Thursday, August 11, 2016

கல்குடா நேசனின் 42வது படைப்பாளி (12.08..2016)


கல்குடாநேசன் இணையத்தளம் “கல்குடா நேசனின்  இலக்கிய  நேர்காணல்”  என்ற  பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளர்களைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது  ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இப்பகுதியினூடாக கலைஞர்களின் படைப்புக்கள் திறமைகள் இலட்சியங்கள் ஆகியவை பற்றி நேர்காணலூடாகப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது. இதன்  தொடரில், 42வது  படைப்பாளியாக‌  இவ்வாரம்  எம்மோடு  இணைய இருப்பவர்  மட்டக்களப்பு மாவட்டத்தின்  துறைநீலாவணையைச்சேர்ந்த  ஓவியர் ஆனந்தத்தில் ஒரு அனல். வித்தியாசமான புனைப்பெயரில் தனது  படைப்புக்களை வெளிப்படுத்திவரும் இவர்  பலதுறைகளில் ஆளுமை மிக்கவர். 

யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் தனது  பட்டப்படிப்பை நிறைவுசெய்து விட்டு தற்போது  சித்திரப் பாட ஆசிரியராக கடமையாற்றிவருகின்றார். தனக்குள் ஓவியம் கவிதை சினிமா அறிவிப்பு என இன்னும்பல திறமைகளை சேமித்துவைத்துள்ள  இவர் தனது பெயரின் ரகசியத்தோடு சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்துகொண்டார். இளவயது  படைப்பாளியான இவர்  சக கலைஞர்களோடு நட்புடன் பழகக்கூடியவராகவும் மதிப்பளிக்கக்கூடியவராகவும் காணப்பட்டார் அனல் அவர்களின் சகல கலைத்துறை முயற்சிகளுக்கும் கல்குடா நேசன் இணையத்தினூடாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு இவரின் முழுமையான நேர்காணல் இதோ






 01. தங்களைப் பற்றி?


மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான துறைநீலாவணையே எனது பிறந்த இடம். எழில் கொஞ்சும் இயற்கையழகு நிறைந்த துறைநீலாவணை அதிக கல்வியலாளர்களைக் கொண்ட ஒரு கிராமம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சிறந்த கல்வியை வழங்கிய துறைநீலாவணை மகா வித்தியாலயத்திலே எனது ஆரம்பக் கல்வியைக் (1988-1992) கற்று, பின்னர் இடைநிலைக் கல்வி மற்றும் உயர் கல்வியை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலையில் (1999-2002) பயின்றேன். 2004 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறைக்காகத் தெரிவு செய்யப்பட்டு 2009 ஆம் ஆண்டு பல்கலைக்கழக கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்தேன்.

2010-2012 ஆம் ஆண்டு காலப்பகுதிகயில் திருகோணமலை மாகாணக் கல்வித் திணைக்களத்தின் விசேட கல்வி அலகுகளில் ஒன்றான “சமூக இசைவுக்கான கல்விப்” பிரிவில் ஆய்வு உதவியாளராகக் (சமாதானம்) கடமையாற்றினேன். அப்போது மூவின மக்களையும் ஒன்றுபடுத்தி அவர்களிடத்தில் சமாதானத்தை ஏற்படுத்துவதே எனது பொறுப்பாக இருந்தது. அந்தவகையில் வடகிழக்கில் இயங்கக் கூடிய 200 மேற்பட்ட பாடசாலைகளில் பணியை நிறைவேற்றக் கிடைத்தமையிட்டு மிகவும் மகிழ்சியடைகின்றேன் அல்லது சந்தோசப்படுகின்றேன். பணியாற்றும் காலப்பகுதியில் தற்போது கல்வியமைச்சராக இருக்கும் கௌரவ தண்டாயுபாணி ஐயா, முன்னால் வடகிழக்கு மாகாணங்களில் கல்விச் செயலாளர் கௌரவ சுந்தரம் திவகலாலா ஐயா, உதவிக் கல்விப் பணிப்பாளர் பவளகாந்தன் ஐயா மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டப்பின் டிப்ளோமா விரிவுரையாளர் திரு. சுப்பிரமணியம் ஐயா இன்னும் பல அனுபவம் வாய்ந்த கல்வியிலாளர்களோடு கடமையாற்றக் கிடைத்தமை எனது வாழ்வில் கிடைத்த மிகவும் பயனுள்ள ஒரு தருணம் அல்லது சந்தர்ப்பம் என்றே கூறவேண்டும். அவர்களிடம் இருந்து கிடைத்த சிறந்த அனுபவம் எனது வாழ்வுக்கு பெரும் உதவியாக இன்றுதன்னும் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அபிவிருத்தி உத்தியோகஸ்தராக நாவிதன்வெளி பிரதேச செயலகம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலகத்தில் பணியாற்றக் கிடைத்தது. அதன் பின்னர் எனது நீண்டகால இலட்சியக் கனவுகளில் ஒன்றான ஆசிரியர் தொழிலுக்கான போட்டிப் பரிட்சை எழுதுவதற்கான சந்தர்ப்பம் 2013 இல் கிடைத்தது. போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து தென் மாகாணத்தின் காலி திவித்துரை தமிழ் கனிஸ்ட வித்தியாலயத்தில் சித்திரப் பாட ஆசிரியராக 2014 ஆம் ஆண்டு நியமனம் பெற்று, அதனை இன்றுவரை சிறப்பான முறையிலே செய்து வருகின்றேன்.


02. நீங்கள் ஈடுபட்டுவரும் கலைத்துறைகள் பற்றி?


கவிதை, ஓவியம், ஸ்கிறீன் பிரிண்டிங், கட்டடக்கலை, புகைப்படக்கலை, சினிமாக்கலை, பாடலாக்கம். அறிவிப்புத்துறை, எழுத்துவடிவமைப்பு, இசையமைப்பு மற்றும் இசைக்கலவை என்று பல்வேறு கலைத்துறைகளில் கால்பதித்து வருகின்றேன். 

03. எவ்வாறு இத்துறைகளில் ஆர்வம் ஏற்பட்டது..?

மார்பின் மீது எனைத்தலாட்டி பாடல் உணர்வை எனக்கூட்டி என்னை கலைத்துறைக்கு வளர்த்துவிட்டு கலைத்துறை ஆர்வத்தை ஏற்படுத்தியது எனது தந்தை. தந்தையின் பாடல் ரசணை எனக்குள் கலைக்கான ரசணையை ஏற்படுத்திவிட்டதென்றே கூறவேண்டும்.  கலைகள் என்றாலே அதிக விருப்பம் எனக்கு. சிறுபராயத்தில் சின்னச் சின்னப் பாடல்களை கேட்டு ரசித்த எனக்குள் சின்னச் சின்ன எண்ணங்களின் எழுச்சி காலப்போக்கில் கவிதை மற்றும் சித்திரம் வரைவதற்கான அடித்தளத்தை வழங்கியிருந்தது. மனதின் ஒழுங்குபடுத்தப்பட்ட எண்ணங்களின் தோற்றமே கலை உருவாக்கத்திற்கு உதவி செய்கின்றது. பிற்பட்ட காலத்தில் எனக்குள் இத்துறை ஆர்வத்தை ஏற்படுத்துவதில் தெய்வகளாக இருந்தவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தினுடைய தலைவர் இறைபணிச் செம்மல் திரு.த.கைலாயபிள்ளை. மற்றவர் திருக்கோவில் கல்வி வலயத்தில் கடமையாற்றும் சித்திரப்பாடத்துறைக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சிறிதரன் அண்ணா அவர்கள். அது தவிர யாழ் பல்கலைக்கழத்தின் விரிவுரையாளர்களான கலாநிதி.கிருஸ்ணவேணி அம்மணி, சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.சனாதனன் ஐயா, சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.அகிலன் ஐயா மற்றும் கலையுலக சொந்தங்கள் அனைவரது தட்டிக்கொடுத்தல் என்னை இத்துறைகளில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு காரணமானது என்று சொல்லலாம். 



04. ஓவியம் அழகான துறை. அதில் நீங்கள் அனுபவித்து உணர்ந்த விடயங்கள்..?



உண்மைதான். ஓவியம் என்பது ஒரு அழகான துறை. இலகுவில் யாருக்கும் கைவருவது என்பது கடினமானது. எனக்கு கைகூடியிருக்கின்றது. எல்லாம் இறைவனின் நிறைதல். “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” என்று சொல்வார்கள். உண்மையில் ஓவியத் துறை என்பது நமது அழகிய எண்ணங்களை கோடுகளால் வரைவதற்கும் வர்ணம் தீட்டுவதற்குமான சிறந்ததொரு ஊடகம் என்றே சொல்லுவேன். ஒருவரது உள்ளத்தை கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானம் தேவையில்லை. ஓவியம் ஒன்றே போதும். உள்ளத்தின் நல்லெண்ணங்களை மற்றவர்களிடம் கொண்டு செல்லக்கூடிய இலகுவான தொடர்பாளன் இந்த ஓவியம். மனம் மகிழ்ச்சிக்கு சிறந்த வைத்தியம். சரித்திர வாழ்க்கைக்கான சந்தர்ப்பம் இந்த ஓவியம். தொழில் ஒன்றுக்கான கற்கை இந்த ஓவியம். காவிய வாழ்வின் கருப்பொருள் இந்த ஓவியம் என்று அடிக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் நீங்கள் கூறியதுபோன்று ஓவியம் எமது அழகிய வாழ்க்கைக்கு ஒரு அழகான துறைதான்.



05. எவ்வாறான கவிதைகளை எழுதுகின்றீர்கள்..?


பொதுவாக கவிதைகள் என்பது காலத்தின் கண்ணாடி என்பார்கள். அந்த அடிப்படையில் காலத்திற்கு காலம் எனது மனதில் தொக்கி நின்ற எண்ணங்களில் நிழல்களை வரைந்துவிடுதற்கான வாய்ப்பாக அமைந்தது இந்த கவிதைகள்தான். எனவேதான் கவிதையின் ஆரம்பம் 2000 ஆண்டுகளில் தொடங்கிற்று. அன்று காதலைப் பற்றி எழுதிக்கொண்டிருந்த எனது கைகள் இன்று கல்வி, சமாதானம். தொழிலாளர்கள், அடிமைகளின் வாழ்க்கை முறை என்று சமூகத்தின் பல்வேறு கோணங்களில் வாசிக்கக் கூடிய நிகழ்காலத்தின் தரிசனங்களை படம்பிடித்துக்காட்டுகின்றது. கவிதைக்கு பொய் அழகு என்று சொன்னார்கள். ஆனால் எனது கவிதை எதுவானாலும் அதில் பொய் இல்லை. எல்லாமே உண்மைகளால் மட்டுமே கட்டுவிக்கப்பட்டது. அதனாலோ என்னவோ அனைத்துக் கவிதைகளும் பத்திரிகைகள், வானொலிகள், இணையத்தளங்கள் போன்ற பல்வேறு ஊடகங்களில் வெளிவந்து உயிரானது.



06. ஓவியம், கவிதை ஆகிய இரண்டு துறைகளிலும் பயணிக்கும் தங்களின் வெற்றியின் ரகசியம்..?


வெற்றி என்பது தோல்விகளின் அடித்தளத்திலே ஆரம்பமாகின்றது. நான் தோல்விகளால் கட்டுவிக்கப்படும் ஒவ்வொரு தருணங்களிலும் வெற்றிகளால் வெளிச்சமிடப்படுகின்றேன். இதற்கெல்லாம் அதிகமாக எனக்கு தனிமை துணைநின்றது. தனிமை எனக்கு இளமையில் கிடைத்த ஒரு பொக்கிசம். தனிமை என்பது ஒரு தத்துவ ஞானம். இந்த விடயங்களோடு தியானம் மற்றும் யோகாசனம் போன்றவை எனது கலைத்துறைக்கான பயணத்துக்கு கைகொடுத்தது என்று கூறமுடியும். இதுதான் கவிதை, ஓவியத்துறையில் பயணிப்பதற்கும் எனது வெற்றிக்குமான இரகசியம் என்று குறிப்பிடலாம். 



07. எவ்வகை ஓவியங்களை வரைவதில் ஆர்வம் காட்டுகின்றீர்கள்?


கலைகளுக்குள்ளும் பல்வேறு வகையுண்டு. அவைதான் ஒரு கலைஞனை இலகுவில் அடையாளப்படுத்துகின்றது. அந்த அடிப்படையில் ஓவியத் துறையில் பல்வேறு வகைகள் காணப்படுகின்றது. அவை படித்தவர்களால் மட்டுமே உணர்ந்துகொள்ளக் கூடியதாகவும், புரிந்துகொள்ள முடிகின்றதாகவும் அமைந்துவிடுகின்றது. எனவேதான் அனைவருக்கும் புரியக்கூடியவகையில் ஓவியங்களை வரைவதில் ஆர்வம் காட்டி வருகின்றேன். குறிப்பாக நவீன பாணியமைப்பில் வரையப்படும் ஓவியங்கள் புரிந்துகொள்வதற்கு அது தொடர்பான அறிவு அவசியம் என்பதனால் நவீன ஓவியங்களை வரைவது குறைவு. ஆனால் விருப்பம் இருக்கின்றது. எனவேதான் மனித மெய்நிலைப் படங்களின் மார்பளவிலான படங்களை வரைவதிலும். கல்வியலாளர்கள், இயற்கை அழகு நிறைந்த காட்சிகளை வரைவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றேன். இது தவிர பாடசாலைகளில் பேசும் சுவரோவியங்களையும் வரைந்து வெற்றி கண்டுள்ளேன். 



08. ஓவியங்களை எங்ஙனம் ஆவணப்படுத்துகின்றீர்கள் அல்லது பாதுகாக்கின்றீர்கள்..?


நல்லதொரு கேள்வி. உண்மையில் எங்களுடைய ஒவ்வொரு படைப்புக்களையும் ஆவணப்படுத்தலிலேயே எங்களது படைப்புக்கள் மக்கள் மத்தியில் நாங்கள் அழிந்தாலும் வாழும் அல்லது அவர்களிடத்தில் விட்டுச்செல்வதற்கான வழியாக காணப்படுகின்றது. அந்த வகையில் எனது படைப்புக்களில் ஓவியங்களை ஆவணப்படுத்துதற்கான வழிகளை செய்துவருகின்றேன். எனக்கென்றொரு இணையத்தளத்தை உருவாக்கி அதில் எனது ஓவியம் மட்டுமல்ல அனைத்துப் படைப்புக்களையும் ஆவணப்படுத்துவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றது. எனவே விரைவில் ஆவணப்படுத்தப்படுவதோடு எதிர்காலச் சந்ததியினருக்காக அதனைப் பாதுகாப்பதும் எனது பொறுப்பாகும். தற்போது தற்காலிகமாக வீட்டிலே அதனைப் பாதுகாத்து வருகின்றேன்.



09. தங்களது ஆக்கங்களை நூல் உருவாக்குவது பற்றி..?


நிச்சயமாக எனது படைப்புக்களை மற்றவர்களிடத்தில் இலகுவில் கொண்டு செல்வதற்கான சிறந்த வழியாக நூல் காணப்படுகின்றது. முதலில் எனது கவிதைகளை நூல் உருவாக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கின்றது. அடுத்தவருடம் சாத்தியமாகும். இதில் என்ன விசேடம் என்றால் எனது கவிதை சிங்கள மொழியிலும் மொழி பெயர்த்து தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் இணைந்த வெளியிடவேண்டும் என்பதில் மிகுந்த கவனம் எடுத்து வருகின்றேன். 



10. தங்களது ஓவியங்களை வெளிப்படுத்திய சந்தர்ப்பம்..?



எனது ஓவியங்களைப் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் இன்னும் சரியாக அமையவில்லை என்பதைவிட அமைத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் எனது பாடசாலையில் எனது வழிகாட்டலின்கீழ் நடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களின் “உயிரின் கோடுகள்” எனும் சித்திரக் கண்காட்சியில் எனது ஓவியங்கள் சிலதைக் காட்சிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்தது. அதிக வரவேற்பும், பாராட்டுக்களும் கிடைத்தது. கொழும்பில் எனது ஓவியங்களைக் காட்சிப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எல்லாவற்றுக்கும் பணம் முக்கியமாகத் தேவைப்படுவதனால் என்னிடம் அதற்கான வசதிகள் தற்போது குறைவதானே. அதனால் இந்தவருடம் நடாத்தப்படவிருந்த கண்காட்சி பிற்போடப்பட்டுள்ளது. நிச்சயம் வெற்றிக்கான நாள் வெகு தொலைவில் இல்லை.



11. தங்களின் பெயர்வித்தியாசமாக இருக்கின்றதே. எவ்வாறு இந்தப் பெயர்..?  தங்களது  உண்மையான பெயர்  என்ன?

எனது  பெயர்  ஜீவராசா. வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக வைக்கவில்லை. வைத்த பெயர் ஒன்று வித்தியாசமாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. எனது கவியார்வம் தூண்டபடுவதற்கும் கவிதை எழுதவேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது இந்தியாவின் பிரபல கவிஞர்களில் ஒருவரான திரு.மு.மேத்தா அவர்களது கவிதைகள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகின்றேன். அவரது கவிதைத் தொகுதி ஒன்றில் “சிரிப்பு ஒரு நெருப்பு” என்று தலைப்பின் கீழ் சில வரிகள் எழுதப்பட்டிருந்தது. அது எனக்கான வரிகள்போலவே அமைந்திருந்தது. எனது அன்றைய வாழ்வுக்கும் பொருத்தமுடையதாக அமைந்திருந்ததனால்; இந்த தலைப்பில் வருகின்ற சிரிப்பு என்பதனை “ஆனந்தத்தில்” என்றும் ஒரு என்பதை அப்படியே வைத்துக்கொண்டு நெருப்பு என்பதனை “அனல்” என்று மாற்றிக் கொண்டு 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து பத்திரிகைகளிலும் ஏனைய ஊடகங்களின் வாயிலாக “ஆனந்தத்தில் ஒரு அனல்” என்ற புனைபெயரிலே படைப்புக்களை எழுதிவருகின்றேன் அல்லது படைத்து வருகின்றேன். 



12. பல  கலைத்துறைக்குள் ஈடுபாடுகொண்ட  உங்களின் இப்பயண வெற்றியின் ரகசியம் என்ன?  எவ்வாறு  இத்தனை துறைகளுக்குள் இயங்குகின்றீர்கள்? 

பல துறைகளுக்குள் ஈடுபாடுகொள்ளல் மற்றும் அதற்குள் இயங்குதல் என்பது அனைவராலும் முடியாத காரியம். நான் இந்த பல்துறைகளுக்குள் இயங்குவதற்கு முதல் காரணம் கலைத்துறையில் நான் சந்தித்த ஏமாற்றங்கள் மற்றும் தோல்விகள்தான். குறிப்பாகச் சொல்லப்போனால் எனக்குள் இருக்கின்ற ஆர்வத்துக்கு மற்றவர்களிடம் உதவிகள் கேட்டிருக்கின்றேன். ஆனால் அவர்கள் எனக்கு கைகொடுக்கவில்லை. எனவேதான்; மற்றவர்களை நம்புதல் என்பதைவிட என்னை நம்;பினேன். எனக்குள் கலைவிதைகளை விதைத்தேன் பல விருட்சங்கள் விசாலமானது. ‘உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி” என்ற பாடல் இந்த தருணத்திலே ஞாபகம் வருகின்றது. எனவே அந்தக் கேள்விக்கும் பொருத்தமானதாக அமைந்திருக்கின்றது. அதற்கு அமைவாக எனது கலைப்பயண வெற்றி சாத்தியமாயிற்று.


13. இத்தனைத்துறை ஈடுபாட்டுக்கும்  நீங்கள் அதிகம் விரும்பும் துறை எது? காரணம் என்ன?


நீங்கள் கேட்பது இரண்டு கண்களில் சிறந்த கண் எது என்று கேட்பது போன்று உள்ளது. உண்மையில் கலையே மூச்சு கலைத்துவமே நிலையான ஆட்சி என்பதற்கு அமைவாக நான் விரும்புகின்ற அனைத்துக் கலைகளிலும் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. எல்லாமே எனக்கு ஒன்றுதான் என்பதில் மகிழ்வுகொள்கின்றேன். ஒரு துறையில் விருப்புக்கொண்டால் கலையின் பார்வைத்தூரங்கள் குறைவு. பல்கலைத்துறையில் பயணம் வைத்தால் எம்மை வாசிப்பவர்கள் அதிகம். எமது அனுபவங்களைப் பெறுகின்றவர்கள் அதிகம். மற்றவர்கள் நிறைவுகாண்பதற்கும் ஒரு நிரந்தரம். எனவேதான் நான் நேசிக்கும் எல்லாத்துறைகளும் எனக்கு மிகமிக பிடித்தமானவை என்பதைக் கூறிக்கொள்கின்றேன்.


14. கவிதை சிறுகதைகளைப்போல சொல்ல வருகின்ற விடயங்களை ஓவியம் மூலம் தெளிவாக வெளிப்படுத்த  முடியுமா? ஓவியன் சொல்லவருகின்ற  எல்லா விடயத்தையும் ரசிகனால் புரிந்துகொள்ளமுடியுமா?

ஆம். நிச்சயமாக முடியும், கலைக்குள் நிறையவே வாசிப்பு இருக்கின்றது. கவிதை, சிறுகதை, கட்டுரை என்பவற்றை மட்டுந்தான் வாசிக்க முடியும் என்பதல்ல. ஒரு ஓவியத்தையும் வாசிக்க முடியும். யார் யார் சிறப்பான முறையில் ஓவியங்களை வாசிக்கின்றார்களோ.. அவர்கள் ஓவியன் சொல்ல வரும் விடயங்ளை முழுமையாக புரிந்துகொள்கின்றார்கள் என்று அர்த்தம். எதையும் புரிந்துகொள்வதற்கு வாசிப்பு அவசியம் என்பது போல ஓவியத்தையும் வாசிப்பதற்கு பழகிக்கொள்ளும்போது அதன் ஊடாக கருத்துக்களைப் புரிந்துகொள்ள முடியும். 

இரண்டாவது கேட்டிருந்தீர்கள்..ஓவியன் சொல்லவருகின்ற எல்லா விடங்களையும் ரசிகனால் புரிந்துகொள்ள முடியுமா..? என்று . அதற்கு இல்லை என்றே கூறவேண்டும். ஏனேனில் குறிப்பாக நவீன பாணியமைப்பில் வரையப்படும் தற்கால ஓவியங்களை புரிந்துகொள்வதற்கு அத்துறைசார் அறிவு மிக மிக அவசியம். இவ்வாறான ஓவியங்களை பாமர மக்களால் புரிந்தகொள்வது கடினம். எனவேதான் ஓவியத்தை ரசிக்கின்றவர்கள் வர்ணத்துக்காக ரசிக்கலாம், கவர்ச்சிக்காக ரசிக்கலாம், உருவங்களுக்காக ரசிக்கலாம்… எனவே முழுமையான ரசனை என்பது எல்லாவற்றின் ஒட்டுமொத்த கூட்டாக இருப்பதனால் இதுவே புரிந்துகொள்வதற்கு வழிசெய்கின்றது. எனவே புரிந்துகொள்வதற்கான இக்கூட்டு அனைவரிடத்திலும் இருப்பது குறைவு. எனவே ஓவியம் தொடர்பான குறைந்தளவு அறிவு மற்றும் அனுபவங்கள் இருத்தல் ஊடாகவே புரிதல் நிறைவாகின்றது.



15.நீங்கள் கூறியதுபோல ஓவியம் அனைவராலும் வரைய  முடிவதில்லை இதில் இளையவர்களுக்கு ஆர்வம்   இருக்கின்றதா?இந்தத்துறையின் வளர்ச்சிபற்றி  கூறமுடியுமா?


ஆம், ஆர்வம் இருக்கின்றது. குறிப்பாக இளைவர்களுக்கு அல்லது இளவயது மாணவர்களுக்கு சித்திரத்தை கற்றுக்கொடுப்பதற்கு சிறந்த அனுபவம் மிக்க ஆசிரியர்கள் பயிற்சியாளர்கள் மிகக் குறைவு. தற்போது நாம் இதற்கு சிறந்ததொரு விடயத்தைக் குறிப்பிடலாம். சில பாடசாலைகளில் சித்திரப்பாடத்தை கற்பிக்கின்ற ஆசியரிர்களை எடுத்துகொண்டால் அவர்கள் ஆங்கில ஆசிரியர்களாக, சுகாதாரம், விஞ்ஞானம் அல்லது சித்திரம் தவிர்ந்த ஏனைய பாடத்தைக் கற்பிப்பவராக இருப்பார். ஆனால் அதிபர் அவருக்கான பாடவேளையை நிரப்பும்பொருட்டு சித்திரப்பாடத்தை கற்பிக்க பணிக்கும்போது என்ன நடக்கின்றது. அனுபவமற்ற கல்வி மாணவர்களுக்கு ஊட்டப்படுகிகின்றதல்லவா. எனவேதான் இவ்வாறான விடயங்கள் மாணவர்கள் மத்தியில் கசப்புக்களை ஏற்படுத்தி விடுகின்றது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நான் கற்பிக்கும் பாடசாலையாகும். காலி திவித்துரை விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் எட்டு வருடங்களாக சித்திரப்பாடத்திற்கென ஆசிரியர் ஒருவர் இல்லாமல் இருந்த சந்தர்ப்பத்தில் எனக்கு சித்திரப்பாடத்துறை சார் நியமனம் பெற்று 2014 ஆம் ஆண்டு அப்பாடசாலையில் சித்திரப்பாடத்தைக் கற்கும் மாணவர்களது தொகை மற்றும்  விருப்புக்கள் அதிகமாகவே காணப்பட்டது. அவர்களை சிரமப்பட்டு இத்துறையில் வளர்த்து பாடசாலை, கோட்ட, வலய, மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் சித்திரப் பாடத்தில் வெற்றிபெற்றமை சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும். இந்த வெற்றிகள் பாடசாலை ஆரப்பித்த காலத்திலிந்து நான் சென்ற காலப்பகுதிவரை இருந்ததே இல்லை. (ஏறத்தாழ 35 வருடங்களுக்கு) இது தவிர கல்விப் பொது சாதாரண தர மாணவர்களது அடைவு மட்டம் மற்றும் பெறுபேற்றிலும் உயர்வினை ஏற்படுத்தியிருக்கின்றேன். சித்திரத் துறையில் பல்கலைக்கழகங்களுக்கு பல மாணவர்களை அனுப்பியிருக்கின்றேன். அந்தவகையில் எனது கலைப்பயணத்தில் நான் கண்ட வளர்ச்சிக்கு இவை சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறலாம்.



15. இவ்  ஓவியக்கலையில் உங்களுக்கென்ற  தனித்தன்மை என்ன? எவ்வாறான  வித்தியாசங்களை உருவாக்க முயற்சிக்கின்றீர்கள்?

தனித்தன்மை என்பது தனித்துவத்துக்கான அடையாளமும் கூட. எனவே தனித்துவம் ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகின்ற வித்தியாசப்படுகின்ற ஒன்றாக இருக்கின்றது. அந்த வகையில் எதையும் வரையலாம். எதையும் படைக்கலாம் என்ற எண்ணந்தான் எனது தனித்துவம். எனது ஓவியத்திலும் வர்ணப்பிரயோகம், வர்ணபலம், முழுமையும் நிறைவும் எனக்கான தனித்துவத்தையும் அங்கீகாரத்தையும் தந்திருக்கின்றது. காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப படைப்புக்களைப் படைக்கின்றபோது பல்வேறு புதிய நுட்பமுறைகள் சேர்ந்த படைக்கப்படுகின்றன. எனவேதான் அவை புதிய போக்கிற்கு ஏற்ப அனைவராலும் வாசிக்கப்படுவதற்கு விரும்பப்படுகின்றது எனலாம். ஏனவேதான் கோடுகளில் வித்தியாசம், வர்ணங்களில் வேறுபாடு முழுமையிலும் வேறுபாடுகளைக் காட்டுவதற்கு முயற்சிகளை எடுத்திருக்கின்றேன். எடுத்தும் வருகின்றேன்.



17.ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ளவர்களுக்கு நீங்கள் கூறநினைக்கும் ஆலோசனை?


‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற கூற்றுக்கு அமைவாக சித்திரத்தை விருப்புகின்றவர்கள் பயிற்சி மற்றும் முயற்சி என்ற இரண்டையும் கைவிடக்கூடாது. தொடர்ந்தும் முயன்றுகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியை அடையமுடியும். கஸ்டம் என்கின்ற நிலையும் இலகுவாக்கப்படும். “மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால் நினைத்ததை முடிக்கலாம்” கவிஞர் பா.விஜய்யின் வைரவரிகள். உண்மையான வரிகள். மிக முக்கியமானது துறைசார் அதிவிருப்பு. இதற்கு துணையாக நிற்பவைகள்தான் ஏனையவனை. எனவே முயற்சி செய்யுங்கள், பயிற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம்.


18. இத்துறையில் பெண்களின் ஆர்வம் பங்களிப்பு எவ்வாறு காணப்படுகின்றது?


தற்போது எத்துறை எடுத்தாலும் பெண்கள் சாதனை படைப்பதற்குத் துணிந்துவிட்டார்கள். அபரும் பரட்சியாளர்களாவ சிறந்த எழுத்தாரளர்களாக மிளிர்கின்ற பெண்களே ஆண்களைவிட ஓவியத்துறையிலும் அதிக விருப்புடன் சாதிக்க வேண்டும் என்று உயர் எண்ணம் கொள்கின்றார்;கள். அவர்கள் சாதிப்பார்கள். பாடசாலையிலும்கூட பொதுவாக கல்வியைப் பார்க்கின்றபோதும் அவர்களது ஆர்வம் மற்றும் உத்வேகம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கின்றது எனலாம். சித்திரத்திலும் அவர்கள் சாதனை படைப்பார்கள். சாதனை படைக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன்.


19. பல படைப்பாளிகள் தங்களை  இலகுவாக வெளிப்படுத்தும்  ஊடகமாக முகநூல் மாறிவிட்ட  சந்தர்ப்பத்தில் இங்கு வெற்றிபெறும் படைப்புக்கள் எவையென நினைக்கின்றீர்கள்? முகநூலில் கிடைக்கும் அதிக விருப்புக்களால் ஒரு படைப்பை தரமானதாக கொள்ளமுடியுமா?

நல்லதொரு கேள்வி. இன்றைய உலகில் எமது எண்ணங்களை விதைப்பதற்குச் சிறந்த வெளிதான் இந்த சமூக வலைத்தளங்கள். அதிலும் குறிப்பாக இன்று முகப்புத்தகத்தின் பயன்பாடு சொல்லவே தேவையில்லை. எண்ணங்களைப் பொருத்தவரை நல்லவை மற்றும் தீயவை என இரண்டாகப் பார்க்கப்டுகின்றது. இதில் நல்லவை வெற்றி பெருகின்றது. தீயவை தோற்றுவிடுகின்றது. நல்லவை எனும்போது சமூக அக்கறையுள்ள அல்லது சமூகத்திற்கு மிகமிக அவசியமானவை என்று பொதுவாகச் சொல்லிக்கொள்ளலாம். இதனை விரித்துக்கொண்டால் நிறையவே பேசிக்கொள்ளலாம். அவை பற்றி விரிக்க இது நல்ல தருணம்அல்ல. எனவே சுருக்கமாகக் கூறியிருக்கின்றேன். 

மற்றையது படைப்பின் தரம் பற்றிக் கேட்டீர்கள். முகநூலில் பதிவிடப்படுகின்ற ஒரு படைப்புக்குக் கிடைக்கும் விருப்பு என்பது அதற்கான அங்கீகாரம் அல்ல. அவை நமது தேடலுக்கான நல்ல ஊக்குவிப்பு ஒரு சிறந்த பின்னூட்டல் என்று கருதுகின்றேன். ஒரு படைப்புச் சிறக்க அல்லது வெற்றிபெற அது உண்மையாக நிறையவே திறமைசாலிகளுக்கிடையில் போட்டிபோடவேண்டியிருக்கின்றது. அந்தப்போட்டித் தன்மை ஒரு அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும். அல்லது அதனோடு இணைந்திருக்கும் வகையில் சார்ந்திருக்கும் பட்சத்தில் ஒரு படைப்பு சிறந்தது என்று கருத இடமுண்டு. அப்படி என்றால் முகப்புத்தகத்திலும் போட்டிகள் நடக்கின்றதே என்று கேட்கலாம். ஆனால் முகப்புத்தகம் என்பது அரச அங்கீகாரத்திற்கானதா? இல்லை. எனவேதான் படைப்புக்களும் “தரம்”; என்று கூறிவிடச் சிரமம் ஏற்படுகின்றது. 



20.நீங்கள் ரசித்த  ஓவியம் மற்றும்  உங்களைக்கவர்ந்த  ஓவியர்? இலங்கையின் சிறந்த ஓவியர்களாக நீங்கள் இனங்கண்டவர்கள்?

என்னைக் கவர்ந்த ஓவியம் மற்றும் ஓவியர் என்று சொல்லும்போது மறுமலர்ச்சிகால ஓவியர்களை இலகுவில் குறிப்பிடலாம். குறிப்பாக லியானடோ டாவின்சி வரைந்த “இறுதி இராப்போசனம்” என்னை மிகவும் கவர்ந்தது. அதில் காணப்படும் மிகச்சிறந்த நுணுக்கங்கள் வேலைப்பாடுகள் என்னை பிரமிக்க வைக்கின்றது. இவ்வோவியர் தொடர்பாக அதிகம் கதைக்க விரும்பவில்லை. ஏனெனில் அனைவருக்கும் தெரிந்தவர் மோனாலிசா ஓவியத்தின் ஊடாகப் பேசுப்பட்டவர் இன்றும் பேசப்பட்டுக்கொண்டிருப்பவர். இதுதவிர இலங்கை ஓவியர்களில் விரிவுரையாளர் சனாதனன், கலைஞர்.மார்க், ஓவியர் ரமணி மற்றும் சிங்கள கலைஞர்களையும் அதிகம் பிடிக்கும். அவர்களது ஓவியங்களையும் இரசித்து நயந்திருக்கின்றேன். வியந்திருக்கின்றேன். 

21.சினிமாக்கலைஇ பாடலாக்கம். அறிவிப்புத்துறைஇ எழுத்துவடிவமைப்புஇ இசையமைப்பு மற்றும் இசைக்கலவை போன்ற  துறைகளின் ஆர்வம் பற்றி குறிப்பிட்டீர்கள் அவைபற்றிய  அநுபவங்களை பகிர்ந்துகொள்ளமுடியுமா?

ஒன்றின் திருப்தி இன்னுமொன்றின் ஏக்கம் என்று சொல்வார்கள். நான் ஒரு துறையில் கண்ட திருப்தி எனக்காக அடுத்த துறைக்கான பாய்ச்சலையும், துணிச்சலையும் ஏற்படுத்தியிருக்கின்றது. எனவே இந்தச் சினிமா, பாடலாக்கம், அறிவிப்பு, இசையமைப்பு போன்ற பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றேன். எனது வரிகளில் எனது குரலில் எனது இசையமைப்பில் பாடல்கள் இரண்டை வெளியிட நினைத்திருக்கின்றேன். அத்தோடு “மகிழ்ச்சி: என்ற ஆவணக்குறும்படத்தையும் 2015 ஆம் ஆண்டு சிறுவர்தினத்திற்காக எடுத்திருந்தேன். படத்தை சிறப்பான முறையில் எடுப்பதற்கு நவீன கமெரா வசதிகள் என்னிடம் இல்லை. என்னிடம் இருந்த சம்சுங் சாதாரண கைத்பேசியை வைத்து எடுத்ததுதான் இந்தப் படம். இதற்காக தென்மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் அவர்களது பாராட்டையும் பெற்றிருந்தேன் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றையது அறிவிப்புத் துறை பற்றிச் சொல்லவேண்டும். தற்போது ஏனைய துறைகளைவிடுத்து அறிவிப்பில் நாட்டம் செலுத்திவருகின்றேன். இதற்கான ஆரம்ப நடவடிக்கைகளாக எனது குரலில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட செய்திகள் மற்றும் கவிதைகளை நீங்கள் பார்த்து கேட்பதன் ஊடாக இதற்கான ஆதாரத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இதற்கு காலம் சிறந்த பதிலை தரும்.



22.உங்களது  எதிர்காலத்திட்டம்?

எதிர்காலம் என்றவுடன் பயம் மனதோடு ஒட்டிக்கொள்கின்றது. படைப்புக்களை கரைசேர்க்க பணம் இன்றைய சூழலில் முக்கியத்துவமுடையதாக மாறுகின்றது. நமது கைகளில் வசதி வாய்ப்புக்கள் குறைவாகத்தானே இருக்கின்றது. எனவே எனது கவிதை புத்தகம் வெளியீடு, சித்திரக் கண்காட்சி நடாத்துதல், குறும்பட வெளியீடு, பாடல்கள் வெளியீடு என்று கனவுகள் நிறைவே.. நிறைவு நாள் பற்றி சரியாகச் சொல்லிவிட முடியாவிட்டாலும். இதற்கான அதிக முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது. வெகுவிரைவில் அதற்கான வாய்ப்புக்களை அல்லது சந்தர்ப்பங்களை எதிர்பார்க்கலாம்.


23.உங்களுக்கு  கிடைத்த  பாராட்டுக்கள் பரிசுகள் விருதுகள்?

1. 2013 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் கலை கலைசாரத் திணைக்களம் இணைந்து நடாத்திய கலைஞர்களுக்கிடையிலான ஓவியப் போட்டியில் 4ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை.

2. 2014 ஆம் ஆண்டு மார்கழி மாதம் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் இமயம் பீ.பாரதிராஜா அவர்களால் "கலைஞர்" கௌரவம் பெற்றமை.

3. 2014 ஆம் ஆண்டு அததெரண இணையத்தொலைக்காட்சி சிறந்த ஓவியராக இணங்கண்டு நேர்காணல் செய்தமை.

4. 2016 ஆம் ஆண்டு உலகு கவிதைகள் தினத்திற்காக "கலாசார புரட்சி" என்ற தலைப்பில் எழுதிய கவிதை இலங்கை கலாசார திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட நூலில் பிரசுரிக்கப்பட்டமை.

5.2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வசந்தம் தொலைக்காட்சியின் தூவானம் இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியில் நேர்காணல் செய்யப்பட்டமை.

6. 2016 ஆம் ஆண்டு யூலை மாதம் தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பினால் பல்திறமைக்காக "தமிழ் மாமணி" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை. 


24. தங்களின் கலைப்பயணம் சிறப்பாக அமைய கல்குடா  நேசன்  வாசகர்கள்  சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இறுதி கேள்வியாக  நீங்கள் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள நினைப்பது?

மிக்க நன்றி. தங்களது வாழ்த்துக்கள் ஊடாக நானும் இந்த கல்குடா நேசன் இணையத்தளத்துக்கும் என்னை நேர்கண்ட உங்களுக்கும் எனது மனமார்ந்த நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எனது கலைப்பயணத்தில் இந்தளவிற்கு முன்னேறி பயணித்துக்கொண்டு இருக்கின்றேன் என்றால் நேயர்களாகிய உங்களது பேராதரவு என்றுதான் சொல்லுவேன். என்னை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நல்ல கருத்துக்கள் வழங்கி, பின்னூட்டல்களை வழங்கி என்னை ஊக்கப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் இந்தச் சந்தர்ப்த்திலே நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். தங்களது உண்மையான பேரன்புக்கும் ஆதரவுக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். முடிந்தவர்கள் எனது கலைப்பயணத்துக்கு கைகொடுங்கள். வெற்றியடைய உரம் ஊட்டுங்கள். மிக்க நன்றி.









No comments: