பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது.
வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது.
இதன் தொடரின் இன்று 06.11.2015 திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் 13 வது இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் இலங்கையின் பிரபல மூத்த அறிவிப்பாளர், ஒளி ஒலி பரப்பாளர் கவிதாயினி நாகபூசணி கருப்பையா அவர்கள். வசந்தம் தொலைக்காட்சியின் தூவனம் நிகழ்ச்சி தொகுப்பாளினியும் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தென்றல் அறிவிப்பாளருமான கவிதாயினி நாகபூசணி அவர்களை கல்குடா நேசன் இணைய தளதத்தின் இலக்கிய நேர்காணலூடாகச் சந்திப்பதில் பெருமையடைகிறோம்.
அவரின் அனுபவம், திறமை, கலைக்கான அவரது அர்ப்பணிப்பு போன்வற்றை இந்நேர்காணலூடாக நீங்களும் அறிந்து கொள்ளலாம்.
01. இலங்கையின் பிரபல அறிவிப்பாளரான தாங்கள் எமது வாசகர்களுடன் தங்களைப்பற்றிய விபரங்களுடன் அறிமுகமாகிக்கொள்ளலாமா?
கவிதாயினி நாகபூசணி கருப்பையா www.nagapooshanikaruppiah.blogspot.com எனது வலைத்தளம் உங்களுக்கு என்னைப்பற்றிச் சொல்லும் என நினைக்கிறேன்.
02.தற்போது நீங்கள் தொகுத்து வழங்கும் “தூவானம்” நிகழ்ச்சி பற்றியும் அதன் நோக்கம், பெற்றுக்கொண்ட வெற்றி பாராட்டுதல்கள் பற்றி?
கவிதாயினி நாகபூசணி: அது கதம்பக்கலை இலக்கிய நிகழ்ச்சி, இலங்கையின் சகலதுறை சார்ந்த கலைஞர்களுக்கும் களம் தரும் நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் பட்டறை என்னும் அம்சம் அநேகரின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தயாரிப்பு, தொகுப்பு, அறிவிப்பு என வருடந்தோறும் விருதினைப்பெற்று நம்மனைவரின் உள்ளத்திலும் பூ மழை பொழிகிறது.
03.உங்களது ஆரம்ப கால ஊடகத்துறை அநுபவங்களுக்கும் தற்போதைய அநுபவங்களுக்குமிடையிலான வித்தியாசம் எப்படி?
கவிதாயினி நாகபூசணி: புதிய புதிய அனுபவங்கள் புதுப்புது தேடல்களாக…எல்லாமே கற்றுக்கொடுத்தன. கொடுக்கின்றன .கால ஓட்டம் கொஞ்சம் பட்டறிவையும் பகிர்ந்து கொள்ளும்.
04. வானொலி அறிவிப்பு, தொலைக்காட்சி அறிவிப்பு இரண்டில் உங்களுக்கு மிகப்பிடித்தது எது? ஏன்?
கவிதாயினி நாகபூசணி: வானொலி தான். ஏனென்றால், எந்த ஒப்பனையும் தேவையில்லை என்பதால்.
05: நேரடி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகையில் சந்தித்த, சமாளித்த சுவாரஸ்யமான விடயங்களிருப்பின் எம்மோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்?
கவிதாயினி நாகபூசணி: வித்தியாசமான துறையைச்சார்ந்த நேயர்களிடம் உரையாடி தகவல்களைப்பெற்றுக்கொள்வது எத்தனை சுவாரஷ்யமோ அது போன்று தான் குறும்புக்கார நேயர்களின் கேள்விகளும். பல வருடங்களுக்கு முன் ஒரு விளம்பர நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருக்கும் போது, வானலையில் வந்த குறும்புக்கார நேயர் ஒருவர் அக்கா நீங்கள் கூறும் இந்த உற்பத்திப்பொருள் கொழும்பில் எந்தக்கடையிலும் இல்லையே என்றார். இல்லை கிடைக்கும் என்றேன். அவர் விடுவதாக இல்லை . நேரமும் போய்க்கொண்டிருக்கிறது . நீங்கள் விசாரித்த கடையில் முடிந்து விட்டதாம். பக்கத்து கடைக்குப்போகாமல் விட்டது உங்கள் தவறு என்று சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
06. இன்றைய அறிவிப்புத்துறையில் இளையவர்களின் திறமை பற்றி உங்கள் பார்வையில்?
கவிதாயினி நாகபூசணி: பாராட்டுக்குரியது.
07.ஆரம்ப காலங்களிலிருந்த அறிவிப்பாளர்களிடம் இலக்கணப் பேச்சுத்தமிழ் காணப்பட்டது. இன்றுகளில் அவை மருவி சில ஊடகங்களில் மிகக்கொச்சையாக பிரதேச வழக்கு, ஆங்கிலக்கலவை, சினிமாத்தனம் எனப் பேசப்படுகின்றதே. இதன் ஆரோக்கியத்தன்மை பற்றி கூறுங்கள்?
கவிதாயினி நாகபூசணி: காலத்தின் தேவையாக இருப்பினும், தமிழின் செம்மையைப் பேண வேண்டியது காலத்தின் கட்டாயம்.
08. அறிவிப்புத்துறையில் காலடி வைத்த, வைக்க இருக்கின்ற இளையவர்களுக்கு உங்கள் ஆலோசனைகள்?
கவிதாயினி நாகபூசணி: எப்போதும் உங்களைப்புதுப்பித்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். எவ்வளவு உயர்ந்தாலும் அவ்வளவு பணிவு பேணுங்கள். காய்த்த மரம் தான் கல்லடி படும் அடிகளையும் படிக்கல்லாக்கிக் கொள்ளுங்கள்.
09. சம காலத்தில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் எவ்வாறானவை?
கவிதாயினி நாகபூசணி: பொதுவாக எப்படிச்சொல்வது? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. பிரச்சினையில்லாத இடம் எங்காவது இருக்கிறதா?
10. சமூக வலைத்தளங்கள் மலிந்து விட்ட இந்த யுகத்தில் தங்களின் நிகழ்ச்சிகளுக்கு இருக்கின்ற வரவேற்பு எவ்வாறு காணப்படுகின்றது?
கவிதாயினி நாகபூசணி: சொல்லப்போனால் சமூக வலைத்தளங்களால் தான் வரவேற்பு அதிகரித்திருக்கிறது. அவை தானே எங்களை உலகளவில் கொண்டு சேர்க்கின்றன.
11.உங்களது நிகழ்ச்சிகளுக்கும் ஏனைய ஊடக நிகழ்ச்சிகளுக்குமிடையில் காணப்படும் போட்டித்தன்மை பற்றி கூற முடியுமா? அல்லது நீங்கள் போட்டியாக சவாலாக நினைக்கும் அறிவிப்பாளர்?
கவிதாயினி நாகபூசணி: வேறுபட்ட ரசனைகளினால் நிகழ்ச்சிகள் எல்லாமே ஏதோ ஒருவகையில் தமக்கென ஓரிடத்தைகொண்டுள்ளன. இல்லை. நான் யாரையும் போட்டியாகவோ சவாலாகவோ கருதவில்லை.
12. நீங்கள் சிறந்த, மூத்த, முன்மாதிரியான ஊடகவியலாளர் மட்டுமல்ல. மிக நல்ல கவிஞரும் கூட. அந்த இலக்கியத்துறை அனுவங்களையும் பகிந்து கொள்ள முடியுமா?
கவிதாயினி நாகபூசணி: எனக்கு சிறு வயது முதலே வாசிப்பில் ஆர்வம் அதிகம். உறுதுணையாக இருந்தவர் என் தந்தை . பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப்பாடமாகக் கற்க அது கூட காரணமாயிருந்திருக்கலாம். தமிழின் சுவை இன்னும் அதன் பால் என்னை ஈர்த்திருக்கலாம்.
13. எமது கல்குடா நேசன் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவது?
கவிதாயினி நாகபூசணி: உங்கள் அன்பும் ரசனையும் தான் கால வெள்ளத்தில் நாம் காணாமல் போகாமல் காக்கிறது. உங்கள் சுவையறிந்து நிகழ்ச்சிகளைப் படைக்க நாம் தயாராயிருக்கிறோம்.
http://kalkudahnation.com/
No comments:
Post a Comment