Thursday, January 17, 2013

இன்னும் உன் குரல் கேட்கின்றது' கவிதை நூலுக்கான விமர்சனம்




உள்ளம் உடைந்து உணர்வுகள் பெருக்கெடுக்கும்போது அணையிட்டு அடக்கமுடியாத பிரவாகமாய் பெருக்கெடுக்கும் தமிழின்பத்தை கவிதையாகக் கொள்ளலாம். அந்த உன்னத உண‌ர்வினை வார்த்தைக்கற்களால் வரிகளாக்கி வாசகர்களுக்கு விருந்தளித்துள்ளார் தியத்தலாவையை சேர்ந்த கவிதாயினி  எச்.எஃப்.ரிஸ்னா. கவிதை சிறுகதை நூல்விமர்சனம் என இலக்கியத்தில் தடம்பதித்துக்கொண்டிருக்கும் இவரது, 'இன்னும் உன் குரல் கேடிகின்றது' கவிதை  நூலானது புரவலர் புத்தகப்பூங்கவின் 30வது வெளியீடாக வெளிவந்துள்ளது.
   வசனக்கவிதை, புதுக்கவிதையாக பூத்துநிற்கும் கவிதைகளில் ஆங்காங்கே சந்தம் சந்தோஷம் நாதம் மீட்டியுள்ளது.இலகுவான மொழிநடையில் இயல்பான விடயங்களை தொட்டிருக்கும் கவிஞர் காதல் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது அநேக கவிதைகளில் புலப்படுகின்றது. அத்தோடு சகலரும் வாசித்து விளங்கக்கூடிய நடையில் உணர்வினை வெளிப்படுத்தியிருக்கும் விதம் நூலுக்கு வலிமை சேர்த்திருக்கின்றது.
     "நேர்மையாய் உன்
    வாழ்வைவாழு பிறர்
    கவலையை காது கொடுத்து கேளு
    திக்கற்று வாழ்வோரை
    தீமைகள் சூழ்கையிலேஅயராது
    அவருக்காய் மாளு
    தரணியிலே நீவாழ்வது மேலு"     
                          என 'நீ வாழ்வது மேல்' என்ற தலைப்பில் மிக அருமையான அறிவுரைகளை கூறி நம் அகங்களை தொடமுனைந்த கவிஞரின் சொல்லாட்சி வாழ்த்தச்செய்கின்றது.வாசிக்கும் போதே எம்மை உணர்ந்துகொள்ள‌வும் நாம் கடந்துவந்த அல்லது கடந்துகொண்டிருக்கும் நிலமைகளை மிக இலகு நடையில் சொல்லியிருப்பது சொல்லில் செதுக்கியிருப்பது ஆச்சரியம். அத்தோடு கவிஞரின் கற்பனைத்திறன் பல கவிதைகளில் பிரமிக்கச்செய்கின்றது.
     "உன் 
     அன்பெனும் ஆலையிலே
     நித்தமும் சாறுபிழியப்படும்
    கரும்பல்லவா நான்
    அப்படியே காதலுடன்என்னை
   ருசி பார்த்து மகிழும்
  எறும்பல்லவா நீ"     
                 என 'இதயத்தின் முகவரி' எனும் கவிதை போல பல கவிதைகளில் காதலும் கற்பனையும் ததும்பும் குவைமிக்க வரிகள் சுவைக்கவைக்கின்றன.
           "உள் மனசில் நீ
           உறைந்து கிடந்த போதேல்லாம்
          இளகி பிரிவாய் என்று
          சத்தியமாய் நினைக்கவும்
           முடிந்ததா என்னால்" 
                                   'புதைகுழி நோக்கி புறப்படுகின்றேன்' என்ற கவிதை மணவறைக்கு அழைத்துசெல்லப்படும் மணப்பெண்ணின் உள்ளக்குமுறலை சொல்லியிருக்கின்றது. 'மனங்கவர் மணவாளன்' எனும் கவிதை முதிர்கன்னி களின் முகத்திரையிட்ட குமுறல்களுக்கு ஆற்றுப்படுத்தலாகவும் 'ஒரு வீணை அழுகின்றது' எனும் கவிதை மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் ஓர் கணவன் தன் காதல் மனைவியின் எதிர்கால விளக்கை கொளுத்தி வைக்கும் வரிகளாய் சிறப்பு புரிகின்றது.இவ்வாறு பெண்மையின் பல பக்கங்களை இலகுவாக சென்றடைந்துள்ளார் கவிஞர்.
       " எரிமலையில்
       பூத்துப்போன மலர்களுக்கு
      வேர்களின்வேதனை
      புரிவதேயில்லை" 
                             'கறையான் பக்கங்கள்'எனும் தலைப்பில் மிக ஆழமாக சிந்தனைக்கருவை சிதறவிட்டிருக்கின்றார். கவிதைக்கு பலம் சேர்க்கும் விடயங்களில் இவ்வாறான படிமக்குறிகள் முக்கிய இடம்வகிக்கின்றது. அதனை இதுபோன்ற வரிகள் பல இடங்களில் தடம் பதித்திருக்கின்றது.
   மலையக வாழ்வியலைப்பற்றியும் 'மலையக மாதுவின் மனக்குமுறல்' என்ற தலைப்பில் ஆதங்கப்பட்டிருக்கும் ஆசிரியர், ஒவ்வொரு தலைப்பிலும் மனித மனங்களில் உருண்டோடிக்கொண்டிருக்கும் உணர்வுகளை லாவகமாக பிடித்து விளக்கியுள்ளார். மனதை உருக்கும் வார்த்தை பிரயோகங்களால் சில நிதர்சனங்களை ஆணியடித்தாற்போல பளிச்சென்று சுட்டிக்காட்டியுள்ளார்.
  . 
  இவ்வாறு இளமை கவியால் ஆட்கொண்டிருக்கும் 'இன்னும் உன் குரல் கேட்கின்றது' கவிதை நூலானது 68 தலைப்புக்களை பொருளடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால், 56 கவிதைகளே நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரும் குறையாக தெரியாவிட்டாலும் கவித்தேடலுக்கு ஓர் ஏமாற்றமாக இருந்தது என்பதே நிஜம்.கவிஞர் எச்.எஃப்.ரிஸ்னா, இளவயதில் சந்திக்கும் அல்லது அவ்வயதில் கடந்து வருகின்ற உணர்வலைகளுக்கு ஒளியூட்டியிருக்கின்றார் என்றே கூறவேண்டும் ஏனெனில், அவ்விளவயதின் மன உளைச்சல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புக்கள் என்ற அத்தனை பக்கங்களையும் விபரமாக வெளிப்படுத்தியுள்ள விதம் இளையவர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதோடு மூத்தவர்களின் கடந்த கால நிஜங்களை நிழற்படமாக காட்டியுள்ளதால் சகல தரப்பினரையும் கவரும் என்பதில் எவ்வித ஐயங்களுமில்லை என்பதனை குறிப்பிட்டாக வேண்டும்.
  'இன்னும் உன் குரல் கேட்கின்றது' கவிதை தொகுதியானது வாசகர்கள் மனதிலும் குரலாய் நின்று ஒலித்துக்கொண்டிருக்கும் அளவுக்கு சிறப்பிடம் பெறுகின்றது. நூலினை பிரசவித்த ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை பகர்ந்துகொள்வதோடு அவரிடமிருந்து இன்னும் பல இலக்கிய படைப்புக்களை எதிர்ப்பார்க்கின்றோம்.
நூல்: 'இன்னும் உன் குரல் கேட்கின்றது' கவிதை நூல்
ஆசிரியர்:எச்.எஃப்.ரிஸ்னா
தொடர்புகளுக்கு:riznahalal@gmail.com
 விலை:180/=





















(நன்றி தினகரன் மற்றும் தினக்குரல்)


No comments: