Sunday, February 17, 2013
சின்னஞ்சிறு விதைகள்
நந்தவனத்தில்
பனித்துளி யலங்காரத்தோடு பூத்த
சின்னஞ்சிறு மலர்கள் நாங்கள்...
பாடிக்களித்து
பள்ளிசென்று பாரினில்
புதுமைகள் படைக்கப்பிறந்த
சாதனை சிங்கங்கள் நாங்கள்...
நாளைய விடியலின் உதயமாய்
சரித்திர பக்கங்களின் சாதனைகளாய்
சுள்ளென்ற விடியலுக்கான
ஆலமர விதைகளாய் முளைத்த
வானக்குடை நாங்கள்...
எங்கள் சிறகுகளை முறித்திடாதீர்
எங்கள் பாதைகளை அடைத்திடாதீர்
எங்கள் வேர்களை கிள்ளிவிடாதீர்
எங்கள் சுவாசங்களை தடுத்திடாதீர்...
வறுமையென்ற பள்ளத்தைகாட்டி
பயப்படுகிறதெங்கள் பாலரிதயம்
சமுதாய சட்டத்துள்
சமரச அந்தஸ்தில்லா பணமெங்கள்
பாதையை முடக்கிவிடுவதேன்?
ஏழையென்ற ஏற்றத்தாழ்வுகள் -எம்
ஏக்கங்களை உதைத்து தள்ளுவதேன்
இன்றைய தலைவர்களே தரணியின்
நாளைய தலைவர்களுக்கு
வழி விடுங்கள்
மூத்த குடிகளே இன்றெங்கள்
கிளைகளை பரப்பவிடுங்கள்
புதுயுகம் காண புதுவழிகாட்டுங்கள்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment