http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/12/blog-post_94.html (02.12.2015)
தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் 21.11.2015 அன்று கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் ஓர் நூல் வெளியீட்டு நிகழ்வும் குறுந்திரைப்பட வெளியீடும் இனிதே நடைபெற்றது. புத்தளத்தைச் சேர்ந்த கவித்தீபம் நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் "கடல் தேடும் நதி" கவிதைத்தொகுப்பும் "பேச மறந்த வார்த்தை" குறுந்திரைப்பட வெளியீட்டு நிகழ்வுகளுமே அவை.
பெண்கள் அமைப்பான தடாகத்தின் வெற்றிகளில் இவ்வெளியீட்டு நிகழ்வும் ஒன்றாகும். நிகழ்ச்சி நிரலின்படி காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவேண்டும் நிகழ்வுக்கு வரவேண்டிய எல்லாரும் நேரத்திற்கு சமூகமளித்தாயிற்று. நிகழ்வு தொடங்குவதில் தாமதம். அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களுக்கு முகத்தில் சிறு வாடல். ஆமாம் அறிவிப்பாளர் வந்திசேரவில்லை விழாவுக்கு. அவருக்கு பதிலாக செய்தியொன்றே வந்தது, அவருடைய உறவினரின் மரணச்செய்தியறிந்து அறிவிப்பாளர் அந்நிகழ்வுக்கு சென்றுவிட்டதாக. சபையோரை வரவேற்று பேசிக்கொண்டிருந்தவர் எந்தவித சலனமுமற்று மேடையிலேறி அறிவிப்பாளராக அவதாரமெடுத்துவிட்டார். சுய பிராத்தனையுடன் தடாகத்தின் தலைவி கவிதாயினி சுஹைதா கரீம் வரவேற்புரையினையும்
தலைமையுரையை பாவரசு பதியத்தலாவை பாரூக் அவர்களும் ஆற்றி வரவேற்றனர்.
நேர ஓட்டம் சீராக செல்லவும் அறிவிப்பாளர் திருமதி வரதாராணி அவர்கள் வந்து இணைந்துகொள்ளவும் சரியாக இருந்தது. தன் இனிய குரலால் இளமையோடும் நிகழ்ச்சிகளை கலையாகவும் கலகலப்பாகவும் நடத்திச்சென்றார்.
நிகழ்வின் பிரதம அதிதியாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஸாட் பதியூதின் அவர்கள் கலந்து நிகழ்வினை சிறப்பித்தார். மற்றும் கெளரவ அதிதிகள் விஷேட அதிதிகள் அனைவரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். நூலின் முதற்பிரதியினை கனடாவைச்சேர்ந்த படைப்பாளிகள் உலகம் அமைப்பாளர் திரு. ஐங்கரன் கதிர்காமநாதன் அவர்கள் சார்பாக, அதன் இலங்கை அமைப்பாளரும்,செல்லமுத்து வெளியீட்டகத்தின் தலைவருமான கவிஞர் யோ.புரட்சி அவர்கள் பெற்றுக்கொண்டார். நூல் வெளியீட்டின் ஆரம்பம் மிக அழகான முறையில் அமைந்திருந்தது.
மேடையேறிய அமைச்சரிடன் சிறிய அளவுடைய குர் ஆன் ஒன்றினை பரிசளித்து வரவேற்றார் தடாக அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள். "எழுத்தாளர்கள் ஏனோ பெரும்பாலும் ஏழைகளாகவே இருக்கின்றார்கள், நல்ல படைப்பாளிகள் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள அரும்பாடு படுகின்றார்கள் என்ற ஆதங்கத்தோடும் அவர்களை ஊக்குவிக்கவேண்டுமென்ற நல்லெண்ணத்தோடும், அரசியல்வாதிகளை பலர் விமர்சிக்கின்றார்கள் அதில் சில காழ்ப்புணர்ச்சிகளாகவும், பல விமர்சனங்களால் தங்களை அறிந்துகொள்ளவும் முடிகின்றது என தொடர்ந்த வெளிப்படையான அமைச்சர் அவர்களின் உரையுடன் முக்கியமாக அரசியல் பேசா சூழ்நிலையில், சிறப்புப்பிரதிகளை பெறும் கலைஞர்கள் கெளரவ அமைச்சரிடமே நூலினை பெற்றுக்கொண்டார்கள். வந்த தொலைபேசி அழைப்பொன்றில் அவசரம் என்று கையசைத்து சென்றுவிடாமல் எல்லாரிடமும் நட்பாகப்பேசி சிறப்புப்பிரதிகளை பொறுமையாக வழங்கி, பட்டம் பெற்ற படைப்பாளிகளுக்கு பொன்னாடை போர்த்தி புகைப்படங்களெடுத்து சென்றதும் தனித்தனியாக கலைஞர்களை அறிந்து வைத்ததும், அரசியல்வாதி என்ற நிலையை சற்று தள்ளி வைத்திருந்தது. சரளமாக நடந்து கொண்டது சபையாரை சந்தோஷத்தில் ஆழ்த்தியது எனலாம்.
அமைச்சரிடம் தடாகத்தின் விருதுகளை பெற்றுக்கொண்டவர்கள், கலாநிதி துறை மனோகரன், மக்கியா முஸம்மில், வவுனியா செந்தூரன், பாவரசு பதியத்தளாவ பாரூக், அல்ஹாஜ் எம்.எச்.ஏ.சமத், கவிஞர் ஐங்கரன் கதிர்காமநாதன், மெளலவி காத்தான்குடி பெளஸ்,கவிஞர் த.ரூபன், கவிஞர் இஸ்மாயில் றியாஸ், கவிதாயினி எஸ். ஆர்.கலா, கவிதாயினி சுல்பிகா ஷரீப், கவிஞர் சுஜப்.எம். காஸிம் ஆகியோரே. சமூகமளிக்க முடியாதவர்களின் விருதுகளை அவர்களின் உறவினர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
அதன் பின்னர் கவிவாழ்த்தினை கவிதாயினி ஸிமாரா அலி அவர்கள் பாட, மிகச்செம்மையான ஓர் நூல் பார்வையினை தந்திருந்தார் வன்னியூர் செந்தூரன் அவர்கள். தாழ்ந்து உயரும் குரலில் சபையோரை தம்பக்கம் ஈர்க்க வைத்தது அவரது நிதர்சனமான விமர்சனப்பார்வை. மேடைக்காக குறைகளுக்கு ஆடைபோட்டு அலங்கரிக்காமல் நிறைகளை நிறைவாகவும் பிழைகளை அழகாகவும் சொல்லி உரையினை நிறைவு செய்தார். அத்தோடு செல்லமுத்து வெளியீட்டகத்தின் இணைப்பாளர் திரு யோ.புரட்சி அவர்களின் சிறப்புரையும் சிறப்பான இடத்தைப்பிடித்தது. நூல் விழா விமரிசையாக நிறைவடைய
குறுந்திரைப்பட வெளியீடு குதூகலமான ஆரம்பமானது. களைத்துப்போன பார்வையாளர்களுக்கு தன் கையாலேயே தடாகத்தின் தலைவி சுஹைதா அவர்கள் சிற்றுண்டிப் பரிமாறி உபசரித்தார். நிகழ்வு இனிதே சுல்பிகா ஷரீப் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவடைந்தது.
No comments:
Post a Comment