Wednesday, December 26, 2012
கருமுகிலே....கருமுகிலே
கவிமழை பொழிந்திட்டாய் கருமுகிலே
கலைந்தெங்கே போகிறாய் கருமுகிலே
பாக்களால் நனைத்திட்டாய் கருமுகிலே
பூத்த துமண் பூக்களாய் கருமுகிலே...
வெடித்திட்ட உதடுகளாய்
வெந்திட்ட மண்தரையை
மழைக் கரத்தீண்டலால்
மருந்திட்டாய் கருமுகிலே...
உறங்கிக்கிடந்த மரங்களும்
மடிந்தே கிடந்த புற்தரைகளும்
நீட்டியெழுந்து உன்னால்
நிமிர்ந்து நிற்கிறது கருமுகிலே...
வெட்டிக்கதை பேசியே
வியர்வை துடைக்கு மெங்கள்
விடலைப்பருவம் மண்ணை
விடாப்பிடி யாய்க்கொத்தியே
விளைநிலமாக்குது கருமுகிலே...
பதுங்கியே யிருந்திட்ட
பள்ளிச்சிட்டுக்கள்
பறந்து பறந்து பாதையிலே
கள்ளக்குளியலிடுகிறது கருமுகிலே...
தூர்ந்துபோன குளக்கரையும்
தூசு படிந்த தெருக்களும்
காவிபிடித்த சித்திரமாய்
அழுக்காடை மூட்டைகளும்
பல்வரிசை காட்டியே
பளிச்சென சிரிக்குது கருமுகிலே...
வள்ளலாய் வந்திட்டாய் கருமுகிலே
வளமாக்கி வழிந்திட்டாய் கருமுகிலே
வாழ்வுக்கொளி யூட்டினாய் கருமுகிலே
வையமுனை போற்றுது கருமுகிலே...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment