Friday, January 8, 2016

"ஈர நிலத்தை எதிர்பார்த்து" கவிதை நூலுக்கான விமர்சனம்







அர்த்தமுள்ள ஆவணப்படுத்தப்பட வேண்டிய நூல்கள் அண்மைக்காலமாக இளையவர்களிடமிருந்து பிரசவமாவது பெருமைக்குரிய விடயம். அந்தவகையில் மன்னார் மாவட்டத்திலிருந்து ஓர் இளைய படைப்பாளி இப்பட்டியலில் இணைகின்றார். ஏலவே "வலியின் விம்பங்கள்" எனும் கவிதை நூலுடன் களம்கண்டவர்தான் இவ்வளர்ந்துவரும் கவிஞரான பெனில் அவர்கள்.


கவிஞர் பி.பெனில் அவர்களின்  "ஈர நிலத்தை எதிர்பார்த்து" இரண்டாவது கவிதை நூலின் அட்டைப்படமே ஆயிரம் உணர்வலைகளை அள்ளித்தெளிக்கின்றது. ஏக்கம் எதிர்பார்ப்பு வேதனை என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த கச்சிதமான கண்ணைக்கவரும் அட்டைப்படம் படத்துடன் பின்னட்டைக்குறிப்புக்களை வவுனியூர் இரா.உதயணன் அவர்களும் கவிஞர் மேமம் கவி அவர்களும் தந்துள்ளார்கள். முன்னுரையை அருட்திரு. தமிழ்நேசன் அடிகளாரும் சில தலைப்பின் கீழ் குறை நிறைகளை சிறப்பாக சுட்டிக்காட்டியும் அணிந்துரையை கலாநிதி தமிழ்மணி அகளங்கள் அவர்களும் வெளியீட்டுரையை வெளியீட்டாளரான மன்னார் தமிழ்சங்கத்தின் தலைவர் தமிழ்ச்சுடர் மகா தர்மகுமார குருக்கள் அவர்களும் ஆசியுரியினை சித்த வைத்தியர் சே.செல்வமகேந்திரன் அவர்களும் வழங்கியுள்ளார்கள்.


கவிஞர் பி.பெனில் அவர்கள் "உணர்வுகளின் வெளிப்பாடாய் குறியீடுகளின் மூலம் இந்த நிலத்தில் என் எண்ண விதைகளை விதைத்துள்ளேன் என்றோ ஒரு நாள் எங்கள் நிலமும் ஈரமாகும் என்ற ந‌ம்பிக்கையுடன்..." என்ற எதிர்பார்ப்பை தனதுரையை ஆழமாகப் பதிந்து போருக்கு பின்னரான வலிகளை வரிகளாக்கியுள்ளார்.  நூலினை தாய்க்கும் தாரத்துக்குமாய் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலக்கியம் காலத்தின் கண்ணாடியாக மட்டுமல்ல ஒரு தனிமனிதனுடைய‌ சமூகத்தின்  மீதான அக்கறை, ஈடுபாடு அவதானிப்பு சேவை மனிதாபிமானம் என‌ அவனுடைய தனிப்பட்ட குணங்களையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.இந்த கருத்தினை அப்படியே "ஈர நிலத்தை எதிர்பார்த்து" கவிதை நூலில் காணமுடியும்.


இக்கவிதை நூலானது போருடன் சம்பந்தப்பட்ட மக்கள் உணர்வலைகளோடு பேசுவதாக வெளிப்பாட்டு ரீதியாக அமைந்துள்ளமையே சிறப்பம்சமாகும். 46 தலைப்புக்களில் வேதனை எதிர்பார்ப்பு வலி கோபம் வெறுப்பு என உணர்வுகளை கொட்டிக்கொட்டி வார்க்கப்பட்டுள்ளது.


"நீதி 
உறைந்துபோவதில்லை
பொங்கியெழுந்தால்
அநீதி நிலை
நிற்கப்போவதுமில்லை.." 

                                                           என 'மணி  முடியின் கெடுபிடி' என்ற தலைப்பில் முதலாவது கவிதை ஆரம்பமாகி யுத்த காலத்தையும் ராணுவத்தின் அத்துமீறல்களையும் உருவ‌கித்து நினைவுபடுத்துகின்றது. 

என்னதான் எம்மை நாமே ஆறுதல்படுத்திக்கொண்டாலும் அநுபவித்த வலிகள் வேதனைகள் கண்ணீர்கள் அத்தனையும் இலகுவில் மறந்துவிடக்கூடியதல்ல. இன்றும் அதன் வடுக்கள் நெருஞ்சிமுள்ளாய் குத்திக்கொண்டுதானுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஏதோ ஓர் வேண்டுதலோடு எதிர்பார்ப்பினூடே காலம் கழிகின்றது, அதனை "உயிரடங்குமுன்" கவிதையில்


"எம் தேகம்
ஊர்வனவற்றுக்கு
உணவாகக்கூடும்
அதற்குமுன்
வந்துவிடுமா வெற்றிப்புறா"
                                                                   என்று கவிஞரின் எதிர்பார்ப்பை சமூகத்தின் சார்பாக முன்வைத்துள்ளார்.

வேதனை முற்றிவிட்ட நிலையில் இறுதியாக சரணடைவது இறைவனிடமே அப்படி முழங்காற்படியிட்ட கவிதைதான்  "வாராயோ வல்லோனே" குற்றம் புரிபவர்களை தண்டிக்க முடியாத நிலையில் அந்த இயலாமையில் இறைவனை வேண்டுவது இயல்பே. கயவர்களை அழித்து காக்க வேண்டும் வாராய் என்று வேண்டுதல் தொடர்கின்றது.



கவிஞர் பெனில் அவர்கள் தனது கவிதைகளில் உவமை உருவகம் படிமம் குறியீடு என்பவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்ன்'மணிமுடியின் கெடுபிடி, உயிரடங்குமுன், தேன்வதை திருடிய வஞ்சகன், விடுதலை விதைகள் என பல தலைப்புக்களை சுட்டிக்காட்டலாம்.

இக்கவிதை நூலினை எதிர்கால சந்ததியருக்கு ஆவணமாக எடுத்துக்காட்ட தமிழர்களின் வாழ்வியலை, பிர்
பிர‌ச்சனைகளை படம்போட்டுக்காட்ட என ;ஈர நிலத்தை எதிர்பார்த்து' நூலினை சிபாரிசு செய்யலாம் ஒவ்வொரு கவிதைகளிலும் ஓர் வேதனைக்குரிய விடயத்தினை அழுத்தமாக சொல்லிவைப்பதில்தான் கவிஞரின் முனைப்பு காணப்படுகின்றது.



போராட்டத்தை சந்திக்காமல் மனித வாழ்க்கை நியமிக்கப்படவில்லை அதனை உதாரணம் கொண்டு நிரூபிக்கவேண்டிய அவசியமும் இல்லை ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் அதனை உணர்ந்தவர்களே. அதனால்தான் காலத்துக்கு காலம் சமூகத்தை உயிர்ப்பிக்க உணர்வளிக்க கருத்தியளாலர்கள் கவிஞர்கள் போன்றோர் கடவுள்களாக முளைக்கின்றார்கள் அவர்களில் ஒருவராக கவிஞர் பெனில் அவர்களை அடையாளமிட்டுக்காட்டலாம். அதற்கு எடுத்துக்காட்டாய்,

தடுத்திட ஆயிரம்
கரங்கள் வரட்டும்
தமிழரின் கரங்களின்
தனித்துவத்தை
இத்தரணி அறியட்டும்....

                                                                   என்ற கவிதை வரிகளை முன்வைக்கலாம்.

சோர்ந்துபோன உள்ளங்களை தட்டியெழுப்பிட வைக்கும், நொடிந்துவிடாமல் தாங்கிப்பிடிக்கும் கரமாக உணர்வினை ஊட்டியுள்ளார்.

எம்மிடமிருந்து
நிலையாய் எதையும்
தட்டிப்பறித்திட‌
முடியாது

      எத்தனை போசனைமிக்க வரிகள் இவை விழுந்துபோனாலும் அழிந்துபோவதில்லை என உலகுக்கு பறைசாற்றும் பக்குவ அறிவித்தல். இப்படி அநேக வரிகளில் கவிஞர் சமூகத்தை தேற்றியுள்ளார்.



யுத்தம் தந்த வலி, அநீதி, வஞ்சகம், மிருகத்தனங்கள், ஆற்றாமைகள், எச்சரிப்பு,ஊக்கம்,தைரியம் என எண்ண அலைகளை தாராளமாக தவழவிட்டிருக்கின்றார் கவிஞர். அத்தோடு அதன் பின்னர் ஏற்பட்டிருக்கின்றதான கலாச்சார சீர்கேடுகளை தொட்டுக்காட்டவும் தவற‌வில்லை கவிஞர் பெனில் அவர்களின் 'அழியுமுன் அறிந்துகொள்' என்ற கவிதை அதனை எத்திவைக்கிறது.

பொதுவாக தாலாட்டு என்பது குழந்தைகளை உறங்கவைக்கவே பாடப்படும். ஆனால் கவிஞரோ இத்தாலாட்டை விழித்தெழுவதற்காக பாடியுள்ளார் இதுவே இக்கவிதைக்கு பாரிய வலுவை சேர்த்திருக்கின்றது எனலாம்.

இப்படி உணர்ச்சிக்கவிதைகளை படைத்த பெனில் அவர்களுக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். இன்னும் கவிஞரின் ஆளுமை வெளிப்படவேண்டுமெனில் தனது வாசிப்பனுபவத்தையும் ஆழ்ந்த எழுத்துப்பழக்கத்தையும் அதிகப்படுத்திக்கொள்ளலாம். தொடர்ந்து கவிதைகளில் குறியீடுகள் படிமங்கள் உவமைகளை வாசிப்பதனால் சற்று சலிப்புத்தன்மையும் ஏற்படுகின்றது இதனை தவிர்த்திருக்கலாம்
அத்துடன் புதுக்கவிதையில் வசனநடையினை விடுத்து வாசகர்கள், கவித்துவத்தை  அனுபவிக்க இடமளிக்கவேண்டும் இவற்றில் கவிஞர் கவனம் செலுத்துவாராயின் எதிர்காலத்தில் தனக்கென ஒரு தனித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். ஏனெனில் இளையவர்கள் பெறும்பாலும் காதலை கையிலெடுத்துக்கொள்வதால் இவருக்கென்று ஓரிடத்தினை வழங்கலாம்.




கவிஞர் பெனில் அவர்களின் "ஈர நிலத்தை எதிர்பார்த்து" என்ற இரண்டாவது கவிதை நூல் வாசகர்கள் மனதில் ஓர் அதிர்வை ஏற்படுத்துமென்பதில் ஐயமில்லை. விமர்சனங்களையும் கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டு சோர்ந்துவிடாமல் தன்னை வளப்படுத்திக்கொள்ளவேண்டும் இன்னும் சமூகத்தை அவர் பிரதிபலிக்கவேண்டும் என்ற எனது எதிர்பார்ப்பை முன்வைத்து பெனில் அவர்களின் சகல முயற்சிகளும் எண்ணங்களும் ஈடேறவேண்டும் என்ற பிரார்தனைகளுடன் மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நன்றி.

நூலின் பெயர்: 'ஈர நிலத்தை எதிர்பார்த்து'
நூல் வகை :      கவிதை நூல்
ஆசிரியர்:           மன்னார் பெனில்
வெளியீடு :        மன்னார் தமிழ்ச்சங்கம்
விலை :              250/=
தொடர்புகளுக்கு:  mannarpenil83@gmail.com






   
                                                     





No comments: