Saturday, December 29, 2012


           மித்திரன் வாரமலரில் 


                            பிரசுரமான நேர்காணல்


















     தேசங்கடந்து வாழ்ந்தாலும் நேசம்மாறாத ஓர் பிணைப்பை இலங்கையுடன் கொண்டிருக்கும் லண்டன் தமிழ் வானொலி புலம்பெயர் தமிழர்களோடு நம்மையும் இணைத்து ஓர் உறவுப்பாலமாக செயற்படும் ஓர் அளப்பரிய சேவையாற்றிக்கொண்டிருக்கின்றது.அந்த வகையில் தமிழால் சந்தித்து தமிழோடு கைகோர்த்திருக்கும்'கீதாஞ்சலி' எனும் நிகழ்ச்சியினூடாக இலங்கையின் சகலதுறை கலைஞர்களையும் இலைமறைகாயாக இருக்கும் படைப்பாளிகளையும் சந்தித்து அவர்களை உலக அரங்கில் திரைநீக்கி வெளிச்சமிட்டுக்கொண்டிருக்கும் அச்சேவையில் வெற்றியும் கண்டுள்ளது. இந்நிகழ்ச்சியை சிறப்பாகவும் வெற்றியுடனும் தொகுத்துவழங்கிக்கொண்டிருக்கும் அறிவிப்பாளினி திருமதி ஷாபா பேகம் அவர்களுக்கும் இவ்வானொலிக்கும் நன்றிகளை கூறிக்கொண்டு மிகுந்த வேலைப்பளு, சிரமங்களின் மத்தியில் எம்மோடு இணைந்த அறிவிப்பாளினியின் நேர்காணலுடன் இணைந்துகொள்வோம்.

01. தற்போது ல‌ண்டன் வாசியான தங்களைப்பற்றி மித்திரன் வாசகர்களுக்காக...

மித்திரன் வாசகர்களுக்கு முதலில் என் அன்பு வணக்கம். என்னைப் பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை.. என்றாலும் கூட என் அறிமுகத்திற்காக , என்னுடைய முழுப்பெயரை சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.. சைபா பேகம் அப்துல் மலீக்.. நான் இலங்கையில் மாவனல்லையை பிறப்பிடமாகக் கொண்டவள்..எனது குடும்பம் நான்கு பேரைக் கொண்டஒரு சின்னக் குடும்பம்..தாய் தந்தை தம்பி மொத்தமாக என்னுடன் சேர்த்து நான்கு பேரைக் கொண்ட குடும்பம்நான் ஆரம்பக் கல்வியை மாவனல்லை தேசிய பாடசாலையிலும், உயர்கல்வி பேராதனைப் பல்கலைக்ழகத்தில் அரசியல் சிறப்புத்ததுறையிலும், இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் கல்விapயல் டிப்ளொமா முடித்திருக்கிறேன்..இதன் பிறகான காலங்கள் நாட்டுக்கு வெளியே தான் கழிகிறது..10 வருடங்களுக்கு மேலாக கணவருடன் இலண்டன் ஈஸ்ட்ஹாமில் வசித்து வருகிறேன்.
02. ஊடகத்துறைக்குள் தங்களது பிரவேசம் பற்றியும் அதனூடான அநுபவங்கள் பற்றியும் எம்மோடு பகர்ந்துகொள்ளுங்கள்..
நான் இன்னுமே ஆச்சர்ய‌ப்பட்டு்க் கொள்ளும் விடங்களில் இதுவும் ஒன்று..இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.. உண்மையைச் சொன்னால் , எதிர்பாராமல் நிகழ்ந்த ஒரு பிரேவேசம் என்று தான் சொல்ல வேண்டும்..பாடசாலையில் படிக்கின்ற காலத்தில் கூட மேடையேறி ஒர வார்தை நான் பேசினதாக எனக்கு ஞாபகம் இல்லை..வெட்கத்தை விட்டு சொல்வதானால் சபை வணக்கம் சொல்வதற்கு கூட வாயைத் திறக்க மாட்டேன்.. அப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... ஆமாம் எதிர்பாராமல் தான் இந்த ஊடகத் தறைக்குள் 2004 ஆம் நுழைந்தேன்..அதாவது லண்டன் தமிழ் வானொலி என்னை அரவணைத்துக் கொண்டது....ஆரம்பம் கொஞ்சம் திண்டாட்டமாகத் தான் இருந்தது..பேச்சு வரவில்லை. உச்சரிப்பு வரவில்லை. இருந்தாலும் சக அறிவிப்பாளர்கள்.. நேயர்கள்.. அதிபர் நடாமோகன் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் தான் என்னில் தன்னம்பிக்கையை தந்தது. நான் வளர்ந்திருக்கிறேனென்றால் அவர்கள் தான் இறைவனுக்கு அடுத்த படியான காரணம்..உண்மையில் நேயர்களின் அன்பு என்பது இந்த வானொலியைப் பொருத்த மட்டில் பிரமாணடமானது.. என்னால் யாரையும் மறக்க முடியாது.. நான் இன்றும் கூட என்னை உயர்த்திவிட்டவர்களை நினைத்துப் பார்ப்பதுண்டு.......
03.தற்போது அதிகமான இணைய வானொலிகளின் வருகை,போட்டி நிறைந்த சூழல், இளைஞர்களிடம் காணப்படும் கணனி மோகம் போன்றவற்றுக்கு மத்தியில் உங்களின் வானொலியின் வளர்ச்சி பற்றியும் தமிழ் வானொலி என்ற வகையில், லண்டன் மக்களின் (புலம்பெயர் தமிழர்கள் ) மத்தியில் வரவேற்பும் எவ்வாறு காணப்படுகின்றது?
லண்டன் தமிழ் வானொலியைப் பொருத்தமட்டில் அதற்கு 15 வருடகால அனுபவம் இருக்கிறது..பாடல்கள் ஒலிபரப்புவதைத் தவர்த்து தமிழை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்துச் செல்வது என்ற ஒரு மந்திரத்தனுாடாக இற்றை வரைக்கும் தனது கொள்கையில் மாறாமல் தளராமல் தனது ஒவ்வொரு அடியையையும் எடுத்து வைக்கும் ஒரு வானொலியாகவே இது செயற்படுகிறது..என்னைப் பொருத்த மட்டில் போட்டி நிறைந்த சூழல் ஆரோக்கியமானதே.. மக்களைக் கவரக் கூடிய வகையில் அவர்களின் ஆற்றல்களை எந்த வகையிலாவது வெளிக் கொணரக் கூடிய நிகழ்ச்சிகள் பெருகி வரும் வானொலிகளினடகவும் வரும் என்றால்..அது ஆரோக்கியமான போட்டியே.. ஆரோக்கியமான வளர்ச்சியே........புலம்பெயர்வில் தமிழ் வானொலி என்ற வகையில் .. லண்டனில் மட்டுமல்ல.. உலகப்பரப்பில் மக்கள் இந்த வானொலியோடு இணைந்திருக்கிறார்கள்.. உலகப்பரப்பில் சிறுவர்கள் எழுத வைக்கப்படுகிறார்கள்.. அவர்களது பேசும் திறன்.. உள்ளார்ந்த ஆற்றல். ”திறமைத் தென்றல்” என்னும் ஒரு நிகழ்வின் ஊடாக வெளிக் கொணரப்படுகிறது...பெரியவர்களின் எழுத்துத்திறனுக்கு பேசும் திறனுக்கான நிகழ்ச்சிகள்.. சுருங்கச் சொல்லின்.. “அடுத்த தலைமுறை நோக்கி”.... என்பது தான் இதன் வாசக மந்திரம்.. புலம்பெயர்வில் நிறைய சிறுவர்கள்.. பெரியவர்கள் தமிழோடு இணைந்து தங்களையும் வளர்த்துக் கொள்கிறார்கள்........

04. தமிழ்பேசும் இலங்கை மக்களுடன் தங்கள் வானொலி கொண்டுள்ள தொடர்பு பற்றி..
உண்மையில் மனதுக்கு நிறைவான சந்தோசம் எதுவென்றால் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு மிகத் திறமையுள்ள படைப்பாளிகள் இலங்கையில் இருக்கிறார்கள்.. இந்த வானொலிக்கும் இந்த படைப்பாளிகளுக்கும் இடையிலான உறவு எப்படி வந்ததென்றால் அதற்கு முகப்புத்தகம் தான் வழியமைத்துத் தந்தது என்று சொல்ல‌லாம். அந்த வகையில் என்னால் இனங்காணப்பட்ட பல படைப்பாளிகளை உலகப்பரப்பில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்... அவர்களும் லண்டன் தமிழ் வானொலியுடன் இணைந்து எழுதுவதற்கான சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுத்து அவர்களுக்குள்ளும் ஒரு மனநிறைவைக் கொடுக்க முயற்சித்துள்ளேன் என்று தான் சொல்ல வேண்டும்..இற்றை வரைக்கும் இலங்கை படைப்பாளிகளில் நிறைய பேர் எழுதுகிறார்கள்.. ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளில் நேரடியாக இணைந்தும் பங்கு கொள்கிறார்கள்..
05. ஊடகத்தில் சாதித்துக்கொண்டிருக்கும் குடும்பப்பெண்ணான நீங்கள் எதிர்கொள்ளும் சவாலகள், குடும்பத்தில் உங்களுக்கான பங்களிப்பு பற்றி...
நான் சாதித்துக் கொண்டிருக்கும் பெண்ணா என்பது எனக்குத் தெரியவில்லை.. ஆனால் மனநிறைவோடு இருக்கிறேன் என்பது உண்மை..எனக்கு விருப்பமான விசயங்களைத்தான் நான் வானொலியிலும் செய்கிறேன் என்பதால்.. ஆர்வமாகச் செய்கிறேன்.. ஆசையோடு செய்கிறேன்..சவால்கள் என்று சொல்லப்போனால்..குடும்பப்பெண் என்று வரும் போது எந்தப் பெண்ணும். குடும்பவிசயங்களையும் அனுசரிததுப் போக வேண்டிய ஒரு பொறுப்பு , கடமை இருக்கிறது..என்னைப் பொருத்தமட்டில் இதிலிருந்து விலகி.. அல்லது உதாசீனம் செய்துவிட்டு புறம்பாக செயற்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.. இரண்டையும்..ஒன்றிலிருந்து ஒன்று விலகாமல் ஒருங்கே போவதால் எனக்கு பிரச்சிகைள் சவால்கள் என்பது குறைவு தான்.. குடும்பத்தின் நகர்வைப் பொறுத்தமட்டில் தலை இல்லாமல் வால் ஆட முடியாது.. எனது குடும்பத்தின் தலை நிறைவான ஒத்துழைப்பை எனக்குக் கொடுக்கிறார்.. எனது கணவருக்கு கலை சம்பந்தப்பட்ட விடயங்களில் முழு ஈடுபாடு குறைவு என்றாலும். கூட .நான் சம்பந்தப்பட்ட விடயங்களில் எனக்கு , அறிவுரை . ஆலோசனை வழங்குபவராகவே அவர் இருக்கிறார்..எனவே அவர் ஒத்துழைப்பு என்பது எனக்கு மிகப் பெரிய பலம் என்றே சொல்ல வேண்டும்..

06. ஊடகத்துறை தவிர தங்களின் வேறு செயற்பாடுகள் எவ்வாறு காணப்படுகின்றது?
வேறு செயற்பாடுகளுக்கான நேரம் எனக்கு மிகக் குறைவு தான்.. எனக்க ஓய்வு நேரங்களில் கூட பதிவின் நிகச்சிகளை செய்தல் அவற்றை எடிட் பண்ணுதல் போனற‌ விசயங்களில் நேரம் கழிவதால் .. வேறு செயற்பாடுகளில் மனதை ஒட்ட வைப்பது என்பது கடினமே.. என்றாலும்.. மதரீதியான நிகழ்வுகள் என்று வரும் போது அதற்கும் நேரத்தை ஒதுக்கி முன்னுரிமை கொடுத்து ..வானொலி வேலைகளோடும் ஏனைய செயற்பாடுகளோடும் தொடர்கிறேன்........
07. மித்திரன் வாசகர்களுடனும் இலங்கை நேயர்களுடனும் தாங்கள் பகர்ந்துகொள்ள விரும்புவது?
மித்திரன் பத்திரிகைக்காக என்னை அணுகிய உங்களுக்கு நன்றிகள்.. வாசகர்கள் நீங்கள் தொடர்ந்து மித்திரன் பத்திரிகையை படியுங்கள்.. தளம் கொடுக்கும் களம் மித்திரனில், உங்கள் ஆக்கபூர்வமான படைப்புக்களை ஒப்பேற்றிக் கொள்ளுங்கள்... முடியும் பொழுதுகளில்www.firstaudio.net.. கைத்தொலைபேசிகளில் www.ltr.fmகேளுங்கள்.. உங்கள் படைப்புக்களுக்கான அங்கீகாரத்தை உலப்பரப்பிலும் பெற்றுக்கொள்ளுங்கள்.. அந்த நிலைப்பாட்டைப் பெற்றுத்தர நாங்கள் மிக ஆர்வமாகக் காத்திருக்கிறோம்.........மீண்டுமாய் எனக்கு இந்த சந்தர்ப்த்தைத் தந்த மித்திரன் பத்திரிகைக்கும் ச‌கோதரி எலிசபெத் அவர்களுக்கும் நன்றி வணக்கம்...
சைபா பேகம் அப்துல் மலீக்
First Audio London | London Tamil Radio: அடுத்த தலைமுறை நோக்கிwww.firstaudio.net


நேர்காணல்: த.எலிசபெத்.





No comments: