Saturday, February 9, 2013

மீண்டும் நிரப்பப்படுமா???




உனக்குமெனக்குமிடையில்
உருவமில்லாவோர் இடைவெளி
கண்ணாடித்திரையொன்றும்
கட்டிவைக்கப்பட்டுள்ளது...

நமதுறவுக்கான
அத்தனை அடையாளங்களும்
சற்றுமுன்னர்தான் அழிக்கப்பட்டிருந்தது
நமக்கென்ற பிரத்தியேகங்கள்
நமதான அந்நியோன்யங்கள்
எல்லாவற்றிலுமோர் சிறுசிறு உடைவுகள்
மீண்டும்
தகர்த்தெரியப்பட்ட பிளவுகளில்
தளிரொன்று  முளைத்து -நமக்கான‌
தடயங்களை உருவாக்கிடுமா???


இறுகிப்போன இதயத்தில்
ஈரமேயில்லாமல் உறிஞ்சியெடுத்த விழிகள்
ரணங்களை கிளறியெடுக்கும்
ரம்யமான நினைவலைகள்
ஊணுறக்கங்களை தின்றுவிட்ட‌
கொடிய வலிகள்
சுயாதீன மிழந்துபோன நான்
அநாதைப்பிணமாய் என்காதல்
நம் இடைவெளியின் கோரக்காட்சிகளாய்
இவை அடையாளமிட்டு நிமிர்ந்திருக்கின்றது...

உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
தொலைந்தது நிஜமென்றால்
ஏனிந்த நிர்கதியான நிலவரம்?
எதேட்சையாய்தான் அந்த‌
மாயத்திரை விலகியது
மயானமாய்ப்போன என்மனதை
மறுபடியும் உயிர்ப்பிக்கமுடியாதவளாய்
புதைந்துகொண்டிருக்கின்றேன்...

கலவரமே இல்லாமல்
கைகாட்டி மறைந்தாய் இன்றும்
உயிர்வாழும் கருவாய் காதல்
கலைத்துவிட முடியா தாயாய்நான்...

உன்னால் வழங்கப்பட்டதல்ல‌
எந்த அதிகாரமும்
நானாகவே எடுத்துக்கொண்ட‌
உரிமைகள்தா ன‌த்தனையும்
இன்றோ,
கோபப்படமுடியாமலும்
அதிகாரத்தை பிரயோகிக்க இயலாமலும்
உரிமையினை உபயோகிக்காமலும்
நம் சந்திப்புக்கள்
வெறுமையாகவே தோன்றிமறைகின்றது...

மீண்டும் நிரப்பப்படுமா
நாளைய விடியலில்
குயில்களின் பாடலே
தேசியகீதமாக - இல்லை
அர்த்தமற்றுப்போகுமா என்
காதலைப்போல சில எளிமைகளும்...






No comments: