Friday, January 25, 2013

இப்போதும் அழகானது!!





நமதான காதல் அழகானது
நமைமீட்டிய நிமிடங்கள் அற்புதமானவை
இப்போதும் சுகமான ஸ்பரிசங்களோடு
இமைகளுக்குள் உலவுகின்றன..


உனக்கு ஞாபகமா,
நம்முடைய பயணங்களெல்லாம்
நிறத்திலும் நினைவுகளிலும்
ஒன்றாகவே இருக்கும்
பூகம்பமாய் கிளம்பும் கோபங்களும்
புன்னகையில் உதிர்ந்துபோகும்
சந்திப்புக்களின் கடைசி நிமிடந்தரும்
பிரிவின் வலிகளுக்கு
வந்துநிற்கும் வாகனத்தையெல்லாம்
தவறவிட்டு 
கடைசி வண்டியில் தாவிச்செல்வாயே
இன்று மது இதயத்தில்
ரணத்தோடு ரம்யத்தையும் 
தடவிச்செல்கின்றது
நம் காதல் எப்போதும் அழகானது...


நான் காட்டுக் செல்லங்களும்
நீ தந்திடும் கொஞ்சல்களும்
குழந்தையுலகில் நாமிருப்பதான‌
குதூகல நிமிடங்கள்
அடிக்கடி கண்ணடிக்குமுன்
கண்ணாடிக்கண்களுக்குள் 
தொலைந்துபோகு மென் வெட்கங்களும்
அதிர்ந்துபோகு மென் இமைகளுக்குள்
அலையலையாய் புகுந்திடு முன்
சிங்கார சேஷ்டைகளும்
இப்போதும் அழகானதுதான்...

மிச்சமான எனதுணவை 
அச்சமின்றி ருசிப்பாயே
நான் பருகியதை
நீயும் பருகி யென்னைபார்ப்பாயே
எல்லாமின்னும்
புயலாய் நெஞ்சத்தை தாக்குகின்றது...


வருங்கால திட்டங்களனைத்தும்
வரலாறு காணாத கானலாய்
வழி தொலைந்து போகின்றது நம்
வாழ்வுக்காய் சேமித்த 
சுவாரஸ்யங்கள் ஒவ்வொன்றும்
சுட்டுப்பொசுக்குகின்றது இந்த‌
வெறுமையான வெட்டாந்தரையில் 
என்றாலும் நம் காதல்
அழகான அழகுதான்...


நம் நினைவுத்தடங்கள்
நினைத்து மகிழுமளவுக்கு
நிஜமான அற்புதங்கள்தான்
அதிகபட்ச கோபங்கள்
அரைநாளேனும் நீண்டதில்லை
குறைந்தபட்ச பிடிவாத‌ங்கள்
குழப்பத்தினை தந்ததில்லை இப்போதும்
எப்போதும் நம் காதல்
எழில் மிக்கதுதான்...

உன் குழந்தை தனங்களில்
நான் தொலைந்துபோவதும்
என் குளறுபடிகளில் நீ
குதூகலித்துது மகிழ்வதும்
ஆயிரம் ஜென்மங்களுக்கும்
ஆறாத இவ்வானந்தங்கள் போதும்
என்றென்றும் நம்காதல்

அழகான ஆரோக்கியம்தான்..!!














No comments: