Wednesday, December 26, 2012



விடைகாணா ஒளிதனிலே...


இலங்கையின்
இதயமாம் மலையகம்
வியர்வை சிந்தி வருந்துவோரில்
ஒருவராம் எம்மினம்...

அதிகாலைச் சேவ‌லோடு
அந்த‌ர‌ப்ப‌ட்டு எழும்பிடு
அவ‌ச‌ர‌த்தொழிலாளிக‌ளாம்
சூரியோத‌ய‌ம் அஸ்த‌மிக்கும்வ‌ரை
சுழ‌ன்றிடும் இய‌ந்திர‌ங்க‌ளாம்...

சுழ‌ற்றிய‌டிக்கும் காற்றான‌லும்
சுடுகின்ற‌ வெயிலானாலும்
சுறுசுறுப்பாயிய‌ங்கிட‌னும் இல்லையேல்
சுடுசொல் கேட்டிட‌னும்...

ம‌ழையும் வெயிலும்
மாறி மாறி பொழிந்தாலும்
ம‌றைவிட‌மிலாது மாண்டிட‌னும்
ம‌லைக‌ளிலே
ம‌ர‌ங்க‌ளாய் நாமும் நின்றிட‌னும்...

கூடை மட்டும் நிர‌ம்பிட‌னும் அவ‌ர்க‌ளுக்கெம்
குறைக‌ள் ஒன்றும் கேட்டிடாது
பாத‌ம் க‌டுக‌டுக்க‌ பார‌மாயினும் அவ‌ர்க‌ளையெம்
ப‌ட்டினி ஒன்றும் பாதித்திடாது...

தேச‌ம் வ‌ள‌ர‌வே எம்
தேக‌ம் வ‌ருத்தினோம்
வைய‌ம் செழிக்க‌வே எம்
விய‌ர்வையினை ஊற்றினோம்...

வ‌றுமையை ம‌ட்டும் ப‌ல‌னாய்க்கொண்டோம்
வ‌ச‌ந்த‌த்தை நாமும் வாழ்வில் தொலைத்தோம்
விடிய‌லின் வ‌ழித‌னை தேயிலைய‌டித‌னில் தேடுகிறோம்
விடைகாணா ஒளித‌னில் தொட‌ர்ந்து(ம்)
தொலைந்தே போகிறோம்...



29.09.2011 அன்று லண்டன் தமிழ் வானொலியின் "கவிதை நேரம்" நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய எனது கவிதை.
-நன்றி லண்டன் தமிழ் வானொலி-

கவிஞர் அமல்ராஜ் அவர்களின் "பெண்களின் சுய வட்டமும் ஆண்களின் அடக்குமுறையும்" என்ற கட்டுரைக்கான எனது பதில் கருத்து


//ஆண்களை  பல  வகைப்படுத்தலாம்  பெண்கள். அதற்காக  அவர்களை  ஒரு பொதுவான  வட்டத்திற்குள்வைத்து  பொதுமைப்படுத்தாதீர்கள். பல  நல்ல ஆண்கள் வருகிறார்கள். உங்கள்  கேவலமான பார்வை அவர்களையும் மாற்றிவிடுகிறது. முதலில் ஆண்கள் பற்றிய அந்த அடக்குமுறை சிந்தனையை மாற்றுங்கள். வரும்  கணவன்  பெண்களை  புரிந்தவனாக நிற்சயம் வருவான்.//
http://rajamal.blogspot.com/2012/02/blog-post_05.html?spref=fb


 மிக ஆரோக்கியமான ஒரு ஆய்வினை பிரதிபலித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.உங்கள் கருத்தை ஆதரித்தாலும் அதனை அப்படியே ஆமென்று அமோதித்திட முடியாது ஏனெனில் அதற்கான காரணத்தை சொல்ல ஆசைப்படுகின்றேன்.

திருமணத்திற்கு பின்னரான ஒரு பெண்ணின் மனநிலையும் வாழ்க்கை முறையும் மாற்றமடைவது இயல்பு அதை எவரும் ம‌றுப்பதற்கில்லை. எப்போதும் தான் வாழப்போகும் சூழல், குடும்பம் போன்றனவே  பெண்ணின் சுதந்திரம்,உரிமை பற்றிய விடயங்களை தீர்மானிக்கின்றது.எங்களது திட்டங்கள் தீர்மானங்கள் எதிர்பார்ப்புக்கள் எல்லாமே ஒரு புகுந்தவீட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது ஏனெனில்,ஒவ்வொரு சூழலும் ஒவ்வொரு விதங்களில் வேறுபட்டு காணப்படுவதே அதற்கு காரணம்.ஒரு பெண் தனது இயல்புகள் குணங்கள் திறமைகள் என்பதனை எச்சந்தர்ப்பத்திலும் இழக்க விரும்புவதில்லை மாறாக இதனை திருமணத்துக்கு பின்னரான வாழ்க்கையில் தொடரமுடியுமா என்பதனை கணவனும் அவனது குடும்பமுமே தீர்மானிக்கவேண்டிய துர்பாக்கிய நிலையியே காணப்படுகின்றது. உண்மையில் இதனை ஆணாதிக்கப்போக்கு என்று நேரியான கருத்தாக முன்வைக்கமுடியாது என்றாலும் மறைமுகமாக இதைத்தான் காணமுடிகின்றது.

ஒரு பெண் தனது கணவனுக்கு டங்கி நடக்கவேண்டுமென விரும்புவது, ஆணுக்கு பயந்தோ அல்லது தனக்கு தானே போட்டுக்கொள்ளும் வேலி என்றோ பொருட்படாது. மாறாக தனக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்க்கையும் குடும்பமும் ஆரோக்கியமானதாகவும் அன்பானதாகவும் உருவாக்க வேண்டுமென்ற பொறுப்புணர்ச்சியும் கடமையுணர்ச்சியுமே தவிர தங்களை தாங்களே தாழ்த்திக்கொள்ளும் தங்களை ஒரு வட்டத்துக்குள்ளே அடக்கிக்கொள்ளும் அடிமைச்சிந்தனை அல்ல.

உண்மையில் திருமணத்துக்கு பின்னரான வாழ்க்கையில் தனது சுய விருப்பு வெறுப்புக்களை ஒத்திவைக்கும் போது காலப்போக்கில் அவ்வியல்புகள் ஒதுங்கிக்கொள்கின்றது என் கூறுவதே மிகப்பொருத்தமாக இருக்குமென நம்புகிறேன். உதாரணத்திற்கு, தனது நண்பர்களுடன் (ஆண்,பெண் நண்பர்கள்)சகஜமாக பழகுவதிலிருந்து தனது தனிப்பட்ட தேவைகளை தானே நிறைவேற்றிக்கொள்ளும் போதும் (ஒரு புடவை வாங்குவது என்றாலும்)குடும்ப வாழ்வில் சிறு கீறல்விழ சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றது.இச்சிறு சிறு விடயங்களே சந்தேகம், சண்டைகள் என ஆரம்பித்து விவாகரத்து வரை கொண்டு செல்கின்றது.

இவ்வாறான உரிமைச்சண்டைகளும் பிரிவுச்சமாச்சாரங்களும் மேலைத்தேய கலாச்சாரத்துக்கு வேண்டுமென்றால் சரியாக அல்லது உரிமை வென்றெடுத்த‌ 
சாதனையாக இருக்கலாம்.மாறாக நாம் வளர்க்கப்பட்ட வளருகின்ற சமூகம், பழக்கவழக்கங்கள்,பண்பாட்டு கலாச்சார ஒழுக்க விதிமுறைகள் வேறுபட்டு கட்டுபட்டு நிற்கின்றது.
ஒரு பெண் தனது சுய விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்ற தலைப்படும்போது ஒரு ஆணால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை அல்லது அங்கீகரிக்கும் "பெரிய மனது" இல்லையென்றுதான் கூறவேண்டும்.இச்சந்தர்ப்பத்தில் அவர்களை சங்கடப்படுத்த கூடாது என்பதற்காகவும் அன்பான குடும்பத்தையும் ஆரோக்கியமான சமூகத்தையும் உருவாக்கவேண்டுமென்ற பாரிய பொறுப்புணர்ச்சியை கொண்டதினாலுமே பெண்கள் திருமணத்திற்கு பின்னரான வாழ்வில் தனது கணவன் குடும்பத்துக்கு ஏற்றவாறு தன்னை தயார்செய்து கொள்கின்றாள். (இத‌னை எனது தாயாரின் வாழ்க்கை முறையிலேயே நான் அநுபவபூர்வமாக உணர்ந்துகொண்டேன்)

எத்தனை ஆண்கள் தனது மனைவியின் வீட்டுவேலைகளில் பங்கெடுத்துக்கொள்கின்றார்கள்? இந்த விடயத்தில்கூட சமமாக நடந்துகொள்ள தெரியாத ஆண்களிடம் நாங்கள் எப்படி எங்கள் தனித்துவத்தை காப்பாற்றிக்கொள்வது?
'ஒரு சுடுநீர்கூட வைக்கத்தெரியாது', 'சமைத்து வைக்கும் உணவையே போட்டு உண்ணவும் முடியாது' என்று எத்தனை ஆண்கள் சொல்வதை கேட்டிருக்கின்றோம் இதனைத்தான் இவர்கள் ஆண்களின் தனித்துவம் என்ரு எண்ணிகின்றார்களோ என்னவோ புரியவில்லை.

எனவே திருமணத்திற்கு பின்னரான வாழ்வில் ஒரு பெண் தன்னை தீர்மானிப்பது அவளுக்கு அமைகின்ற "புகுந்த வீடு" என்கின்ற விடயத்தை வைத்துத்தான்.இவ்வாறு பெண்கள் தங்களது சுதந்திரத்தை பாதுகாத்துக்கொள்ளவும் உரிமையினை காப்பாற்றிக்கொள்ளவும் எடுத்துக்கொள்ளும் முயற்சியினால் இன்று எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்துகொண்டிருப்பதை எம்மால் காணமுடிகின்றது.இதற்கு காரணம் அவள் அவளாக இருப்பதை அவளது குடும்ப சூழல் நிராகரிப்பதனால்தான். இவற்றை பார்த்துப்பழகிய எந்தப்பெண்ணும் தனக்கு வரப்போகும் கணவன் இப்படித்தான் இருப்பான் என்ற திட்டவட்டமான தீர்மானமின்றி திருமணத்திற்கு பின்னரான காலத்தில்தான் புகுந்த வீட்டு சூழ்நிலைகளை வைத்து தன்னை தீர்மானித்துக்கொள்கின்றாள் என்பதே என் தாழ்மையான கருத்து.


காதலர் தின பரிசாய்...

இல்லறத்தில் இணைதலே
காதலின் வெற்றி யென்கின்றார் அதை
இல்லையென்றெ எதிர்க்கின்றேன்...

கண்களின் மோதலாலோ இல்லை
மோதல்களிலுண்டான காதலாகவோ
எமதான நேசம் வளர்ந்ததில்ல...

முகம் பார்க்காது
குணமு மறியாது
குறிக்கப்பட்ட நாளில்
மணவறையின் வெளிச்சத்தில்
மணவாளன் கைபற்றியபோது
மனதாலுணரப்பட்ட காதல்...

புரிந்துகொள்ளுதலை வாழ்வின்
வெற்றிக்குறியாய் இணைத்துக்கொண்டோம்
மனதறிந்து நடந்திடும் வித்தைகளும்
மறுக்காம லிதயத்தில் ஒட்டிக்கொண்டது
வேண்டுமென்றால் விட்டுக்கொடுக்கவும்
வேண்டாமென்றால் விட்டுவிலகவும்
கொண்ட நேசமே கொள்கை வகுத்துகொடுத்தது...

சின்ன சின்ன ஊடல்களுக்குள்ளே
சிதறடையச்செய்யும் சிக்கல்களையும்
சிலாகித்து சிரிப்புடன் முடித்துக்கொள்வோம்
எங்கள் பந்தியில் உணவுக்கோப்பைகள்
தனித்தனி நேரங்களில் வைக்கப்பட்டதில்லை
ஒளிவுகள் எதுவும் மறைவாய்
இருந்ததுமில்லை...

வருடங்கள் பலவற்றை விழுங்கிக்கொண்ட‌
எங்கள் மணவாழ்வில்
பிளவுகளே யில்லா பிணைப்பைத்தந்த‌
படைத்தவனுக்கு நன்றியாய்
இக்கவி சாற்றுகின்றேன் -உங்களுக்கு
காதலர்தின பரிசாய் கையளிக்கின்றேன்...


புனிதங்களை கற்றுத்தேரு


ஏழைக் குடிலுக்கு போயிபாரு
அன்புஎலாம் கொட்டிக் கிடக்குது
வாழையடி வசதிமனை தேடிப்பாரு
அசிங்கமெலாம் முட்டிமோதுது...

தேகம் மினுமினுக்கும் திரும்பிப்பாரு
தேரோடும் வீதிவியக்கும் நின்றுபாரு
பாகம்பிரிக்கும் பாசம்பாரு இவர்
வேகமெலாம் பணந்தான்பாரு...

பசித்தவயிறு பாசத்தால் நிறைஞ்சிருக்கு
பாமர குடிலுக்கு போயிபாரு
பாசங்கூட பங்குக்காக பிரியும்
பணக்காரமனையில் நின்றுபாரு...

குடும்பக்கட்டு உடைந்து கிடக்கும்
குபேரன் தட்டு உணவைப்பாரு
கூழும் அமுதாய் உண்டுகளிக்கும்
குடிசைக்கதவை தட்டிப்பாரு...

வயிறுபெருத்து வளர்ச்சி காணும்
நோய்களேராளம் எண்ணிப்பாரு
கயிறுபோல சிறுத்து நிற்கும்
ஏழைமருந்து நீர்தான் பாரு..

கட்டுக் கட்டாய் காசிருக்கும்
கட்டிலுறக்கம் கனன்றெரியும் பாரு
கட்டாந் தரையில் சொர்க்கபூமி
தட்டிநிற்கும் எட்டிப்பாரு...


புன்னகையும் தன்னலமாய் விரியும்
புதுமையான மனிதவர்க்கம் பாரு ஒற்றை
புன்னகைக்காய் தன்னலமிழக்கும் புனித‌
உறவுகளைநீயும் கற்றுத்தேரு...


நிஜங்களாய்....

நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்காதே இதை
எங்கோ கேட்ட ஞாபகம்...

நிஜங்களை தொலைத்துக்கொண்டிருக்கும்
நிகழ்காலத்தில் என்னை
நினைவுபடுத்திக்கொள்ளவே
உறவின் உத்தரவாதத்தை
உறுதிப்படுத்துக்கொள்ளவே அடிக்கடி
என் நினைவுகளை
உன்னிதயத்தில் காட்சிப்படுத்திப்போகிறேன்
கட்டாயப்படுத்திப்போகிறேன்...

பகட்டுக்காய் பழகிடும்
பாசங்கள் மத்தியில்
நிஜ‌மாய் நெருங்கிடும் சொந்த‌ங்க‌ளை
விட்டு வில‌கிட‌
எட்டி ந‌ட‌ந்திட‌ எவ‌ர்தான் விரும்பிடுவார்...

ந‌ட்பாய் ந‌ம‌துற‌வை காத்திட‌வே
நானும் முய‌ற்சிக்கிறேன் நீயும்
ந‌ழுவ‌ விடாது ந‌ட்போடு
சேர்ந்திட‌த்தான் வாஞ்சிக்கிறேன்...‌


ஊமையாயிருப்பது ஏனோ


அடைக்கலம் தவறிய
அடைக்கலாங்குருவி போல
அல்லலுறும் சில இதயங்கள்…..

வேற்றுமையின் உருவத்தில்
வேந்தர்கள் ….

ஆற்று நீரில் கலப்படம் கலந்த
அக்கிரமக்காரன் யார்....

சுவாசிக்கும் காற்றில்
சூனியம் வைத்த
சூத்திரதாரி யார் …..

எல்லையில்லா வானுக்கும்
எல்லைகளிட்டு தன் வசப்படுத்திய
எந்திர மனிதன் யார்…..

உடலுறுப்புக்கள் எல்லாருக்கும்
ஒன்றாயிருந்தும்
உண்ர்வுகளில் மட்டுமேனிந்த
ஒவ்வாமை…..

சாதிகள் இல்லையடி பாப்பா வென்ற
சாதனையாளனின் எண்ண்ம்
ஏட்டுச்சுரக்காயானது ஏனோ….

எண்ணங்களின் வளர்ச்சி
இமையத்தை தொட
மனிதத்தின்
பரந்த எண்ணங்கள் மட்டும்
இன்னுமின்னும்
ஊமையாயிருப்பது ஏனோ !!!


நீ நட‌ந்த பாதையிலே

நீ நட‌ந்த பாதையிலே
நான் ந‌ட‌ந்து பார்த்தேன்
புஸ்ப‌ங்க‌ளெல்லாம் புற்க‌ளாக‌
பூக்க‌ளெல்லாம் க‌ற்க‌ளாக‌...

பாத‌ம் ப‌ட்ட‌ இட‌ங்க‌ளில்
ப‌யண‌த்தின் வ‌டுக்க‌ள் ப‌திந்திருந்த‌து
நீண்ட‌ தூர‌ த‌ட‌ய‌ங்க‌ளில்
நீ க‌ண்ட‌ துன்ப‌ங்க‌ள் வ‌ழிந்திருந்த‌து...

துணையின்றி தூர‌மான‌ கிழ‌க்கு
துடுப்பாக‌ உன்னுட‌னே வ‌ந்திடும்
விழிதுடைக்கும் க‌ர‌மாக‌
விடிய‌ல் த‌ர‌ தொட‌ர்ந்திடும்...

உன் பாதைக‌ள் நீள‌ம்தான்
உன் வாதைக‌ள் ஆழ‌ம்தான்...

த‌ட்டிக்கொடுத்து வாழ்வை
எட்டிப்பிடிக்க‌ வ‌ந்திட்டேன்
விட்டுப்போன‌ உற‌வை
க‌ட்டிக்காக்க‌ சிந்தித்தேன்...

அன்புக்குள் ஆற்றாமைக‌ள் அற்ப‌மே
அர‌வ‌ணைப்புக்குள் துன்ப‌ங்க‌ள் சொற்ப‌மே இப்பெறா
அன்னைக்கு நீயெப்போதும் சிற்ப‌மே
ஆருயிரே நானெப்போதுமுன் ப‌க்க‌மே...


தொட‌ர‌ட்டும்

உனக்கு மெனக்கும்
உறவுப்பாலம் ஒன்றில‌
உதவிப்பயணம் மட்டுமே
உணர்வலைகளில் ஒன்றின‌...

உதட்டோடு சிரித்தும்
உணர்வோடு பிரிந்தும்
உள்ளத்தால் துரத்தும் ஓர்
உறவறியா நிறுத்தம்...

