"ஒரு சுறங்கை பேரீச்சம் பழங்கள்" சிறுகதை தொகுதியில் என்னை
பாதித்தவை பற்றிய சிறுகுறிப்பு
யாத்ரா' கவிதை இதழின் ஆசிரியரும் இலங்கையின் சிறந்த எழுத்தாளரும், அறிவிப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களின் மொழி பெயர்ப்பு இலக்கியமான 'ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்' சிறுகதை தொகுதியானது ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட அரபுமொழியில் பிரசவமான மூலக்கதைகளாகும். அதனை தமிழிலக்கிய உலகுக்கு மொழிபெயர்த்து தந்துள்ளார் நூலாசிரியர்.
நூலின் முன்னுரையை பேராதனை பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் லறீனா அப்துல் ஹக் அவர்கள் அருமையாக ஆழமாக தந்திருப்பது, வாசலிலேயே வண்ண அலங்காரங்களுடனும் ஆனந்தத்துடனும் கிடைக்கும் வரவேற்புப்போல மிக நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது. நூலாசிரியர் பற்றியும் ஏனைய மொழி இலக்கியங்கள் பற்றியும் , இச்சிறுகதை பற்றிய விமர்சனமாகவும் தனது முன்னுரையை விரிவுபடுத்தி அழகுபடுத்தியிருப்பது இந்நூலுக்கு கிடைத்த மகுடமாக காணப்படுகிறதெனலாம். அதேவேளை நேர்த்தியான, தொகுபிற்கு பொருத்தமான அட்டைப்படமும் நூலுக்கு வலுசேர்த்திருக்கின்றது.
ஏனைய மொழி இலக்கியங்களை நாம் தரிசிக்கமுடியாமக்கு பல காரணங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவ்வாறான இலக்கியங்களை நாம் வாசிக்கும்போது அது எமது இலக்கிய வளர்ச்சிக்கும் வாசிப்பிற்கும் மிகுந்த உறுதுணையாக காணப்படுவதோடு பல்வேறுவகையான வார்த்தை நுட்பங்களையும் கலையம்சங்களையும் எமக்குள் ஊடறுத்துக்கொள்ள உதவுகின்றது.அப்பேருதவியை தமிழுக்கு தந்த நூலாசிரியரை வாழ்த்துவதோடு நன்றியினையும் கூற கடமைப்பட்டுள்ளோம்.
மொழிபெயர்ப்பு எனும் அம்சமானது மிகப்பெரிய சவாலான விடயமே.'கரணம் தப்பினால் மரணம்' எனும் கூற்றுக்கிணங்க மிகுந்த அவதானத்தோடு மேற்கொள்ளப்படவேண்டியது. இப்பாரிய விடயத்தினை ஆசிரியர் மிகத்திறம்பட ஆற்றியிருக்கின்றார் என்பதனை இந்நூலை வாசிக்கும்போது எம்மால் புரிந்துகொள்ளமுடிகின்றது.
இச்சிறுகதை தொகுதியில் முத்தான பத்து சிறுகதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.'கதையை படித்து முடிந்ததும் கூட அதன் தாக்கத்திலிருந்து யாராலும் உடனடியாக வெளிவர முடியாது' எனும் ஆசிரியரின் முன்குறிப்பு கூற்று மிகச்சரியானதே. ஏனெனில் இந்நூலை வாசித்துமுடித்த எனக்குள்ளும் அந்ததாக்கம் இளையோடியதை எனது அநுபவத்தினூடாக நான் கண்ட உண்மை.அதிலும் குறிப்பாக 'கருப்புப்பூனை' எனும் கதையே என்னை வெகுவாகப்பாதித்தது என்பதனையும் கூறவிரும்புகின்றேன்.
'விசர்நாய்க்கடி'என்ற முதலாவது சிறுகதை ஈராக்கின் அதிபர் சாதாம் ஹூசைன் ஆட்சிக்காலத்தை வெளிப்படுத்துவதாக சொல்லப்படுகின்றது. அதாவது ஓர் அடக்குமுறையுடன் கூடிய தான்தோன்றித்தன ஆட்சிமுறைமையினை மிகத்துல்லியமாக வெளிப்படுத்திநிற்கின்றது.
'புகையிரதம்' என்ற இரண்டாவது கதையும் யுத்தக்கொடூரத்தின் பிரதிபலிப்பை சிறுவர் பாத்திரப்படைப்பினூடாக அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாத்திரமும் நெஞ்சில் நிற்குமளவிற்கு ரசனையோடு ஆக்கப்பட்டிருப்பது எதிர்பார்ப்பினை அதிகரிக்கச்செய்யும் சூட்சுமமாக கையாளப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கேயுரிய விளையாட்டுத்தனங்கள், இயல்புகள் என்பனவும், கதை நகர்ந்துசெல்லும் விதமும் மிக ரசனை. கதையை வாசித்து முடித்ததும் குழந்தைகளை நினைத்து வருந்தாமல் இருக்கவே முடிவதில்லை.
'விற்பனைக்கான அற்புதங்கள்'சிறுகதை நகைச்சுவை ததும்பும் விதத்தில் "ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்" என்பதனை அருமையாக விளக்கியிருக்கும் இக்கதை மிகுந்த படிப்பினையை சொல்லியிருக்கின்றது. நூலின் பெயர்சொல்லும் 'ஒரு சுறங்கை பேரீச்சம்பழங்கள்' எனும் கதை 'மண் பொன் பெண்' எனும் மூன்று அம்சங்களில் 'பெண்' பற்றியதான மோகத்தின் இழப்பீடு பற்றிய மிக ஆழமான கருவை அற்புதமாக நகர்த்தியிருப்பதும் இக்கதையில் வரும் பாத்திரப்படைப்புக்களும் சுவாரஸ்யத்தை தருகின்றது.
'காஸாவிலிருந்து ஒரு கடிதம்' மனதை உருக்கும் அற்புதமான கதை. சொந்த மண்ணைவிட்டு வெளியேறிய நண்பனுக்கு எழுதப்படும் கடிதமாக இக்கதை செல்கின்றது. யுத்தத்தின் எதிரொலிகளையும் எது நடப்பினும் சொந்தமண்ணை விட்டு வெளியேறத்துணியாத காட்சியமைப்பும் நெஞ்சத்தை நெகிழச்செய்கின்றது.'கருப்புப்பூனை' முற்றிலும் மாறுபட்ட சுவாரஸ்யமான விடயத்தினை செதுக்கியிருக்கின்றது. எத்தனையோ ஆவி சம்பந்தமான கதைகளையும் உண்மைச்சம்பவங்களையும் படித்திருப்போம். ஆனால் இது முற்றிலும் வேறுபட்டு நிற்பது இவ்வாறான ஏனைய மொழி இலக்கியங்களின் மீதான ஆர்வத்தினை அதிகரிக்கச்செய்கின்றது என சொல்லலாம்.
இவ்வாறு 'சிவப்புப் புள்ளி' எனும் தலைப்பில் பெண்களின் அடிமைத்தனங்கள், திருமணம் என்ற பெயரில் இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இறுதியாக 'நெடுநாள்வாசி' என்ற தலைப்பில் சிறைவாசம் அநுபவிக்கும் ஓர் இராணுவ வீரனது கதையாகும். அவன் சிறை செல்லும் விதமும் சிறைக்குள் நடக்கும் சமபவங்களுமாக தொடர்கின்றது. இறுதி முடிவு நல்ல சுவாரஸ்யத்தோடு முடிவடைகின்றது. பார்க்கப்போனால், நாட்டிலுள்ள கல்விமான்கள், அரசியலுடன் சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள் என்று பலதரப்பட்ட ஆளுமை மிக்கவர்கள் இச்சிறையில் இருப்பது ஆச்சரியமாயும் வேதனையான விடயமாகவும் கணப்படுகின்றது. அதேவேளை இக்கதையில் அதிகமான பாத்திரப்படைப்புக்கள் காணப்படுவது 'சிறுகதை' என்ற தரத்தை மீறிவிட்டதோ என எண்ணத்தோன்றிற்று.ஆனால் சுவாரஸ்யம் குன்றாமல் வாசகரை சலிப்படையச்செய்யாமல் நகர்ந்தவிதம் பாராட்டச்செய்தது.
"ஒரு சுரங்கை பேரீச்சம்பழங்கள்" மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு நூலாகும். வேற்றுமொழி இலக்கியங்கள் மீதான ஈர்ப்பினை அதிகரிக்கச்செய்ய்யும் ஒவ்வோர் சிறுகதையும் தனித்தனிச்சிறப்புடன் காணப்படுவதோடு ஒவ்வொரு கதையின் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புக்களை தந்திருப்பது பொருத்தமானதாகவும் மிகப்பிரயோசனமானதாகவும் காணப்படுகின்றது. அரபுதேசத்து மக்களையும் அவர்களின் கலாச்சாரம், பண்புகள், குணாதிசயங்கள், உணவுவகைகள்,ஆளுமைகள், என ஓர் நீளமான அநுபவத்தினை இந்நூலினூடாக பெற்றுக்கொள்ளமுடிந்தது தமிழ்மொழி வாசகர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். எனவே மொழிபெயர்ப்பின் மூலம் ஓர் புதிய இலக்கியவீச்சுடன் தமிழிலக்கிய வரலாற்றில் தடம்பதித்திருக்கும் 'ஒரு சுரங்கை பேரீச்சம்பழங்கள்' நூலாசிரியர் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களுக்கு வாசகர்கள் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இன்னும் இதுபோன்ற பலமொழிசார் நூல்களை தமிழுலகிற்கு தரவேண்டுமென்று வாஞ்சிக்கின்றேன்.
2 comments:
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
Musdeen
தங்களின் வாழ்த்துக்களை பகர்ந்துகொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே... எனது படைப்புக்கள் உங்களைப்போன்றவர்களின் மேலான கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கின்றது.
Post a Comment