயமான  மனநிலையை ரசனைமிக்க கதையாக்கியுள்ளார்.


ஒவ்வொரு  கதைகளிலும் முழுமையாக சமூக நிகழ்வுகள்  வரலாற்றுடன் தொடர்புபட்ட  விடயங்களில்  கைவைத்து  தெளிவாக  ஆராய்ந்து உணர்வுகளை ஊற்றி வெளிப்படுத்திள்ளார் நூலாசிரியர்அத்துடன் ஓர் எழுத்தாளனின் உண்மைக்கதைக்கும் உயிர்கொடுத்திருப்பது பல படைப்பாளிகள் எதிர்நோக்கும் பரிதாபகரமான  பிரச்சனையை மிக யதார்த்தபூர்வமாக 'மீண்டும் பனை முளைக்கும்?'என்ற  கதையில் கூறியுள்ளார். பாத்திர  அமைப்புக்களும் கதை நகர்வும் ரசனைக்கு விருந்தளிப்பதோடு மிக வேதனையளிக்கும் நடைமுறையினை  அழகாக திரைநீக்கியிருக்கின்றார் நூலாசிரியர். 

அத்துடன் 'அம்மாவும் தீபனும்' என்ற  கதை மனதை  பிசைந்தெடுக்கும் ஓர்  வேதனைக்குரலாக ஒலிக்கிறது வளது குறைந்த  ஒரு  இளைஞனின்  உணர்வுகளை இத்தனை தத்ரூபமாக தரமுடிந்ததை  ரசிக்கமுடிகின்றது
எல்லா கதைகளிலும் நடைமுறைகளை வெளிச்சம்போடும் ஆசிரியரின்  பாணிக்கு இன்னும் வலுவாக அமைந்திருப்பது, 'பேச்சு வழக்கு'  எனும் அம்சம் இதில் பிரதேசவழக்கும் நகைச்சுவை  ததும்பும் வார்த்தைப்பிரயோகங்களும் மிக அருமை அதற்காக  சில உரையாடல்களை அடிக்கோடிடலாம்.

"இந்தப்பேயன்களே நேத்து  எங்கட பிள்ளைகளை கொண்டு போனவன்கள்...."  என்ற இயலாமைத்தொனியும்,

"ஆமாம்மா...பொஸ்தகம் முன்னூறு கிலோ...  நியூஸ் பேப்பர்  முப்பது  கிலோ..."

"மயிராண்டி...புத்தகப்பெறுமதியைப் பற்றி ஒரு வாத்தியாரே  புரியாமலிருக்கிறான்.."

"என்னடா.... தொரப்பயல் சாவக்கெடக்கும் ராமு கிழவன் வூட்டையும் பாப்பாத்திக் கெழவி வூட்டையும் கொடுக்க யோசிக்கிறானோ..."  என்பவற்றைக்கூறலாம். சினிமாவின்  தாக்கம், மேலைத்தேய கலாச்சாரம், நாகரிக வளர்ச்சி என்பவற்றில் இவ்வாறான பேச்சு வழக்குகள் மருவி வருவதையும் நாம் காணாமலில்லை.

எல்லா பிரதேசத்துக்குமுரிய  பேச்சு வழக்கினை தனது  கதைகளில் உட்புகுத்தியிருக்கும் நூலாசிரியர், பல தளங்களில் நின்று சமூகத்தை வெளிப்படுத்துகின்றார். மு.சி அவர்களின் படைப்புக்கள் போலிச்சாயம் பூசப்படாதவை கற்பனைகளைக்கொண்டு அலங்கரிக்கப்படாதவை நேரடியாக  சமூகத்தை சந்திக்கக்கூடிய சிந்திக்கக்கூடிய  உணரக்கூடிய வாய்ப்புக்களை வாசகர்களுக்கு வழங்கிவிடும் அற்புதமான படைப்பு.

'வெந்து  தணிந்தது காலம்' பற்றி இன்னும்  அதிமாக விபரிக்கத்தூண்டுகின்றது  காரணம் வாசிக்கும் அனைவரையும் அவ்வாறான மனநிலைக்கு கொண்டுசேர்க்குமென்பதில் ஐயமில்லை. ஆனால் வாசகரின் ரசனைத்தன்மையை எதிர்பார்ப்புக்களை சிதைக்க விரும்பாது நீங்களே கதைகளை வாசித்து அதற்குள் ஆழ்ந்து  அனைத்து இன்பங்களையும் பெற்றுக்கொள்ளுமாறு கூறி இந்நூலினை முன்மொழிகின்றேன்.

 

ஈழத்து  சிறுகதைப்பக்கங்களை மு.சி அவர்களின் வெந்து  தணிந்தது  காலம் என்ற நூல்  மிக காத்திரமான இடத்தை பிடித்துக்கொண்டிருக்கின்றது. இவருடைய  எழுத்துநடை உத்திகள் பாணி லாவகம் என்பன வளரும் படைப்பாளிகளுக்கும் ஓர் வழிகாட்டியாக அமையுமென்பதில் எதுவித  ஐயமுமில்லை வாசகர்களுக்கு சிறந்த விருந்தாகவும் சமூகத்துக்கு வெளிச்சமாகவும் சிறுகதைத்துறையில் கால்பதிக்க நினைப்பவர்களுக்கு நல்லாசானாகவும் இவரது படைப்புக்களைக் காணலாம். மு.சிவலிங்கம் அவர்களின் எழுத்துக்கள் நம் நாட்டு இலக்கியம் இன்னும் வளமான ஓரிடத்தை பெற்றுக்கொள்ள என் இதயபூர்வமான வாழ்த்துக்களை கூறி விடைபெறுகின்றேன்.


நன்றி


நூலின் பெயர்: வெந்து  தணிந்தது காலம்
நூலின் வகை:  சிறுகதைத்தொகுதி
நூலாசிரியர்: மு.சிவலிங்கம்
விலை; 250/
பதிப்பு:2013





No comments: