Saturday, November 28, 2015
நம்மவர் படைப்புக்கள் பெற்றுக்கொண்ட விருது
இலங்கை படைப்புக்களுக்கும் இந்திய படைப்புக்களுக்கும் இடையிலே, தரத்தில் ஒரு போட்டிநிலை காணப்படுவதென்பது பற்றி காலங்காலமாக பேசப்பட்டுவருகின்றது. இலக்கியமோ, சினிமாவோ, சமையலோ எதிலுமே இந்திய தரத்துக்கு ஏற்ப எமது ரசனைத்தன்மை காணப்படுகின்றது. அந்தவகையில் என்னைப்பொறுத்தவரை, இந்திய படைப்புக்களுக்கு ஈழத்து படைப்புக்கள் ஈடுகொடுக்கமுடியாதளவுக்கு வலிமை அற்றவை அல்ல சகலவித கனதியோடும் காத்திரத்தோடுமே படைப்புலகை வலம்வருகின்றது.
ஆனால் வாசக இதயத்துக்குத்தான் அத்தனை வலிமை இல்லையோ என நினைக்கின்றேன். குறுகிப்போன மனநிலை காணப்படுகின்றதோ என்ற எண்ணம் அடிக்கடி எனக்குள் எழுந்து மறையும். எம்மவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள் என்பதனையே பார்க்க முடியாமலும் அப்படி பார்த்தாலும் அதை பற்றி சிலாகிக்கவோ பெறுமைப்படவோ பாராட்டவோ முடியாதளவிற்கு மன இறுக்கமாகவே பலர் இருப்பதை மறுப்பதற்கில்லை.
இலங்கை தேசத்தில் கலைத்துறையை பொறுத்தவரையில் இசை இலக்கியம் நடனம் ஓவியம் சினிமா போன்று பல்வேறு துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்கள், சிறப்பான திறமை கொண்டவர்கள் தாராளமாகவே இருக்கின்றார்கள். ஆனால் அவர்களை சமூகத்துக்கு கொண்டுசெல்ல சரியான வழிமுறைகள்தான் காணப்படவில்லை.
ஒரு கலைப்படைப்பு சாதராண ஒரு குடிமகனிடம் (வாசகன்) சென்றடைந்து சிலாகிக்கப்படுவதையே அப்படைப்பின் வெற்றியென்பது என் தனிப்பட்ட கருத்து. ஒரு விமர்சகனாலோ அல்லது விருதுகள் சான்றிதழ்கள், பரிசுகள், பாராட்டுக்களாலோ தீர்மானிக்கப்படுவதை விட ஒரு வாசகனால் பாராட்டுதலுக்கு உட்படும் படைப்பே சிறந்த படைப்பென அடையாளப்படுத்த விழைகின்றேன்.
மாற்றான் தோட்டத்து மல்லிகை மணப்பதுபோல, இக்கரைக்கு அக்கரை போல நம் படைப்புக்கள் பேசப்படுவதும் ரசிக்கப்படுவதும் பாராட்டப்படுவதும் எண்ணிக்கையில் குறைவே. காரணம் சாமன்ய ஒரு ரசிகனால் ரசிக்கப்படாததே காரணம் அவனிடம் சென்று சேராததே அதன் தடை.
ஆனால் எனது இந்த கருத்துக்களை, நீண்ட நாட்களாக மனத்திரையில் மூடப்பட்டிருந்ததை வெளியில் கொண்டுவரும் வகையில் ஒரு சந்தர்ப்பம் எனக்கு உருவானது. எனது சக ஆசிரியர் ஒருவரின் வீட்டில் (சகோதர மொழியை சேர்ந்தவர்) தமிழ்ப்பெண் ஒருவர் வேலை செய்கின்றாராம். இந்த ஆசிரியைக்கு மொழிப்பிரச்சனை காரணமாக அந்தப்பெண்ணுக்கு நல்ல புத்தகமோ பத்திரிகையோ வாங்கிக்கொடுக்க முடியவில்லை என குறைபட்டுக்கொண்டே எனது உதவியை நாடினார். நானோ என்னிடமிருந்த இலங்கை படைப்பாளிகளின் சிறுகதை நூல்களை கொடுத்தனுப்பினேன். முதலில் 2 நூல்களையே அனுப்பினேன் வாசகரின் ரசனை எப்படியென்று தெரியாததினால். அது எழுத்தாளர் ரிஸ்னா அவர்களுடைய "வைகறை" மற்றும் யோ.புரட்சி அவர்களின் " ஆஷா நாயும் அவளும்" சிறுகதை நூல்களே.
மூன்று நாட்களுக்குப்பின் புத்தகம் திரும்பி வந்தது அதனோடு ஒரு விருது பொதியும் சேர்த்தே. ஆமாம் அந்த வாசகியின் சிலாகிப்பும் ஆனந்தமும் ரசனையுமே அந்த விருதுகள். "எல்லா கதைகளும் உண்மைக்கதைகள் போலவே அவ்வளவு நன்றாக இருந்தது இதுபோல இன்னும் புத்தகங்கள் இருந்தால் கோபிக்காமல் தந்துதவுங்கள்" என்பதே அச்சான்றிதழின் கோரிக்கை. அதன் பிறகு எழுத்தாளரும் கவிஞரும் ஒலிபரப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களுடைய "ஒரு சுரங்கை பேரீச்சம்பழம்" நூலோடு இன்னும் சிலவற்றை அனுப்பினேன். அந்தப்பெண்ணுடைய தொழில் சூழல் சாதகமாக அமைந்தது இன்னொரு நன்மையாக முடிந்தது.
ஆக ஒரு படைப்பை ரசிக்கவும் விமர்சிக்கவும் படிப்போ பட்டமோ பாண்டித்தியமோ அவசியமில்லை நல்ல வாசிப்பறிவும் ரசிக்கும் கலையும் சிலாகிக்கும் பெறுந்தன்மையும் இருந்தாலே போதும் நம்படைப்புக்கள் சிகரங்கள் எட்டிவிட. இந்த தகுதிகளை நான் இந்த வாசகியிடம் கண்டேன் சாதாரண கல்வித்தரம் கொண்ட ஒரு நல்ல வாசகியை கண்டுகொண்டதில் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. எனது படைப்புக்களுக்கு கிடைத்த பாராட்டைப்போல உள்ளம் நிறைந்து போனேன்.
இதுபோல இலங்கை படைப்புக்கள் சகல மட்டங்களிலும் ஊடுபுகுந்து பாதிப்பை ஏற்படுத்தி நிலைத்திட வேண்டும் நமது மக்களிடம் நமது படைப்புக்கள் நன்மதிப்பை பெறவேண்டும். தேடித்தேடி பெற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையை உருவாக்கவேண்டும் என்பதே என் மேலோங்கிய அவா. இந்த ஆசையை சமூக மட்டத்துக்கு கொண்டு செல்லக்கூடிய அனைவரும் பங்கெடுத்துக்கொள்ளுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment