Thursday, January 17, 2013

'ஒற்றையடிப்பாதை' கவிதை நூலுக்கான எனது பார்வை










     இயற்கையோடும் எளிமையோடும் புதிய பரிணாமம் எடுத்துள்ள 'ஒற்றையடிப்பாதை' கவிதை தொகுப்பு சித்திரக்கைவண்ணம் என்று அழைக்கக்கூடிய வகையில் நம் கைகளில் மிளிர்கின்றது.தர்கா நகரைச்சேர்ந்த கவிஞர் பஸ்லி ஹமீட் அவர்களின் கன்னித்தொகுப்பாக கவிநயம் காட்டியுள்ள இத்தொகுப்பானது நம் எதிர்பார்ப்பினை முற்றும் உடைத்து புதிய மிரட்சியுடன் வாசகனை சந்தித்திருப்பது உண்மையில் கவிஞரை பாராட்டச்செய்வதோடு வாசகர் மத்தியில் கவிதை நேசிப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது என்றே கூறலாம்.
  வழமையாக புதுக்கவிதை மரபுக்கவிதை ஹைக்கூக்கவிதை என்ற வரையறையிலேயே நாம் கவிதைநூல்களை வாசித்து வந்திருக்கின்றோம்.படங்களுக்கு கவிதையெழுதும் முறைமையினை பத்திரிகையில் வாசித்திருக்கக்கூடும் ஆனால் அதே பாணியில் இயற்கையோடும் நம் வாழ்வியலோடும் பின்னிய படங்களை தெரிவுசெய்து அதற்கு தன் உணர்வுகளை கவியாக தீட்டி நூலாக தந்திருப்பது கவிஞரின் புதிய முயற்சி புதுமையான முயற்சி பாரட்டுக்கள்.
  இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இன்று வயது வித்தியாசமின்றி அதிகரித்துள்ளது.அந்த வகையில் முகநூலில் எழுதுவரும் கவிஞர் பஸ்லி ஹமீட் இதுவரை இணையத்தள வாசகர்களின் கண்களுக்கு விருந்தளித்து வந்திருந்தார். அதற்கு கிடைத்த வரவேற்பும் ஆதரவும் வாழ்த்துக்களுமே இந்நூல் பிரசவமாவதற்கு வித்தாக அமைந்தது எனக்கொள்ளலாம்.'ஒற்றையடிப்பாதைக்குள்ளே நம் பயணத்தை தொடங்கினால், வண்ணப்பூக்களாய் வகைவகையான படங்கள் மணம்வீசி நிற்கின்றது.அவ்வண்ணப்படங்களுக்கு அவரின் எண்ணக்கவிதைகள் வார்ப்புக்களாய் வரலாறு படைக்கின்றது.
                "பட்டம் வானில் பறக்கின்றது
                 படைத்தவன் கையில்தான்
                 நூல் இருக்கின்றது"
                                                               பறக்கும் பட்டத்தின் படத்துக்குக்கான இக்கவிதை,வாழ்வியலை படம்பிடித்து காட்டுகின்றது. மிக எளிய சொல்லாடலில் எல்லா கவிதைகளும் இருப்பதே சிறப்பம்சமாக காணப்படுகின்றது.
                  "வானில் இருள் சூழ்ந்துவிட்டால்
                   மதியை யாரும் நேசிக்கின்றார்கள்
                   வாழ்வில் இடர் சூழ்ந்துவிட்டால்
                    விதியை ஏனோ தூசிக்கின்றார்கள்
                                                                              என்ற வரிகளில் நம்மை நாமே ஒரு நொடி உணரமுடிகின்றது. மதியை விதிக்கு ஒப்பிட்டு நம் அறியாமை இருளை சுட்டிக்காட்ட விரும்புகின்றார் கவிஞர்.வரிகளை கொண்டே அதற்கான படங்களும் நம் மனக்கண்முன்னே திரையிடுகின்றது.
                  "மலையே
                   நெஞ்சுக்குள் நெருப்பை
                   வைத்துக்கொண்டு
                   உன்னால் எப்படி நிம்மதியாக‌
                   உறங்க முடிந்தது..? என்றும்
                   "இடைவிடாது புகைத்து
                    இறுதியில்
                    இரத்த வாந்தி எடுத்தது" 
                                                         என்றும் எரிமலையின் படத்துக்கு வரிகளமைத்து சிந்திக்க வைத்திருப்பது ஆழமான படிப்பினையை போதிக்கின்றது. இவ்வாறு இயற்கையோடு மிக நெருக்கமான ஈர்ப்பிலே அநேகமான என்று சொல்வதை விட அனைத்து கவிதைகளும் படைக்கப்பட்டிருப்பது கவிஞரின் இயற்கை மீதான பாதிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றது. விரல்விட்டு கூறக்கூடிய விடயங்களே இயற்கைக்கு அப்பாற்பட்டு கவிதைகளாய் அழகுசெய்கின்றது.
                "உச்சியினை தொட்டிடவே
                  உலகமும் நாடுது
                  உச்சியிலே உள்ளநதி
                  பள்ளமதை தேடுது" 
                                               என்ற கவிஞரின் நதி பற்றியதான வாழ்வியற் கலையை, உயர்ந்த சிறந்த எண்ணங்களை கொண்ட மனிதர்களுக்கு ஒப்பிடலாம். எவ்வளவுதான் உயர்ந்த இடத்தில் இருந்தாலு எளிமையையும் தாழ்மையையும் விரும்புபவர்கள் மிகச்சிலரே. நன்றாக காய்த்திருக்கும் கிளையானது எப்போதும் கீழ்நோக்கியே வளைந்திருக்கும் அதுபோலத்தான் சிறந்த பண்பும் குணங்களும் எளிமையுமுள்ளவர்களின் வாழ்வும் இவ்வாறே தாழ்மையான நிலமையினை கொண்டிருக்கும் என்பதனை இப்படத்துடன் கூடிய கவிதையின் படிப்பினையாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.
                         "வானமே நீ
                          நீலத்திரையை நீக்கியபோதுதான்
                          தெரிகின்றது உனக்குள்ளும்
                          ஆயிரம் ஓட்டைகள்"
                                                 எத்தனை அழகிய வரிகள். 'ஒரு மனிதனின் அந்தரங்கம் தெரியாதவரைதான் அவன் எல்லாருக்கும் நல்லவனாக தெரிவான்' என்று கவிஞர் கிண்ணியா அமீர் அலி தன்னுடைய புத்தகவெளியீட்டு விழாவில் கூறியது நினைவுக்கு வருகின்றது.உண்மைதான் ஒருவனுடைய சுயரூபம் தெரியாதவரைதான் அவன் நல்லவனென்ற போர்வைக்குள் நடமாட முடிகின்றது இந்தச்செய்தியை இருளோடு ஒப்பிட்டு இதயம் தொடும் வரிகளை தந்திருப்பது ரசிக்கவைக்கின்றது.
                        "ஓடங்களே
                         ஓய்வெடுக்கவேண்டாம் எம்
                         குமரியர்கள் கரைசேர‌
                          காத்திருக்கின்றார்கள்"
                                                                 நான்கே வரிகளில் ஏழைக் குடும்பங்களின் ஏழ்மையினை எத்தனை அருமையாக வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார். உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் ஏழைகளின் நிலமையினையும் சீதனப்பிரச்சனையுட்பட எத்தனையோ பிரச்சனைகளினால் இன்னுமே திருமணமாகாத பெண்களின் நிலமையினையும் இப்படி நான்கே வரிகளில் கூறமுடியுமா என ஆச்சரியப்பட வைக்கின்றது இக்கவிதை.
  காதலுக்கும் கண்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கின்றது அதேபோல காதலுக்கும் கவிதைக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கின்றது. இந்த தொடர்பினை தொடாத கவிஞ‌ர்களே இல்லை காதலில்லாத கவிதையும் கவிதையுமில்ல என்றே கூறவேண்டும். மொழி மீதும் இயற்கை மீதும் சமூகத்தின் மீதும் கொண்டுள்ள பற்றும், காதலும், ரசனையுமே ஒருவனை கவிஞனாக்குகின்றது. அப்படிப்பட்ட காதலை தரும் கண்கள் பற்றி நம் கவிஞர் தரும் வரிகள்,
                         " ஊரையே மேய்கின்றது
                           உன்னை மட்டும்
                           அசைபோடுகின்றது
                           என் கண்கள்"       என்றும்
                          "அவனை காதலில்
                          விழவைத்தேன்
                          என்னை காலமும்
                           அழ வைத்தான்"
                                                       என்றும் காதலின் வலியை கண்களினூடாக வெளிப்படுத்துகின்றார்.
இவ்வாறு சின்னச்சின்ன கவிதைகளினூடாக வண்ணப்படங்களை கோர்த்து பென்னம்பெரிய கலை வாழ்வினை காட்சிப்படுத்திக்காட்டியுள்ள இக்கவிதை நூலானது சிறுவர்களை குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியிருப்பதை சிறு அநுபவத்தினூடாக அவதானித்தேன்.எதையும் இலகுபடுத்தி நோக்கக்கூடிய காலத்துக்குள் நாம் ஓடிக்கொண்டிருக்கின்றோம் அதுபோல மாணவர்களை பொருத்தவரையில் புதுமையான சுவாரஸ்யமான விடயங்களிலே தம்மை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புவார்கள். வாசித்தலுக்கு மிக இலகுவான இத்தொகுப்பை சில பள்ளிமாணவர்கள் விரும்பி வாசித்ததை அவதானிக்கமுடிந்தது. இந்த நிகழ்வானது கவிஞரின் புதுமை முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியினை எடுத்துக்காட்டுகின்றது. சகல தரப்பினரிடையேயும் ஈர்ப்பையும் ஆவலையும் ஏற்படுத்தியிருக்கும் ஒரு நல்ல வித்தியாசமான தொகுப்பை தந்த கவிஞரை உளமார பாராட்டுவதோடு இதுபோன்று சிறந்த புதிய முயற்சிகளில் அவருடைய படைப்பை காண வாசகர்களாகிய நாங்களும் ஆவலாக இருக்கின்றோம் என்பதனையும் மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கின்றோம்.



நூல்: ஒற்றையடிப்பாதை
ஆசிரியர்: கவிஞர் பஸ்லி ஹமீட்
முகவரி:48,லோடஸ் வீதி, தர்காநகர்.
இணைய முகவரி:fazlyhameed@gmail.com
விலை:200/=

No comments: