Friday, November 27, 2015

கல்குடா நேசனுக்காக திரு.மு.மயூரன் அவர்களின் நேர்காணல் (27.11.2015)

http://kalkudahnation.com/








கல்குடா நேசனின் 16 வது வார இலக்கிய நேர்காணலில் இடம்பெறுகிறார் பன்முக ஆற்றல் கொண்ட மு.மயூரன் அவர்கள்-நேர்காணல்

 பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. 

இதன் தொடரின் இன்று 28.11.2015ம் திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் 16 வது இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் பன்முக ஆற்றல் கொண்ட மு. மயூரன் அவர்கள். “இன்று உலகில் தகவல் தொழிநுட்பம் என்பது எல்லாப்பரப்புகளிலும் வியாபித்து நிற்கும் நிலையில், அத்துறையில் இருக்கக்கூடிய அரசியல் என்னுடைய அக்கறைக்குரியது. புலமைச்சொத்துரிமை, கண்காணிப்புத் தொழிநுட்பங்கள் போன்றவற்றைக் கொண்டு மக்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்காக அதிகாரத்திலிருப்பவர்கள் தகவல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர் என மனந்திறக்கிறார் இவர்

01.  தங்களைப் பற்றி எமது கல்குடா நேசன் வாசகர்களுக்காக? 

மு. மயூரன் என்னுடைய பெயர் மு. மயூரன். நான் திருகோணமலையைச் சேர்ந்தவன். மேற்படிப்புக்காகக் கொழும்புக்கு வந்து இப்போது தொழில் நிமித்தம் கொழும்பில் வசித்து வருகிறேன்

.02. இலக்கியத்துக்குள் காலடி வைத்த சந்தர்ப்பம் அல்லது முதல் அநுபவத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முடியுமா? 

மு. மயூரன் என்னுடைய தந்தை கி. முரளிதரன் இலக்கிய ஆர்வம் கொண்டவராக இருந்ததால் சிறு வயது முதலே இலக்கியம் மீதான ஆர்வமும் மொழி மீதான அக்கறையும் எனக்கு ஏற்படக்கூடிய சூழல் இருந்தது. பாடசாலை தான் இத்துறையில் நான் இயங்கிய முதலாவது தளம். பாடசாலைச் சஞ்சிகைகளும் வெளியீடுகளும் மேடைகளுமே எனக்கு வாய்ப்புக்கொடுத்த தொடக்கக் களங்கள். பாடசாலை மாணவர்களுக்கிடையே ஆண்டு தோறும் அரசால் நடத்தப்படும் “தமிழ் மொழித்தினப் போட்டிகள்” எழுத்து, பேச்சு, கவிதை உள்ளிட்ட இலக்கியம் சார்ந்த துறைகளுக்குள் அறிமுகம் பெறுவதற்கும் இயங்குவதற்குமான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தது. ஏராளமானவர்களை அவர்களது மாணவப்பருவத்தில் இத்துறைக்குள் அறிமுகப்படுத்துவதில் தமிழ் மொழித்தினப் போட்டிகளின் பங்கினை இவ்விடத்தில் நன்றியுடன் நினைவுகூர வேண்டியுள்ளது. கூடவே, இப்போட்டிகளில் நான் பங்குபற்றுவதற்கு உறுதுணையாயிருந்த ஆசிரியர்களையும் அதிபரையும் நினைவு கொள்ள வேண்டும்.  உயர் தரம் படித்துக்கொண்டிருந்த போது நானும் த. வேலவன், சி. சிவகுமார் ஆகிய நண்பர்களும் இணைந்து “பெயர்” என்ற பெயரில் சிறு சஞ்சிகை ஒன்றினைத் திருகோணமலையில் வெளியிட்டோம். மாத இதழாக வெளிவந்த அச்சஞ்சிகையே இலக்கிய, அரசியல், சமூகத்துறைகளில் இயங்கிய ஏராளமானோரின் தொடர்பினையும் நட்பினையும் பெற்றுத் தந்தது. நான் எவ்வளவு தூரம் கிணற்றுத் தவளையாக இருக்கிறேன் என்பதையும் நான் அறிந்து கொள்ளக்கடலளவு விடயங்கள் இருக்கின்றன என்பதையும் அத்தொடர்புகளூடாகவே நான் உணர்ந்து கொண்டேன்.  என்னுடைய அப்பா, சித்தி அமரசிங்கம், ஜபார், சு. வில்வரெத்தினம், யதீந்திரா, கௌரிபாலன், க. சரவணபவன், ஜெகநாதன் (நக்கீரன்) போன்ற பலர் என்னுடைய அறியாமையை எனக்கு இனங்காட்டி என்னை வளர்த்தெடுக்க முயன்றவர்களுள் முக்கியமானவர்கள். இன்னும் பலர் இருக்கிறார்கள். பட்டியல் இந்நேர்காணலின்  நீளத்தைப் பல மடங்கு அதிகரித்து விடக்கூடும்.  

03. தங்களின் தொழிற்துறை பற்றி? 

மு. மயூரன் நான் ஒரு மென்பொருள் செய்யும் தொழிலாளி. மென்பொருட்களை உருவாக்குவது எனது தொழில். தற்போது தனியார் நிறுவனமொன்றில் மென்பொருள் உருவாக்கும் தொழில் பார்க்கிறேன். 

04கணினித்துறையில் உங்கள் ஆர்வமும் பங்களிப்பும் செயற்பாடுகளும் எவ்வாறானவை ? 

மு. மயூரன் அரசியல், இலக்கியம், சமூகம் போன்றே கணினி, தகவல் தொழிநுட்பமும் எனக்கு மிகுந்த ஆர்வமுள்ள துறையாகும். தகவல் தொழிநுட்பத்தில் தமிழ் மொழியின் பயன்பாடு எனது நீண்ட நாள் ஆர்வத்துக்குரிய பரப்பு. தமிழ்க் கணிமை தொடர்பான அமைப்புக்களுடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். கலைச்சொல்லாக்கம் போன்ற செயற்பாடுகளில் பங்களித்திருக்கிறேன். எனது இயலுகைக்குட்பட்ட அளவில் கணினியில் தமிழ்ப் பயன்பாட்டுக்கு உதவக்கூடிய சிறு சிறு மென்பொருட் கருவிகளை உருவாக்கியுமிருக்கிறேன்.  இன்று உலகில் தகவல் தொழிநுட்பம் என்பது எல்லாப்பரப்புகளிலும் வியாபித்து நிற்கும் நிலையில், அத்துறையில் இருக்கக்கூடிய அரசியல் என்னுடைய அக்கறைக்குரியது. புலமைச்சொத்துரிமை, கண்காணிப்புத் தொழிநுட்பங்கள், போன்றவற்றைக்கொண்டு மக்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்காக அதிகாரத்தில் இருப்பவர்கள் தகவல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். அதற்கெதிராக, மக்களின் சார்பாக நின்று போராடும், விமர்சிக்கும் அமைப்புக்களுடன் சேர்ந்தியங்குகிறேன். அவ்வாறான எதிர்ப்பில் என்னாலான பங்களிப்பினைச் செய்து வருகிறேன்.   


05. எதிர்காலத்தில் சாதிக்க நினைக்கும் விடயங்கள் பற்றி பகிர்ந்து கொள்ள‌ முடியுமா? 

மு. மயூரன் இந்தக்கேள்விக்கு பதிலளிக்க முடியாமலிருப்பது என்னை மிகவும் அதிகம் சிந்திக்க வைத்து விட்டது. “பெரிய” இலட்சியங்கள் எதுவுமில்லாமல் வாழ்கிறேனா என்று எனக்குள் நானே கேட்டுக்கொள்கிறேன். மனிதர்களும் இயற்கைச்சூழலும் முடிந்த வரைக்கும் மகிழ்ச்சியாக, பாரபட்சமின்றி, சம நீதியுடனும் சம வாய்ப்புடனும் ஆரோக்கியத்துடனும் உரிமைகள் பெற்றும் வாழ வேண்டும் என்பது எனது “மிகப்பெரிய” கனவு. காலமெடுக்கும் கனவு. முடிந்த வரைக்கும் அக்கனவினை நோக்கியதாக எனது செயற்பாடுகளை ஒழுங்கமைக்க விரும்புகிறேன்.  கவிதாயினி த. எலிசபெத் 

06. தேசிய கலை இலக்கியப்பேரவை’ உறுப்பினரான நீங்கள் அதன் செயற்பாடுகள் பற்றி எம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள முடியுமா?

மு. மயூரன் தேசிய கலை இலக்கியப்பேரவை என்பது 42 ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் மீதான அக்கறையுடனும் சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவதற்காகவும் கலை இலக்கியச்செயற்பாடுகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களால் அந்நோக்கத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். புதிய சனநாயகம், புதிய வாழ்வு, புதிய பண்பாடு எனும் இலக்குகளை நோக்கி இவ்வமைப்பு இயங்குகிறது.  மனிதருக்கிடையேயான அநீதியான ஏற்றத்தாழ்வுகள், சாதி ஒடுக்கு முறை, உழைக்கும் வர்க்கத்தின் மீதான சுரண்டல், பெண்கள் மீதான ஒடுக்கு முறை, மூட நம்பிக்கைகள், அரசியல் ரீதியான ஒடுக்கு முறைகள், தேசிய இன ஒடுக்குமுறை, இனவாதம், மதவாதம் போன்றவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கும், எதிர்க்கும் தன்மை கொண்ட கலை இலக்கியச் செயற்பாடுகளை பேரவை இன்று வரை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்நாற்பத்திரண்டு ஆண்டுகளில் இலங்கையின் பல முக்கியமான கலை இலக்கிய ஆளுமைகளை உருவாக்கி வளர்த்தெடுத்த பெருமை பேரவைக்குரியது.  விருதுக்காகவும் புகழுக்காகவும் வருவாய்க்காகவும் சுயநலத்துக்காகவும் கலை இலக்கியத்தைப் பயன்படுத்தும் போக்கினை மறுத்து, சமூக மாற்றத்துக்காகவும் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதற்காகவும் கலை இலக்கியத்தைப் பயன்படுத்த வேண்டுமென்பதே பேரவையின் அடிப்படை நோக்கம். கலையையும் இலக்கியத்தையும் ஆரோக்கியமான சமூக மாற்றத்துக்கான ஆயுதங்களாக நாம் பார்க்கிறோம்.  ஜனநாயகத் தன்மை கொண்ட அமைப்பு வடிவத்தைக் கொண்டிருக்கும் தேசிய கலை, இலக்கியப்பேரவைக்கு இன்று யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, மாத்தளை, அட்டன், நுவரெலியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கிளைகள் உண்டு. புசல்லாவையில் அண்மையில் துணைக்கிளையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.  நான் மேலே சொன்ன கலை இலக்கியக் கொள்கைகளோடு உடன்பாடு கொண்ட எவரும் உறுப்பினராகவோ, உறுப்புரிமை இல்லாமலோ தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் சேர்ந்து இயங்குவதற்கு எந்தத்தடையுமில்லை. 


07. இவ்வமைப்பின் மூலம் முன்னெடுக்கும் விடயங்களில் இளையவர்களின் ஆர்வம், பங்களிப்பு எவ்வாறு காணப்படுகின்றது? 

மு. மயூரன் தேசியக்கலை இலக்கியப் பேரவையின் புதிய செயற்குழு பெரும்பாலும் இளைஞர்களைக் கொண்டதாகவே கடந்த மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. புதிய செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள தெ. ஞா. மீநிலங்கோ கூட இளந்தலைமுறையினர் தான்.  கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் பேரவையால் நடத்தப்படும் சமூக விஞ்ஞானக் கற்கை வட்டங்கள் பெருமளவில் வெவ்வேறு துறை சார்ந்த இளைஞர்களை சமூகம் சார்ந்து செயற்பட உள்ளீர்க்கும் தன்மை கொண்டவையாக அமைகின்றன.  எனினும், இன்றைய பொருளாதார, அரசியல், சமூகச்சூழல் இளைஞர்களை சமூகஞ் சார்ந்து சிந்திக்க முடியாதவர்களாக முடக்கி வைத்துள்ளது. பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட கல்விக்கு மட்டுமே முக்கியத்துவமளிப்பவர்களாகவும், தமக்கு வெளியே நிகழும் அரசியல் நடப்புப் பற்றியோ சமூகப் பிரச்சினைகள் பற்றியோ சிந்திப்பதையும் செயற்படுவதையும் தவிர்த்து ஒதுங்குபவர்களாகவும் இளைஞர்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள். ஒட்டு மொத்த சமூகத்தையும் பாதிக்கும் இந்நிலை பேரவையின் செயற்பாடுகளிலும் தாக்கம் செலுத்துகிறது.  இந்த அவல நிலையை மீறி, உடைத்துக்கொண்டு புதுப்புது வழி முறைகளைக் கண்டறிந்து, இளைஞர்களை விழித்தெழ வைக்க வேண்டிய பணியினைத் தனது கடமையாகத் தேசியக்கலை இலக்கியப்பேரவை உணர்கிறது.    


08. நீங்கள் ஒரு சிறந்த மேடைப்பேச்சாளர் என்பதனை அறிவோம். அந்த வகையில் சபையோரை உறக்க நிலைக்கோ, சலிப்பு நிலைக்கோ இட்டுச்செல்லாதவாறு அவர்கள் விரும்பும் பேச்சு எவ்வாறானது? அப்படியொரு சுவாரஸ்யமான மேடைப்பேச்சினை வழங்குவதற்கான தங்கள் ஆலோசனைகள்? 

மு. மயூரன் சிறந்த பேச்சாளர் ஆவது எப்படி என்று ஆலோசனை வழங்குமளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆளில்லை. மிகப்பெரிய சனக்கூட்டத்தின் முன்னால் பேசிய அனுபவமும் எனக்கு மிக மிகக்குறைவு. ஆனாலும், இந்நேர்காணலை மாணவர்களும் இளந்தலைமுறையினரும் வாசிக்கும் போது அவர்களுக்குப் பயன்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.  ஓரளவுக்கு மேடைப்பேச்சுக்களோடு அறிமுகமிருப்பதால், பேசுவதற்கு முன் பின்வரும் கேள்விகளை எம்மை நாமே கேட்டுக்கொள்வது நல்லது என்று நான் நினைக்கிறேன். 
 1. நாம் எவர் கேட்பதற்காகப் பேசுகிறோம்? 
2. என்ன நோக்கத்திற்காகப் பேசுகிறோம்?
 3. எவ்வாறான சூழலில் பேசுகிறோம்? 
4. இதைப் பேசுவதற்கான எம்முடைய தகுதி என்ன?
 இக்கேள்விகளுக்கான எமது பதில்களுக்கு ஏற்றபடி நாம் பேசப் பயன்படுத்தும் மொழி, அதன் எளிமைத்தன்மை, கருத்துக்கள், பேச்சின் நீளம் போன்றவற்றை வடிவமைத்துக்கொள்வது நல்லது. மிக முக்கியமாக, பேசுவதற்கு சில நாட்களுக்கு முன்னரே பேச்சுக்கான தகவல்களைத் தேடியெடுத்து ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். பேசும் போது கையில் குறிப்புக்களும் பார்வை படும் இடத்தில் மணிக்கூடும் இருக்க வேண்டியது அவசியம்.   மேடையில் பேசும் போது, கேட்போரின் முகக்குறிப்புக்களூடாக எமது பேச்சு சலிப்பூட்டுகிறதா, விளங்கிக்கொள்ளப்படுகிறதா? என ஓரளவுக்கேனும் அறிய முடியும். முகக்குறிப்புக்கள் நன்றாக இல்லாதவிடத்து, பேச்சை முடித்துக்கொண்டு அமர்வது நல்லது.   எல்லாவற்றையும் விட முக்கியமானது, பேச்சினை நேர்மையாகப் பேசுவதாகும். நாம் வேறு, நமது நோக்கம் வேறு, நாம் பேசும் பேச்சு வேறானதாக இருந்தால் நாம் கேட்பவர்களையும் அவமதித்து எம்மையும் கீழ்ப்படுத்தி விடுவதாகத்தான் போகும். இது பயனுள்ள நல்ல பேச்சொன்றைப் பேசுவதற்கான எனது வழிமுறை மட்டுமே. வேறு பலரிடம் வெவ்வேறு நல்ல வழிமுறைகள் இருக்கக்கூடும்.  


