Thursday, March 3, 2016

மித்திரனுக்கு வாழ்த்துக்கட்டுரை (06.03.2016)

மித்திரன் வாரமலர் தனது 50வது ஆண்டு பொன்விழாவினை 06.0 3.2016 அன்று கொண்டாடுகின்றது. அதனை முன்னிட்டு மித்திரனின் நீண்டகால வாசகியான நான் எழுதிய வாழ்த்துக்கட்டுரை இவ்வார இதழில்...



                                                                         



பொன்விழாக்காணுதலென்பது போற்றுதற்குரிய பெருமையே. காலச்சக்கரம் இத்தனை வேகமாய் சுற்றுகின்றதென்பதை இவ்வாரான நிகழ்வுகளே எம்மையும் விழிப்படையச்செய்கின்றது. 1966களில் இலங்கையின் பத்திரிகைத்துறையில் காலடிவைத்த மித்திரன் வாரமலர் சஞ்சிகையானது நம் எல்லோர் மனங்களிலும் மனம் பரப்பிக்கொண்டிருக்கின்றது. தனிமனிதனின் தேவைகளில் ஒன்றாக, அவனின் உரிமை சுதந்திரம் என்பவற்றில் பாரிய பங்களிப்பு செய்யும் இவ்வூடகங்களின் சேவையில் மித்திரனுக்கு தனியிடமுண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

வாசிப்பறிவுகொண்ட சகல் மட்டத்தினரும் மித்திரன் வார இதழை வாசித்து நேசிக்கின்றனர் ஏனெனில் எல்லா தரப்பினருடைய விருப்பு வெறுப்புக்களை அறிந்த ஊடகமாக மித்திரன் திகழ்கின்றது. சிறுவர்முதல் பெரியவர்வரை அவரவர் ரசனைத்தேவைக்கேற்ப சுவாரஸ்யங்கள் குறையாமல் பல அம்சங்களை தருவதில் முன்னிற்கின்றது. அதிலும் மித்திரனின் நல்ல வாசகர்கள் பலர் இன்று படைப்பாளர்களாக கலைஞர்களாக உருவாகியிருப்பது ஓர் வரலாற்று சாதனை என்பதைத்தவிர வேறு என்னவென்பது....

பலதரப்பட்ட படைப்புக்களை அதாவது கவிதை கதை சிறுகதை தொடர்கதை கட்டுரை குறிப்புக்கள் என அனைத்தையும் தன்னகத்தே தாங்கி அதனை புடமிட்டு மெருகேற்றி எழுதியவர்களை ஊக்கப்படுத்துவதில் மித்திரன் பெரும் பங்காற்றிவருகின்றது. காலத்துக்கேற்ப தனது தரத்தையும் வடிவமைப்பினையும் மாற்றி பல்சுவை கதம்பமாக வளர்ச்சி கண்டுள்ளமை பாராட்டுக்குரியதாகும்.

எத்தனையோ சஞ்சிகைகள் வார, மாத இதழ்கள் வந்த போதிலும் மித்திரனுக்குரிய வாசகர்வட்டத்தினையோ அதன் தரத்தினையோ வரவேற்பிலோ எவ்வகையான பாதிப்பினையும் ஏற்படுத்த முடியவில்லை. யதார்த்தத்தை கையிலெடுத்து செயற்படுவதால் சோரம் போகாது செழுமையாக காட்சியளிக்கின்றது.

இத்தனை சிறப்புக்களைத் தன்னகத்தே தக்கவைத்திட பாடுபடும் மித்திரன் வாரமலரின் ஆசிரியம் தொடங்கி அனைத்து அங்கத்தவர்களுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்தினை தெரிவிப்பதில் ஓர் வாசகியாய் நானும் பெறுமையடைகின்றேன்.

பள்ளிக்காலத்திலிருந்து தொடங்கிய என் எழுத்துப்பயணத்தில் தேக்கம் ஏற்படாதவாறு நீரோடையாய் பயணிக்க உதவிக்கரம் நீட்டிய மித்திரனின் பலவருட வாசகி என்பதில் பெறுமிதமடைகின்றேன்.  ஆரம்பத்தை மித்திரனிலேயே ஆரம்பித்த என் எழுத்துக்களுக்கு மிக அதிகமான களம் தந்ததில் மித்திரன் முன்நிற்கின்றது. ஓர் ஊடகமாய் அதன் தர்மத்தினை சிறப்பாக செய்துகொண்டிருக்கும் மித்திரனை இலங்கை வாசகர்களோடு இணைந்து அவர்களின் சார்பாகவும் என் வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பாடசாலை மாணவர் தொடங்கி பலருக்கும் உபயோகப்படும் விடயங்கள் ஆவணப்படுத்தப்படவேண்டிய விடயங்கள் மித்திரனில் ஏராளம். நம்நாட்டு படைப்பாளிகள் திறமையாளர்களுக்கு களம் கொடுப்பதோடு அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்துவதிலும் மித்திரனுக்கு தனியிடமுண்டு மொத்தத்தில் ஊடகத்துக்குரிய அனைத்து கடமைகளையும் இத்தனை காலமாக முன்னெடுத்துவந்த மித்திரன் வாரமலரை ஆண்டு வரையறையில்லாத ஆயுள் கண்டு நீண்ட சேவையினை கொண்டொழுக என்னிதயத்தின் இன்சொற்களைத்திரட்டி இச்சிறுவாழ்த்தை மனம் நிறைய தெரிவிக்கின்றேன்.


"வாழட்டும் உங்கள் பணியில் தமிழ் 
வளரட்டும் உங்கள் சேவையில்"



நன்றி.



No comments: