Saturday, March 5, 2016
ஓட்டமாவடி ரியாஸ் அவர்களின் நூல் வெளியீடு பற்றி கல்குடா நேசனில்.. (04.03.2016)
ஓட்டமாவடி கவிஞர் றியாஸ் முகம்மட் அவர்களின் கன்னிக்கவி நூலான “முகவரி இழந்த முச்சந்தி” 28.02.2016ம் திகதியன்று ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் மாலை மூன்று மணிக்கு மிக விமர்சையாக நடைபெற்றது. தடாகம் கலை இலக்கிய வட்டம் மற்றும் கல்வி கலை கலாசார பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்விழாவில், இந்திய-இலங்கைப் படைப்பாளிகளும் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது விஷேடமாகும்.
நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதியமைச்சர் சட்டத்தரணி அமீர் அலி அவர்களும், வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியூதின் அவர்களும் கலந்து கொண்டனர். கெளரவ அதிதிகளாக திருமதி மட்டகளப்பு மாவட்ட அரச அதிபர் பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்களும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி க.தங்கேஸ்வரி அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு, விஷேட அதிதிகள் உட்பட பலர் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் வரவேற்புரையை கவிஞர் சேமமடுவூர் சிவகாசன் அவர்கள் வழங்க, தலைமையுரையினை தடாகம் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களும், நூல் அறிமுகத்தினை சிரேஷ்ட ஊடகவியலாளர் கவியருவி ரீ.எல். ஜெளபர்கான் அவர்களும் தந்திருந்தார்கள். சக எழுத்தாளனைப் பாராட்டி சிறப்பான இரண்டு கவி வாழ்த்துக்களை கவிஞர் நுஸ்ரி அவர்களும், மலேசியாவைச்சேர்ந்த கவிதாயினி ஆர்.எஸ். கலா அவர்களின் வாழ்த்தினை செல்வி சஹானா ஜிப்ரி அவர்களும் பாடி மகிழ்வித்தனர்.
எழுத்தாளர்களைக் கெளரவித்துப் பாராட்டி விருது வழங்கி உயர்த்தி விடுவதில் கடந்த முப்பது வருடங்களாக அளப்பறிய சேவையாற்றி வருகின்ற ‘தடாகம் கலை இலக்கிய வட்டம்’ கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களின் தலைமையில் இவ்வமைப்பானது இலங்கை கலைஞர்களை மட்டுமல்லாமல், பிறநாட்டு திறமையாளர்களையும் கண்டெடுத்துப் பாராட்டிக் கெளரவிப்பதில் முன்நிற்கின்றது. அந்த வகையில், இந்நூல் வெளியீட்டு விழாவிலும் இந்திய கவிஞர்களுக்கு விருது வழங்கி பொன்னாடை போர்த்திப் பாராட்டுதல்களை தந்து அவர்களின் உள்ளம் குளிர்வித்திருந்தது.
நிகழ்ச்சிகளை சாய்ந்தமருது டாக்டர் ஆரிப் அவர்கள் தொகுத்து வழங்க, நூலின் முதற்பிரதியினை அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் மெளலவி எம்.எம்.எஸ் ஹாறுன் அவர்களுக்குப் பதிலாக பிரதிப்பணிப்பாளர் எச்.எம்.ஜாபிர் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, பிரமுகர்கள், படைப்பாளர்கள், கவிஞர்கள், நண்பர்கள் என விஷேட பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில், பிரதம அதிதி கெளரவ பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி அவர்களின் சிறப்புரையே விஷேட அம்சமாக அமைந்தது. இதனை இந்நூலுக்கான விமர்சனமாக மட்டுமல்லாது, விளம்பரமாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஒரு கவிதையால் பல சமூக மாற்றங்கள் உட்பட தனி மனிதனுக்குள்ளும் பல்வேறுபட்ட உணர்வு ரீதியிலான தாக்கங்களை ஏற்படுத்த முடியும். பாரதியின் கவிதைகள் அக்காலத்தில் அதனைச் சிறப்பாக செய்திருந்ததை நாம் அனுபவ ரீதியாகக் காணலாம். அந்த பாரதியின் கவிதை போல கவிஞர் ஓட்டமாவடி றியாஸ் அவர்களின் கவிதை நூலும் வெளியீட்டு விழாவில் ஓர் அனலை ஏற்படுத்தியிருந்தது. அதற்கேற்றாற் போல பிரதம அதிதியின் உரையும் செவிகளுக்கு விருந்தாகவும் சிந்தைக்கு தீனியாகவும் ரசனைக்கு குறைவில்லாது பார்வையாளர்களைக் கட்டிப்போட்டிருந்தது. இலங்கை, இந்திய படைப்பாளர்களின் சினேகபூர்வ சந்திப்புடன் விருதுகள், கெளரவிப்புக்கள், பாராட்டுக்கள், புகைப்படமெடுத்தல், நூல் வழங்கல்களுடன், வெளியீட்டு நிகழ்வு வெற்றியுடன் இனிதே நிறைவடைந்தது.
http://kalkudahnation.com/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment