நல்வாழ்வின் விடியலாய் விடியட்டும்
கழிந்ததெலாம் கழிவாய் கழிந்து போகட்டும்
ஒளிர்வதெலாம் கனிவாய் மிளிர்ந்து பூக்கட்டும்
வலிகளெலாம் வழிந்து வரட்சியா கட்டும்
தளிர்களெலாம் வெடித்து விருட்சமாகட்டும்...
பூமிப்பந்தின் அடிநுனியாட்டங்களெலாம் அமைதியாகட்டும்
சாமிப்பழி சட்டங்களெலாம் சகோதரத்துவம் பேசட்டும்
அக்கிரமக் கனிகளின் அதிஸ்டங்களெலாம் அடியோடழியட்டும்
உக்கிரமான உண்மைக ளுயர்ந்துஜெயிக்கட்டும்...
ஊர்பிடிக்கும் ஏர்களெலாம் உயர்ச்சி காணட்டும்
யார்கேட்பினும் வரங்கள் வாரி கொடுக்கட்டும்
நீர்நிலைகள் யாவுமே செழித்து நிற்கட்டும்
பாரில்நற்பயன்கள் பயிராய் விழையட்டும்...
கல்விமுதற் கலைகள்யாவும் பொதுவுட மையாகட்டும்
செல்வஞ்சேர் மடமையெலாம் ஏழ்மையை தகர்க்கட்டும்
பொல்லாத சட்டங்கள் பொசுங்கியே சாகட்டும்
நல்வாழ்வை தந்திடும்விடியலாய் இவ்வாண்டு பிறக்கட்டும்...
வானவெடிகளின் பூரிப்பில் வசந்தவாழ்வு பூக்கட்டும்
தானதர்மங்களின் பயன்களால் புத்தாண்டு மகிழட்டும்
ஞானமழை பொழிந்திடும் ஞாலமுருவாகட்டும் -அன்புக்
கானமிசைத்திடும் மனங்களுக் கிறையருள்கிட்டட்டும்...!!!
No comments:
Post a Comment