Sunday, August 28, 2016

44வது படைப்பாளி கவிதாயினி ராஹிலா ஹலாம் (26.08.2016)


http://kalkudahnation.com/49401


வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களை ச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். அந்த வகையில், இவ்வாரமும் ஓர் பெண் படைப்பாளியைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம். கல்குடா நேசனின் 44வது படைப்பாளியாக இணைகிறார் சிறுகதை எழுத்தாளரும் கவிதாயினியுமான‌ ராஹிலா ஹலாம் அவர்கள். //பல தடைகளில் மிக முக்கியமான ஒன்று 'பெண்' என்பதே. ஆணாதிக்கம் இல்லை என்று கூறினாலும் மறைமுகமாக, சில இடங்களில் வெளிப்படையாக கூட ஆணாத்திக்கம் மேலோங்குகிறது. பெண்கள் சாதிப்பதில் இதுவே முதல் தடையாகும்// என பெண்ணியகருத்துக்களோடும் குடும்பம் சமூகம் குழந்தைகள் பற்றியும் பல சுவாரஸ்யமான விடயங்களை எம்மோடு பகிர்ந்துகொண்டார். இவரின் வித்தியாசமான பதில்களுடன் இணைந்துகொள்ளலாம்




01.தங்களது கல்வி தொழில் குடும்பம் பற்றி?


நான் கொழும்பு அல் ஹிதாயா மகாவித்தியாலயத்தில் கல்விகற்றேன். உயர்தர பரீட்சைக்கு பிறகு பெண்களுக்குரிய இரசனை மிகுந்த சமையற் கலை, துணிகளில் நிறங்களை கொண்டு வரைதல் (painting), மட்பாண்டங்களில் வரைதல் போன்ற பயிற்சிகள் மேற்கொண்டு சான்றிதழ்கள் பெற்றேன். பின்னர் தட்டச்சு முறையாக பயின்று சான்றிதழ் பெற்றேன். அதனை தொடர்ந்து தனியார் அறிவிப்பாளர் பயிற்சி விளம்பரம் ஒன்றினை பத்திரிகை ஒன்றில் கண்டதன் பிறகு அந்த பயிற்சியினை பூர்த்தி செய்து சான்றிதழ் பெற்றேன். 2000ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் fm வானொலிகளும் அதன் அறிவிப்பாளர்களும் மிகவும் பிரபல்யமாக இருந்த காலம் அது. ஒருவேளை என்னுடைய இந்த பயிற்சிக்கு அதுவும் ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கலாம். அந்த பயிற்சியினை தொடர்ந்து 2003ம் ஆண்டு இணைய தமிழ் வானொலி ஒன்றின் அறிவிப்பாளராக இணைந்துகொண்டேன். சில இடைவெளிகள் ஏற்பட்டாலும் அதுவே எனது விருப்பத்துக்குரிய தொழிலாக அமைந்து விட்டது.
எனது குடும்பம் என்றால் எனது பெற்றோர், எனது கணவர், எனது இரண்டு செல்ல மகன்கள் அடங்கிய சிறிய குடும்பம். எனக்கு ஒரு மூத்த சகோதரியும், இளைய சகோதரனும் திருமணம் முடித்து வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். எனது குடும்பம் என்றால் எனது பெற்றோர், எனது கணவர், எனது இரண்டு செல்ல மகன்கள் அடங்கிய சிறிய குடும்பம். எனக்கு ஒரு மூத்த சகோதரியும், இளைய சகோதரனும் திருமணம் முடித்து வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். எனது பெற்றோர் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். எனது கணவர் கணக்காய்வாளராக தொழில் புரிகிறார். மூத்த மகன் கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் தரம் 2ல் கல்விகற்றுக்கொண்டு இருக்கின்றார். இளைய மகனுக்கு 2 வயது பூர்த்தியாகியுள்ளது.

02. எப்போது தங்களுக்கு இலக்கியம் மீது ஆர்வம் ஏற்பட்டது?

அநேகமாக சாதாரண தரம் கற்கையில் பாடசாலையில் அதிகளவான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிட்டியதே இலக்கியத்தில் எனக்கு ஆர்வம் ஏற்பட வித்திட்டது எனலாம்.

03. இதுவரை சுமார் எத்தனை படைப்புக்களை படைத்திருப்பீர்கள்? அவை வெளிவந்த தளங்கள்?

அதிகளவில் இல்லை. நூறிற்கு மேல் கவிதைகளும், ஒருசில சிறுகதைகளும், இரண்டு நூல் விமர்சனங்களும் எழுதியுள்ளேன். நான் எழுதிய கவிதைகள், சிறுகதைகள், விமர்சனம் என்பன தினகரன், தினக்குரல், தினமுரசு, வீரகேசரி, நவமணி, மித்திரன், போன்ற பத்திரிகைகளிலும் பயில்நிலம், சிறகுகள், பேனா, நீங்களும் எழுதலாம், பூங்காவனம், வண்ண வானவில், கொழுந்து போன்ற சஞ்சிகைகளிலும் ஒருசில இணையதளங்களிலும் வெளிவந்துள்ளன. என்னுடைய இரண்டு கவிதைகள் என்னுடைய குரலில் பதிவாகி லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. முக்கியமாக என்னுடைய ஆக்கங்கள் அனைத்தும் 'ஆஷிகா' என்ற புனைபெயரிலேயே எழுதி வருகிறேன். 2012ம் ஆண்டு கொழுந்து சஞ்சிகையின் ஏற்பாட்டில் அமரத்துவமான மலையக சமூக சேவகி திருமதி இராஜேஸ்வரி கிருஷ்ணசுவாமி ஞாபகார்த்த பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதை போட்டியில் 65 பெண் எழுத்தாளர்கள் பங்குபற்றினார்கள். அதில் 3வது பரிசு 'குப்பைவண்டி' என்ற என்னுடைய சிறுகதைக்கு கிடைத்தது.





04. எவ்விலக்கிய வகைகளை எழுதுகின்றீர்கள்?

கவிதை, சிறுகதை, விமர்சனம், கட்டுரை, போன்றவைகளை எழுதி வருகிறேன்.


05. உங்களது படைப்புக்களில் எவ்வகையான விடயங்களை வெளிக்கொணர விரும்புகின்றீர்கள்?


என்னுடைய படைப்புக்களில் சமூகத்தில் நடக்கின்ற, நான் காணுகின்ற விடயங்களையும், அறியாமல் பலர்விடும் தவறுகளையும் வெளிக்கொணர விரும்புகிறேன்.


06. நூல் வெளியிடும் எண்ணம் பற்றி?

நூல் வெளியிடும் எண்ணம் நிரம்பவே இருக்கின்றது. சிலவருடங்களுக்கு முன் அதற்கான ஆயத்தங்களும் மேற்கொண்டேன். ஒருசில காரணங்களால் தற்காலிகமாக அந்த எண்ணத்தை ஒத்தி வைத்துள்ளேன். சந்தர்ப்பம் அமையும் பொழுது என்னுடைய கன்னி நூலை வெளியிடுவேன்.



07. தற்போது உங்களுக்கு ஏனிந்த இலக்கிய ஈடுபாட்டில் ஓய்வு?

சரியாக சொன்னால் தற்காலிக ஓய்வு என்றுதான் கூறவேண்டும். சிறிய மகனை பராமரிப்பதில் நேரம் சரியாக உள்ளது. இன்னும் சரியாக சொல்வதென்றால் நான் எழுதுவதற்கு பேனா எடுத்தால் அதை பறிப்பதிலேயே அவர் கவனமாக இருக்கிறார். வெகு விரைவில் மீண்டும் பத்திரிகை , சஞ்சிகைகளுக்கு எழுத ஆரம்பிப்பேன்.

08.பெண்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்வற்கும் தம்மை வெளிப்படுத்துவதிலும் குடும்ப வாழ்க்கை தடையாக இருக்கின்றது என நினைக்கின்றீர்களா?

இல்லை. முதலில் அது தற்காலிக தடையே. குடும்பத்தினர் புரிந்துணர்வுடன் நடந்துகொண்டால் தடையே இல்லை. அவர்களின் உதவியுடனேயே திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், தம்மை வெளிப்படுத்தவும் முடியும். அதனால்தான் இன்று தமிழ்மொழி உலகில் பல பெண் எழுத்தாளர்கள், கவிதாயினிகள் உலாவருகிறார்கள்.



09. பல தடைகளை தாண்டியே பெண்கள் சாதித்துக்கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனையாக நீங்கள் காண்பது?

பல தடைகளில் மிக முக்கியமான ஒன்று பெண் என்பதே. ஆணாதிக்கம் இல்லை என்று கூறினாலும் மறைமுகமாக, சில இடங்களில் வெளிப்படையாக கூட ஆணாத்திக்கம் மேலோங்குகிறது. பெண்கள் சாதிப்பதில் இதுவே முதல் தடையாகும். அடுத்து பொருளாதார தடை. இக்காலத்தை பொறுத்தவரை பொருளாதாரம் என்பது ஒரு விடயத்தை சாதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்த காரணியாக நேரத்தை குறிப்பிடலாம். ஒரு பெண் குடும்பத்தை நிர்வகித்துக்கொண்டு சாதிப்பது என்பதே ஒரு பெரிய சாதனைதான்

10. பெண்களுடைய வளர்ச்சிகளில் நீங்கள் பெருமைப்படும் விடயம் மற்றும் விசனப்படும் விடயம் பற்றி கூறமுடியுமா?

பெண்களுடைய வளர்ச்சியில் பெருமை என்று கூறினால் அதிகளவான பெண்கள் விளையாட்டுத்துறை, இலக்கியத்துறை, என பல்வேறு துறைகளில் சாதிக்கின்றார்கள். விசனம் என்னும் போது பெண்கள் விளம்பர பொருளாக மாறி வருவதையிட்டு கூறலாம்.

11.பெண்ணியம் பற்றி தங்களது பார்வை?

பெண்ணியம் என்பது என்னுடைய பார்வையில் தற்காலத்தில் பெண்கள் பெண்களாக மதிக்கப்படுவதில்லை. சினிமாவிலும் கதைகளிலும் குறிப்பிடுவது போன்றல்லாமல் பெண்களுக்குரிய இடம் வழங்கப்படுவதில்லை.





12. பெண்ணியத்துக்குள் எவ்வெவ் விடயங்கள் பேசப்படவேண்டும் என எண்ணுகின்றீர்கள்?

பெண்ணியத்துக்குள் பெண்களுக்குரித்தான அனைத்தும் பேசப்பட வேண்டும். உதாரணமாக பெண் உரிமை, சுதந்திரம், விருப்பு வெறுப்பு, உணர்வு போன்றவைகளை குறிப்பிடலாம்.

13. இலக்கிய நிகழ்வுகளில் பங்கெடுக்கும் அநுபவம் பற்றி?

சில இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளேன். நூல் வெளியீடுகளிலும் கலந்து கொண்டுள்ளேன். இது ஓர் சிறந்த அனுபவம் பல படைப்பாளிகளை நேரடியாக சந்தித்து இலக்கிய விடயங்கள் பற்றி பேசவும் நட்புறவை வளர்த்துகொள்ளவும் வாய்ப்பாக அமைகின்றது.



14. தங்களைக்கவர்ந்த இலங்கைப் படைப்பாளர்கள்?

மூத்த எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர்கனி, அஷ்ரப்ஷிஹாப்தீன், கிண்ணியா அமீர்அலி, வெலிகம ரிம்ஸா முஹம்மத், தியத்தலாவ H.F. ரிஸ்னா போன்றவர்கள் என்னை கவர்ந்த எழுத்தாளர்கள்.

15. இன்றைய பெற்றார்கள் தம் பிள்ளைகளை அளவுக்கதிகமான‌ கல்வி மற்றும் இதர வகுப்புக்களில் திணிப்பதால் சிறுவர்கள் மானசீகமாக பாதிக்கப்படுவதோடு இறுக்கத்துடன் காணப்படுவதாக கூறப்படுகின்றது இதுபற்றி?
நிச்சயமாக. அதிகளவான கல்வி திணிக்கைகளால் சிறுவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் மற்றவர்களிடம் பாராட்டை பெற பேராசைபடுவதால் சிறுவர்கள் அதிகளவில் புள்ளிகள் பெற வேண்டும். இதனால் ஓய்வின்றி பல வகுப்புகளுக்கு இந்த சிறார்கள் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. முடிவில் இந்த சிறுவர்கள் ஒருவித மனஇறுக்கத்துக்கு ஆளாகி உளவியலாக பாதிப்படைகிறார்கள். இது முற்றிலும் தவறானது. அதிசிறந்த புள்ளிகளை எதிர்பார்க்காது பிள்ளைகள் அடுத்த வகுப்புக்கு சித்தி எய்தக்கூடிய புள்ளிகளை பெற அவர்களுக்கு இலகு கல்வியினை வழங்க வேண்டும். புள்ளிகளை பாராது உள்ளங்களை பார்த்தால் ஆரோக்கியமான மனநிலை கொண்ட எதிர்கால சந்ததியினரை காணலாம்.



16. வேலைக்கு செல்லும் பெற்றாரினால், பிள்ளைகள் அரவணைப்பு எனும் விடயத்தினை இழந்துபோகின்றார்கள் இதனால் பல பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை ஏற்படுகின்றது இதற்கான வழியாக நீங்கள் கூறவிரும்புவது?

