Saturday, January 2, 2016

தொலைந்து போதல் பற்றி......

அடிக்கடி தொலைந்து போவதிலும்
காணாமல் போவதிலும்
அலாதிப் பிரியமெனக்கு....

செக்கு மாட்டைப்போல
சுற்றிக்கொண்டே இருப்பதில்
உடன்பாடில்லை....

கால்கள் இல்லாவிட்டாலும்
எழுந்து ஓட முயற்சிப்பேன்
சிறகுகளை இழந்துவிடினும்
வானமட்டும் பறக்கநினைக்கிறேன்....


சுவாசம் வரை நெருக்கும்
சுமைகளத்தனையும் தொலைத்து
சுகங்களுக்குள் காணாமல்போக‌
விழைகின்றேன்...

தோல்விகளுக்குள் காணாமல் போகும்
புன்னகைகளை தேடித்தேடி
அதற்குள் தொலைந்துவிடப் பார்க்கின்றேன்

கண்ணீர் நம்மை தேடிவந்து
ஒட்டிக்கொள்ளும்
ஆனந்தமோ நான் தேடிப்போய்
பெற்றுக்கொள்ளவேண்டியது..

தேடுதல் சுகமானது
தொலைதல் அதைவிட சுவாரஸ்யமானது
காணாமல் போதலோ
காலச்சாவியினை
கரத்தில் பெற்றுக்கொண்ட ஆரவாரம்

இன்னுமின்னும் அதற்குள்
மூழ்கிப்போனால்
விடைகளற்றுப் போகவிருந்த‌
வாழ்க்கை சரித்திரத்தின்
அத்தனை புதிர்களையும்
அவிழ்த்துவிடும் வல்லமை
அங்கேதான் உள்ளது....

பாதத்தை மறந்து
பசியினை துறந்து
காற்றாய் அலையாய்
கால்களில்லா நதியாய்
காலச்சக்கரத்தில் சுழன்றுவருகையில்

காணாமல் போதலே
காண்பதற்கரிய வெற்றிச்சாலையினை
கடந்து செல்ல உதவும்
கடவுள் மந்திரம் என்கின்றேன்....

No comments: