Wednesday, December 26, 2012

கவிஞர் அமல்ராஜ் அவர்களின் "பெண்களின் சுய வட்டமும் ஆண்களின் அடக்குமுறையும்" என்ற கட்டுரைக்கான எனது பதில் கருத்து


//ஆண்களை  பல  வகைப்படுத்தலாம்  பெண்கள். அதற்காக  அவர்களை  ஒரு பொதுவான  வட்டத்திற்குள்வைத்து  பொதுமைப்படுத்தாதீர்கள். பல  நல்ல ஆண்கள் வருகிறார்கள். உங்கள்  கேவலமான பார்வை அவர்களையும் மாற்றிவிடுகிறது. முதலில் ஆண்கள் பற்றிய அந்த அடக்குமுறை சிந்தனையை மாற்றுங்கள். வரும்  கணவன்  பெண்களை  புரிந்தவனாக நிற்சயம் வருவான்.//
http://rajamal.blogspot.com/2012/02/blog-post_05.html?spref=fb


 மிக ஆரோக்கியமான ஒரு ஆய்வினை பிரதிபலித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.உங்கள் கருத்தை ஆதரித்தாலும் அதனை அப்படியே ஆமென்று அமோதித்திட முடியாது ஏனெனில் அதற்கான காரணத்தை சொல்ல ஆசைப்படுகின்றேன்.

திருமணத்திற்கு பின்னரான ஒரு பெண்ணின் மனநிலையும் வாழ்க்கை முறையும் மாற்றமடைவது இயல்பு அதை எவரும் ம‌றுப்பதற்கில்லை. எப்போதும் தான் வாழப்போகும் சூழல், குடும்பம் போன்றனவே  பெண்ணின் சுதந்திரம்,உரிமை பற்றிய விடயங்களை தீர்மானிக்கின்றது.எங்களது திட்டங்கள் தீர்மானங்கள் எதிர்பார்ப்புக்கள் எல்லாமே ஒரு புகுந்தவீட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது ஏனெனில்,ஒவ்வொரு சூழலும் ஒவ்வொரு விதங்களில் வேறுபட்டு காணப்படுவதே அதற்கு காரணம்.ஒரு பெண் தனது இயல்புகள் குணங்கள் திறமைகள் என்பதனை எச்சந்தர்ப்பத்திலும் இழக்க விரும்புவதில்லை மாறாக இதனை திருமணத்துக்கு பின்னரான வாழ்க்கையில் தொடரமுடியுமா என்பதனை கணவனும் அவனது குடும்பமுமே தீர்மானிக்கவேண்டிய துர்பாக்கிய நிலையியே காணப்படுகின்றது. உண்மையில் இதனை ஆணாதிக்கப்போக்கு என்று நேரியான கருத்தாக முன்வைக்கமுடியாது என்றாலும் மறைமுகமாக இதைத்தான் காணமுடிகின்றது.

ஒரு பெண் தனது கணவனுக்கு டங்கி நடக்கவேண்டுமென விரும்புவது, ஆணுக்கு பயந்தோ அல்லது தனக்கு தானே போட்டுக்கொள்ளும் வேலி என்றோ பொருட்படாது. மாறாக தனக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்க்கையும் குடும்பமும் ஆரோக்கியமானதாகவும் அன்பானதாகவும் உருவாக்க வேண்டுமென்ற பொறுப்புணர்ச்சியும் கடமையுணர்ச்சியுமே தவிர தங்களை தாங்களே தாழ்த்திக்கொள்ளும் தங்களை ஒரு வட்டத்துக்குள்ளே அடக்கிக்கொள்ளும் அடிமைச்சிந்தனை அல்ல.

உண்மையில் திருமணத்துக்கு பின்னரான வாழ்க்கையில் தனது சுய விருப்பு வெறுப்புக்களை ஒத்திவைக்கும் போது காலப்போக்கில் அவ்வியல்புகள் ஒதுங்கிக்கொள்கின்றது என் கூறுவதே மிகப்பொருத்தமாக இருக்குமென நம்புகிறேன். உதாரணத்திற்கு, தனது நண்பர்களுடன் (ஆண்,பெண் நண்பர்கள்)சகஜமாக பழகுவதிலிருந்து தனது தனிப்பட்ட தேவைகளை தானே நிறைவேற்றிக்கொள்ளும் போதும் (ஒரு புடவை வாங்குவது என்றாலும்)குடும்ப வாழ்வில் சிறு கீறல்விழ சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றது.இச்சிறு சிறு விடயங்களே சந்தேகம், சண்டைகள் என ஆரம்பித்து விவாகரத்து வரை கொண்டு செல்கின்றது.

இவ்வாறான உரிமைச்சண்டைகளும் பிரிவுச்சமாச்சாரங்களும் மேலைத்தேய கலாச்சாரத்துக்கு வேண்டுமென்றால் சரியாக அல்லது உரிமை வென்றெடுத்த‌ 
சாதனையாக இருக்கலாம்.மாறாக நாம் வளர்க்கப்பட்ட வளருகின்ற சமூகம், பழக்கவழக்கங்கள்,பண்பாட்டு கலாச்சார ஒழுக்க விதிமுறைகள் வேறுபட்டு கட்டுபட்டு நிற்கின்றது.
ஒரு பெண் தனது சுய விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்ற தலைப்படும்போது ஒரு ஆணால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை அல்லது அங்கீகரிக்கும் "பெரிய மனது" இல்லையென்றுதான் கூறவேண்டும்.இச்சந்தர்ப்பத்தில் அவர்களை சங்கடப்படுத்த கூடாது என்பதற்காகவும் அன்பான குடும்பத்தையும் ஆரோக்கியமான சமூகத்தையும் உருவாக்கவேண்டுமென்ற பாரிய பொறுப்புணர்ச்சியை கொண்டதினாலுமே பெண்கள் திருமணத்திற்கு பின்னரான வாழ்வில் தனது கணவன் குடும்பத்துக்கு ஏற்றவாறு தன்னை தயார்செய்து கொள்கின்றாள். (இத‌னை எனது தாயாரின் வாழ்க்கை முறையிலேயே நான் அநுபவபூர்வமாக உணர்ந்துகொண்டேன்)

எத்தனை ஆண்கள் தனது மனைவியின் வீட்டுவேலைகளில் பங்கெடுத்துக்கொள்கின்றார்கள்? இந்த விடயத்தில்கூட சமமாக நடந்துகொள்ள தெரியாத ஆண்களிடம் நாங்கள் எப்படி எங்கள் தனித்துவத்தை காப்பாற்றிக்கொள்வது?
'ஒரு சுடுநீர்கூட வைக்கத்தெரியாது', 'சமைத்து வைக்கும் உணவையே போட்டு உண்ணவும் முடியாது' என்று எத்தனை ஆண்கள் சொல்வதை கேட்டிருக்கின்றோம் இதனைத்தான் இவர்கள் ஆண்களின் தனித்துவம் என்ரு எண்ணிகின்றார்களோ என்னவோ புரியவில்லை.

எனவே திருமணத்திற்கு பின்னரான வாழ்வில் ஒரு பெண் தன்னை தீர்மானிப்பது அவளுக்கு அமைகின்ற "புகுந்த வீடு" என்கின்ற விடயத்தை வைத்துத்தான்.இவ்வாறு பெண்கள் தங்களது சுதந்திரத்தை பாதுகாத்துக்கொள்ளவும் உரிமையினை காப்பாற்றிக்கொள்ளவும் எடுத்துக்கொள்ளும் முயற்சியினால் இன்று எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்துகொண்டிருப்பதை எம்மால் காணமுடிகின்றது.இதற்கு காரணம் அவள் அவளாக இருப்பதை அவளது குடும்ப சூழல் நிராகரிப்பதனால்தான். இவற்றை பார்த்துப்பழகிய எந்தப்பெண்ணும் தனக்கு வரப்போகும் கணவன் இப்படித்தான் இருப்பான் என்ற திட்டவட்டமான தீர்மானமின்றி திருமணத்திற்கு பின்னரான காலத்தில்தான் புகுந்த வீட்டு சூழ்நிலைகளை வைத்து தன்னை தீர்மானித்துக்கொள்கின்றாள் என்பதே என் தாழ்மையான கருத்து.

No comments: