http://kalkudahnation.com/#!/tcmbck
பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள். படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது.
இதன் தொடரில் இன்று 01.01.2016ம் திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் 21வது இலக்கிய நேர்காணலில் புதிய ஆங்கில வருடத்தின் முதலாவது படைப்பாளியாக இணைந்து கொள்கிறார்” இலங்கை கிழக்கு மாகாணத்தின் மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பைச்சேர்ந்த வளர்ந்து வரும் பாடலாசிரியரான சதீஸ்காந்த் அவர்கள்.
இலங்கை படைப்புக்களுக்கு சிறந்த களம் கிடைக்கவில்லை. போதிய வரவேற்பு வாய்க்கவில்லையென ஒரு பக்கம் நாம் புலம்பிக்கொண்டிருக்கையில், அப்படியல்ல, நாமும் எமது படைப்புக்களும் மக்களால் பார்க்கப்படுகின்றோம். இரசிக்கப்படுகின்றோம் என்று தலை நிமிர்த்திச் சொல்கின்றார் ஸதீஸ்காந்த அவர்கள். சிறந்த ஆர்வமிருக்கிறது. பலர் எமது பாடல்களை ஊடகங்களில் விரும்பிக்கேட்கின்றார்கள். சினிமாவுக்கு தரும் அதே ஆதரவை எமக்கும் இப்போது மக்கள் தருகின்றார்கள். என்று கூறும் அவரின் முழுமையான நேர்காணலுடன் இணைந்து கொள்வோம்.
ராஜ் சுகா: புதிய வருடத்தில் முதலாவது படைப்பாளியாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். உங்களுக்கு எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன், வாசகர்களோடு தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.
சதீஸ்காந்த்: அனைவருக்கும் எனது இனிய புது வருட நல் வாழ்த்துக்கள். எனது பெயர் “ஸதீஸ்காந்” என் சொந்த இடம் மட்டக்களப்பு. அப்பா தம்பி ரெட்ணம். அம்மா மஞ்சுளா. தங்கை வரதாரணி. நான் விவசாயத் திணைக்களத்தில் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றி வருகின்றேன்.
ராஜ் சுகா: நீங்கள் தற்போது ஈடுபட்டிருக்கும் இலக்கியத்துறை பற்றி?
சதீஸ்காந்த்: இலங்கை இசைத்துறையில் 09 வருடங்களாக ஒரு பாடலாசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். பாடல்கள், நிலையக்குறியிசை, குறும்படங்கள், திரைப்படங்கள் எனப்பல பிரிவில் பாடல் வரிகளை எழுதி வருகின்றேன்.
ராஜ் சுகா: உங்களுக்கு முதன் முதல் அமைந்த பாடல் எழுதும் வாய்ப்புப்பற்றி எம்மோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சதீஸ்காந்த்: 2007ம் ஆண்டு ஷமீலின் இசையில் “வானவில் தேவதை” என்ற பாடலை முதன் முதலில் எழுதினேன். பாடலைப் பிரதீப் பாடியிருந்தார்.
ராஜ் சுகா: இசைக்கேற்ப பாடல் எழுதுவீர்களா? அல்லது உங்கள் வரிகளை இசையமைக்கக்கூடியவாறு எழுதுவீர்களா?
சதீஸ்காந்த்: இரண்டு சந்தர்பங்களும் உண்டு. அதிகமாக இசைக்கே பாடல் வரிகளை எழுதுகின்றேன்.
ராஜ் சுகா நீங்கள் கடினமாக உணர்ந்து பாடல் எழுதிய சந்தர்ப்பம் ஏதேனும் உண்டா?
சதீஸ்காந்த்: ஆம். “மழை விழி” பாடல். என் திறமையை நிரூபிக்கக் கிடைத்த அரிய வாய்ப்பு அது. அழகான மெட்டு. எனவே, ஒவ்வொரு வரியையும் திருத்தம் செய்து அழகாக்கி எழுதினேன். என் உழைப்புக்குச் சிறந்த அங்கீகாரம் அப்பாடல் மூலம் கிடைத்தது
ராஜ் சுகா: எல்லா கவிஞனாலும் பாடலாசிரியராக வெளிப்பட முடியுமா?
சதீஸ்காந்த் முடியும். கவிதை வரிகளை எளிமைப்படுத்தி மெட்டின் சந்தத்திற்கேற்ப எழுதி நிறையப்பயிற்சி செய்தால் எல்லோராலும் நிச்சயம் முடியும்.
ராஜ் சுகா கவிதைக்கும் பாடலுக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகள் பற்றி?
சதீஸ்காந்த் கவிதை என்பது நாம் உணர்ந்த, அனுபவித்த உணர்வுகளை வரி வடிவில் உயிர்ப்பித்து வெளிப்படுத்ததும். பாடல் வரிகளும் அப்படித்தான். வேற்றுமை என்று பார்த்தல், பாடல் வரிகள் சந்தம் விலகாமல் மெட்டுடன் முழுவதுமாகப் பொருந்த வேண்டும். ஆனால், கவிதைகளில் அவ்வாறில்லை. எமக்குத் தேவையான கவிதை வடிவத்தை நாமே தெரிவு செய்யலாம்.
ராஜ் சுகா இத்துறையில் நீங்களாகவே முயற்சியெடுத்து சிரத்தையெடுத்து பெற்றுக்கொண்ட வெற்றி அநுபவங்கள்?
சதீஸ்காந்த் “என் உயிரை” வீடியோ பாடலுக்காக 2015ல் சர்வதேச நோர்வே திரைப்பட விழாவில் கிடைத்த தமிழர் உயரிய விருது. இப்பாடலை நானே எழுதி இயக்கி துஷ்யந்தனோடு தயாரித்தும் இருந்தேன். ஒரு அறிமுக இயக்குனராக மிகவும் கஷ்டப்பட்டு பல தடைகள் தாண்டித்தான் அப்படைப்பை வெளியிட்டேன்.
ராஜ் சுகா உங்கள் நண்பர்கள், உங்களுக்கு எதிர்மறையானவர்கள் பற்றி?
சதீஸ்காந்த் என் பாடசாலை நண்பர்கள். இசைத்துறை நண்பர்கள் என்றும் என் படைப்புகளுக்கு ஆதரவு தருகின்றார்கள். எதிர்மறையானவர்கள் என் தவறை எனக்கு சுட்டிக்காட்டி என்னை மென்மேலும் வளர உதவுகின்றார்கள்.
ராஜ் சுகா இலங்கை பாடல்களை இரசிப்பதில் எம்மக்களிடம் காணப்படும் ஆர்வம் எவ்வாறு காணப்படுகின்றது?
சதீஸ்காந்த் சிறந்த ஆர்வமிருக்கிறது. பலர் எமது பாடல்களை ஊடகங்களில் விரும்பிக்கேட்கின்றார்கள். சினிமாவுக்கு தரும் அதே ஆதரவை எமக்கும் இப்போது மக்கள் தருகின்றார்கள்.
ராஜ் சுகா: எந்தெந்த வகையில் உங்கள் படைப்புக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றீர்கள்? சதீஸ்காந்த் வானொலி, தொலைக்காட்சி, இணையம், இறுவெட்டுக்கள், மேடை நிகழ்ச்சி, திரையரங்கம் மூலம்.
ராஜ் சுகா: உங்களுக்கு இந்திய சினிமாவில் பாடல் எழுதும் வாய்ப்புக்கள் அமைந்துள்ளனவா?
சதீஸ்காந்த்: ஆம். “வெள்ளைக் காக்கா மஞ்சள் குருவி” என்ற தென்னிந்திய திரைப்படத்தில் “அடடடடா ” என்ற பாடலை சாயி தர்ஷன் இசையில் எழுதியுள்ளேன்.
ராஜ் சுகா: நீங்கள் பெற்றுக்கொண்ட விருதுகளில் நீங்கள் பூரித்துப்போன ஒரு விருது அநுபவம் பற்றியும் பெற்றுக்கொண்ட விருதுகள் பற்றியும் கூருங்கள்?
சதீஸ்காந்த்: 2011 இல் அலறி மாளிகையில் ஜனாதிபதி கரங்களால் “பூக்கின்றாய் பூவாய்” என்ற பாடலுக்காக அரச தேசிய இசை விருதினைப் பெற்றுக்குகொண்டது.
ராஜ் சுகா: இதுவரை எத்தனை பாடல்களை எழுதியுள்ளீர்கள்? அவற்றில் உங்களை அடையாளப்படுத்திய பாடல் எது?
சதீஸ்காந்த்: கிட்டத்தட்ட 70 பாடல்களை எழுதி உள்ளேன். தினேஷ் கனகரெட்ணம் மற்றும் திவ்யாவுடன் சேர்ந்து உருவாக்கிய “உயிர்ப்பூ” என்ற பாடல்.
ராஜ் சுகா: உங்களை கவர்ந்த அல்லது அவரைப்பார்த்து அதிசயப்பட்ட ஓர் தென்னிந்திய, இலங்கை பாடலாசிரியர் பற்றி?
சதீஸ்காந்த்: தென்னிந்தியா – நா.முத்துக்குமார், இலங்கை – அஸ்மின் ராஜ் சுகா உங்களது அடுத்த திட்டம்? சதீஸ்காந்த் உலகின் பிரபல இசைக்கலைஞர்களையும் நம் நாட்டில் இசைக்கலைஞர்களையும் ஒன்றிணைத்து பாடல்களை உருவாக்கும் திட்டமுள்ளது.
ராஜ் சுகா: இப்புதிய வருடத்தின் முதல் படைப்பாளியாக எமது இணையத்துடன் இணைந்து கொண்டுள்ள நீங்கள் எம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள நினைப்பது?
சதீஸ்காந்த்: இந்த புதிய வருடம் அனைவருக்கும் அமைதியையும் சந்தோஷத்தையும் வழங்க வேண்டுமெனப் பிரார்த்திப்பதோடு, எடுக்கின்ற அனைத்து நல்ல முயற்சிகளும் அனைவருக்கும் வாய்க்க வேண்டுமென்று வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்தோடு, தொடர்ந்தும் என் படைப்புகளுக்கு ஆதரவு தாருங்கள். கல்குடாநேசன் இணையத்திற்கு என் வாழ்த்துக்கள். தொடர்ந்தும் உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகின்றேன்.
No comments:
Post a Comment