Friday, November 20, 2015

விரிவுரையாளரும், பெண் எழுத்தாளருமான லறீனா அப்துல் ஹக் அவர்கள் நேர்காணலில்

கல்குடா நேசன் இணைய  இதழில் வெளிவந்த நேர்காணல் [20.11.2015]http://kalkudahnation.com/



கல்குடா நேசனின் 15 வது வார இலக்கிய நேர்காணலில் இடம்பெறுகிறார் விரிவுரையாளரும், பெண் எழுத்தாளருமான லறீனா அப்துல் ஹக் அவர்கள்-நேர்காணல் உள்ளே… 


பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. இதன் தொடரின் இன்று 20.11.2015ம் திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் 15 வது இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் பல்கலைக்கழக விரிவுரையாளரும், எழுத்தாளருமான லறீனா அப்துல் ஹக் அவர்கள். 

“தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகக் கல்வி கிடைக்கத்தக்கதாக நமது நாட்டின் கல்வி முறைமை மாற்றப்பட வேண்டும். இது தொடர்பில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி, நாட்டின் கல்வியியலாளர்களும் அதிகக் கரிசனை எடுக்க வேண்டும். நம்முடைய நாட்டில் “அனைவருக்கும் பல்கலைக்கழக உயர் கல்வி” என்ற தொனிப்பொருள் குறித்த பரந்து பட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என அவருடனான நேர்காணலில் எம்முடனும் கல்குடா நேசன் வாசகர்களுடனும் மனந்திறந்து பேசுகிறார். 

கவிதாயினி த. எலிசபெத்: பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் எழுத்தாளராகவும் அறியப்பட்ட நீங்கள்இ உங்களுடைய அறிமுகத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்? 


லறீனா அப்துல் ஹக்: எனது முழுப்பெயர் லறீனா அப்துல் ஹக். பிறப்பிடம் மாத்தளை. திருமணமாகிவிட்டது. ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள். கணவர் முஹம்மத் பிர்தௌஸ். தற்போது  ஹந்தெஸ்ஸ எனுமிடத்தில் வசிக்கின்றேன். உயர் தரம் (கலைப்பிரிவு) வரை மாத்தளை ஆமினா மகளிர் கல்லூரியில் கல்வி கற்றேன். 
2002 பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பீ.ஏ. தமிழ் சிறப்புப் பட்டதாரியானதோடு, 2004 வரை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலும், 
2007 வரை மொழிபெயர்ப்புக் கற்கைநெறித் துறையிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். தற்போது முதுமாணிப்பட்ட (MPhil) ஆய்வுக்கட்டுரையை எழுதி முடித்துள்ளேன்.

கவிதாயினி த. எலிசபெத்: கலைத்துறையில் உங்களது ஆர்வம் குறித்து கூறுங்களேன்? 

லறீனா அப்துல் ஹக்: எல்லோரைப் போலவும் எனக்கும் கலைத்துறையில் மிகுந்த ஈடுபாடுண்டு. எனது பின்வரும் வெளியீடுகளை அதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். 1. எருமை மாடும் துளசிச்செடியும் (சிறுகதைத்தொகுதி) – 2003 2. வீசுக புயலே (கவிதைத்தொகுதி) – 2003 3. தமிழ்மொழியும் இலக்கியமும்: சில சிந்தனைகள் (ஆய்வுக்கட்டுரைத் தொகுதி) 2003 4. ஒரு தீப்பிழம்பும் சில அரும்புகளும் (நாவல்) 2004 5. செ. கணேசலிங்கனின் அண்மைக்கால நாவல்களில் பெண் பாத்திரங்கள்: ஒரு பெண்ணிலை நோக்கு (ஆய்வுநூல்) – 2004 6. மௌனத்தின் ஓசைகள் – மொழிபெயர்ப்புக் கவிதைத்தொகுதி 2008 7. வார்த்தைகளின் வலி தெரியாமல்… – சமூகவியல் கட்டுரைகள் 2012 8. “பொருள் வெளி” ஆய்வுக் கட்டுரைத்தொகுதி 2012 இவை தவிர, ‘நம் அயலவர்கள்’ எனும் சிறுகதைத்தொகுதிக்காக 5 சிங்களச் சிறுகதைகளைத் தமிழிலும், ‘அசல் வெசி அப்பி’ எனும் சிங்களச் சிறுகதைத்தொகுதிக்காக ரஞ்சகுமாரின் ‘கோளறு பதிகம்’ சிறுகதையை (தம்மிக்க ஜயசிங்ஹ என்பாருடன் இணைந்து) சிங்கள மொழியிலும் மொழியாக்கம் செய்துள்ளேன். மேலும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் உரைகள், கட்டுரைகளை மொழி மாற்றம் செய்துள்ளேன். தற்போது ‘சிங்கள மொழியில் தமிழ் மொழியின் செல்வாக்கு’ எனும் எனது மொழி பெயர்ப்பு நூலை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். ‘தென்றலிலே’ எனும் பெயரில் என்னுடைய பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு ஒன்று விரைவில் வெளிவரவுள்ளது. அந்த இசைத்தட்டில் இடம்பெறவுள்ள, நான் இயற்றி, மெட்டமைத்து, இசையமைத்துப் பாடிய இரண்டு பாடல்கள் http://nilapenn.com தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும்,  http://nilapenn.com எனும் எனது இணையத்தளத்தை நிர்வகிக்கின்றேன். கவிதாயினி த. எலிசபெத்: கலைத்துறை சார்ந்த உங்களது ஈடுபாடு பற்றி…? லறீனா அப்துல் ஹக்: * பேராதனைப் பல்கலைக்கழக பட்டப் பின்படிப்பு ஆய்வுக்கருத்தரங்குகளில் மொழிபெயர்ப்புப் பிரச்சினைகள் குறித்து ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளேன். *  2011இல் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளேன். (ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு) *  2012இல் சர்வதேச இலக்கிய மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளேன். (கவிதை மொழிபெயர்ப்பும் கோட்பாட்டியல் பிரச்சினைகளும்: சில அனுபவக்குறிப்புக்கள்) * 2012 இல் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுக்கருத்தரங்கில் கட்டுரை சமர்ப்பித்துள்ளேன். (கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளில் “பெண்” பற்றிய விம்பம்) 

கவிதாயினி த. எலிசபெத்: சமூகத்தின் அறிவுப்பாதைக்கு வித்திட வேண்டிய பல்கலைக்கழகச் சூழல் பல்வேறு அகஇ புறக்காரணிகளால் அடிக்கடி தளம்பல் நிலையினை சந்திக்கின்றது. இது பல்கலைக்கழக கல்வி முறையின் மீதான நம்பிக்கையின்மையினையும் ஆர்வமின்மையினையும் மக்களிடையே ஏற்படுத்துகின்றது. இது குறித்து உங்களது பதில் என்ன?

 லறீனா அப்துல் ஹக்: இது உண்மையிலேயே வருத்தமளிக்கக்கூடிய ஒரு நிலைமை தான். ஆனால், நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகள் ஏனைய எல்லாத்துறைகளைப் போலவே கல்வித் துறையிலும் பெரும் பாதிப்பைச் செலுத்தி வருவது தவிர்க்க முடியாததாகும். இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் நாட்டின் அரசியல் குழப்ப நிலையால் பல்கலைக்கழகங்கள் சில வருடங்கள் இயங்காமல் இருந்த காரணத்தால், பிற்காலத்தில் உயர் தரப் பரீட்சை எழுதி விட்டு, பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்காக இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டது. நாமும் அப்படிக் காத்திருந்து பல்கலைக்கழகம் சென்றவர்கள் தான். எனினும், இப்போதெல்லாம் உயர் தரப் பரீட்சை எழுதிய பின் அவ்வளவு நீண்ட காலக் காத்திருப்பின்றியே மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லக்கூடியதாய் இருப்பதும், பல்கலைக்கழகங்களினதும், துறைசார் கற்கைகளினதும் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் சாதகமான அம்சங்களே. உண்மையில், பல்கலைக்கழகக் கல்வி என்றதும், நாம் கருத்திற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயம் ஒன்றுள்ளது. இது குறித்து நாம் அலட்டிக்கொள்வதில்லை அதாவது, நமது நாட்டில் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியெய்திய மொத்த மாணவர்களில் 10 சத வீதத்துக்கும் குறைவானோருக்கே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கிறது. இந்நிலைமை மாற வேண்டும். தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகக் கல்வி கிடைக்கத்தக்கதாக நமது நாட்டின் கல்வி முறைமை மாற்றப்பட வேண்டும். இது தொடர்பில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி, நாட்டின் கல்வியியலாளர்களும் அதிகக் கரிசனை எடுக்க வேண்டும். இவ்விடத்தில், சிலி நாட்டின் இளம் புரட்சி வீராங்கனை கமிலா வொலேஜோவின் பணி நினைவிற்கொள்ளப்பட வேண்டியதாகும். நாட்டில் அனைவருக்கும் உயர் கல்வி கிடைக்க வேண்டுமென்ற போராட்டத்தை முன்னெடுத்து, அந்நாட்டு அரசுக்கே பெரும் சவாலாய்த் திகழ்ந்தவர் அவர். நம்முடைய நாட்டில் “அனைவருக்கும் பல்கலைக்கழக உயர் கல்வி” என்ற தொனிப்பொருள் குறித்த பரந்து பட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

 கவிதாயினி த. எலிசபெத்: மொழிபெயர்ப்பு எழுத்தாக்கம் ‘கத்தியின் மீது நடப்பது போன்ற செயல்’ என்று கூறப்படுகின்றது. இதைப் பற்றியும், உங்களுடைய மொழி பெயர்ப்பு அனுபவங்கள் பற்றியும் கூறுங்கள்? 

லறீனா அப்துல் ஹக்: உண்மை தான். எந்த ஒரு மொழிபெயர்ப்பும் 100% அதன் மூலப்படைப்புக்குச் சமமானதாக இருப்பதில்லை. என்ற போதிலும், அதிக பட்ச ஒத்த தன்மையைக் கொண்டு வர முயற்சிப்பதே ஒரு மொழிபெயர்ப்பாளர் செய்யக்கூடிய பணியாகும். எனினும், இதில் மிகப்பெரும் சவால்களை ஒரு மொழி பெயர்ப்பாளர் எதிர்கொள்ள நேர்கின்றது. இது தொடர்பில் தமிழிலே விரிவான ஒரு நூல் எழுதும் உத்தேசம் எனக்குண்டு. 

கவிதாயினி த. எலிசபெத்: ‘மொழிபெயர்ப்பு’ என்பது பல மொழி இலக்கியச் சுவைகளை அவரவர் மொழிகளில் பெற்றுக்கொள்ளும் அரிய அவசியமான விடயமாக இருக்கின்றது. அந்தச் சிறப்புத் தகைமையைப் பெற்ற உங்களுக்கு மொழி பெயர்ப்பில் எவ்வாறு  ஈடுபாடு ஏற்பட்டது? எவ்வாறான விடயங்களை மொழி பெயர்த்து தமிழ் இலக்கியத்துக்கு வழங்குகின்றீர்கள்? 

லறீனா அப்துல் ஹக்: பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்தில் தான் நான் இத்துறையில் ஆர்வம் காட்டத் தொடங்கினேன். அங்கு நிலவிய பல்லின- பன்மொழிச் சமூகச் சூழலும் இதற்கு ஒரு காரணம் எனலாம். அவ்வப்போது சிங்கள, ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்து கலாநிதி துரை. மனோகரனின் பார்வைக்கு அனுப்புவதுண்டு. சங்கப்பலகை என்னும் தமிழ்த்துறையின் அறிவித்தல் பலகையில்  அவை உடனுக்குடன் வெளியிடப்படும். அதுவே பின்னர் இடையறாத பயிற்சி மூலம் படிப்படியாக வளர்ச்சியடைந்தது. மேலும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராய்ப் பணியாற்றிய கால கட்டத்தில் தமிழ்-ஆங்கில-சிங்களத்துறைகள் மூன்றும் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்த ஐந்து வார கால மொழிபெயர்ப்புப் பயிலரங்கில் பங்கு கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமையை என் வாழ்வில் கிடைக்கப்பெற்ற  மகத்தான வரப்பிரசாதமாய்க் கருதுகின்றேன். இதன் பின்னர், அதே பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட மொழி பெயர்ப்புக் கற்கைகளுக்கான டிப்ளோமா, பட்டப்பின் படிப்பு டிப்ளோமா பாடநெறிகளுக்கான விரிவுரையாளராகப் பணியாற்றியமை மூலம் நான் இத்துறையில் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. அதன்படியே என்னுடைய முதுமாணிப்பட்ட ஆய்வேட்டுக்கான தலைப்பையும் மொழிபெயர்ப்புத்துறை சார்ந்ததாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். 


கவிதாயினி த. எலிசபெத்: பெண்ணியச் சிந்தனையை எவ்வாறு நோக்குகின்றீர்கள்? இச்சிந்தனையில் பலருக்கு உடன்பாடின்மையினை அவதானிக்க முடிகின்றது. இதற்கான காரணம் என்ன? 

லறீனா அப்துல் ஹக்: பெண்ணியம், பெண்ணியவாதம் என்பன குறித்து சமூகத்தில் ஒரு வகைத் தட்டையான புரிதல் பரவலாகியிருப்பது வருந்தத்தக்கதே! உண்மையில், பெண்ணியவாதம் என்பது சோஷலிசப் பெண்ணிலைவாதம், மார்க்ஸியப் பெண்ணிலைவாதம், தீவிரப் பெண்ணிலைவாதம் முதலான பல்வேறு வகைப்பட்டதாகும். என்னைப் பொறுத்த வரையில், ஆணும் பெண்ணும் இணைந்த சமூக அமைப்பில் இரு தரப்பாருக்கும் சிறப்பியல்புகள், தனித்தன்மைகள் உள்ளன. அவை பரஸ்பரம் புரிந்து கொள்ளப்படவும் மதிக்கப்படவும் வேண்டும். வீட்டுப் பணியிலும் சரி, சமூகப் பணியிலும் சரி, ஒருவருக்கொருவர் உதவியாகவும் ஒத்துழைப்போடும் பணியாற்ற முன்வர வேண்டும். இதில் ஈகோ பார்க்க எதுவும் இல்லை என்பதே என்னுடைய நிலைப்பாடாகும். “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்” என்ற பாரதியின் வரிகள் எனக்கு மிகவும் விருப்பமானவை. மேலும், விளம்பரம், கலை, இலக்கியம் (சினிமா/பாடல் உட்பட) என்பவற்றில் பெண் ஒரு பாலியல் பண்டமாக, வெற்று உடலாகப் பார்க்கப்படும் மனப்பாங்கு மாற்றப்பட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக, பெண்ணின் உடல் ஒரு வர்த்தகப் பண்டமாக்கப்படுவதையும், அழகிப்போட்டி, ஃபெஷன் ஷோ என்ற பெயரில் அவளது உடல் ஒரு “பாலியல் பண்டமாக” ஆக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டுமானால், ‘தன்னுடைய உடல் அழகால் ஆண்கள் கவரப்படுவதே தனக்குப் பெருமை தருவது’ என்று எண்ணி அழகு சாதனங்களின் பின்னால் அலைந்து திரியும் அடிமை மனப்பான்மையைப் பெண்கள் வெற்றி கொள்ள வேண்டும். ஆம்! இது முதலில் தனக்குள் நிகழ்த்தப்பட வேண்டிய போராட்டம். அதன் பிறகே பெண்ணின் ஒடுக்குமுறைக்கெதிரான அடுத்த கட்ட போராட்டம் முனைப்புப்பெற முடியும் என்று நான் நம்புகின்றேன்.

கவிதாயினி த. எலிசபெத்: ஆண் படைப்பாளிகளும் பெண்ணின் மனவுணர்வை அப்படியே பிரதிபலிக்கும் ஆக்கங்களை படைக்கின்றனர். இது அவர்களின் நேரான சிந்தனையுடன் அதாவது, புரிதலுடன் கூடியதாக வெளிப்படுகின்றதா? பெண்ணைப் பற்றி ஒரு பெண் சொல்வதற்கும் ஆண் சொல்வதற்கும் எவ்வாறான ஒற்றுமை வேற்றுமைகளை உணர முடிகின்றது? 

லறீனா அப்துல் ஹக்: பொதுவாக, ஒரு படைப்பாளி எனும் போது உணர்வுகளைப் புரியும் ஆற்றல் இயல்பானதே என்பது முக்கியமானது. அவனோ அவளோ இன்னொரு நிலையில் தன்னை வைத்து உணரும் திறன் தான் ஒரு படைப்பாளியின் மிகப் பெரிய பலம். எனவே தான், ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் உணர்தல் சாத்தியமாகின்றது. நம்முடைய மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கனை எடுத்துக் கொண்டால், பெண்களின் பிரச்சினைகளை அவரளவுக்கு யாரும் பேசவில்லை என்ற அளவுக்கு அதில் மிகப் பெரும் பங்காற்றியுள்ளார். எனினும், இதில் குறிப்பிடத்தக்க நுண்ணிய வேறுபாடுகளும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாகப் பெண்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்கும் இடங்களில் அவர்களுக்கு ஒரு பெண்ணாகவே இருந்து தீர்வுகளை முன்வைப்பதில் சில இடர்பாடுகள் இருக்கவே செய்கின்றன என்பதையும் நாம் மறுக்க முடியாது. அதே வேளை, ஓர் ஆண் தன்னைப் பெண்ணாகப் பாவனை செய்து, தனது உணர்வு நிலையை வெளிப்படுத்துவதையும், ஒரு பெண் நேரடியாக தன் உணர்வை வெளிப்படுத்துவதையும் சமூகம் எதிர்கொள்ளும் விதமும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும். மாணிக்க வாசகர்- ஆண்டாள் இருவரதும் கடவுள் மீதான காதல் உணர்வின் வெளிப்பாடுகாளுக்கு வழங்கப்படும் சமூக அங்கீகாரமும், வெளிப்படையாகக் காதல் தாபத்தை வெளிப்படுத்தும் வகையில் எழுதும் ஆண்களையும் பெண்களையும் சமூகம் பார்க்கும் விதத்திலுள்ள வேறுபாடுகளும் இதற்கு மிகச் சிறந்த சான்றாகும். எனவே, இது தொடர்பில்இ வெளிப்படுத்தப்படும் உணர்வு நிலை, அது கட்டமைக்கப்படும் சூழல்  சார்ந்த புறக்காரணிகள் ஆகியனவும் சேர்ந்தே இந்த ஒற்றுமை வேற்றுமைகளைத் தீர்மானிக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். 

கவிதாயினி த. எலிசபெத்: காத்திரமான கருத்துக்களோடு வெளிப்படும் உங்களுடைய எழுத்துக்களை எவ்வாறு சமூகத்திடம் கொண்டு சேர்க்கின்றீர்கள்? அதில் விஷேடமாக எதனை வலியுறுத்திக்கூற விளைகின்றீர்கள்? 

லறீனா அப்துல் ஹக்: பொதுவாக என்னுடைய எழுத்துக்களை சமூக அவலங்களை வெளிக்கொணரவும், குறிப்பாகப் பெண்ணின் துயரங்களை அடையாளப்படுத்தவும், சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வைக் கட்டியெழுப்பவுமாகப் பல வகையிலும் நான் பயன்படுத்த முனைகின்றேன். எழுத்து என்பது இறைவனின் கொடை. அதனைச் சமூக மேம்பாட்டுக்காக, மானிட நலனுக்காகப் பயன்படுத்துவது அந்தக் கொடைக்கான நன்றிக்கடன் என்றே கருதுகின்றேன். எனவே, அதன் பொருட்டு பாரம்பரியமான ஊடகங்களோடு, இணையம் முதலான மின்னூடகங்களையும் பயன்படுத்துவதன் மூலமும், அக்கருத்துக்களை தமிழ்-சிங்களம்- ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் எடுத்துச் சொல்வதன் மூலம் மிகப் பரவலாகக் கொண்டு செல்ல முடியும் என்பது எனது நம்பிக்கை. 

கவிதாயினி த. எலிசபெத்: பெண் படைப்பாளிகளின் படைப்புக்கள் எவ்வாறான நிலையில் காணப்படுகின்றது? வளர்ந்து வருகின்ற பெண் படைப்பாளிகளின் போக்கினில் எவ்வாறான தன்மையினை அவதானிக்கின்றீர்கள்? 

லறீனா அப்துல் ஹக்: இன்றைய பெண் படைப்பாளிகளின் எழுத்துப் பங்களிப்புக்கள் முன்னர் எப்பொழுதையும் விட மிகவும் காத்திரமாக முனைப்புப் பெற்றுள்ளமை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, இலங்கைப் பெண் படைப்பாளிகள் பலரும் தமது வெளியீடுகளை நூல் வடிவில் கொண்டு வந்துள்ளார்கள். பட்டியல் சற்று நீளமானது என்பதால் பெயர்களைச் சுட்டுவதைத் தவிர்த்துக்கொள்கின்றேன். அவற்றுள் பெண்கள் தமக்கான பொருள் வெளியைத் தாமே வரையறுத்துக் கொண்டவர்களாகவும், தமக்கான மொழியை மிகவும் சுதந்திரமாகக் கையாள்பவர்களாகவும் உள்ளமை மிகுந்த மனநிறைவைத் தருகின்றது. இது குறித்து, கொழும்புத் தமிழ் சங்கத்தில் இடம்பெற்ற சர்வதேசத் தமிழ்  எழுத்தாளர் மாநாட்டில் சமர்ப்பித்த கட்டுரையிலும் நான் விரிவாகப் பேசியுள்ளேன். 

கவிதாயினி த. எலிசபெத்: இசை மீது ஆர்வங்கொண்ட நீங்கள் எதிர்காலத்தில் பாடல் இயற்றி, இசையில் பாடுகின்ற திட்டங்கள் ஏதும் கொண்டுள்ளீர்களா? 

லறீனா அப்துல் ஹக்: ஆம். என்னிடம் 10 பாடல்கள் கைவசமுள்ளன. நானே எழுதி மெட்டமைத்துள்ளதோடு, அவற்றுக்கான இசை எப்படி அமைய வேண்டுமென்பது பற்றியும் திட்டமிட்டு வைத்துள்ளேன். அவற்றுள் இரண்டை நீங்கள் என்னுடைய இணையத்தளத்தில் கேட்டு மகிழலாம். இன்ஷா அல்லாஹ், வெகு விரைவில் என் பாடல்கள் அடங்கிய அல்பமொன்றை வெளியிட உத்தேசித்துள்ளேன். கவிதாயினி த. எலிசபெத்: தமிழிலிருந்து ஏனைய மொழிகளுக்கு கவிதைகளை மொழி பெயர்ப்புச் செய்துள்ளீர்களா? அதற்கான திட்டங்கள், ஆர்வம் எப்படி காணப்படுகின்றது? லறீனா அப்துல் ஹக்: இன்னும் இல்லை. இனி அப்படியான முயற்சிகளில் ஈடுபடும் ஆர்வமுண்டு. 

கவிதாயினி த. எலிசபெத்: பல்வேறு சிக்கல்களோடும் பிரச்சனைகளோடும் அல்லல்படும் பெண் சமூதாயத்துக்கு  என்ன கூற விரும்புகின்றீர்கள்?

 லறீனா அப்துல் ஹக்: வாழ்க்கை என்பது எப்போதும் ஒரு போராட்டம் தான். வீட்டிலும் சரி வெளியிலும் சரி அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, சவால்களைக் கண்டு ஒருபோதும் மனம் தளர்ந்து விடக்கூடாது. நம்மை நாமே வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் முதற்படியாக நமது கல்வித் தகைமையை வளர்த்துக் கொள்வதோடு, நம்முள் உள்ளார்ந்திருக்கும் ஆற்றல்களை இனங்கண்டு அவற்றை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மிக முக்கியமான ஓர் அம்சம் என்னவென்றால், பெண்கள் தம்முடைய சுய கௌரவம் குறித்த விழிப்புணர்வுடையவர்களாய் மாற வேண்டும். தாம் வெறுமனே ஒரு பாலியல் பண்டமாக, அலங்காரப் பதுமையாக, வெற்று உடலாகப் பார்க்கப்படுவதை பெருமைக்குரியதாகக் கருதும் அறியாமையிலிருந்து பெண்கள் மீள வேண்டும். குறிப்பாக, இணையப் பாவனை இருந்தும் கூட எப்போது பார்த்தாலும் சமையல் குறிப்பு, அழகுக்குறிப்பு என்பவற்றையே தேடிச் செல்லும் கிணற்றுத் தவளைகளாக இருக்காமல், அந்நிலையை மாற்றி நாட்டு நடப்பு, உலக நடப்பு என்பன குறித்த அறிவை வளர்த்துக்கொள்ள முன்வர வேண்டும். சமூக அக்கறை, மானிட நலன் என்பனவற்றை நாடும் வகையில் அறிவையும் மனதையும் விசாலப்படுத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறே, ஒரு பெண்ணின் வெற்றியும் சிறப்பும் அவளின் அறிவிலும் ஆற்றலிலும் ஆளுமையிலுமே தங்கியுள்ளன என்ற தன்னம்பிக்கையும் நிமிர்வும் தன்மானமுள்ள ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய பண்புகளாகும். பாரதி இதனையே “நேர்கொண்ட பார்வையும், திமிர்ந்த ஞானச் செருக்கும்”  என்று குறிப்பிட்டுள்ளான். அத்தகைய புதுமைப் பெண்களே உருவாகவும் உருவாக்கப்படவும் வேண்டும்.

 கவிதாயினி த. எலிசபெத்: உங்களுடைய கலை, இலக்கியத் திறமைகளுக்கு கிடைத்த வெற்றிகளையும் விருதுகளையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்? 

லறீனா அப்துல் ஹக்: சிறுகதைக்கான பரிசுகள், விருதுகள் * வீரகேசரி பவள விழா சிறுகதைப்போட்டி (2005) 3ஆம் பரிசு * சிறுகதை: வேரில் வைத்த தீ * அமரர் வரப்பிரகாஷ் நினைவு தின சிறுகதைப்போட்டி (பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம்) (2000) 2 ஆம் பரிசு * சிறுகதை: எருமை மாடும் துளசிச்செடியும் *அவுஸ்திரேலிய கலை இலக்கிய சங்கத்தின் பத்தாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டையொட்டி நடாத்தப்பட்ட சர்வதேச சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு (2010) சிறுகதை: எனக்கான ‘வெளி’ கவிதை * தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள்: 1 ஆம் பரிசு (2000) * அமரர் வரப்பிரகாஷ் நினைவு தின கவிதைப்போட்டி (பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம்) (2000) 2ஆம் பரிசு பாடல் * தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 1ஆம் பரிசு (2000) * தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 3ஆம் பரிசு (1993இ 1995) * தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 2 ஆம் பரிசு (1992) சிறுவர் இலக்கியம் * தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 2ஆம் பரிசு (2003) * தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 2 ஆம் பரிசு (1994) நாடகம் ழூ பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க நாடகப்போட்டி : நினைவில் நின்ற நடிகைக்கான சுழற்கேடய விருது (1998) ழூ நாடகம்: “இதுவரை இவர்கள்…” கட்டுரை * கட்டுரை: “நமக்கென்றொரு நாளிதழ்: பிரச்சினைகளும் சவால்களும்” என்ற தலைப்பில் “பாலைவனத்தூது” * வலைதளம் நடத்திய சர்வதேச கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு. பாடல் இயற்றுதல் (வரிகள், மெட்டு, இசையமைப்பு) * பேராதனைப் பல்கலைக்கழக சங்கீத நாட்டிய சங்க வருடாந்தப்போட்டிகள்: 3ஆம் பரிசு (1999) * வவுனியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் 2003 ஆம் ஆண்டு ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின விழாவில்இ ‘பல்துறை ஆற்றல் கொண்ட முஸ்லிம் பெண்’ணுக்கான விருது கிடைக்கப்பெற்றது.

 இவரது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற கல்குடா நேசன்  சார்பாக நாமும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

No comments: