வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களை ச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.
அந்த வகையில், இவ்வாரமும் ஓர் இளைய படைப்பாளியை சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம். கல்குடா நேசனின் 41வது படைப்பாளியாக இணையவிருப்பவர் முல்லைத்தீவைச் சேர்ந்த கவிஞர் தேவராசா கஜீபன் அவர்கள்.
பேராதனை பல்கலைக்கழக தமிழ் சிறப்புத்துறையில் தனது உயர் கல்வியை மேற்கொள்ளும் இவர், இலக்கியத்தில் ஆர்வங்காட்டி வரும் இளைய படைப்பாளியாக இணங்காணப்படுகிறார். பல ஊடகங்களில் தனது எழுத்துக்களை வெளியிட்டு வரும் இவர், இலக்கியத்தின் பல தளங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றார். இலக்கியப் பரப்பில் ஆழமாக கால் பதிக்க வேண்டுமென்ற முனைப்புடன் செயற்படும் கவிஞர் நல்ல சிந்தனை முதிர்ச்சி பெற்றவர் என்பதனை அவரது பதில்களினூடாகக் காண முடிகின்றது. “இலக்கியம் தொடர்பான பரீட்சயம் ஒரு படைப்பாளனிடம் ஏற்பட வேண்டும். இலக்கிய புரிதல்களுடனேயே படைப்புக்களை அணுக வேண்டும். இதற்கு துறை சார்ந்த தேடல் முயற்சிகளும் வாசிப்புப் பழக்கமும் திறனாய்வுப் பார்வையும் முக்கியமாகிறது” என தன் ஆழ்ந்த சிந்தனைப் பரப்பின் சிறகுகளை விரிக்கும் இவரின் கருத்துக்களின் தொடர்ச்சியை முழுமையாக வாசித்து மகிழ்வோம்.
பரீட்சை மற்றும் தனது இதர வேலைப்பளுவுக்கும் மத்தியில் கல்குடா நேசனின் நேர்காணலுடன் உற்சாகமாக காத்திரமான பதில்களுடன் இணைந்துகொண்ட கவிஞர் கஜீபன் அவர்களை வாழ்த்தியவண்ணம் நேர்காணலுடன் இணைந்துகொள்வோம்
01.தங்களைப்பற்றிய அறிமுகத்தோடு வாசகர்களுடன் இணையலாமா?
நிச்சயமாக...
பெயர். தேவராசா கஜீபன்.
இடம். முத்துஐயன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு.
படித்தது கலைப்பிரிவு, முத்துஐயன் கட்டு மகாவித்தியாலயம். தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்சிறப்புத்துறையில் கல்வி பயின்று வருகின்றேன். கவிதை, சிறுகதை, நாவல், திறனாய்வு போன்ற துறைகளில் முயற்சிகள் உண்டு. அறிவிப்பு, பேச்சு, நாடகம் போன்ற துறைசார் நிகழ்வுகள், போட்டிகளில் பங்குபற்றி அங்கீகாரங்களையும் பெற்றதுண்டு. பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் ஒரு அங்கமாக நான் இருப்பதையிட்டும் பெருமையடைகின்றேன். அத்தோடு கட்டுரைகள் தொடர்பான முயற்சிகள் என்ற வகையில் எழுத்தாளர் தி.ஞானசேகரனின் "புதிய சுவடுகள்" என்ற நாவலில் சாதியப்பிரச்சினை, கலாநிதி முல்லைமணியின் "கமுகஞ்சோலை" நாவல் ஒரு பார்வை, போன்ற கட்டுரைகள் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. எனினும் இவை அனைத்தும் இலக்கியத்துறை நோக்கிய எனது பயணத்திற்கான முயற்சிகளின் ஆரம்பமே. தவழ்கின்ற குழந்தையே எழுந்து நடக்க கற்றுக்கொள்கின்றது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
02. இலக்கியத்துறைக்குள் எவ்வாறு நுழைந்தீர்கள்?
இலக்கியத் துறைக்குள் நான் நுழைந்தேன் என்பதைவிட நுழைய முயற்சிக்கிறேன் என்பதே உண்மை. இலக்கியத்துறை என்பது சமுத்திரம் போன்றது. நான்கு எழுத்துக்களை எழுதிவிட்டு ஒருவன் தன்னை இலக்கியவாதியாக காட்டிக்கொள்ள முடியாது. அன்றியும் இலக்கியத்துறை தொடர்பான பரீட்சயம் ஒரு படைப்பாளனிடம் ஏற்படவேண்டும். இலக்கியம் தொடர்பான சரியான புரிதல்களுடனேயே படைப்புக்களை அணுகவேண்டும். இதற்கு துறைசார்ந்த தேடல் முயற்சிகளும், வாசிப்புப் பழக்கமும், திறனாய்வுப் பார்வைகளும் முக்கியமாகின்றன. இவை படைப்புக்களை செம்மைப்படுத்த வல்லன. காத்திரமான படைப்புக்கள் உருவாக இவை வழிவகுக்கும் என்பது உண்மை. இந்நிலையில் ஒரே ஒரு படைப்பு தோற்றம் பெற்றாலும் அது சிறப்பையே பெறும். ஒரு படைப்பாளனாக என்னைக்காட்டிக் கொள்வதனைவிட இலக்கியப்புரிதல்களுடன் கூடிய ஒரு வாசகனாகவே என்னைக் காட்டிக்கொள்ள விரும்புகின்றேன். இது இலக்கியத்தன்மையோடு கூடிய ஒரு சிறந்த படைப்பாளனாக என்னை மாற்றும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
03. உங்களின் எழுத்தார்வத்திற்கு வித்திட்டவர்கள் ஊக்குவித்தவர்கள் பற்றி?
சிறுவயதிலிருந்தே தமிழின் மீதான ஈடுபாடு அதிகமாகவே இருந்தது. ஆரம்பத்தில் என்னை அதிகம் ஈர்த்தது கவிதைத்துறையே. அதற்கு என் இரு சகோதரர்களே காரணம் அவர்கள் எழுதிய காதல் கவிதைகளைப்படித்து ரசித்ததுண்டு. அதன் வழி நானும் சில வரிகள் முயற்சித்ததுண்டு. பாடசாலைக்காலத்தில் எந்தவொரு நிகழ்வுகளையும் தவறவிடாது எனது கவிதைகள் அரங்கேறின. ஆசிரியர்களது பாராட்டுக்களும் கிடைத்தன. ஒரு மாணவி "நீங்கள் சிறுகதை, கவிதை நூல் ஏதாவது வெளியிடலாமே" என்றார். யோசித்தேன். அவரையே கவிதைப்பொருளாக்கி பல கவிதைகள் எழுதினேன். அழகிய நாட்கள் நினைவுகளாக மட்டுமே அவை இன்று என்னிடம் உள்ளன. இவை கவிதை தொடர்பான ஈடுபாட்டைத் தந்தனவேயன்றி அவற்றை கவிதைகளென்று எண்ணுவதற்கில்லை.
உண்மையில் கவிதை என்பது தொடர்பான புரிந்துணர்வை பேராதனைப் பல்கலைக்கழகமே தந்தது. தமிழ்த்துறை விரிவூரையாளர்களே இதற்கு அடிப்படையாக அமைந்தனர் அவர்களுக்கு நன்றிகூறவும் கடமைப்பட்டுள்ளேன். விரிவுரையொன்றில் மதிப்பிற்குரிய உதவி விரிவுரையாளர் பா.சுமன் அவர்கள் தான் கவிதை எழுதுவதாயின் சமுதாயத்தில் அடிமட்டமாக கருதப்படக்கூடியவர்கள் பற்றிய பிரச்சினைகள் அவர்தம் மன நிலைகள் பற்றியே எழுத முற்படுவேன் என்றார். உதாரணத்திற்கு பிணவறையில் வேலை செய்யும் தொழிலாளி பற்றிக்கூறினார். அது எனக்குள் ஆழப்பதிந்தது. "பிணவறைக்காவலன்" என்ற தலைப்பில் கிட்டத்தட்ட கவிதை என்று சொல்லக்கூடிய அளவில் எனது முதல்கவிதையை உருவாக்கினேன். அவரிடம் காட்டினேன். பாராட்டினார். குறைகளையும் சுட்டிக்காட்டினார்.
மதிப்பிற்குரிய விரிவுரையாளர் செ.சுதர்சன் அவர்கள் அவர் சிறந்த கவிஞரும் கூட. எனது கவிதைகளைப் பாராட்டியதோடு ஊக்கமும் தந்தார். எழுத்துலகில் என் பயணத்திற்கான பல வழிகளை அவர் ஏற்படுத்தித் தந்துள்ளார். தந்து கொண்டிருக்கின்றார். வெளியான எனது ஆய்வுக்கட்டுரைகள் இவரின் ஊக்கப்படுத்தல்களின் வெளிப்பாடே.
மதிப்பிற்குரிய விரிவுரையாளர் ஆன் யாழினி சதீஸ்வரன் அவர்கள். சிறந்த பெண்கவிஞரும் கூட. பெண்ணியம் தொடர்பாக அதிக ஈடுபாடு கொண்டவர். கவிதைகளை பாராட்டினார். தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கமளித்தார். தமிழ்த்துறையின் "சங்கப்பலகையில்" ஒவ்வொரு கிழமையும் எனது கவிதை இடம்பெறக்கூடிய வகையில் காத்திரமானதாக எழுதவேண்டுமென ஆர்வமூட்டினார். சில தவறுகளையும் சுட்டிக்காட்டி என்னை வழி நடத்தினார். வழி நடத்துகிறார்.
மதிப்பிற்குரிய விரிவுரையாளர்கள் எம்.எம் ஜெயசீலன், பொ.சரவணகுமார் போன்றவர்கள் திறனாய்வு தொடர்பான எனது பார்வைகளுக்கு உரமூட்டியவர்கள். விரிவுரையாளர் ஜெயசீலன் அவர்கள் எனது சிறுகதை முயற்சிகளுக்கான ஊக்கத்தை தந்ததோடு குறைகளையும் சுட்டிகக்காட்டினார். மதிப்பிற்குரிய உதவி விரிவுரையாளர் றிஸ்மியா அவர்கள் கவிதை, சிறுகதை போன்றவற்றிற்கான ஊக்கம் வழங்கி நிறை குறைகளைக் கூறினார். இவர் சிறந்த கவிஞரும் கூட. பெண்ணியம் தொடர்பான அதிக ஈடுபாடு கொண்டவர்.
இவர்கள் அனைவரினதும் ஊக்கப்படுத்தல்களே எனது இலக்கிய பயணத்திற்கான வழியைத் திறந்து வைத்தது. இவர்களது கருத்துக்கள் இலக்கியம் தொடர்பான புரித்துணர்வை விதைத்து எனது தேடல்களையும் விரிவு படுத்தியது. என்னையும் எனது எழுத்துக்களையும் செம்மைப்படுத்தின என்றே கூறலாம்.
எனது முகநூல் நண்பர்கள் பலரையும் கூறவேண்டும். முகம் தெரியாத நல் உள்ளங்கள் பல எனது எழுத்துக்களுக்கு ஊக்கமளித்துள்ளனர். ஊக்கம் தந்து கொண்டிருக்கின்றனர். அவர்களையும் மறப்பதற்கில்லை. இப்போது நீங்களும்கூட என் இலக்கியப் பயணத்திற்கு வித்திடுகிறீர்கள் உங்களுக்கும் நன்றிகள்.
04. இலங்கை, இந்திய எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பற்றி உங்கள் பார்வையில்?
மேலைத்தேச நாடுகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் தாக்கம் கீழைத்தேச நாடுகளை வெகுவாகப் பாதித்திருந்த நிலையிலேயே நவீன இலக்கிய வடிவங்கள் தமிழகத்தில் ஊடுருவ ஆரம்பித்ததோடு ஈழத்திலும் விரிவுபட ஆரம்பித்தது. மரபுவழி எழுத்தாளர்கள் பலரும் நவீன இலக்கியங்களின்பால் ஈர்க்கப்பட்டனர். பாரதியாரும் இதற்கு விதி விலக்கல்ல. கவிதை, சிறுகதை, நாவல் போன்ற இலக்கிய வடிவங்கள் வெகுவாக வளர ஆரம்பித்தன. கவிதைத் துறையில் தமிழக எழுத்தாளர்களின் கவிதைகளைப் பார்க்கிலும் ஈழத்து எழுத்தாளர்களின் கவிதைகள் வீச்சுப் பெற்றனவாகவே அமைந்திருந்தன. ஆனால் தற்காலத்தில் இதன் போக்கில் சற்றுத் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. காத்திரமான படைப்புக்கள் ஒருபக்கம் வெளிவந்துகொண்டிருந்தாலும் கூட சில படைப்புக்கள் அத்தன்மையை இழந்துள்ளமை வேதனையளிக்கிறது. இலக்கியம் ஒன்றைப் படைப்பதற்கு காகிதமும், பேனாவும், சிறிது பணமும் இருந்தால் போதும் என்ற நிலை சிலரது மனங்களை ஆக்கிரமித்துள்ளது. இந்நிலை மாற்றமடைய வேண்டும். நான் முன்பு கூறியது போல் இலக்கியம் பற்றிய புரிதல்களை முதலில் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின் படைப்பைப் பற்றி சிந்திக்க வேண்டும். இது ஈழத்து இலக்கியத் தளத்திற்கு ஆரோக்கியத்தை தரும் என எண்ணுகின்றேன். தமிழகத்திலிருந்து சிறந்த படைப்புக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தமிழக கலாசாரம் மட்டுமல்ல அவர்களது எழுத்துக்களும் ஈழத்து எழுத்துக்களில் செல்வாக்கு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதே.
ஈழப் போராட்டத்திற்கு பின்னரான நிலையில் எழுத்தார்வம் மிக்க பலர் நூல்களை வெளியிட்டு வருகின்றமையைக் காணமுடிகின்றது. இது வரவேற்க்கப்படவேண்டிய விடயமாகும். ஆனால் அவை ஈழத்து இலக்கியத் தளத்தில் கீறல்களை ஏற்படுத்தாதவையாக இருத்தல் நன்று என எண்ணுகின்றேன். பக்க சார்பற்ற வகையில் சிறந்த படைப்புக்களையும் படைப்பாளிகளையும் ஊடகங்கள் வெளிக்கொண்டு வர வேண்டுமென விரும்புகிறேன்.
05. வளர்ந்துவரும் இணைய எழுத்தாளர்களின் வளர்ச்சிப்போக்குபற்றி?
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான திறவுகோலை இணையத்தளம் வழங்கியிருக்கின்றதென்றே கூறவேண்டும். அதிலும் சமூக வலைத்தளங்களின் பங்கு அளப்பெரியது. ஆனாலும் இவ் வலைத்தளங்கள் தொடர்பாக சாதாரண மக்களின் கருதுகோள்கள் வேறானவை.
எனினும் எதை நாம் எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதைப்பொறுத்தே அதன் அடைவும் அமைகின்றது. அவ்வகையில் பலர் தமது எழுத்துக்களை இணையம் மூலம் பதிவு செய்கின்றனர்.இன்று இணையத்திலேயே பல இதழ்கள், இலக்கியம் சார்ந்த பிரத்தியேகமான பல தளங்கள் உருவாகிவிட்டன. எழுதுபவர்களும் அதிகரித்து விட்டனர். ஆனால் இவை அனைத்தும் உண்மைத்தன்மையானவை, நம்பகத்தன்மையானவை என்று கூறிவிட முடியாது. உதாரணமாக விக்கிபீடியாவில் கூட சில தவறுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்கள் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்கள்வரை தமது மேலதிக கற்றல் தேடலுக்காக இணையத்தை நாடுகின்றனர். இந் நிலையில் இணையத்தில் எழுதுபவர்கள் தாம் முன்வைக்கும் கருத்துக்களுக்கான உசாத்துணைகளையும் அவசியம் இடவேண்டும். இது தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ள உதவியாக அமையும். இணையத்தில் எழுதுவது உண்மையில் வரவேற்கத்தக்க விடயம். இன்றைய தொழில்நுட்ப உலகில் இணையத்திற்கு அடிமையாகாதவர்கள் அரிதே. அவ்வகையில் இணைய எழுத்துக்கள் மக்கள் மத்தியில் விடயங்களைச் சென்றடைவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றது எனலாம். இணையத்தில் எழுதுபவர்கள் அவற்றை ஆவணப்படுத்தவும் கடமைப்பட்டுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எவரும் இணையத்தில் எழுதலாம் என்ற நிலை தோன்றிவிட்ட சூழலில் சிறந்த படைப்புக்களை தெரிந்து அணுகுதல் அவசியமாகின்றதென்றே கருதுகின்றேன். எனினும் இணையத்தில் எழுதக்கூடிய சிறந்த எழுத்தாளர்களின் பங்கும் பணியும் தமிழிற்கு தேவையான ஒன்றே...
06.ஆரம்பகாலங்களில் படைப்பாளிகள் தம் படைப்புக்களை மூத்த இலக்கியவாதிகளிடம் காட்டி பட்டைத்தீட்டி பல அனுபவங்களுக்கு பின்னரே நூலாக்கினார்கள். அந்த ஆரோக்கியதன்மை தற்போது காணப்படுகிறதா?
இல்லை என்பதைவிட அரிதாகவே உள்ளது எனலாம். சிலர் தாம் எதை எழுதுகின்றார்களோ அதுவே இலக்கியம் என வாதாடுகின்றனர். இது தவறான பார்வையாகும். மூத்த எழுத்தாளர்களிடம் தமது படைப்புகள் தொடர்பில் பேசுவதால் அவர்களுடைய கருத்துக்கள் தம் படைப்புக்களில் புகுத்தப்பட்டுவிடுமோ எனவும் தம் எழுத்துக்களுக்கான தனித்தன்மை இல்லாது போய்விடுமோ எனவும் அஞ்சுகின்றனர். ஆனால் சிறந்த மூத்த எழுத்தாளர்களுடைய கருத்துக்கள் படைப்புக்களைச் செம்மைப்படுத்த உதவும். அவர்களது கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டும் நமது இலக்கியத்தை தனித்தன்மையுடன் படைக்க இயலும் என்றே கருதுகின்றேன்.
07. இன்றைய பெற்றோர்கள் தம்பிள்ளைகளை ஆங்கில மொழியில் கற்பிப்பதையே விரும்புகிறார்கள் இதுபற்றி?
தமிழை வாழ வைக்கவேண்டும் என்ற நிலை ஒருபுறமிருந்தாலும் மனிதனது இன்றைய வாழ்க்கைநிலையில் பொருளாதாரம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதேவேளை ஆங்கில மொழியும் காலத்தின் தேவையாக மாற்றமடைந்துள்ளது. ஆங்கில மொழியில் பயில்வதன் மூலமாக வேலைகளை இலகுவில் பெற்றுவிடமுடியும், பொருளாதாரத்தைச் சமப்படுத்த முடியும், என பலரும் எண்ணுகின்றனர். ஆங்கிலத்தில் கற்பதையே கௌரவமாக எண்ணுபவர்களும் இருக்கின்றார்கள். இந்நிலையில் ஒவ்வொரு பெற்றோர்களின் பார்வையும் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த நோக்கில் சரியானதே. ஆனால் இவற்றைக் கடந்தும் நம் தமிழ் மொழியை நாம் அழியாது பாதுகாக்கவேண்டிய தேவை இருக்கின்றது. அது கடமையும் கூட என்பதை பெற்றோர் விளங்கிக்கொள்ள வேண்டும். தமிழ் மொழியின் சிறப்பினையும் அதனுடைய தன்மைகளையும் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்க வேண்டும். தன் தாய்மொழி தொடர்பான புரிந்துணர்வுடன் கூடிய ஒரு பிள்ளை ஆங்கில மொழியில் பயில்வதில் தவறில்லை என்றே கருதுகின்றேன்.
08.பல்கலைக்கழக வாழ்க்கைப்பற்றி?
பாடசாலை வாழ்க்கையும். பல்கலைக்கழக வாழ்க்கையும் நினைத்தாலும் வாழ்க்கையில் திரும்பி வராதவை. ஆனால் அவற்றிற்காக காலம் கடந்தும் மனம் ஏக்கமடையும் என்பதே உண்மை. பல இனிய, கசப்பான அனுபவங்களை பல்கலை வாழ்க்கை தந்திருக்கின்றது. நண்பர்களுடனான அரட்டைகள் மறக்க முடியாதவை. ஒற்றுமை வேற்றுமைகள். முதுகில் குத்துதல் போன்ற பல அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. எல்லாவற்றையும்விட பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்களின் கற்பித்தல் முறமை பல புதிய கோணங்களில் சிந்தனைகளைத் தூண்டியுள்ளன. இதனைப் பெற்றுக்கொண்டதே வாழ்க்கையின் பல பக்கங்களை கற்றது போன்ற ஒரு உணர்வை எமக்குள் ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்
09. பல்கலைக்கழக மாணவர்களிடம் எந்த விடயத்துக்கும் அவசரம்,அடிதடி மட்டுமே அதிகளவில் காணப்படுவதாய் பல சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றது இதுபற்றி?
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இந்நிலை அதிகம் என்று கூறிவிட முடியாது. சில பல்கலைக்கழகங்களில் இவற்றிற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. இதற்கு சில பின்புலங்களும் காரணமாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாணவர்களும் தாம் எந்த நிலையில் இருந்து என்ன காரணத்திற்காக பல்கலைக்கழகத்திற்கு வந்தார்கள் என்பதை உணர்வார்களாக இருந்தால் இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து மீள முடியும் உண்மையில் பல்கலைக்கழக மட்டத்தில் இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை.
10.எழுத்துலகில் சாதிக்க நினைப்பது? உங்களது நூல்வெளியீட்டின் கனவு பற்றி?
இலக்கியத் தளத்தில் ஆழக்கால் பதிக்கவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். இன்று பல படைப்பாளர்களும் அவசர நிலையில் நூல்களை உருவாக்கி வருகின்றனர் இவற்றில் உண்மையில் எவை இலக்கியம் என்ற கேள்வி பெரும்பாலான இலக்கியவாதிகளிடம் எழுகின்றன. எனவே எமது படைப்புக்களை காத்திரமானவையாக வெளியிடவேண்டும். நூல் வெளியீடு நிச்சயம் நடை பெறும் ஆனாலும் அதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்றே கருதுகின்றேன்.
11.இன்றைய இளம் எழுத்தாளர்களிடன் நீங்கள் கண்ட நல்லவிடயங்கள் மற்றும் குறைபாடுகளை சுட்டிக்காட்ட முடியுமா?
சமுதாயத்திற்கு தேவையான பல விடையங்களை இன்றைய இளம்படைப்பாளர்களின் எழுத்துக்களில் காணமுடிகின்றது. சில படைப்புக்கள் தன்னுணர்வு சார்ந்தனவாகவும் அமையப்பெற்றுள்ளன. சமுதாயத்தின் விடுதலைக்கான, மாற்றத்திற்கான, வளர்ச்சிக்கான ஆயதங்களாக படைப்பார்கள் தம் எழுத்துக்களைக் கையாள்கின்றனர். இது ஆரோக்கியமான செயற்பாடாகும். ஆனாலும்கூட இலக்கியம் தொடர்பான சரியான தெளிவு இல்லாமல் சிலர் படைப்புக்களை உருவாக்குகின்றனர். இதனால் அவர்கள் கூற வருகின்ற கருத்துக்களுக்கான மதிப்பும் இல்லாது போய்விடுகின்றது. இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்துதல் நன்று.
12.நீங்கள் முன்னெடுக்கும் இலக்கிய செயற்பாடுகள்?
நான் முன்பே கூறியது போன்று கவிதை, சிறுகதை, நாவல், திறனாய்வு போன்ற துறைகளில் அதிக ஆர்வம் இருக்கின்றது. அவற்றிற்கான தேடல்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இன்னும் வாசிக்க வேண்டும் என்றே நினைக்கின்றேன். இதன் பயனாக காத்திரமான படைப்புக்களை படைக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன்.
13.உங்கள் படைப்புக்களுக்கு கிடைத்த விமர்சனங்களில் பாதிப்பை ஏற்படுத்திய விமர்சனம்?
விமர்சனங்கள் படைப்புக்களைச் செம்மைப்படுத்த வல்லன. எனது படைப்புக்களை வாழ்த்துவதைக் காட்டிலும் அவற்றை இலக்கிய திறனாய்வு அணுகு முறையோடு பலரும் புடம் போடுவதையே அதிகம் விரும்புகின்றேன். இது என்னையும் எனது படைப்புக்களையும் வளப்படுத்தும். இதுவரையில் என்னைப் பாதிக்குமளவிலான எவ்வித விமர்சனங்களையும் நான் எதிர்கொள்ளவில்லை. அவ்வாறு ஒரு நிலை வந்தாலும் விமர்சிப்பவர்கள் யார் என்பதைப் பொறுத்தே அவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள முற்படுவேன். பலரது விமர்சனங்களையும் எதிர் பார்க்கின்றேன்.
14.முகநூலில் கிடைக்கும் விருப்புக்களும் கருத்துக்களும் நல்ல படைப்பை உருவாக்கிவிடும் என நினைக்கின்றீர்களா?
நிச்சயமாக இல்லை. ஒருவர் இன்னொருவரின் படைப்புக்களுக்கு விருப்பங்கள். பின்னூட்டங்களை இடுவதன் மூலம் அவரும் பதிலுக்கு அவற்றைப் பெற்றுக்கொள்கிறார் அவ்வளவே. முக நூலில் நாம் எழுதும் எழுத்துக்களை பயிற்சிகளாகவே நாம் கொள்ளவேண்டும். அவற்றை சிறந்த படைப்பென வாதாட முற்படல் நன்றன்று. குறைந்த விருப்புக்களை, கருத்துக்களை கொண்ட சிறந்த டைப்பாளர்கள் பலரும் இல்லாமலில்லை. காதல் சார்ந்து எழுதப்படுபவை முகநூலில் அதிகம் வரவேற்பைப் பெறுகின்றன. காத்திரமான சில படைப்புக்கள் பலரால் கண்டுகொள்ளப்படாமலும் போகின்றன. இவை கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவை என்றே எண்ணுகின்றேன்.
15. பெண்படைப்பாளிகளின் வருகை வளர்ச்சி பற்றி உங்கள் பார்வையில்?
படைப்புக்களில் பெண்கள் என்ற நிலை மாறிப் பெண்படைப்புக்கள் என்ற நிலை எண்பதுகளிலேயே ஏற்பட்டுவிட்டது. அக்காலப்பகுதியில் அதிகமான பெண் படைப்பாளிகள் ஈழத்தில் முகிழ்ந்தெழுந்தனர். ஆனால் காலப்போக்கில் பெண்படைப்பாளிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து போய்விட்டது. தற்காலத்தில் பல பெண் படைப்பாளிகள் பல படைப்புக்களை குறிப்பாக கவிதைகளைப் படைத்து வருகின்றனர். மூத்த எழுத்தாளர்களுடைய இடங்களை இவர்கள் (சிலர்) நிரப்புவார்களா என்பது சில சமயம் கேள்வியாக அமைந்தாலும் இவர்களது வருகையும் முயற்சியும் தமிழிற்கு தேவையான ஒன்றே. சில காத்திரமான இளம் பெண் எழுத்தாளல்களையும் காணமுடிகின்றது. இவர்களது இலக்கியப் பயணங்கள் இடையில் முடிந்து போகுமொன்றாக இல்லாது காலத்தொடர்ச்சியாக அமையவேண்டும். தற்கால இளம் பெண் எழுத்தாளர்கள் அனைவரும் வளர்ச்சி, முதிர்ச்சி பெற்றுவிட்டார்கள் எனக்கூற முடியாது. சிலரது படைப்புக்களில் சிறுமைத் தன்மைகளைக்காண முடிகின்றது. ஆண் படைப்பாளர்களுக்கும் பொருந்தக்கூடியது. இவற்றைக் களைந்து இலக்கியங்களைப் படைக்க வேண்டும். அப்போதே அது நிலைப்புத் தன்மை உள்ளதாக அமையும்.
16.பெண்ணியம் பற்றி நீங்கள் கூற விரும்புவது?
பெண்களுக்கான பிரச்சினைகளை மட்டுமன்று அவர்தம் மன உணர்வுகளையும் பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை முன் வைப்பவர்கள் இலக்கியங்களில் படைக்கவேண்டும். சிலர் படைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். பெரும்பாலும் பெண்ணியம் தொடர்பாகப் பெண்கள் தம் நிலை நின்று பேசுவதற்கே பெண்ணியம் என அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. இது ஒருவிதத்தில் சரியானதே. எனினும் பெண்ணியம் என்பதை ஆண், பெண் இருவருமே பேசமுடியும். ஆண்கள் தம் நிலை நின்று நோக்காது பெண்நிலை நின்று இலக்கியங்களைப் படைக்க வேண்டும். பெண்களுக்கு சமூகத்தில் இழைக்கப்பக்கூடிய அநீதிகளை எனது எழுத்துக்களிலும் பதிவு செய்யவேண்டுமென்பது எனது நோக்கங்களில் ஒன்று. பெண்ணியம் தொடர்பாக யார் வேண்டுமானாலும் பேச முடியும். ஆனால் பெண்கள் பற்றிப்பேசுபவர்கள் அனைவரும் பெண்ணியவாதியாகிவிட முடியாதென்பதே உண்மை.
17. "இவர்களை ஏன் மறந்தோம்" என்ற உங்கள் கவிதையை படிக்கமுடிந்தது, 'விபச்சாரம்' சரி என்று சொல்லவருகின்றீர்களா?
தலித்தியம் பற்றிய கருத்துக்கள் தொண்ணூறுகளுக்குப் பின்னர் வளர்ச்சியடையத்தொடங்கின. சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படும் மக்ககட்கூட்டம் பற்றிப் பேசுவதாகவே இது அமைகின்றது. இதற்குள் பிச்சைக்காரர். விபச்சாரிகள். தாழ் சாதியெனக்கருதப்படுபவர்கள் எனப் பலர் இதற்குள் காணப்படுகின்றனர். காலங்காலமாக சமுதாயம் கட்டமைத்து வந்த விடயங்களை உடைத்தெறிந்து இவர்களது உண்மை நிலைகளை வெளிக்கொண்டுவருவதே தலித்தியம் சார் படைப்புக்களின் நோக்கமாகும். "விபச்சாம்" சரி என்று நான் கூற முற்படவில்லை ஆனால் விபச்சாரி என்றவுடன் எம் கண்முன்னே தோன்றுபவர்கள் யார்?. அந்தப் பார்வையில் மாற்றம் வேண்டுமென்கின்றேன். விபச்சாரம் செய்பவர்களுக்கும் மனம் உள்ளதென்பதை நாம் மறக்கக்கூடாது. அவர்களில் சிலரது மனங்களை அவர்கள் நிலை நின்று சிந்திப்பதில் தவறில்லை. மரபை அப்படியே பேணிக்காத்து படைப்பொன்றைப் படைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஒருவனால் சிறந்த படைப்பாளியாக வெளிவர முடியாது. இலக்கியவாதி என்பவன் ஒருபக்கப் பார்வைவிடுத்து பல கோணங்களிலும் சிந்தித்து பேசப்படாத பல விடயங்களைப்பேச முற்பட வேண்டும். விபச்சாரம் செய்பவர்களிலும் பல வகையினர் உள்ளனர் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் பற்றிப் பேசுவது பல பெண் படைப்பாளிகளுக்கு பிடிக்காத ஒன்றாகவும் போகலாம் அதற்கு அவர்கள் பெண்களாக இருப்பதே காரணம் எனக்கருதுகின்றேன். இவர்களில் சிலர் பொது இலக்கிய வெளிக்குள் வரவேண்டுமென்றே கருதுகின்றேன். பாரம்பரிய பார்வைகளை உடைத்து சில புதிய கருத்துக்களை கொண்டுவருகின்றபோது அது பலரது பார்வைகளில் பல விமர்சனங்களுக்கு உள்ளாவது சாதாரணமே. ஆனால் இலக்கியம், சமுதாயம் தொடர்பான புரிதல் கொண்டவர்களுக்கு இவ்விடயங்கள் எளிதில் புரிந்துவிடும் என்றே கருதுகின்றேன்.
18. இணையத்தளங்களில் நடைபெறும் கவிதை போட்டிகள், பாராட்டுக்கள் விருதுகள்?
இணையத் தளங்களில் நடைபெறும் கவிதைப் போட்டிகள், பாராட்டுக்கள், விருதுகள் போன்றவற்றை சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகள் என்றே கருதுகின்றேன். விருதுகள் என்ற சொல்லின் அர்த்தத்தையே இங்கு பந்தாடுகின்றார்கள் என்றே எண்ணத்தோன்றுகின்றது. இது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல. சில தளங்களில் போட்டியில் வெற்றியீட்டிய கவிதைகள் வெளியிடப்படுகின்றன. அவை கவிதைகளா என்ற கேள்விகள் என்னுள் மட்டுமல்ல பலருடைய மனங்களில் எழுந்துள்ளன. இத்தளங்களின் மூலம் கிடைப்பவற்றை எமது படைப்புக்களுக்கான அங்கீகாரமாகக் கொண்டால் சிலவேளை நம் படைப்புக்கள் தடம் மாறக்கூடும். ஆரோக்கியமற்ற படைப்புக்கள் தோன்றவும் இவை வழிவகுக்கலாம். இவ்விடயத்தில் அவதானம் தேவை.
19.உங்கள் படைப்புக்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் பற்றி?
எனது இலக்கிய பயணத்திற்கான வழிகாட்டல்களைத் தந்தவர்கள் அனைவருமே என் படைப்புக்களை பாராட்டியவர்கள்தான். ஆனால் பாராட்டுக்களைப் பெருமிதமாகக்கொள்ள நான் நினைக்கவில்லை அப் பாராட்டுக்களின் ஊடாக கிடைத்த அனுபவங்களை என்னை வளர்த்துக்கொள்ளவே பயன்படுத்த எண்ணினேன். அவற்றை ஊக்கப்படுத்தல்களாகவே கொண்டேன். பாராட்டுக்களிலும் பல வகைகள் உண்டு அவற்றை இனங்கண்டு அவற்றிற்கேற்ப என்னை மாற்றியமைத்திருக்கின்றேன் என்றே கூறலாம்.
20. இந்த நேர்காணல் அனுபவம், மற்றும் கல்குடா நேசன் இணைய வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள நினைப்பது?
பரீட்சைக் காலத்தில் இந்த நேர்காணல் இடம்பெற்றுள்ளது சில சமயங்களில் நெருக்கடிகளைச் சந்தித்திருந்தாலும் நிறைவான பதில்களை வழங்கியுள்ளேன் என்றே கருதுகின்றேன். ஒரு சாதாரண மணவனான எனது படைப்புக்களையும் மதித்து இனங்கண்டது கல்குடாநேசன் இணையம் அதற்காக முதலில் நன்றி கூறிக்கொள்கின்றேன். ஒரு இலக்கியத்தைப் படைத்தவுடன் படைப்பாளி இறந்து விடுகின்றான். அப்படைப்பு உயிர்ப்புப் பெறுவதும் இறந்து போவதும் வாசகனது பார்வையிலேயே இருக்கின்றது. வாசகனது புலமையும் இலக்கிம் சார்ந்த அறிவும் இதில் பங்காற்றுகின்றன என்பதில் தெளிவு வேண்டும்.
நன்றிகள்
No comments:
Post a Comment