வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.
அந்த வகையில், இவ்வாரமும் ஒரு இளம் படைப்பாளியைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம். கல்குடா நேசனின் 46வது படைப்பாளியாக இணைகிறார் ஏ.எம். சாஜித் அஹமட் அவர்கள். இவர் கவிதை கட்டுரை பத்திகள் நாவல் விமர்சனம் என இலக்கியத்தில் மிகத்தீவிரமாக அதேவேளை காத்திரமாக கால்பதித்துவரும் இளம் படைப்பாளி. இன்றைய இளையவர்கள் மத்தியில் குன்றிப்போய்க்கொண்டிருக்கும் வாசிப்பனுபவத்தைப்பற்றி குறைபட்டுக்கொள்ளுமிவர் வாசிப்பனுபவத்தில் நமக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்கின்றார். இவர்பற்றிய இன்னும் பல சுவாரஸ்யங்களை நேர்காணலில் வாசித்து அவருக்கான வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொள்வோம்
01) தங்களது குடும்பம் தொழில் திறைமைகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமா?
தாய் தந்தை ஒரு சகோதரர் இரண்டு சகோதரிகள் என மன நிறைவான குடும்பம். அக்கரைப்பற்று மாநகர சபையில் நூலக உதவியாளராக தொழிலிலும் ஈடுபட்டு வருகிறேன்.
02) எழுத்துலக பிரவேசம்?
எழுத்துல பிரவேசம் என்கின்ற போது அது எனது சகோதரர்ஆசிரியர் எம். அப்துல் றஸாக் மூலமாகவே ஆரம்பித்தது எனலாம். நான் வாசித்த முதல் நாவல் அவருடைய வாக்கு மூலம் தான். எழுத்தினை எப்பொழுதும் ஒரு ஹாஷ்யமாகக் கருதும் எனக்கு நீண்ட வாசிப்பின் அவசியம் தேவைப்பட்டது. அதனால் ஊரில் உள்ள நூலகங்ளை நன்கு பயன்படுத்திக் கொண்டேன். நிறைய புத்தகங்கள் வாசித்தேன். அவ் வாசிப்பின் நீட்சியே எழுத்தின் சாம்ராஜ்ஜியத்திற்குள் என்னை புக வைத்தது. 16 வயதில் ~விசித்திர சித்திரம்| எனும் எனது முதலாவது சிறுகதை பெருவெளி இதழில் வெளிவந்தது. அதுவே எனது எழுத்துக்களை பிரசவித்த இடமாகும்.
03) எவ்வெவ் இலக்கியங்களை படைத்து வருகிறீர்கள்?
இலக்கியம் என்பதினை பிரித்துப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் மாமூலான சில விடயங்களை புரிந்து கொள்வதற்கு இவ்வகைப் பிரிப்புக்கள் அவசியமாகின்றன என நினைக்கிறேன். அதன் அடிப்படையில் கவிதை கட்டுரை பத்திகள் நாவல் விமர்சனம் என மனதின் உணர்வுகளாய் எனது இலக்கியங்கள் படைப்புப் பெற்று வருகின்றன.
04) இன்றைய வெளியீடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்த போதிலும் காத்திரமான படைப்புக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்ற அதிருப்தியினை வலைத்தளங்களில் காணக் கூடியதாய் இருக்கின்றது இது பற்றி?
இவ்வுலகில் நாம் கற்க வேண்டிய பரப்புக்கள் முடிவற்றதும் மிக நீண்டதுமாய் இருப்பதினை நாம் உணரலாம். பல படைப்புக்கள் வெளிவந்தாலும் காத்திரமான படைப்புக்களை கண்டு கொள்வதுதான் எமக்கிருக்கின்ற பெரும் சவால். எல்லோருடைய பார்வைகளும் ஒரே நோக்காய் இருப்பதில்லை ஒவ்வொருவரினதும் ரசனைக்கும் வாசிப்பிற்கும் ஏற்ப படைப்புக்களின் காத்திரம் கணிப்பிடப்படுகிறது. வலையத்தளங்களில் காத்திரமான படைப்பு என்று கூறப்படும் இலக்கியப் பிரதிகளை சிலர் காத்திரமற்றது என்பர். சிலருக்கு காத்திரமற்ற பிரதிகள் காத்திரமானதாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை காத்திரம் என்ற சொல் ஆரோக்கியமானதா என்பதில் பெரிய மயக்கம் இருக்கிறது.
05) ஈழத்தின் இலக்கிய வளர்ச்சிப் போக்கு பற்றிய உங்களது பார்வை?
இலங்கையின் இலக்கியப் படைப்புக்கள் எப்பொழுதும் வளர்ச்சிப் போக்கில்தான் இருக்கின்றன. தமிழ் கூறும் வரலாற்றின் முற்பகுதியில் இருந்து தற்காலம் வரை பல வகையான படைப்புக்கள் இலங்கையில் வெளிவந்தபடியே இருக்கின்றன. ஆனால் அப்படைப்புக்களின் மீது தீவிர கரிசனை கொண்டு அதனை ஆராய முற்படாத எழுத்தாளர்கள் இருக்கும் வரை இலங்கையில் இலக்கிய வளரச்சி இருக்கிறதா? எனும் கேள்வி தவிர்க்க முடியாததாக மாறிவிடும். மற்றப்படி ஈழத்து பூதந்தேவனார் தொட்டு தற்கால படைப்பாளிகள் வரை எமது வளர்ச்சி எமக்குள்ளே மழுங்கடிக்கப்பட்டு விட்டது என்பதே உண்மை.
06) எமது இலக்கியத்திற்கு நம்மமவர்கள் மத்தியில் எவ்வாறான வரவேற்பு காணப்படுகிறது?
நான் முன்னர் கூறிய பதில் இதற்கும் பொருந்தும் என நினைக்கிறேன். நமது படைப்புக்களை நம்மவர்கள் வாசிப்பு செய்வதில் காட்டுகின்ற அசமந்தப் போக்கானது எமது படைப்புகளுக்கு செய்யப்படுகின்ற பெரும் இருட்டடிப்பாகும். இதில் வரவேற்பு எனும் நிலைப்ப்பாட்டினை விட வசைபாடும் நிலைப்பாடே மிக அதிகமாக உள்ளது. நம்மவர்களின் பிரதிகள் பற்றிய விமர்சனப் பார்வையினை எழுதுவதற்கு கூச்சப்படும் நம்மவர்கள் உலக இலக்கியம் பற்றி எழுதிக் கொண்டிருப்பார்கள். இதனால் எம்மவர்களின் காத்திரமான படைப்புக்கள் வெறும் காகிதங்களாக நூலகங்களில் ஆழ்ந்த உறக்கம் கொள்கின்றன.
07) உங்கள் நூல்கள்?
நிறம் பூசும் குழந்தைகள் (கவிதைத் தொகுப்பு)
08) பெண் படைப்பாளிகள் அவர்களின் வளர்ச்சி போக்கு பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன?
பெண் படைப்பாளிகள் அவர்களின் வளர்ச்சிப் போக்கு என்பன இன்று பெண்ணிய அரசியலாக வலுப்பெற்றிருப்பது பெரு மகிழ்வே. தளர்வான மொழிகளில் இருந்து விலகி காத்திரமான விடயங்களினை தங்களது படைப்புக்களின் மூலம் வெளிக்காட்டும் பெண்கள் பல சவால்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். இருப்பினும் அச்சவால்களைத் தாண்டி வெளிப்பட்ட பெண்களும் அவர்களின் படைப்புக்களும் புதியதொரு இலக்கிய ரம்மியத்தினை எமக்குத் தருவது அவர்களின் வளர்ச்சியினையே காட்டுகிறது. இதில் துயரம் யாதெனில் பல பெண் படைப்பாளிகள் சவால்களின் முன்னே மறைந்து போகிறார்கள் என்பதுதான்.
09) பெண்ணியம் என்றதும் உங்கள் மனதில் எழுவது?
இது மிகவும் சிக்கலான கேள்வி என்றே நினைக்கிறேன். பெண்ணியம் என்றதும் என் மனதில் ஆண்களே வந்து செல்கிறார்கள். இச் சொல் உருவாகுவதற்கு பெரும் காரணம் ஆண்கள்தான். அதிகாரம் ஆணியம் எனும் ஆக்கிரமிப்பின் எதிர்த் திசையாக உருவாக்கப்பட்ட பெண்ணியம் என்பது ஆணாதிக்கத்தின் வரம்புகளில் வலிந்து நடப்பட்ட ஒன்று. இன்று அதிகம் பாவிக்கப்படும் பெண்ணியம் என்பது பெண்களுக்கு உரிமையல்ல மாறாக ஆண் பெண்ணிற்கு கொடுக்க வேண்டிய கடமையினை ஞாபகப்படுத்தும் ஒரு சொல்லாகும்.
10) பல ஆண் படைப்பாளிகள் பெண்ணியம் பேசுகிறார்கள் இது எத்தனை தூரம் வெற்றியளிக்கிறது? பெண் உணர்வுகளை முழுமையாக அவர்களால் வெளிப்படுத்த முடியும் என நினைக்கிறீர்களா?
பெண்ணியம் பற்றி பேசுகின்ற ஆண்கள் தங்களை ஆணாதிக்கத்தின் எதிரிகளாக பிரகடனப்படுத்துகிறார்கள். இதனை வெற்றியின் தூரம் என்பதை விட ஒரு அதிகாரக் குவியல் மீதான எதிர்ப்புணர்வு என்றே கூறலாம். பெண் உணர்வுகளை பெண் வெளிப்படுத்துவதால் இங்கு எந்த மாற்றங்களும் நிகழப்போவதில்லை. மாறாக பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு ஆணின் அனுமதி தேவைப்படுகிறது எனும் போதுதான் பெண்ணியம் பேசுகின்ற ஆண்கள் தோல்வியடைகிறார்கள். பெண்ணியம் பெண் உணர்வுகள் என்பது பெண்களின் சுய நிர்ணயம் பற்றியது. இதில் ஆணிற்கு இருக்கின்ற பங்கு தனக்கான அதிகாரக் குவியலினை தகர்த்து விடுவது மாத்திரம்தான்.
11) பெண்களுக்கெதிரான வன்முறைகள் துஷ்பிரயோகங்கள் ஏற்பட காரணம். அதற்கெதிரான உங்களது ஆலோசனைகள்?
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்று அதிகரித்த நிலையில் இருப்பதாக புள்ளிவிபரவியல் கூறுகின்றது. இதற்காக பல காரணங்களினை முன்வைக்க முடியும். எவ்வாறு இருப்பினும் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் மீதான பாதுகாப்பு விடயத்தினை பெண்கள் கற்றுக் கொள்வது மிக அவசியமாகிறது. எமது பேச்சுக்கள் ஆடைகள் செயற்பாடுகள் போன்றவற்றில் பெண்கள் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும். துஷ்பிரயோகங்கள் பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்துகின்ற போது அதிலிருந்து தப்புவதற்கான வழிவகைகளையும் சேர்த்து பாடங்களினை புகட்டுவது அவசியமாகிறது. துஷ்பிரயோகம் நிகழ்ந்ததன் பிறகு கூப்பாடு போடுவதை விட அவ்வகையான துஷ்பிரயோகங்கள் நிகழ்வதற்கான காரணிகளை கண்டறிந்து அதற்கு முட்டுக் கட்டை போடுவதே இன்றைய தேவையாகும்.
12) நூல் வெளியீடுகள் இலக்கிய நிகழ்வுகளில் எம்மவர்களின் ஆர்வம் பற்றி?
இன்று நூல் வெளியீடுகளும் இலக்கிய நிகழ்வுகளும் வேகமாக நடைபெற்றாலும் அங்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கிறது. வழமையாக பங்குபற்றுகின்ற குறைந்த அளவிலான இலக்கியவாதிகளே மாறி மாறி நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர். இலக்கிய நிகழ்வுகள் அரசியல் மேடைகளாக தோற்றம் பெற்றதே இதற்கான காரணம் என நினைக்கிறேன்.
13) உங்களுடைய வாசிப்பனுபவங்கள் பற்றி எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
வாசிப்பே எனது தேடலாகும். வாசிப்பின் மீதான ஆர்வமே எழுத்துக்களினை செப்பனிடுகின்றன. மொழிபெயர்ப்புக்கள் நாவல்கள் விமர்சனங்கள் பத்திகள் மீதான ஆர்வமும் நீட்சியான வாசிப்பும் மட்டுமே என்னை எழுதுவதற்கு தூண்டியது. குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து மணித்தியாலங்கள் வாசிக்கிறேன். அது ஒரு போதையாகவே மாறி விட்டது.
14) இன்றைய இளைஞர்களிடம் வாசிப்பனுபவம் எவ்வாறு காணப்படுகிறது?
இன்றைய இளைஞர்களின் வாழ்வு இணைய வாழ்வாக மாறியிருப்பதனால் வாசிப்பின் தாக்கம் சோர்வடைந்த நிலையில்தான் காணப்படுகிறது. வாசிக்கின்ற இளைஞர்களின் வட்டம் குறுகிய வட்டமாகவே இருக்கின்ற கால நிலையில் இம் மந்த நிலைப் போக்கானது வாசிப்பின் வீழ்ச்சியினை உணர்த்தியுள்ளது.
15) விரைவில் ஒரு சிற்றிதழ் வெளிவரப்போவதாக அறிந்தோம் அது பற்றி?
நிச்சயமாக... இலங்கையில் எழுந்த நம்மவர்களின் படைப்புக்கள் பற்றிய விமர்சன இதழாக அது இருக்கும். அவ் இதழின் வருகையின் பின்னர் நம்மவர்களின் படைப்புக்களை நாமே பேசுகின்ற ஒரு களம் உருவாக்கப்படும் என நினைக்கிறேன். கனவுகள் மெயப்பட வேண்டும்.
16) உங்களது கதைகளில் புதிய நுட்பங்களை காணக் கூடியதாக இருந்தது. எந்தத் தாக்கம் இவ்வகையாக எழுதத் தூண்டியது?
வாசிப்பின் தாக்கமே எழுத்துக்களில் நுணுக்கங்களை உட் புகுத்துவதற்கான காரணமாய் அமைந்தது. இதில் மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் வருகை மேலும் எனது எனது எழுத்துகளுக்கு உரமூட்டுகிறது என்றே நினைக்கிறேன்.
17) எவ்வாறான வித்தியாசங்களை உங்கள் படைப்புக்களில் புகுத்த நினைக்கிறீர்கள்?
வித்தியாசங்கள் என்பதினை விடவும் மனித உணர்வுகளையும் அதன் வெளிப்பாட்டுத் தன்மைகளையும் காத்திரமான மொழியழகியலுடன் சொல்வதற்கு எனது எழுத்துக்களை பயன்படுத்த முயற்சிக்கிறேன். அப்பரிசோதனையினை எனது நாவலான பஞ்ச பூதத்தில் செய்து பார்த்திருக்கிறேன்.
18) நீங்கள் வியக்கின்ற இலங்கைப் படைப்பாளிகள்?
நிறையவே இருக்கிறார்கள். அவர்களை பட்டியல் படுத்தத் தொடங்கினால் அது மிக நீண்ட பட்டியலாக இருக்கும். பட்டியலில் உடன்பாடற்றவன் எனும் வகையில் எல்லா இலங்கைப் படைப்பாளிகளையும் கண்டு வியக்கிறேன்.
19) உங்களைப் பாதித்த இலக்கியங்கள் (இலங்கையைத் தவிர்த்து)
ஏராளமான இலக்கியங்கள் இந்த வகையினில் உண்டு. குறிப்பாக வைக்கம் முகம்மது பஷீரின் நாவல்கள் அருந்ததி ராயின் படைப்புக்கள் எஸ்.ரா கி.ரா சாரு என அனைவரின் இலக்கியங்களும் என்னை பாதித்திருக்கின்றன.
20) இன்று திறமை உள்ளவர்களுக்கான களம் தாராளமாகக் கிடைக்கப் பெறுகின்றது. இக் களத்தினை வழங்குகின்றவர்கள் தகுதியானவர்களயே தெரிவு செய்கின்றார்கள் என்று நினைக்கிறீர்களா?
சில வேலைகளில் தரமானவர்களும் களத்தினை பெறுகிறார்கள் தரமற்றவர்களும் களத்தினை பெறுகிறார்கள். ஆனால் காலப் போக்கில் தரமானவர்களுக்கு கிடைக்கப பெற்ற களங்கள் வளர்ச்சியடைந்த நிலையிலும் தரமற்றவர்களுக்கு கிடைத்த களங்கள் மறைந்து விட்ட நிலையிலும் காணப்படும். எனவே களத்தினை வழங்குபவர்களே அதனை மதிப்படுவது நல்லது.
21) தங்களுக்கு கிடைத்த விருதுகள் பரிசு பாராட்டுக்கள் பற்றி?
2012 ல் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட தமிழ் மொழித்தின பேச்சு மற்றும் விவாதப் போட்டியில் முதலாம் இரண்டாம் இடங்களைப் பெற்றேன். நிறம் பூசும் குழந்தைகள் எனும் கவிதைத் தொகுப்பிற்காக கிழக்கு மாகாண சாஹித்திய விருது கிடைத்தது. குறும்படங்களுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.
22) இலக்கியம் மீதான விமர்சனம் எவ்வாறு இருக்க வேண்டும்?
அது இலக்கியம் மீதான விமர்சனமாக மட்டும் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். தனிமனித சீண்டல்களாக இருக்காமல் பிரதி பற்றிய மதிப்பீடாக விமர்சனங்கள் இருக்கின்ற போது அவை ஆரோக்கியமானதாக அமையும். பிரதியினைப் பற்றி விமர்சிக்கின்ற போது அப்பிரதி கூறும் அரசியல்ää ஆசிரியனின் படைப்பாக்க சூழல் என்பன பற்றியெல்லாம் விமர்சனப் பரப்புகள் நீண்ட கதையாடல்களை உருவாக்க வேண்டும் அப்பிரதியில் இருந்து பல மேற்கோள்களை காட்ட வேண்டும் இதுவே விமர்சனத்தின் பண்பு என நினைக்கிறேன்.
23) நீங்கள் கூற விரும்பும் கருத்துக்கள்ää ஆலோசனைகள்?
No comments:
Post a Comment