உம்மாவின் கண்ணீர்த்துளிகளை
உலக அதிசயமாய் ஜொலிக்கவைத்தாய்
அவளான்மாவின் முடுக்குகளில்கூட
ஆனந்தங்களை அடுக்கிவைத்தாய்...
வாப்பாவின் கனவுகளை
வரிசையாய் நிறைவேற்றிநின்றாய்
காப்பாற்றவெனவே கஷ்டங்களை
கச்சிதமாய் மறைத்துக்கொண்டாய்...
ஊண் உறக்கம் தொலைத்ததை
உறுதியாய் எடுத்துக்கொண்டாய் நமதும்மா
ஆண்போலே காத்ததை
ஆதாரமாய் பற்றிக்கொண்டாய்...
அடியாய் நடந்துவர எனக்கு
பிடியாய் இடமளித்தாய்
படியாய் முன்னிருந்து எனை
மகனாய் ஏற்றிவிட்டாய்...
ஓடிவிளையாடும் காலத்தில்
ஒன்றையும் பார்த்திடாதிருந்தாய்
ஓடாய் இளைக்குந்தாய்க்காய்
ஓராயிரம் வழிகளை வகுத்துக்கொண்டாய்....
விழிநீர் சேமித்த நமதன்னைக்கு
விருதுகளை பரிசளித்தாய்
மொழியிழக்கும் தருணத்தை யின்று
மொத்தமாய் கையளித்தாய்...
தமையானா நீயென் தந்தையா
தரணியிலுனை போலோ தலைவனா...
இமையென காப்பதில் இறைவனா -இன்று
இதயம் மகிழ்ந்தெனுன்னில் இளையவனாய்....
(ஒரு சகோதரனின் வேண்டுகோளுக்கிணங்க அவருக்கு எழுதிக்கொடுத்த கவிதை இது)
No comments:
Post a Comment