களைத்துப்போன அல்கா தனது எல்லா பொருட்கள் முதல் தேவையான ஆடைகள்வரை அனைத்தையும் பொதி செய்வதை ஓரளவு நிறைவுசெய்திருந்தாள் இன்னும் ஒரு வாரத்தில் தனது அமெரிக்கப்பயணத்தை எதிர்கொள்ள இருக்கும் அவளுக்கு இதயம் கனதியால் அழுத்திக்கொண்டிருந்தது.
தனது தாயின் மறைவுக்குப்பின் விடுதிவாழ்க்கைக்குள் தற்காலிகமாக தன்னை பழக்கப்படுத்திக்கொண்டவளுக்கு இப்போது அதுவே தொடரப்போகின்றது என்பதை நினைக்க அழுகை விம்மி வெடித்தது. எல்லாமாக இருந்த தன் தாயின் மறைவு அவளை உருக்குலைத்துப்போட்டிருந்தது அம்மாவின் நினைவு வாட்டியெடுக்க செய்த வேலையை அப்படியே வைத்துவிட்டு தன் தாயின் புகைப்படத்திக்கு முன்னின்று தேம்பித்தேம்பியழுதாள் வேதனை தீரும்வரை.
எல்லா பொதிகளையும் தயார்செய்து முடித்தவளுக்கு தாயின் பழைய புத்தகப்பெட்டி நினைவுக்குவர அம்மாவின் நினைவாக சிலவற்றை எடுத்துக்கொள்ள நினைத்து அந்தப்பெட்டியையும் இறக்கி எல்லா புத்தகங்களையும் வெளியே கொட்டினாள்.
அல்காவின் பாடசாலைக்காலங்களிலேயே அவளது தாய் தனது வாசிப்பு எழுத்து வேலைகள் அத்தனையும் நிறுத்தி தனது ஒருசில புத்தகங்களையும் தான் எழுதிய கையெழுத்துப்பிரதிகளையும் தவிர எல்லா புத்தகங்களையும் நூலகத்திற்கும் நண்பர்களின் பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டிருந்தாள். அந்த நாட்களில் அல்காவின் அம்மா நித்தியாகூட நல்ல எழுத்தாளராக பலராலும் அறியப்பட்டிருந்தாள் அவளுடைய கவிதைகள் போன்ற ஆக்கங்களை வாசிப்பது அல்காவுக்கும் அதிக ஈடுபாடு காணப்பட்டது. பெட்டியில் கிடந்த சில நாவல்களும் கவிதை மனோதத்துவ நூல்களையும் பொதுநூலகத்துக்கு கொடுத்துவிட வேண்டும் என ஒதுக்கிவிட்டு தாயின் கையெழுத்து பொதிந்த மூன்று கவிதை கொப்பிகளைமாத்திரம் தனக்கென வைத்துக்கொண்டவளின் கைகளுக்குள் அடியில் வைக்கப்பட்டிருந்த அந்த தடித்த சிவப்புநிற நாட்குறிப்பேடு கிடைத்தது.
முதற்பக்கத்தை திறந்தவுடன் அநிமுகமில்லாத ஒரு பெயர். (க்கு) TO: நிசாந்தி (இடமிருந்து) FROM : சுகந்தன் என்றிருந்தது. நாட்குறிப்பெழுதும் பழக்கமில்லாத தன் தாய்க்கு சொந்தமான டயறி அல்காவின் இதயத்தில் ஆயிரம் கேள்விகளை நிறைத்துவிட்டது யார் இந்த சுகந்தன்' இத்தனை வருடங்களில் தன் தாய்க்கும் தனக்குமிடையிலான காலங்களில் இந்த பெயர் அடிபடவே இல்லையே அதுவும் எனக்கும் அம்மாவுக்கும் இடையில் சிறு ஒளிவுமறைவு கூட இருந்ததில்லையே என்றவளுக்கு அந்த டயரியின் மீதான ஆர்வம் அதிகரிக்கவே பக்கங்களை புரட்டத்தொடங்கினாள். ஜனவரி பெப்ரவரி என முதல் இரண்டு மாதப்பக்கங்களிலும் எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை. 1988 மார்ச் 5ல் தான் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
"இன்று மாலை 6மணிக்கு சுகந்தன் என்னை சந்திக்கவந்தார் கிட்டத்தட்ட இரண்டுமணிநேரம் கதைத்துவிட்டு, போகும்போது இந்த டயரியை என்னிடம் தந்துவிட்டேச்சென்றார்" என ஆரம்பித்த குறிப்பு, முக்கியமான விடயங்கள் மட்டும் சுருக்கமாக எழுதப்பட்டைருந்ததே தவிர அதிகம் நிரப்பப்படாத பக்கங்களையே வினாக்களாக விட்டுச்சென்றிருந்தது. இதில் நிசாந்தியின் வாழ்க்கையில் முதற்பக்கத்தை மட்டுமல்ல முக்கியமான பாதையினையும் அல்காவுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது.
ஆசிரியையான நிசாந்தி குடும்பத்தில் கடைசிப்பிள்ளை இரண்டு அண்ணாவும் ஒரு அக்காவுடன் பிறந்த அவளுக்கு வீட்டில் அன்புக்கும் அரவணைப்புக்கும் பஞ்சமிருக்கவில்லை. காலவேகம் பிள்ளைகளை வேகமாக வளர்த்துவிட்டு நிசாந்தியின் அக்காவை மணம்முடித்து வெளிநாட்டுக்கும் இரண்டு அண்ணாமாரும் தமது விருப்பப்படி மணம்முடித்துக்கொள்ளவும் வழிசமைத்திருந்தது. உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த நிசாந்தி மட்டும் பெற்றோருடன் மிஞ்சினாள் தம் வயோதிபகாலத்தில் தம் செல்லமகளுக்கு தம் விருப்பப்படி ஏதாவது நல்லகாரியம் செய்துவைத்துவிட வேண்டும் என விரும்பினார்கள் ஆனால், தான் படிப்பை முடித்து ஒரு தொழிலுக்கு செல்லவேண்டும் அதனால் இப்போது எனக்கு எதுவும் வேண்டாம் என நிசாந்தி கூறவும் பெற்றோரும் தற்காலிகமாக அந்த விடயத்தை ஒத்திவைத்தனர். அவள் எண்ணியபடியே படிப்புமுடிய ஆசிரியத்தொழிலும் கிடைத்தது அந்த நேரத்தில் அவளது அப்பா இயற்கை எய்திவிட அம்மாவும் மகளும் தனித்து தவித்துப்போயினர்.
அந்த நாட்களில் அவளது பாடசாலைக்கு புதிதாக இணைந்துகொண்ட கணித ஆசிரியர் சுகந்தன் கலகலப்பானவனும் எதையும் சமயோசிதமாக செய்துமுடிக்கும் ஆற்றலினால் சக ஆசிரியர்கள் மனங்களில் குறுகிய காலத்திலேயே இடம்பிடித்துக்கொண்டான். எல்லோரிடமும் அளந்துபேசும் சுபாவம் கொண்ட நிசாந்திமட்டும் இவற்றிலிருந்து விலகியே இருந்தாள் இருந்தாலும் அடிக்கடி வந்து தன்னுடன் பேசும் சுகந்தனை அவளால் நிராகரிக்கமுடியவில்லை சிலநேரங்களில் எரிச்சலாக இருந்தாலும் மரியாதைக்காக பதில்சொல்லிவிட்டு செல்வாள் இருவருக்குமிடையிலான இந்த இடைவெளியே காலப்போக்கில் காதல் தீயை பற்றவைக்கவும் வழியமைத்துக்கொடுத்தது.
அவர்கள் காதல் வருடங்கள் இரண்டை தொடவும் மீண்டும் நிசாந்தியின் வீட்டில் அவளுக்கு வேகமாக வரன் பார்க்கவும் சரியாக இருந்தது. வீட்டில்வந்து தன்னை பெண்கேட்கும்படி அவளை தன் மேற்படிப்பின் நிமித்தம் கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி சமாதானப்படுத்திக்கொண்டிருந்தான். அவனுக்காக அவனது விருப்பத்துக்கு பதில்பேசாத அவள், பொறுமையாக காத்திருந்ததோடு தன் தாயிடமும் சாக்குப்போக்குச்சொல்லி தப்பித்துக்கொண்டிருந்தாள். ஆனாலும் தன் வயோதிப தாயின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத வேதனையில் சுகந்தனை அதிகமாக தொந்தரவு படுத்திக்கொண்டிருக்க இருவருக்குமிடையில் அடிக்கடி சிறுசிறு சண்டைகள் எட்டிப்பார்த்தது ஆனால் அவை சிறிய இடைவெளியில் முடிந்துவிடும் அழகான கோபங்களாகவே இருக்கும் இருந்தாலும் இம்முறை ஆறுமாத பிரிவை தரக்கூடியதாக காலம் அவர்களை பிரித்துப்போட்டிருந்தது.
தனது வாழ்க்கையே சுகந்தந்தான் அவனைத்தவிர வேறு எவருக்கும் இடமில்லை என வாழ்ந்துகொண்டிருக்கும் அவள் அவனை தன் கணவனாகவே நினைத்து வாழ்ந்துகொண்டாள் ஆனால் அவளது நினைப்பில் குறுகிய காலத்திலேயே பேரிடி வந்திறங்கியது உண்மைதான், இயற்கைக்கு முரணானதுதான் ஆனால் விதியை எவரால் மிஞ்சிவிட முடியும் ஆமாம் சுகந்தனுக்கு அவர்களது வீட்டில் வரன்பார்த்து நிச்சயித்தும்விட்டிருந்தார்கள் உண்மையில் சுகந்தனுக்கு விருப்பமில்லைதான் ஆனால் அவனின் குடும்ப நிர்ப்பந்தத்தினாலும் அவர்களுக்கு ஏற்ற எல்லாவகையிலும் பொறுத்தமான வசதியான வரன் என்பதால்மாட்டுமே அவனது மனம் மாறியிருந்தது விடயம் அறிந்த நிசாந்தி துவண்டு போனாள் மீளுவதற்கு வழிதெரியாதவளாய் அங்கலாய்த்துக்கொண்டிருந்தவளுக்கு ஆறுதலுக்கென்று எதுவுமே இருந்திருக்கவில்லை. காலம் அவளது அம்மாவை அவளிடமிருந்து பிரித்து அவளை தனித்துவிட்டிருந்ததே தவிர நிசாந்தியின் மனதை மாற்றியிருக்கவில்லை.
தனது அழகான காதல், நினைவுகள், சுகந்தனை கணவனாக நினைத்து வாழ்ந்த நாட்கள் அவர்களது இன்பமயமான எதிர்கால கனவுகள், தமது மூத்த பிள்ளைக்கு வைக்கநினைத்திருந்த 'அல்கா' என்ற பெயர், என்று எதனையும் ஒதுக்கிவிடமுடியாதவளாய் தன் ஆசிரியத்தொழிலுக்குள் மட்டும் மூழ்கியிருந்தவளுக்கு ஆறுதலும் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பும் துணையும் தேவைப்பட்டது ஆண்களைப்பற்றிய கரும்புள்ளி விழுந்த அவளது இதயத்தில் வேறு ஒருவருக்கு இடமும் இருக்கவில்லை அதனால் அவள் அடிக்கடிசென்றுவரும் மனதுக்கு நிம்மதியை நிரப்பிக்கொள்ளும் இடமான 'சாந்தி அநாதை இல்லத்திலிருந்து' ஆறுமாதமே நிரம்பியிருந்த அந்த பச்சிளங்குழந்தையை தத்தெடுத்து அவளுடைய இலட்சிய நாமமான 'அல்கா'வை அவளுக்கு சூட்டி அழகுபார்த்ததோடு தன் காதலை உயிரூட்டிய நிறைவோடு அல்காவே வாழ்வென அவளை கண்ணும்மணியுமாக காப்பதில் காலத்தை அமைதியாக கடத்திக்கொண்டிருந்தாள்.
நிசாந்தியின் வாழ்வுக்கு புதிய உதயமாக அல்கா விளங்கினாலும் காலத்திடம் சிக்கிக்கொண்ட பல கேள்விகளுக்கு, பிரச்சனைகளுக்கு அவள் முகங்கொடுக்கவேண்டியிருந்தது ஆனால் தெய்வநம்பிக்கையும் மழலையின் மகிழ்ச்சியுமே அவளை தைரியப்படுத்திக்கொண்டிருந்தது எனலாம். இப்படி முழுமையாக நிரப்பப்படாத அந்த நாட்குறிப்பில் முக்கியமான விடயங்களான சுகந்தனை சந்தித்தது, அவர்கள் பிரிந்தது அவர்களுடை காதல், அல்காவை சந்தித்தது என விரிவுபடுத்தாத நிசாந்தியின் வாழ்க்கையைப்போல சிறுசிறு அத்தியாயமாக எழுதிவைக்கப்பட்டிருந்தது. வாசித்து முடித்தவளுக்கு உலகம் உருண்டு தன் தலைமீது விழுந்துகிடப்பதைப்போல மனம் பாரத்தால் அழுத்ததொடங்கியது.
'ஐயோ அம்மா, இவ்வளவு பெரிய உண்மைகளையெல்லாம் என்னிடம் மறைத்துவிட்டா என்னை ஆளாக்கினீர்கள் ஏன் அம்மா உங்களைப்பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை எப்படியம்மா இத்தனை வேதனைகளயும் சுமந்துகொண்டு வாழ்ந்தீர்கள்.... கடவுளே ஏன் என் அம்மாவை என்னிடமிருந்து பிரித்தாய்...' என ஆயிரம் கேள்விகளோடு அம்மாவையும் ஆண்டவனையும் நோக்கியவளுக்கு இதயஓலம் மட்டுமே எஞ்சியிருந்தது.
குறிப்பு: நீங்கள் நினைப்பதைப்போல உலகத்துக்காகவோ உறவுகளுக்கு மத்தியில் அல்லது ஊரார் தன்னை ஒரு தியாகியாக பார்க்கவேண்டும் என்பதற்காகவோ வாழாமல் அவளுக்காக, அவள் நிம்மதிக்காகஅவள் காதலுக்காக மட்டும் வாழ்ந்து அல்காவின் மனதில் மட்டும் மறையாமல் நிலையாக வாழும் ஒரு சாதாரணப்பெண்தான் நிசாந்தி.