உரிமைக‌ள் தொட‌ர்ந்தும்
ஊமைநில‌வ‌ர‌ங்க‌ள் தொட‌ரும்
உண்மைக‌ளை தொட‌
உன் நாவுமென் நாவும்
உள்ளுக்குள்ளே உறையும்...

தொட‌ர‌ட்டும்
தொட‌ரும் நில‌வ‌ர‌ங்க‌ள்
தொட‌ர்பு இல்லாத‌வையும் ம‌ன‌த்
தொடுகையில் உண‌ர‌ப்ப‌டு மென்ப‌தால்...



கருமுகிலே....கருமுகிலே


கவிமழை பொழிந்திட்டாய் கருமுகிலே
கலைந்தெங்கே போகிறாய் கருமுகிலே
பாக்களால் நனைத்திட்டாய் கருமுகிலே
பூத்த துமண் பூக்களாய் கருமுகிலே...

வெடித்திட்ட உதடுகளாய்
வெந்திட்ட மண்தரையை
மழைக் கரத்தீண்டலால்
மருந்திட்டாய் கருமுகிலே...

உறங்கிக்கிடந்த மரங்களும்
மடிந்தே கிடந்த புற்தரைகளும்
நீட்டியெழுந்து உன்னால்
நிமிர்ந்து நிற்கிற‌து க‌ருமுகிலே...

வெட்டிக்க‌தை பேசியே
விய‌ர்வை துடைக்கு மெங்க‌ள்
விட‌லைப்ப‌ருவ‌ம் ம‌ண்ணை
விடாப்பிடி யாய்க்கொத்தியே
விளைநில‌மாக்குது க‌ருமுகிலே...

ப‌துங்கியே யிருந்திட்ட‌
ப‌ள்ளிச்சிட்டுக்க‌ள்
ப‌ற‌ந்து ப‌ற‌ந்து பாதையிலே
க‌ள்ளக்குளிய‌லிடுகிற‌து க‌ருமுகிலே...

தூர்ந்துபோன குள‌க்க‌ரையும்
தூசு ப‌டிந்த‌ தெருக்க‌ளும்
காவிபிடித்த‌‌ சித்திர‌மாய்
அழுக்காடை மூட்டைக‌ளும்
ப‌ல்வ‌ரிசை காட்டியே
ப‌ளிச்சென‌ சிரிக்குது க‌ருமுகிலே...

வ‌ள்ள‌லாய் வ‌ந்திட்டாய் க‌ருமுகிலே
வ‌ள‌மாக்கி வ‌ழிந்திட்டாய் க‌ருமுகிலே
வாழ்வுக்கொளி யூட்டினாய் க‌ருமுகிலே
வைய‌முனை போற்றுது க‌ருமுகிலே...


தாய்மை

அழியாத பாசமும்
ஒழியாத நேசமும்-இந்த
தெளிவில்லா ஜீவனுக்கீந்தாய்
அமுதம் பருக்கி ஆளாக்கிய
அன்னையுன் பாதம் பணிய
அகிலமளவு காணிக்கை வேண்டுமே
பெற்றகடன் தீர்ப்பதெப்படி …..

சுமைகளைத்தான் சுமந்தாய்
கருவாய்
சுகமாய் ஈன்றாய்
சிசுவாய்
சுகங்களை துறந்தாய்-எனக்காய்
துக்கங்கள் பக்கங்களாய் சேர்ந்தும்-என்
புன்னகையில்
புதைத்துக்கொண்டா யிதையத்தினை…..

உனக்குமெனக்கும் இடைவெளி
தூரமில்லை
உதிரம் தந்த உனதுறவில்
உறுத்தல் ஒன்றும் சொல்வதற்கில்லை
சுயநலமென்ற சொல்லுக்கு
பொருளுமில்லை-நீ
சுமையாயெனை பார்த்ததுமில்லை

பாசத்துக்கீடாய்-நற்
பண்பைக்கேட்டாய்
உன் சொந்தத்துக்கீடாய்-கல்விச்
சொத்தைக்கேட்டாய்
தாயன்புக்கீடாய்
தனயன் யான் எதைத்தருவதம்மா

அன்பைத்தேடி அலையவில்லை
நீயென் அருகிலிருப்பதால்
இழந்த தந்தையன்பும்
குறையாய் தெரியவில்லை-நானுந்தன்
குழந்தையானதால்
தேற்றமில்லா
தோழமைக்கண்டு கலங்கவில்லை-நீயெனக்கு
தோள் கொடுத்ததால்

உனதுதிரத்தில்
உணவும் தந்தாய்
உறவும் தந்தாய்-இந்த
உலகையும் தந்தாய்
உன் கடன் தீர்க்க-எந்த
உதவி கைமாறாகுமம்மா…???


சமரசம் காண....


கணவனும் மனைவியும்
கண்ணும் மணியுமாயிருந்திடனும்....

பெற்றவர்கள் பிள்ளைகளிடம்
ஓரடி விலகினாற்போல இருந்திடனும்...

ஒன்றாய் பிறந்த உறவுகளுடன்
ஒன்றரையடி தள்ளினாற் போலவிருந்திடனும்...

நாலும் பேசும் நண்பர்களிடம்-நற்புடனே
நான்கடி நகர்ந்தாற்போலிருந்திடனும்...

சொகுசாய் வந்து போகும்
சொந்தங்களிடம்-ஐந்தடி
எட்டினாற் போலிருந்திடனும்...

நித்தம் சூழ நிற்கும்
சுற்றம் சூழத்தாரிடம்- சுமுகமாய்
எமதுறவு சுழன்றிட்டாலே
சூறாவளியாய் சுழற்றியடிக்கும்
பகைமையை விரட்டியடித்து
சமரசமாய் வாழ்ந்திடலாம்..!!!


கிறுக்கல்கள் சித்திரமாகின்றன கவிதைத்தொகுப்பின் மீதான ஓர்ரசனைக்குறிப்பு


 




   கவிஞர் பி.அமல்ராஜ் அவர்களுடைய "கிறுக்கல்கள் சித்திரமாகின்றன"கவிதை தொகுப்பானது,புதுக்கவிதைகளில் யதார்த்தபூர்வமான நகைச்சுவையுண‌ர்வுடன் கூடிய எழுத்துக்களாக  வெளிவந்துள்ளது.உண்மையில் இன்றைய இலக்கிய உலகில் மரபுக்கவிதையை தவிர்த்து புதுக்கவிதைகளுக்குள் ஓர் புரட்சியே நடந்துகொண்டிருக்கின்றது.எத்தனையோ மூத்த இலக்கியவாதிகளின் கடுப்புக்களுடனும் கண்டிப்புக்களுடனும் வளர்ந்துவரும் இப்புதுக்கவிதை சாம்ராஜ்யத்தில் கவிஞரின் கவிதைகளுக்கும் சிறந்த களம் உண்டு என்பதனை தொகுப்பை வாசிக்கும்போதே உண‌ரமுடிகின்றது.

 "கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" என்ற தொகுப்பின் கவிதைகள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் அதன் எதிரலைகள் எண்ணற்ற எண்ணங்களை உருவாகிவிடும் சிறந்த கருத்துக்களமாக காணப்படுகின்றது வாழ்த்துக்கள்.
 "தியாகம் அவள் பெயர்" என்ற தாய்மைக் கவியூடே ஆரம்பித்து சிறப்பித்திருப்பது வ‌ரவேற்புக்குரியது.அதில்,

  " ஊர் உறங்கியும்
    உறங்காத‌
    உன் தாலாட்டும்
    இன்னும் என்
    காதுகளில் கேட்கும்
    ரகுமானின் 'ஜெய் கோ'தான்"... என்று தாலாட்டையும் இளைஞர்களின் இரவுநேர இசை மயக்கத்தையும் வர்ணித்துள்ளவிதம் ரசனை.அதிகமாக காதல் கருக்களை சுமந்துவந்த கவிதைகள், பலவிதமாக காதலை நோக்கியிருக்கின்றது."நீதான் அவள்" கவிதையில் காதலை ஏக்கத்தோடு பார்க்கின்ற வரிகளாகவும் "நீ நட்பு காதல்" தலைப்பில்,புரியும்போது விளங்காத காதல் பிரியும்போது உணர்கையில், காதலுக்கேயுரிய தடுமாற்றங்களின் வரிகளாகவும்,"கல்லறைக்கனவு" கவிதையில் ஒருதலைக்காதலின் ஓரங்க வலிகளை உண‌ர்த்தும் விதமாகவும்,"ஒரு ரயில் பயணம்" "ஒரு காதல் காவியம்" "அடங்காத காதல்" "மொட்டை மாடிக்காதலும் முடிந்துபோன கற்பனையும்" "கடற்கரை காதல்" என பல்வேறு கோணங்களில் கவிஞரின் பார்வை இளையவர்களின் மனதை வருடும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

 சின்ன சின்ன வரிகளோடு சித்திரம்போல் வரையப்பட்டுள்ள இத்தொகுப்பு பார்வைக்கும் வாசிப்புக்கும் புரிதலோடு நயந்துகொள்கின்றது.ஒவ்வொரு கவிதையும் சமூகத்தை வித்தியாசமான சிந்தனைகொண்டு தொட்டிருப்பதும் நிஜங்களின் பிரதியாக வெளிப்பட்டிருப்பதும் கவிதைகளுக்கு மேலும் கனத்தை சேர்த்திருக்கின்றது.இன்னும் கவிதையின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கலாம் என தோன்றுகின்றது.

 "முதிர்க்கன்னி" என்ற கவிதையில் ஒரு பெண்ணின் உள்ளக்குமுறலை அணுகியிருப்பது கவிஞரை பாராட்டச்செய்கின்றது.இங்கு கவிஞர் இனியவன் இஸாருதீன் அவர்களுடைய கவிதையொன்று நினைவுக்கு வருகின்றது,

 அத்தோடு தேசத்தின் கடந்த கால வடுக்களின் வலிகளை கண்முன் காட்டியிருப்பது கண்ணீரை வரவழைக்கும் உருக்கமான வரிகள்."செத்தா போய்விட்டேன்" கவிதையில்,

 "ஒற்றைக்காலும்
  ஒற்றைக்கையும்
  ஒற்றையாய் நிற்க என்
  இதயம் மட்டும்
  இரட்டையாய் அடிக்கிறது
  இறந்துவிடுவதா
  இல்லை மறந்து
  வாழ்ந்து விடுவதா?" என்ற வினாக்களுக்கு இதயம் ஓர் கணம் நின்றியங்குகின்றது.அதே உணர்வை "முள்ளிவாய்க்கால் முடிவுரை" "பயணங்கள் முடிவதில்லை" ஆகிய கவிதைகளிலும் உணர முடிந்தது.

 பொதுவாக பெண்களை குறைகூறாத ஆண்கள் மிக அரிது கவிஞர் மட்டுமென்ன விதிவிலக்கா? தனது "புதுமை பெண்ணும் தோற்றுப்போன ஆணும்" என்ற கவிதையில் இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கின்றார்,

 "மானத்திற்கும்
 ஆடைக்கும்
 சம்பந்தமேயில்லை இவள்
 அகராதியில்
 பாவம்,
 வெளியில் தெரிபவை
 அவள் அங்கங்கள் மட்டுமல்ல‌
 வெளிறிப்போன நம் கலாச்சாரமும்தான்!" என கலாச்சாரத்துக்காய் கவலைப்பட்டுள்ள கவிஞர், "நீதான் அவள்" என்ற கவிதையில்,

" என்
 இளமையின் தாகம்
 உன்னுடைய தேகம்
 தீருமா என் சோகம்
 இதுவா காதல் வேகம்? என்பதனையும் அவரே உணர்த்தியிருக்கின்றார்.இதே விடயத்தினை " மொட்டை மாடிக்காதலும் முடிந்துபோன கற்பனையும்" கவிதையிலும் காணலாம்.இதிலிருந்து புரிந்துகொள்ள முடிவது என்னவென்றால்,எதிர்பார்ப்பதும் நீங்களே எதிர்ப்பதும் நீங்களே தான்.எதை வெறுப்பதாய், கண்டிப்பதாய் வெளியில் சொல்லுகின்றீர்களோ அதையே உள்வாங்கிக்கொள்ள முனைவது இந்த ஆண்களின் இயற்கையான இயல்பு என்பதை அழகாக கவிவரிகளில் தந்துள்ளார் வாழ்த்துக்கள்.

 எவ்வளவுதான் நம்முடைய வளர்ச்சி உயரத்திலிருந்தாலும் எமது பழைய நினைவுகளை மீட்டிப்பார்ப்பதும் பழைய வாழ்வின் நிழல்களில் ஒதுங்கிப்பார்ப்பதும் மனதுக்கு இனிமையான ஒன்றே அவ்வுணர்வுகளை கவித்துவத்துடன் காணும்போது இரட்டிப்பு சந்தோஷத்தில் மனம் குதுகலிக்கின்றது.அந்த இதத்தினை " எனது ஆட்டோகிராப்" "ஊர்ப்பக்கம்" ஆகிய கவிதைகளில் காணலாம்.

 உடைத்து வைக்கப்பட்ட மாதுளம்பழத்தினைப்போல கவிதைகள் அனைத்தும் கண்களையும் கருத்தினையும் கவர்ந்துள்ளது.ஓர் நல்ல புத்தகத்தினை வாசித்த திருப்தியும் பெறுமதியான சிந்தனை வெளிப்பாட்டினை ரசித்த நிறைவும் இத்தொகுப்பில் அடங்கியிருக்கின்றது.எத்தனை ஆர்வத்துடன் முதற்பக்கம் ஈர்த்ததோ அதே ஆவலோடு கடைசி ஏடுவரை தொடர்ந்தது இத்தொகுப்பினதும் கவிஞரினதும் வெற்றி எனலாம்.

 இன்னும் பல்வேறு தளங்களுடன் சிறந்த களம் காணவும் இப்பெரிய இலக்கிய உலகில் கவிஞர் அமல்ராஜ் அவர்கள் ஓர் சிறப்பான இடத்தினை தக்கவைத்துக்கொள்ளவும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 நன்றி
த.எலிசபெத்


துலங்கிடுமோ மாயமான மாயமிது !!


வீடுகள் தோறும் வீதி வரையினில்
காடுகள் போலொரு கருமை படர்ந்தே
பாடுகள் தொடரும் பாதையெங்கிலும்
பாவம் எம்மக்காள் பயத்தினிலே...

வன்மம் நெஞ்சிலே வளர்த்த மிருகங்கள்
ஜென்மம் காத்திட வரைந்த உருவங்கள்
பெண்கள் மத்தியில் பீதியும் கிளம்பிட‌
பெலனில்லா மனங்களாய் புவியினிலே...

கல்லோடும் வாளோடும் காளையர்க ளிரவில்
பொல்லோடுந் தடியோடும் புலரும்வரை இருட்டில்
வல்லோர்கள் கூடிட்ட வேளையிலும் மாயனாய்
வந்ததும் பறந்தானாம் சிக்காமலே...

வாய்வழியாய் வந்திட்ட வதந்தியு மிங்கே
வானளவே விரிந்து வியாபித்தும் நின்றது
நோய் போலெமை பீடித்து மனதில்
நோக்க‌மெல்லாம் சிதறிட்டு பித்தானது...

காவலோனே காவலோனே காத்திரமாய் நீரும்
பாவப்பட்ட மக்களினை காத்திடுவீர் பாரும்
ஏவலோனாய் வந்துபோகும் மாயந்தனை தீரும்
ஏளனமேசெய்யாமல் வேகமாய்நீவீர் வாரும்...



          
            வேகமாய் நீள்கின்றது !!






சோகந்தனை சொல்லிடவும்
சொந்தமென்று எவருமில்லை
சோதனையை சுமந்திடவும்
இதயத்தினில் வலிமையில்லை...

ஆழ்ந்து அழத்தோன்றுகிறது
அடிமனதேனோ கனத்திடுகிறது
ஆனந்தங்கொண்ட நெஞ்சமின்று
ஆறுதலின்றியே அடங்கியிருக்கிறது...

தோல்வியினால் வீழ்ந்திடவே
கோழையல்ல என்நெஞ்சம்
வேள்வியினால் ஏழ்ந்திடவே
வாழ்வினிலே என்தஞ்சம்...

எண்ணை தீர்ந்த விளக்கிது
என்னை தீயாய் வளர்த்திட்டேன்
மண்ணைபோல விளைந்திட‌
கல்லையும் காலமாய்கொண்டிட்டேன்...

பாதை வேகமாய் நீள்கின்றது
பயண‌ம் எனையும் சூழ்கின்றது
வழியை எங்கோ தொலைத்திட்டேன்
விழியை ஒளியாய் தொடர்ந்திட்டேன்...


Tuesday, December 25, 2012



தலையநீட்டி மிரட்டவருது...



அடகுவச்ச தாலிக்கொடி
அமைதியாக படுத்துறங்க‌
தடவிகொடுத்த வறுமையது
தலையநீட்டி மிரட்டவருது...

சீதனமா எங்க அம்மா
செப்புகுடம் தந்திருந்தா
சாதனமா அதையுங்கொடுத்து
சாராயத்தை ஊத்திக்கிட்டான்...

பள்ளிக்கூடம் போனபிள்ளை
பாதியிலே போகவில்லை
கள்ளிச்செடி போல அவன்
கல்வியையும் பார்க்கவில்லை...

பாடப்புத்தகம் வாங்கும் செலவு
பாரமாக எனை அழுத்த‌
தேடும் பணம் கொஞ்சமும்
தேவைக்கே போதவில்லை...

கூலிவேலை செய்தாதான்
கொஞ்ச காசும் கிடைக்கிறது
காலியான எங்க வயிறு
கண்ணீரால நிறைகின்றது...

தேங்காய் உடைச்சு வந்தேன்
தெய்வங்களெதுவும் பார்க்கவில்லை
தேர்தல்காலம் வந்து போனது
தேவைகளெதுவும் தீரவில்லை...!!


வசந்தமாக போகுதையா !!!


காடேறி மேடேறி
கால்நோக மலையேறி
பாடாக பட்டபாடு
பலனாக வந்ததையா...

கைகடுக்க கொழுந்தெடுத்து
கைச்செலவ சேமிச்சு
பையனை படிக்கவைச்சேன்
பூநெஞ்சம் பொங்குதையா...

எண்ணவிளக்க எரியவச்சு
கண்ணமுழிச்சு படிக்கவைச்சேன்
விண்ணபோல ஒசந்துட்டான்
விதவமனம் துள்ளுதையா...

கால்வயிறு கஞ்சியூத்தி
கல்வியமட்டு பசியாக்கி
ஏழ்மையகாட்டி படிக்கவச்ச‌
ஏம்மகன பாருங்கையா...

பெரியபதவி கிடைச்சிருக்காம்
பேருஎன்னவோ எஞ்சினியராம்
வறியகுடும்ப கவலையெல்லாம்
வசந்தமாக போகுதையா...

தங்கமகன் குணமெல்லாம்
உங்களபோல இருக்குதையா
பொங்கவச்சு கும்பிடனும்
அங்க இருந்தே வாழ்த்துங்கையா...




சுற்றிக்கொண்ட மாயவலை!!




மனதெங்கும் வியாபித்த அந்த‌
மாயவலை தற்செயலாய்
சுற்றிக்கொண்டது தான்
உறுதியில்லாத நூல்களினாலும் 
உண்மையில்லா பிணைப்புக்களினாலும்
ஊருக்காக பின்னப்பட்ட‌து...

உதடுகள் மட்டும் மலரும் புன்னகைகள்
உயிரில்லாத உச்சரிப்புக்கள்
ஊமையாய்ப் போன நேசங்கள்என்பவற்றால்
நிறமூட்டப்பட்ட அந்த‌மாயவலைதான் மிக 
மிக இறுக்கமாக சுற்றிக்கொண்டது
சிக்கிக்கொண்ட இதயவலிகள் மட்டும்
கண்ணீர் பூவை சொரிந்துகொண்டே இருந்தது...

அபத்தமான பொய்களெல்லாம்
அலங்காரமிட்டுக்கொண்டு
வெட்கமேயில்லாமல் வெளியேவந்தது
மெய்யைப்போன்று...

நிஜங்களைப்போல வேடமிட்டாலும்
நீர்த்துப்போய் விடுகின்றது பல சந்தர்ப்பங்களில்...

பிரியமில்லாத பரிவுகள்
அன்பேயில்லாத ஆதரவுகள்
உண்மையில்லா உருகுதலகளென்று
வெற்றுத்தனங்களை ஒப்புவித்துக்கொண்டிருக்கும்
இந்த மாயவலையில்
ம‌னதை சிக்கவைப்பதென்பது
எத்தனைமடமையென்று 
மனங்களுக்கு மட்டும் புரிவதேயில்லை
மாயவலை மிக‌
மிக இறுக்கமாக சுற்றிக்கொண்டிருக்கின்றது...!!

நல்வாழ்வின் விடியலாய் பிறக்கட்டும்

நல்வாழ்வின் விடியலாய் விடியட்டும்



கழிந்ததெலாம் கழிவாய் கழிந்து போகட்டும்
ஒளிர்வதெலாம் கனிவாய் மிளிர்ந்து பூக்கட்டும்
வலிகளெலாம் வழிந்து வரட்சியா கட்டும்
தளிர்களெலாம் வெடித்து விருட்சமாகட்டும்...

பூமிப்பந்தின் அடிநுனியாட்டங்களெலாம் அமைதியாகட்டும்
சாமிப்பழி சட்டங்களெலாம் சகோதரத்துவம் பேசட்டும்
அக்கிரமக் கனிகளின் அதிஸ்டங்களெலாம் அடியோட‌ழியட்டும்
உக்கிர‌மான உண்மைக ளுயர்ந்துஜெயிக்கட்டும்...

ஊர்பிடிக்கும் ஏர்களெலாம் உயர்ச்சி காணட்டும்
யார்கேட்பினும் வரங்கள் வாரி கொடுக்கட்டும்
நீர்நிலைகள் யாவுமே செழித்து நிற்கட்டும்
பாரில்நற்பயன்கள் பயிராய் விழையட்டும்...

கல்விமுதற் கலைகள்யாவும் பொதுவுட மையாகட்டும்
செல்வஞ்சேர் மடமையெலாம் ஏழ்மையை தகர்க்கட்டும்
பொல்லாத சட்டங்கள் பொசுங்கியே சாகட்டும்
நல்வாழ்வை தந்திடும்விடியலாய் இவ்வாண்டு பிறக்கட்டும்...

வானவெடிகளின் பூரிப்பில் வசந்தவாழ்வு பூக்கட்டும்
தானத‌ர்மங்களின் பயன்களால் புத்தாண்டு மகிழட்டும்
ஞானமழை பொழிந்திடும் ஞாலமுருவாகட்டும் -அன்புக்
கானமிசைத்திடும் மனங்களுக் கிறையருள்கிட்டட்டும்...!!!‌

"மீண்டு வந்த நாட்கள்" வெளியீட்டு விழாவும் எனது அநுபவமும்....






 21.08.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணியளவில் வெள்ளவத்தை தமிழ்ச்சங்க மண்டப அரங்கில் இனிதான ஒரு மாலை வேளையில் மங்கள விளக்கேற்றும் நிகழ்வுடன் கவிஞர் வதிரி சி.ரவீந்திரன் அவர்களுடைய "மீண்டு வந்த நாட்கள்"  கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா சிறப்பான ஓர் ஆரம்ப விழாவாக தொடங்கியது.

 நிகழ்வுக்காக எனக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தாலும் இன்னுமொரு சிறப்பு விருந்தினருடன் செல்லும்சந்தர்ப்பம் கிடைத்ததால் இரு அழைப்பாக அவ்விடம் சென்றேன்.தமிழ்ச்சங்க விழாவில் கலந்துகொள்ளும் முதல் சந்தர்ப்பம் மகிழ்ச்சியோடும் ஒருவித படபடப்போடும் தான் சென்றேன்.அலங்கரிக்கப்பட்ட அரங்கத்தில் அதிகம் பேர் அமர்ந்திருக்கவில்லை அதனால் கொஞ்சம் பின்னால் இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டேன் படபடப்பும் காணாமல் போயேவிட்டது. முன் வரிசையில் சில பெண்கள் அமர்ந்திருந்தார்கள் எனக்கு அறிமுகமானவர்கள் என எவரும் தென்படவில்லை,ஆனால் நான் அறிந்த சில முகங்களை நேரடியாக கண்டதில் மிகுந்த மகிழ்ச்சியாயிருந்தது. சிலரை இவர்களாக இருக்கவேண்டுமென ஊகித்தேன் அநுமானம் சரியாகத்தான் இருந்தது. ஒவ்வொருவராக வந்து அமர்ந்ததும் சபையும் நிறைந்துவிட்டது.

 கொழும்பு பல்கலைக்கழக கல்வியற்துறை பேராசிரியர் மா.கருணாநிதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் முதல் கட்டமாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்து வரவேற்புரை,நூல் அறிமுகம், வாழ்த்துரை, கருத்துரை என நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு வருகைதந்த பேராசிரியர்கள்,எழுத்தாளர்கள், சிறப்புவிருந்தினர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என அரங்கம் ஓர் அறிவியற்கூடமாக எனக்கு காட்சிதந்தது.
கவிஞர் திரு.மேமன்கவி அவர்கள் அங்குமிங்கும் ஓடியாடி ஓர் இளைஞனைப்போல இயங்கிக்கொண்டிருந்தார்.சகல வேலைகளிலும் மும்முரமாக சிரித்த முகத்துடனும்,ஓர் வேகத்துடனும் நிகழ்ச்சியை சிறப்பித்துகொண்டிருந்தார்.

 மேடையில் பேசிய அனைவரின் பேச்சுக்களும் கவிஞஎ வதிரி சி.ரவீந்திரன் அவர்களைப்பற்றியதாகவும் அவரின் கவிதைகள், மற்றும் இலக்கியம் சார்ந்த விடயங்களாகவே இருந்தது அதனால் கருப்பொருள் பிரள்வடையாமல் எமது கருத்துக்களும் சிந்தனைகளும் நிகழ்வுக்குள்ளே சுவாரஸ்யமாய் சுற்றிவந்து கொண்டிருந்தது.பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளில் வேறு துறை சார்ந்த முக்கியஸ்தர்களின் பங்களிப்பு இருக்கும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் குறிக்கப்பட்ட விடயம் குறிதவறி விழுந்துகொண்டிருக்கும் அத்தகைய சம்பவங்களில் துளியேனும் இங்கு நடைபெறாதது மகிழ்வைத்தந்தது.

  அடுத்ததாக மூத்த இலக்கியவாதியும் மல்லிகை ஆசிரியருமான ஜீவா அவர்களின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது அநுபவமும் முதிர்ச்சியும் அவருடைய பேச்சின் பெறுமதியை இன்னும் கூட்டியிருந்தது. அவர் குறிப்பிட்ட ஒருவிடயம், இன்றைய இளம் படைப்பாளர்களை பற்றியது அதாவது ஒரு தொகுப்பை வெளியிட்டதும் தங்களை பற்றிய பெறுமிதத்தில் இருப்பதாக சொன்னார் உண்மையில் அப்படி இருப்பதாக ஒத்துக்கொண்டாலும் இவர்களைப்போன்றவர்களை ஊக்கப்படுத்த வேண்டியதும் பொறுத்துக்கொள்ள‌வேண்டியதும் உங்களைப்போன்றவர்களின் கடமையல்லவா? இளம் இரத்தம் சில விடயங்களில் வேகம், சில விடயங்களின் ஆவல் நிமித்தமாகவும் பிழைகள் நடப்பது இயற்கையே. இளம் படைப்பாளிகளை வளர்த்துவிடுங்கள் ஐயா என என் மனம் கேட்டுக்கொண்டது.

 நிகழ்ச்சிகளை அமைதியாக ர‌சித்துக்கொண்டிருந்தேன் நேரம் மிக மிக வேகமாக சுழன்றுகொண்டிருந்தது வந்திருந்த எவரும் என்னை அடையாளம் கண்டுகொள்ள‌வில்லை  ஏனென்றால் என்னைதான்  யாருக்கும் தெரியாதே.
இவ்விழாவினை முழுமையாக இருந்து பங்குகொள்ளவேண்டும் என்ற ஆவலிலே வந்தேன் ஆனால் போக்குவரத்து பிரச்சனை காரணமாகவும் ந‌டைமுறையிலுள்ள சில நிகழ்வுகளின் பயம் காரணமாகவும் பாதி நிகழ்வுடன் எழுந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமர்ந்துகொண்டிருந்தேன் நேரத்தை பார்த்தவண்ணம். மாலை மயங்கிவிழும் நேரம் இருள் மெதுவாக தன் கரம் கொண்டு ஏந்த ஆயத்தமாகிக்கொண்டிருக்கையில் நானும் எனது சகோதரியுமாக இருக்கையைவிட்டு எழுந்தோம். மனம் வேண்டாம் என சொல்லியும் காலம் போ என கட்டளையிட்டுக்கொண்டிருந்தது வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்ட திருப்தியுடன் இனிய நினைவுகளை சுமந்தவண்ணம் பாதையை நோக்கிநடந்தேன்.
   











இலவசமாக்கிடுங்கள்

 கல்வியக அனுமதிக்கு
சிபாரிசு க‌டித‌ம் த‌ராதீர்
ச‌ம‌வுரிமை த‌ந்திடுங்க‌ள்...

ஏழை ப‌ண‌க்கார‌னென்ற‌ த‌குதி த‌விர்த்து
க‌ல்வித்த‌குதி த‌ந்திடுங்க‌ள்
இருதிவ‌ரை போராடுவோமென்ற‌
கோஷ‌ங்க‌ள் தவிர்த்து
கோரிக்கையாக்குங்க‌ள்...

நாளைய தலை‌வ‌ர்க‌ள் சிறுவர்களென்ற
சுயநல வார்த்தையை
சுதந்திரப்படுத்துங்கள்...

பெற்றுக்கொண்ட விளைநிலங்களில்
புற்களை வளர்க்காதீர்கள்
பணங்காய்க்கும் ம‌ரங்களாய்
பாட‌சாலைக்கு உர‌மிடாதீர்க‌ள்...

ச‌ம‌த்துவ‌த்தையும் சமாதான‌த்தையும்
அரிச்சுவ‌டியிலே ஆர‌ம்பித்திடுங்க‌ள்
ஏற்ற‌த்தாழ்வுக‌ளை வெட்டியெறிந்து
வெற்றிக‌ளை ம‌ட்டும் ஏந்திவ‌ர‌
ஏணிக‌ள் செய்திடுங்கள்...

வ‌றுமையெனும் சிவ‌ப்புக்கோடிட்டு
சின்ன‌ இத‌ய‌ங்க‌ளை
சின்னாபின்ன‌மாக்கி விடாதீர்க‌ள்
ஒற்றுமைக் காக‌ங்க‌ளாக‌
கூவி அழைத்திடுங்க‌ள் குழ‌ந்தைக‌ளை
அவ‌ர்க‌ள் வ‌ள‌ர‌ட்டும்
வ‌ழிகாட்டுங்க‌ள் ஒளி த‌ருவார்க‌ள்
இல‌வ‌ச‌மாகிடுங்க‌ள்
இளைய‌வ‌ர்க‌ள் நாளைய‌
த‌லைவ‌ர்க‌ளாக‌ட்டும்...

சொந்த‌ சொகுசுக‌ளை குறைத்து -எதிர்கால‌த்தை
சொர்க்க‌மாக்கிடுங்க‌ள் க‌ல்வியை -எல்லாருக்கும்
சொந்த‌மாக்கிடுங்க‌ள்...