நல்வாழ்வின் விடியலாய் விடியட்டும்
கழிந்ததெலாம் கழிவாய் கழிந்து போகட்டும்
ஒளிர்வதெலாம் கனிவாய் மிளிர்ந்து பூக்கட்டும்
வலிகளெலாம் வழிந்து வரட்சியா கட்டும்
தளிர்களெலாம் வெடித்து விருட்சமாகட்டும்...
பூமிப்பந்தின் அடிநுனியாட்டங்களெலாம் அமைதியாகட்டும்
சாமிப்பழி சட்டங்களெலாம் சகோதரத்துவம் பேசட்டும்
அக்கிரமக் கனிகளின் அதிஸ்டங்களெலாம் அடியோடழியட்டும்
உக்கிரமான உண்மைக ளுயர்ந்துஜெயிக்கட்டும்...
ஊர்பிடிக்கும் ஏர்களெலாம் உயர்ச்சி காணட்டும்
யார்கேட்பினும் வரங்கள் வாரி கொடுக்கட்டும்
நீர்நிலைகள் யாவுமே செழித்து நிற்கட்டும்
பாரில்நற்பயன்கள் பயிராய் விழையட்டும்...
கல்விமுதற் கலைகள்யாவும் பொதுவுட மையாகட்டும்
செல்வஞ்சேர் மடமையெலாம் ஏழ்மையை தகர்க்கட்டும்
பொல்லாத சட்டங்கள் பொசுங்கியே சாகட்டும்
நல்வாழ்வை தந்திடும்விடியலாய் இவ்வாண்டு பிறக்கட்டும்...
வானவெடிகளின் பூரிப்பில் வசந்தவாழ்வு பூக்கட்டும்
தானதர்மங்களின் பயன்களால் புத்தாண்டு மகிழட்டும்
ஞானமழை பொழிந்திடும் ஞாலமுருவாகட்டும் -அன்புக்
கானமிசைத்திடும் மனங்களுக் கிறையருள்கிட்டட்டும்...!!!
Tuesday, December 25, 2012
"மீண்டு வந்த நாட்கள்" வெளியீட்டு விழாவும் எனது அநுபவமும்....
21.08.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணியளவில் வெள்ளவத்தை தமிழ்ச்சங்க மண்டப அரங்கில் இனிதான ஒரு மாலை வேளையில் மங்கள விளக்கேற்றும் நிகழ்வுடன் கவிஞர் வதிரி சி.ரவீந்திரன் அவர்களுடைய "மீண்டு வந்த நாட்கள்" கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா சிறப்பான ஓர் ஆரம்ப விழாவாக தொடங்கியது.
நிகழ்வுக்காக எனக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தாலும் இன்னுமொரு சிறப்பு விருந்தினருடன் செல்லும்சந்தர்ப்பம் கிடைத்ததால் இரு அழைப்பாக அவ்விடம் சென்றேன்.தமிழ்ச்சங்க விழாவில் கலந்துகொள்ளும் முதல் சந்தர்ப்பம் மகிழ்ச்சியோடும் ஒருவித படபடப்போடும் தான் சென்றேன்.அலங்கரிக்கப்பட்ட அரங்கத்தில் அதிகம் பேர் அமர்ந்திருக்கவில்லை அதனால் கொஞ்சம் பின்னால் இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டேன் படபடப்பும் காணாமல் போயேவிட்டது. முன் வரிசையில் சில பெண்கள் அமர்ந்திருந்தார்கள் எனக்கு அறிமுகமானவர்கள் என எவரும் தென்படவில்லை,ஆனால் நான் அறிந்த சில முகங்களை நேரடியாக கண்டதில் மிகுந்த மகிழ்ச்சியாயிருந்தது. சிலரை இவர்களாக இருக்கவேண்டுமென ஊகித்தேன் அநுமானம் சரியாகத்தான் இருந்தது. ஒவ்வொருவராக வந்து அமர்ந்ததும் சபையும் நிறைந்துவிட்டது.
கொழும்பு பல்கலைக்கழக கல்வியற்துறை பேராசிரியர் மா.கருணாநிதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் முதல் கட்டமாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்து வரவேற்புரை,நூல் அறிமுகம், வாழ்த்துரை, கருத்துரை என நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு வருகைதந்த பேராசிரியர்கள்,எழுத்தாளர்கள், சிறப்புவிருந்தினர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என அரங்கம் ஓர் அறிவியற்கூடமாக எனக்கு காட்சிதந்தது.
கவிஞர் திரு.மேமன்கவி அவர்கள் அங்குமிங்கும் ஓடியாடி ஓர் இளைஞனைப்போல இயங்கிக்கொண்டிருந்தார்.சகல வேலைகளிலும் மும்முரமாக சிரித்த முகத்துடனும்,ஓர் வேகத்துடனும் நிகழ்ச்சியை சிறப்பித்துகொண்டிருந்தார்.
மேடையில் பேசிய அனைவரின் பேச்சுக்களும் கவிஞஎ வதிரி சி.ரவீந்திரன் அவர்களைப்பற்றியதாகவும் அவரின் கவிதைகள், மற்றும் இலக்கியம் சார்ந்த விடயங்களாகவே இருந்தது அதனால் கருப்பொருள் பிரள்வடையாமல் எமது கருத்துக்களும் சிந்தனைகளும் நிகழ்வுக்குள்ளே சுவாரஸ்யமாய் சுற்றிவந்து கொண்டிருந்தது.பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளில் வேறு துறை சார்ந்த முக்கியஸ்தர்களின் பங்களிப்பு இருக்கும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் குறிக்கப்பட்ட விடயம் குறிதவறி விழுந்துகொண்டிருக்கும் அத்தகைய சம்பவங்களில் துளியேனும் இங்கு நடைபெறாதது மகிழ்வைத்தந்தது.
அடுத்ததாக மூத்த இலக்கியவாதியும் மல்லிகை ஆசிரியருமான ஜீவா அவர்களின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது அநுபவமும் முதிர்ச்சியும் அவருடைய பேச்சின் பெறுமதியை இன்னும் கூட்டியிருந்தது. அவர் குறிப்பிட்ட ஒருவிடயம், இன்றைய இளம் படைப்பாளர்களை பற்றியது அதாவது ஒரு தொகுப்பை வெளியிட்டதும் தங்களை பற்றிய பெறுமிதத்தில் இருப்பதாக சொன்னார் உண்மையில் அப்படி இருப்பதாக ஒத்துக்கொண்டாலும் இவர்களைப்போன்றவர்களை ஊக்கப்படுத்த வேண்டியதும் பொறுத்துக்கொள்ளவேண்டியதும் உங்களைப்போன்றவர்களின் கடமையல்லவா? இளம் இரத்தம் சில விடயங்களில் வேகம், சில விடயங்களின் ஆவல் நிமித்தமாகவும் பிழைகள் நடப்பது இயற்கையே. இளம் படைப்பாளிகளை வளர்த்துவிடுங்கள் ஐயா என என் மனம் கேட்டுக்கொண்டது.
நிகழ்ச்சிகளை அமைதியாக ரசித்துக்கொண்டிருந்தேன் நேரம் மிக மிக வேகமாக சுழன்றுகொண்டிருந்தது வந்திருந்த எவரும் என்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லை ஏனென்றால் என்னைதான் யாருக்கும் தெரியாதே.
இவ்விழாவினை முழுமையாக இருந்து பங்குகொள்ளவேண்டும் என்ற ஆவலிலே வந்தேன் ஆனால் போக்குவரத்து பிரச்சனை காரணமாகவும் நடைமுறையிலுள்ள சில நிகழ்வுகளின் பயம் காரணமாகவும் பாதி நிகழ்வுடன் எழுந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமர்ந்துகொண்டிருந்தேன் நேரத்தை பார்த்தவண்ணம். மாலை மயங்கிவிழும் நேரம் இருள் மெதுவாக தன் கரம் கொண்டு ஏந்த ஆயத்தமாகிக்கொண்டிருக்கையில் நானும் எனது சகோதரியுமாக இருக்கையைவிட்டு எழுந்தோம். மனம் வேண்டாம் என சொல்லியும் காலம் போ என கட்டளையிட்டுக்கொண்டிருந்தது வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்ட திருப்தியுடன் இனிய நினைவுகளை சுமந்தவண்ணம் பாதையை நோக்கிநடந்தேன்.
இலவசமாக்கிடுங்கள்
கல்வியக அனுமதிக்கு
சிபாரிசு கடிதம் தராதீர்
சமவுரிமை தந்திடுங்கள்...
ஏழை பணக்காரனென்ற தகுதி தவிர்த்து
கல்வித்தகுதி தந்திடுங்கள்
இருதிவரை போராடுவோமென்ற
கோஷங்கள் தவிர்த்து
கோரிக்கையாக்குங்கள்...
நாளைய தலைவர்கள் சிறுவர்களென்ற
சுயநல வார்த்தையை
சுதந்திரப்படுத்துங்கள்...
பெற்றுக்கொண்ட விளைநிலங்களில்
புற்களை வளர்க்காதீர்கள்
பணங்காய்க்கும் மரங்களாய்
பாடசாலைக்கு உரமிடாதீர்கள்...
சமத்துவத்தையும் சமாதானத்தையும்
அரிச்சுவடியிலே ஆரம்பித்திடுங்கள்
ஏற்றத்தாழ்வுகளை வெட்டியெறிந்து
வெற்றிகளை மட்டும் ஏந்திவர
ஏணிகள் செய்திடுங்கள்...
வறுமையெனும் சிவப்புக்கோடிட்டு
சின்ன இதயங்களை
சின்னாபின்னமாக்கி விடாதீர்கள்
ஒற்றுமைக் காகங்களாக
கூவி அழைத்திடுங்கள் குழந்தைகளை
அவர்கள் வளரட்டும்
வழிகாட்டுங்கள் ஒளி தருவார்கள்
இலவசமாகிடுங்கள்
இளையவர்கள் நாளைய
தலைவர்களாகட்டும்...
சொந்த சொகுசுகளை குறைத்து -எதிர்காலத்தை
சொர்க்கமாக்கிடுங்கள் கல்வியை -எல்லாருக்கும்
சொந்தமாக்கிடுங்கள்...
உறவுகளின் நிலையிதுவோ...
உறவென்று சொல்லியே உதறிவிட்டு செல்கையிலே
உள்ளமது வெம்பியே உள்ளுக்குள் ளழுகையிலே
உயிர்க்கூடு தனிமரமாய் உதிர்ந்தே போகிடுதே...
நட்பென்று நாசூக்காய் நாலுபேரு சொன்னாங்க
நானுமதை நிஜமாக உறவென்று நம்பினேங்க
நாலு நாளு பேசிட்டு நீங்கியே போனாங்க
நட்டநடு கடலிலே நட்புக்காய் நானுமுங்க...
ஆளில்லா ஊரிலே ஆறுதலு ண்டாகிடுமோ
நண்பரில்லா வாழ்வினிலே நிம்மதிதா நியங்கிடுமோ
உண்மைக் கிங்கேன் மதிபேதும் வழங்கவில்லை
உறுதியாய் இருதிவரை உறவுகளும் புலங்கவில்லை...
வான மேகமுமே வங்கக் கடற்கரையுமே
கொண்ட முடிச்சினை தொட்டு தொடருமே
வாங்கிவந்த பந்தமும் வலிதந்தே விலகுதே
உறவுகள் நிலையிதுவோ எண்ணிமனம் புலம்புதே...
ஆழ்வது மாள்வதும் மண்ணிலே நியதி
ஏழ்வதுந் தாழ்வதும் வாழ்வியல் பவனி வீழ்ச்
சியின் வடிவிலோர் விடியலின் மலர்ச்சி
சிந்தனையின் எழுச்சியில் சிகரம்போ லுயர்ச்சி...
குற்றஞ் சொல்லு லகைகுறையாய் நினைக்காதே
ஏற்றங் காண் பதிலுனக்குதவி மறக்காதே தற்
பெறுமையூ டதினால் தனித்துவ மிழக்காதே
பெற்ற பேற்றினையணைக்க சோம்பலினை வளர்க்காதே...
பட்டப் பாடுதனை கற்களாய் கொண்டிடு
திட்டங்கள் தீட்டியதை கோபுரமாய் நட்டிடு எட்ட
நின்றிடும் சிக்கலை வீரமா யுடைத்திடு
நிசப்தமான தென்றலாய் மீண்டுமீண்டுஞ் சுழன்றிடு...
வேகமாய் போவதெலாம் வெற்றியின் வடிவல்ல
யோகமாய் வாய்ப்பதெலாம் தோல்வியின் முடிவுமல்ல-வி
வேகமாய் நடப்பதுவே வாழ்வழியதின் வேட்கை
வேரூன்றி நிற்பதற்கு கிடைத்தநல் தீட்சை...
![]() |
கனவுக் கதவுகள் ..
|
வீங்கிய விழிகளுடனேயே
விடிந்ததெந்தன் இரவுகள்
விடையில்லா வினாவாய்
பாதையில்லா பயணமாய்
பரிதாபமாய் விம்மியழுகின்றேன்...
வெறித்தனமாய் எவரோ
என்இதயத்தை பிய்த்தெடுத்து
தீயிட்டதாய் உணர்கின்றேன்
ஸ்தம்பித்துப்போன சுவாசம்
உணர்வற்றுப்போன நடவடிக்கைகள்
ஊனமாகிக்கொண்டிருக்கும் என்
அத்தனை இயல்புகளும் ஐயகோ
அநியாயமாய் வலுவிழந்துகொண்டிருக்கிறது
வரப்போகுமந்த நொடிதனை
சந்திக்க முடியாதவளாய்
பயப்பிசாசு என் கழுத்தை
இறுக்கிக்கொண்டிருக்கின்றது..
ஊன்றிப்போன இந்த
வேரையறுத்துஉலகில்
வாழ்வதெங்ஙனம்...
கட்டிவைத்த கனவுக்கோட்டைகள்
அத்தியாய மத்தியாயமாய் வளர்ந்திருக்கின்றது
ஒற்றை நொடியில் அத்தனையும்
தகர்த்தெரிந்து விட்டு புன்னகைப்பதெங்ஙனம்..
இரக்கமேயில்லாமல் -என்
இளைய கவிகளை கசக்கியெறி(ரி)யும்
இந்த இதயமில்லாதவர்களை
என்னவென்பேன்..
எழுத்தில்லா விதியாய்
காம்பில்லா மலராய்
கடலில்லா கரையாய்
கண்ணில்லா இமையாய்
கலங்கி நிற்கின்றேன்...
கருக்கட்டிய என் கனவுகளை
நானே அழித்துக்கொண்டிருக்கின்றேன்
கதறக் கதற....
இந்த இரவும் விடிந்தது
வீங்கிய விழிகளுடன்...
என் காதல்
கை கோர்த்து பூங்காக்கள் தோறும்
பூரித்திட்டதில்லை...
கடற்கரை மணலில்
கால்கள் பதித்ததில்லை
காற்றுவாங்கி
காலாற காதல் வளர்த்ததில்லை...
காதலர்தின கொண்டாட்டங்களில்
களித்ததில்லை
பரிசுகளால்
பட்டைதீட்டப்பட்டதில்லை....
சந்துக்கள் தோறும் சந்தித்து
சமூகக் கண்களால்
சவுக்கடிவாங்கியதில்லை
ஊர்வாய்கள்
உமிழ்ந்து தூற்றியதில்லை...
உயிருக்குள் சுமந்து
உணர்வுகளை நேசித்து
உள்ளத்தால் வளர்த்த
உண்மைக்காதலிது...
இரவுகளின் துணையோடு
இதயத்தின் நாதங்களை
கவியாய் மொழிபெயர்த்த
காவியக்காதலிது...
வீணென்று சொல்வதற்கும்
வீண்வார்த்தகளிதிலில்லை
விளையாட்டாய் கோபித்து
செல்லமாய் சண்டையிட்டு
சமரசமான சாதாரணக்காதலில்லை...
பொத்தி பொத்தி பதுக்கிவைத்தும்
பொசுக்கென்று முளைவிட்டு விருட்சமாயிடா
கண்ணீர் குவளைக்குள்ளே
நினைவுகளால் நீந்திவரும்
நிறைவேறாக்காதலிது -என்
நிர்கதியான காதலிது...
[ இக்கவிதை வெற்றி FM ன்(30.05.2011) "காற்றின் சிறகுகள்" நிகழ்ச்சியிலும்
வசந்தம் தொலைக்காட்சியின் "தூவானம்" நிகழ்ச்சியில் 11.06.2011 லும் 22.06.2011 ல் தமிழ் ஓதர்ஸ் இணையத்திலும் 06.06.2011ல் வார்ப்பு இணையத்திலும் ஒளிபரப்பானது]
முறியடிக்கப்படாத முடிச்சுக்கள்
அலைகடல் நடுவே
அநாதரவாய் விடப்பட்ட
அகதிகளைப்போல என்
இதயவறைக்குள்
நீயில்லாத உன் நினைவுகள்...
தேயிலை செடிநடுவே
தேகமுறிஞ்சும் அட்டைகளாய் நம்
கடந்தகால கல்வெட்டுக்கள்
நிம்மதி சுவாசம் தர மறுக்கிறது...