ஆம். பல குடும்பங்களில் பொருளாதார சூழ்நிலை காரணமாக இருவரும் வேலைக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பல குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அரவணைப்புக்கு ஏங்கக்கூடிய குழந்தைகளாகவும், முரட்டு சுபாவமுடையவர்களாகவும் காணப்படுகிறார்கள். கிராமப்புறங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் நடைபெற இதுவே காரணமாக அமைகிறது. குழந்தைகளை உரிய பாதுகாப்பான முறையில் அவர்களை பராமரிப்பவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வேலைக்கு செல்வதே சிறந்தது.

17. சிறுவர்கள், தொலைக்காட்சி கணனி இன்டநெட் போன்ற விடயங்களில் அதீத ஈடுபாட்டை காட்டுகின்றார்கள் இது எல்லா நேரங்களிலும் நன்மை பயக்கின்றதா ஓர் தாயாக ஏனைய பெற்றாருக்கு நீங்கள் தரும் ஆலோசனை?

நவீன காலத்தைப் பொறுத்தவரையில் நற்பலன்களை பெறுவதைவிட இலகுவாக கெடுதியானவைகளே எங்களை வந்தடைகின்றன. இது போன்றுதான் குழந்தைகளையும் தொலைக்காட்சி, இணையம், கணனி என்பன தீயவைகளால் ஆள முயற்சிக்கின்றது. எல்லா நேரங்களிலும் நன்மை பயப்பதில்லை. அளவோடு அவர்களுக்கு அதனை வழங்குவதுடன் எப்பொழுதும் நாமும் கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு உகந்த கார்டூனா? உகந்த பாடலா? இதன் மூலமாக அவர்களுடைய மனதில் வன்முறை போன்ற தீய எண்ணங்கள் உருவாகுமா? என நாம் எப்பொழுதும் அவதானிப்புடன் இருக்க வேண்டும்.



18. குழந்தை வளர்ப்பில் இருக்கும் சுவாரஸ்யம் பற்றி உங்களது அனுபவத்தினூடாக கூறுங்கள்?

குழந்தை வளர்ப்பு என்பது இனிமையான ஒரு கலை. ஒவ்வொருநாளும் ஒரு பாடத்தினை கற்கலாம். தினம் தினம் புது புது யுத்திகளை கையாளவேண்டும். குழந்தைகளின் அதிபுத்திசாலித்தனமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது திணறுவதும் ஒரு இனிமையான சந்தர்ப்பம்தான். நாளுக்கு நாள் அவர்களுடைய வளர்ச்சியினை பார்ப்பதும் சுவாரஸ்யமே. மொத்தத்தில் நம்மை அறியாமலே நாட்கள் கடந்துவிடும். குழந்தை வளர்ப்பு... சுவாரஸ்யமான நூல் வாசிப்பு.....

19. குடும்பம் இலக்கியம் உங்களது தனிப்பட்ட திறமைகள் தொடர்பாக இருக்கும் கனவு பற்றி?

மூன்றும் ஒன்றாய் கலந்த, கைகோர்த்த கனவு. நூல் வெளியீடு, தொடர்ந்தும் வானொலி அறிவிப்பாளினியாக கடமை புரிதல்,இன்னும் அதிக அதிகமாக எழுத வேண்டும் என்கின்ற அவா, என்னுடைய பிள்ளைகளும் இந்த ஆற்றல்களை பெற்றவர்களாக எதிர்காலத்தில் வரவேண்டும் என்கின்ற கலவையான கனவு எனக்குள்.



20. கல்குடாநேசன் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள நினைப்பது?

கல்குடாநேசன் வாசகர்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. வாசகர்களாகிய உங்களுக்குள்ளும் பல திறமைகள் மறைந்திருக்கும். அவற்றை முடியுமானவரை வெளிப்படுத்துங்கள். அது உங்கள் மனதை இலகுவாக்கும். அப்போதுதான் எமது திறமையை மற்றவர்களும் புரிந்துகொள்வார்கள்.
"சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது..... துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது.... ********************************************** உன் வீட்டு கண்ணாடி ஆனாலும் கூட‌ முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே.... ************************************************ மனதுக்குள் பல கோடி நினைவுகள் இருந்தாலும் உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்....." ********************************************** என்ற பாடல் வரிகள் கூட அதனையே உணர்த்துகின்றது. உங்கள் திறமையினை வெளிப்படுத்துவதால் உள்ளம் மகிழ்கிறது. அதனால் ஆரோக்கியமாக வாழ முடியுமாகின்றது. உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு வழங்கிய இறைவனுக்கும் ராஜ் சுகாவுக்கும் நன்றிகள். வணக்கம்.




No comments: