காய்ந்துபோன இத்தேசத்தின்
கறைகள் பற்றி நான் பேசப்போவதில்லை
மாய்ந்துபோன மனிதம் பற்றியோ
மாற்றமுடியாத உள்ளங்கள் பற்றியோ
மாற்றியமைப்பது பற்றியோ நான் பேசப்போவதில்லை…
நன்றி மறக்கும் நட்பு பற்றியோ
நாகரிகம் மறந்த நளினங்கள் பற்றியோ
குழிபறிக்கும் கூட்டங்கள் பற்றியோ
குரோதங்கள் வளர்க்கும் உறவுகள் பற்றியோ
நான் ஒருபோதும் பேசப்போவதில்லை….
வக்கிர பார்வையின் வளர்ச்சி பற்றியோ
உக்கிர நெஞ்சங்களின் உதாசீனங்கள் பற்றியோ
அக்கிரமக்காரரின் அட்டூழியங்கள் பற்றியோ
பற்றியெரியும் பாவக்கறைகள் பற்றியோ
நான் இனி பேசப்போவதில்லை…
துடிப்பே இல்லாத துரோகங்கள் பற்றியோ
துவண்டுவிடும் இரக்கங்கள் பற்றியோ
பதைப்பே இல்லாத பழிவாங்கல்கள் பற்றியோ
பணத்தை நோக்கிய பாசங்கள் பற்றியோ
நான் பேசப்போவதேயில்லை….
சுவாசம் அடங்கும் கடைசி மணித்துளிபற்றி
சுதந்திரமாய் பிரியப்போகும் இறுதிமூச்சு பற்றி
சேமித்துவைத்த நன்மைகள் பற்றி
சேர்க்க முடியாத நல்லவைகள் பற்றி இனி
அதிகமாய் பேசப்போகின்றேன்….
கல்லறைக்குப் பின்னால் கட்டப்பட்டிருப்பவை பற்றி
கண்மூடியபின் காணுமுலகம் பற்றி
கடவுளின் தராசில் உயர்வு தாழ்வு பற்றி
கரைந்து போகுமுடலும் கரையா உயிர்பற்றியும்
கணக்குவழக்கில்லாது கதைகதையாய் பேசப்போகின்றேன்….
த.ராஜ்சுகா
இலங்கை
No comments:
Post a Comment