09.உங்களுக்கு அதிக வரவேற்பினை பாராட்டுக்களை பெற்றுத்தந்த மேடைப்பேச்சினைப் பற்றிச் சொல்ல முடியுமா? 


மு. மயூரன் பெரியளவில் பாராட்டுப் பெற்ற பேச்சு என்று ஒன்று எனக்கு நினைவிலில்லை. வழக்கமாக எல்லோருக்கும் கிடைக்கும் பாராட்டுக்கள் கிடைப்பதுண்டு. சில இடங்களில் பேச்சின் தகுதிக்கு மீறியதாய் வெறும் முகத்துக்குச் செய்யப்படும் அளவுக்கதிகமான பாராட்டுக்களும் கிடைத்து விடுவதுண்டு. ஆனால், நான் மிக முக்கியமானவையாகக் கருதுவது பேசி முடித்த பின் முகத்துக்கு நேரே செய்யப்படும் விமர்சங்களையேயாகும். நாமக்குள் நாம் திருப்திப்பட்டுத் தேங்கி விடாமல், அடிக்கடித் தூர் வாரிக்கொண்டிருப்பவை விமர்சனங்களே. ஒரு முறை பேசி விட்டு அமர்ந்த கையோடு, அடுத்ததாகப் பேச வந்த திரு. ராஜரட்ணம் ஆசிரியர், இதற்கு முன் மயூரன் பேசியது மிகவும் மோசமான பேச்சு என்று சொல்லி விட்டு தனது விமர்சனங்களை முன் வைத்தார். சி. சிவசேகரம், தோழர் செந்திவேல் உட்பட பலர் இவ்வாறு நேரடியாக விமர்சிப்பதுண்டு. இவ்வாறான நேர்மையான விமர்சனங்கள் எவ்வளவு பெரிய பாராட்டினை விடவும் அதிகம் மன நிறைவைத் தருவதால் அவை தாம் எப்போதும் நினைவில் நிற்கின்றன.  


எழுத்துத்துறையில் தாங்கள் சாதித்தவை? 

மு. மயூரன் சொல்லுமளவுக்கு எதுவும் சாதிக்கவில்லை.  



10.உங்களது படைப்புக்களை தாங்கிய நூலொன்றினை வாசிக்கும் சந்தர்ப்பம் வாசகர்களுக்கு எப்போது கிடைக்கும்? 

மு. மயூரன் நான் அச்சிதழ்களுக்காகவும் இணையத்தளங்களுக்காகவும் எழுதுபவற்றில் பெரும்பாலானவை இணையத்திற் கிடைக்கின்றன. முக்கியமானவை எனது வலைப்பதிவுகளில் உள்ளன.   மொழிசார் கணிமையோடு (Language Computing) அதிகம் பரிச்சயமில்லாதவர்களுக்கு உதவுமுகமாக, தமிழ்க் கணிமை தொடர்பான அடிப்படை விளக்கங்கள் அடங்கிய நூலொன்றை எழுதி ஐந்து ஆண்டுகளாக வைத்துக்கொண்டிருக்கிறேன். அச்சுவடிவில் வெளியிடுவதிலுள்ள தயக்கமும் சோம்பேறித்தனமும் காரணம். எவருக்கெல்லாம் பயன்படுவதற்காக அதனை எழுதினேனோ அவர்களிடம் எனது சோம்பேறித்தனத்துக்காக மன்னிப்புக்கோர வேண்டும்.  கவியரங்கங்களுக்காக எழுதப்படும் கவிதைகள் மேடையில் நிகழ்த்துவதற்காக எழுதப்படுபவை. அவற்றின் வடிவம் அச்சு வடிவில் கண்ணால் வாசிப்பதற்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அதனால், அவற்றை நான் ஒலி வடிவில் வலைப்பதிவில் வைத்திருக்கிறேன்.  மற்றபடி ஏனைய எழுத்தாக்கங்களை, அச்சு வடிவில் கொண்டு வந்து, அச்சுச்செலவைப் பிரித்து விலை குறித்து, அதனை எவரும் காசு கொடுத்து வாங்கிப் படிக்குமளவுக்கு எனது படைப்புக்களின் தேவையும் பெறுமதியும் உள்ளது என நான் கருதும் போது அச்சிடுவதைப்பற்றி யோசிக்கலாம். அது வரைக்கும் அவ்வாறானதொரு எண்ணமில்லை. 




11.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் முகநூல் எழுத்தாளர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

மு. மயூரன் பலர் வாசிக்கும்படியாக தமிழில் எழுதிப் பகிரும் வாய்ப்பும், எழுதுவதற்கான ஆர்வமும் சமூக வலைத்தளங்களூடாகப் பரவியிருக்கிறதென்றால் அது உண்மையிலேயே ஆரோக்கியமான விடயம். எழுதும் வாய்ப்பு என்பது ஜனநாயகமயப்பட்டு எல்லோருக்கும் கிடைப்பதற்கு நாம் வரலாற்றில் பல கட்டங்களைத் தாண்டி வந்துள்ளோம். எழுத்தறிவின் பரவல், அச்சுப்பொறியின் அறிமுகம், இலங்கையின் இலவசக்கல்வி முறை, எழுத்தைப் பண்டிதர்களிடமிருந்தும் புலவர்களிடமிருந்தும் விடுதலை செய்து சாதாரண மக்களுக்கும் கொண்டு வந்து சேர்த்த முற்போக்கு இலக்கிய இயக்கம், கணினி மூலம் நூல்களையும் இதழ்களையும் உருவாக்கும் வசதி என்று படிப்படியாக ஜனநாயகப்பட்டு, இணையத்தின் வரவோடு அது இன்னொரு பாய்ச்சலை எட்டியிருக்கிறது.  வலைப்பதிவுகள் எழுத்தின் பல புதிய சாத்தியங்களைத் திறந்து விட்டது. எழுதுவதென்பதை எழுதுவோருக்கும் வாசிப்போருக்குமிடையிலான உடனடியானதும் தடைகளற்றதுமான ஊடாட்டமாக மாற்றியதில் வலைப்பதிவுகளின் பங்கு பெரியது. எழுதி அடுத்த கணமே எதிர்வினையை எதிர்கொள்ள நேருகிற நல்ல மாற்றம் அப்போது நிகழ்ந்தது. சமூக வலைத்தளங்களின் வருகையும் பரவலும் எழுத்தின் புதிய புதிய சாத்தியங்களைத் திறந்து விட்டிருக்கிறது.  தமது கருத்துக்களையும் எண்ணங்களையும் தாமறிந்தவற்றையும் கவிதை, சிறுகதை, கட்டுரை போன்ற வரம்பு கட்டிய வடிவங்களுக்குள் அடக்க முடியாதவர்கள் கூட அவற்றை எழுத்துவடிவிற் கொண்டு வந்து பிறரோடு பகிர்ந்து உரையாடும் வாய்ப்பு என்பது பயனுள்ளது. அச்சிதழ்களூடாகக் கட்டமைக்கப்பட்டு வந்த ‘எழுத்தாளர்கள்’ என்கிற புனித பிம்பங்கள் மெல்ல உடைவதும் ஒரு நல்ல விடயம்.  எல்லாவற்றுக்கும் நல் விளைவுள்ள பக்கமொன்று இருந்தால் தீவிளைவுள்ள பக்கமொன்றும் இருந்து தானே ஆக வேண்டும்? எழுதுவதற்கு முன் தாம் எழுதும் விடயம் தொடர்பாக அடிப்படைத் தேடலொன்றினைச் செய்வதும், தமது எழுத்துக்களைப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதும் சமூக வலைத்தளங்களில் எழுதுபவர்களிடையே குறைந்து வருகிறது என்ற குறை பலராலும் முன்வைக்கப்படுகிறது.  இணையம் , சமூக வலைத்தளங்கள், எழுத்தாளர்கள் தொடர்பான எனது எண்ணங்களை பின்வரும் தொடுப்பிலுள்ள கட்டுரையில் மிக விரிவாகப் படிக்கலாம். இக்கட்டுரை 2011இல் ஓராய்வரங்குக்காக எழுதப்பட்டது. எனவே, 2011 இற்குப் பின்னரான நிலவரங்கள் விடுபட்டிருக்கக்கூடும்: http://mauran.blogspot.com/2015/11/blog-post.html 




 12.உங்கள் கருத்துக்கள், எழுத்துக்களினால் எழுந்த விமர்சனங்கள், முரண்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்? 

மு. மயூரன் எழுத்தின் சமூகப்பயன் பற்றிச் சிந்திக்கவும் பரிசோதனை செய்யவும் தொடங்கும் போதே எம்மைச் சுற்றியுள்ள சரி பிழைகள் பற்றி விமர்சனங்களைச் செய்ய வேண்டியதாகிறது. அவ்வாறு விமர்சிக்கும் போது அதற்கான எதிர்வினைகளும் கட்டாயம் வந்து தான் தீரும். இன்று சமூக வலைத்தளங்கள் பெருகி விட்டன. எழுதும் செயற்பாடு என்பது இன்று அவ்வெழுத்து மீதான உரையாடலையும் தனது இன்றியமையாத உறுப்பாகக் கொண்டிருக்கிறது. எழுதியதை நாம் பகிர்ந்த மறு கணமே, பகிர்ந்த இடத்திலேயே அதற்கான எதிர்வினைகள் கொட்டத் தொடங்கி விடுகின்றன. எதிர்வினைகள் ஆரோக்கியமானவையாக வரலாம். காழ்ப்புணர்வுடன் வரலாம். அவற்றை எதிர்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டியது இன்றைய சூழலில் எழுதுபவருக்கு இருக்க வேண்டிய முக்கியமான திறனாகும்.  நான் எல்லாம் தெரிந்து கொண்டு எழுத வெளிக்கிடவில்லை. அப்படி எவரும் எழுதவும் முடியாது. என்னுடைய அறிவுக்கும் பட்டறிவுக்கும் எட்டியவற்றைக்கொண்டே எழுத்தாக்கங்கள் உருவாகின்றன. அவை நிறையப் போதாமைகளும் தவறுகளையும் கொண்டிருக்கின்றன. அவற்றை ஆரோக்கியமான விமர்சங்கள் பல வேளைகளில் திருத்தியுதவியுள்ளன. என்னுடைய கருத்துக்களில் மாற்றங்களை உருவாக்கியுள்ளன. ஆக்கபூர்வமான சுட்டிக்காட்டல்களின் பின் நான் மன்னிப்புக் கேட்கவும் நேர்ந்திருக்கிறது. சில வேளைகளில் விமர்சனம் செய்தவர் தனது கருத்துக்களை மாற்றிக்கொள்ள நேர்ந்திருக்கிறது. எழுதியதன் பின் எழுத்தின் மீது நிகழும் உரையாடல் ஓர் இரு வழிப்பாதை. இரு தரப்புமே கொள்ளவும் கொடுக்கவும் நிறைய வாய்ப்புண்டு.    




 13.உங்கள் நேரத்தை எமது இணைய வாசர்களுடன் செலவிட்டமைக்கு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இறுதியாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைப்பது?


 மு. மயூரன் இணையத்தளம் என்ற வகையில் வெவ்வேறு பரப்புக்களில் இயங்கும் வாசகர்கள் இருப்பார்கள். இவ்வளவு நேரம் செலவழித்து அவர்களெல்லாம் எனது பதில்களைப் படித்தமைக்கு முதலில் நன்றி கூறிக்கொள்கிறேன். உங்கள் நேரத்தை நான் வீணாக்கியிருந்தால் அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். எனது அறிவுக்கெட்டிய வரையிலும் அனுபவத்துக்கு எட்டிய வரையிலும் நான் சொன்ன கருத்துக்களில் தவறுகள் இருப்பின் மன்னிக்கவேண்டாம் விமர்சனமாக அவற்றை இவ்வலைத்தளத்துக்கு முன்வைக்குமாறு வேண்டுகிறேன். புதிதாக எழுதவரும், படைக்க வரும் இளைஞர்கள் இதனை வாசிப்பார்களானால், அவர்களோடு நான் கதைக்க விரும்பும் விடயம் ஒன்றுண்டு. மேலோட்டமாக நாம் இந்த உலகையும் எம்மைச் சுற்றியுள்ள சமூகத்தையும் பார்க்கின்ற போதும் அறிய முயல்கின்ற போதும் எமது கண்ணுக்குத் தெரிபவை எல்லாம் ஏற்கனவே அதிகாரத்திலிருப்பவர்களால், இருந்தவர்களால் கட்டமைக்கப்பட்டவையே. சமூகத்தில் நிலவும் மேலோட்டமான சரி பிழை பற்றிய கண்ணோட்டங்களும், எதனை நாம் உண்மை என்று நம்புகிறோம் என்பது எல்லாம் இவ்வாறானதே. அவற்றை அப்படியே நம்பிக்கொண்டும் கடைப்பிடித்துக் கொண்டும் வழி மொழிந்து கொண்டும் இருப்பதைத்தான் எமது எழுத்தும் கலைப்படைப்புக்களும் செய்யப்போகிறதென்றால், நாம் எமது சமூகத்தை முன்னகர்த்திச் செல்வதற்கு எவ்வகையிலும் துணை செய்ய முடியாது. பல வேளைகளில் சமூகத்துக்குத் தீங்கு செய்பவர்களாகவே மாறி விடுவோம்.  அதிகாரங்களின் கைகளிலிருக்கும் உலக, உள்ளூர் ஊடகங்கள் பலம் வாய்ந்தவை. அவை மீண்டும் மீண்டும் சொல்வதையே நாம் பெருமளவில் உண்மை என்று நம்புகிறோம். இவற்றைத் தாண்டி நாம் தேடலை விரிவு படுத்த வேண்டும். எமக்குச் சொல்லப்பட்டுள்ள உண்மைகள் உண்மையாகவே உண்மைகள் தானா என்பதைத் தேடியும் ஆராய்ந்தும் சரி பார்க்க வேண்டும். ஏராளமான தகவல்களையும் சான்றுகளையும் திரட்டி உண்மையைத்தேடி உழைக்க வேண்டும். அந்தத்தேடலின் வழியாகவே ஆரோக்கியமானதும் பயனுள்ளதுமான எழுத்துக்கள் வெளிவர முடியும். அரசியல், சமூகம், வரலாறு என எல்லாவற்றிலும் நாம் இந்தத் தேடலைச் செய்ய வேண்டும். தேடலில்லாமல் வெளிவரும் எழுத்துக்களும் படைப்புக்களும் நச்சுக் குப்பைகளாகக்கூடிய அபாயம் நிறையவேயுண்டு.  இறுதியாக, என்னுடன் நேர்காணலொன்றினைச் செய்து தன் வாசகர்களோடு நான் எழுத்தூடாக உறவாட வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த கல்குடா நேசன் இணையத்தளத்துக்கும் நேர்கண்ட ராஜ் சுகா அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.








No comments: