இன்று நிவேதாவின் மனம் இலேசாக இருக்கவில்லை எதையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் இவள் நேற்றிலிருந்தே ஒருவித சஞ்சலத்தோடுதான் இருக்கின்றாள். அமைதியும் அடக்கமும் கொண்ட நிவேதா பார்ப்பதற்கு சுமாராக இருப்பாள் ஆனால் எவரையும் கவரக்கூடிய புன்னகை இயல்பாகவே குடிகொண்டிருந்தது அரசாங்க அலுவலகமொன்றில் கணனி இயக்குநராக வேலை செய்யும் இவளோடு கஜனும் வேலை செய்கின்றான்
கடந்த மூன்று வருடங்களாக நண்பர்களான இவர்களுக்குள் நல்ல நட்பே காணப்பட்டுவந்த போதிலும் அது காதலாக முதலில் மலர்ந்தது கஜனிடம்தான்.
தன் காதலை நிவேதாவிடம் தெரிவிக்க அவள் வார்த்தைகளற்றுப்போனாள். எல்லாம் அவள் வாழ்க்கையில் பட்ட அடிகளாலேயே. 22 வயது முதல் பெண்பார்க்கும் வியாபாரம் ஆரம்பமானது தேநீர் அருந்தி திருமணம் பேசியவர்கள் தேறிய வசதியில்லையென விலகிக்கொண்டார்கள், பகலுணவை சுவைத்து பேசியவர்கள் பணவசதியும் பத்திரங்களும் போதவில்லையென ஒதுங்கிக்கொண்டனர் வருபவர்கள் வசதியையும் சொத்துக்களையுமே ஆராய்ந்ததால் நிவேதாவுக்கு வந்த எல்லா வரன்களும் தடைபட்டுப்போனது.
குடும்பத்தின் வேதனைகளையும் அவமானத்தையும் வெறுப்பையும் ஆண்கள் மீதான எரிச்சலையும் சுமந்து வாழ்ந்துகொண்டிருப்பவளுக்கு கஜனின் வார்த்தையில் உண்மை இருப்பதாக தோன்றவில்லை.
ஆனாலும் நண்பனாக பழகியவனை நோகடிக்கவிரும்பாததால், ‘கஜன் ….தப்பா நினைக்காதீங்க எங்க வீட்ல லவ் மேரேஜுக்கெல்லாம் ஒத்துக்கமாட்டாங்க எனக்கும் அதில விருப்பம் இல்ல.என தடுமாறியவளிடம் ‘இல்ல நிவே….நான் எங்கம்மாட்ட எல்லாம் சொல்லிட்டன் அவங்களும் என் விருப்பத்த ஏத்துக்கொண்டாங்க. அவங்க வந்து உன்னோட கதைச்சா ஓகேவா? ப்ளீஸ் நிவே நமக்கு பக்குவப்பட்ட வயசு இது சின்னபிள்ள விளையாட்டெல்லாம் கிடையாது எங்கம்மாவோட கதைச்சுப்பாரு அவங்களுக்கும் உன்ன பிடிக்கும் உனக்கும் பிடிக்கும் …… அதுக்கு பிறகு உங்க வீட்டாக்களோட கதைப்பம்….’ என பேசிக்கொண்டு போனவனை அர்த்தத்தோடு பார்த்தாள் நிவேதா
ஓகே.. என்ற ஒற்றை வார்த்தையை வெட்கத்துடன் அள்ளித்தெளித்துவிட்டு சென்றவளை வெற்றிப்புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தான் கஜன்.
கஜனின் அம்மாவுடனான முதல் சந்திப்பிலேயே எல்லாவற்றையும் கதைத்துவிடவேண்டும் என்ற என்று தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டவள் அடுத்தநாள் ஓர் குளிர்பானக்கடையில் சந்தித்துக்கொண்டார்கள். ‘நீங்க ரெண்டுபேரும் கதைங்க….’ என எழுந்தவன் இவர்களை தனிமைப்படுத்திவிட்டு பக்கத்திலிருந்த கதிரையில் சென்று அமர்ந்துகொண்டான் தன் கைப்பேசியோடு.
‘எப்படிம்மா இருக்க உன்ன பற்றி கஜன் நிறைய சொல்லியிருக்கிறான் அதான் நானும் உன்ன பார்க்க விரும்பினன்….’ என்ற கஜனின் தாயை புன்னகையோடு எதிர்நோக்கினாள். ‘அம்மா…. என்னை பற்றி நீங்க முழுமையாக தெரிஞ்சிகொள்ளணும் அதுக்கு பிறகு யோசிங்க என்றவள், என் குடும்பம் ஏழைப்பிண்ணனிதான் பெரிதாக சொத்தென்று ஒன்றுமில்லை நாங்க இருக்கிற வீட்டத்தவிர. அக்காவின் கல்யாணத்தோட இருந்த நகைகளும் பணமும் முடிந்துவிட்டது என் உழைப்பில்தான் இப்போ குடும்பமும் ஓடிக்கொண்டு இருக்கு…. நான் இப்ப செய்ற வேலைகூட இன்னும் நிரந்தரமாக்கப்படல அதுக்கு இன்னும் ஒருவருசம் போகும் என்று சொன்னாங்க…..’ என தன்னை அப்பாவியாய் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கும் நிவேதாவின் கண்களில் சில துளிகள் எட்டிப்பார்த்தது.
அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த கஜனின் தாய்,’ என்னம்மா… இதுக்கெல்லாம் எதுக்கு வருத்தப்படுற மனுசறா பிறந்த நாம பணத்தக்கொண்டுக்கொண்டா போகப்போறம், நீ சின்ன பிள்ள கவலைபட கூடாது எல்லாம் நல்லதா நடக்கும். ம்…. அம்மா அப்பாவுக்கு இந்த விசயம் தெரியுமா…? என்றவளிடம் ‘இல்லையம்மா நீங்கதான் கதைக்கணும்…. என்றாள்.
சில விநாடிகள் மெளனம் சாதித்த தாய் தொடர்ந்தாள், ‘நிவேதா எனக்கும் உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு என் மகனுக்கு ஏத்தவளா நீ இருப்பனு என் மனசு சொல்லுது… அதனால நான் உன் வீட்டுக்கு வந்து கதைக்கிறன்….. எனக்கு காசுபணம் பெரிசில்ல நல்ல மனசு இருந்தபோதும். அதோட ஒரேயொரு விசயம்தான், என் குடும்பத்தில கொஞ்சம் சாதி பாக்கிற நிறையபேர் இருக்காங்க அவங்கள சமாளிச்சிட்டா போதும் அதனால……. அதனால உங்க ஜாதி என்னன்னு சொன்னியனா லேசாபோகும்மா…’ என்றவளிடம் இளக்காரமான ஓர் சிரிப்பை வீசியவள் மெதுவாக எழுந்து எதுவும் சொல்லாமல் அவர்களை கடந்துபோனாள். ஒன்றும் விளங்காதவனாய் இருவரையும் மாறிமாறி பார்த்தான் கஜன்.
No comments:
Post a Comment