பாவம் செய்தவன் மட்டும்
தண்டனை பெறுவதில்லை
அகதிமுகாமும் என்
காதலும் சொல்லுகிறது...
மனசாட்சி
உறுத்தல்கள் மனிதத்துள்
மரணித்துவிட்டதோ
சக்தியில்லாத சட்டங்களால் எனக்குள்
சந்தேகக்கோடுகள் நீயெனை
தூக்கியெறிந்த பிறகு...
நிலவு வானம் தாண்டிய
முன்னேற்றங்கள் இவ்வுலகில்
காதலும் தொழிலாளர் பிரச்சனையும் மட்டும்
காலத்தால் அழியாத காவியங்கள்...
கானல் நீரில்
முக்குளிக்கச்சென்ற காதலால் என்
கவிதைகளில் ஆழமான இடமுனக்கு...
புது வருடம் பிறக்குது
வசந்தம் எங்கள் வழிகளில் நின்று
சுகந்த கீதம் பாடுது
கசந்த வாழ்வின் கறைகள் போக்க
கசக்கியின்பம் ஊற்றுது...
சுகந்த கீதம் பாடுது
கசந்த வாழ்வின் கறைகள் போக்க
கசக்கியின்பம் ஊற்றுது...
காலைவானம் பாலைப்போல
தூயவிடியல் தருகுது
நாளை எங்கள் சோலைப்பூக்கள்
தாம்பூலந் தருவதாய்ச் சொல்லுது...
தூயவிடியல் தருகுது
நாளை எங்கள் சோலைப்பூக்கள்
தாம்பூலந் தருவதாய்ச் சொல்லுது...
கத்தியேந்தி வந்த நெஞ்சங்கள்
கைகள் கோர்க்கத்துடிக்குது
புத்திபுகட்டிய பத்திய வாழ்வு
புதிய பாதை திறக்குது...
கைகள் கோர்க்கத்துடிக்குது
புத்திபுகட்டிய பத்திய வாழ்வு
புதிய பாதை திறக்குது...
தேசம் எங்கள் தேசமென்று
பாசப்பறவைகள் பறக்குது
தோஷமென்று சொல்லி விரட்டிய
வேஷம் கலைந்து ஓடுது...
பாசப்பறவைகள் பறக்குது
தோஷமென்று சொல்லி விரட்டிய
வேஷம் கலைந்து ஓடுது...
புத்தம்புதிய கீதம்பாடி புதுவருடம் பிறக்குது
நித்தமெங்கள் இதயம்மகிழ புத்தாண்டு மலருது
தத்தம் செய்து அன்பைநாளும் வளர்த்திடுவோம்
சுத்தமான உலகமொன்றை இந்நாளில் இயற்றிடுவோம்...
நித்தமெங்கள் இதயம்மகிழ புத்தாண்டு மலருது
தத்தம் செய்து அன்பைநாளும் வளர்த்திடுவோம்
சுத்தமான உலகமொன்றை இந்நாளில் இயற்றிடுவோம்...
நிஜங்களைத்தொலைக்கும் நிஜங்கள்...
அலுவலகத்துக்கு போகும் அவசரத்தில் தனது ஈரத்தலையை பின்னலிட்டுக்கொண்டிருந்த அனிதாவிடம், 'ஏய் அனி இன்னக்கி நீ ரொம்ப அழகா இருக்க ஏதாவது ஸ்பெஷலா...'என்றாள் நண்பி ரம்யா. "எனக்கென்னடி ஸ்பெஷல் அந்த வயசெல்லாம் தாண்டி வந்திட்டன் இனிமேல்தான் ஸ்பெஷல் வரப்போகுதா...என சலித்துக்கொண்ட அனிதாவின் மனதை ரம்யாவினால் புரிந்துகொள்ளமுடிந்தது.
'ஏய் நம்ம ரெண்டு பேருக்குமே ஒரே வயசு, என்னவோ நீமட்டும் கிழவியாகிட்டத போல பேசுற....ரொம்ப பீல்() பண்ணாத உனக்கென்று ஒருத்தன் பிறக்காமலா போயிருப்பான் கொஞ்சம் பொறுமையா இருடி...என்றவளிடம், சரி போதும் போதும் எனக்கு நேரமாகுது...நான் போயிட்டு வாரன் என்று கிளம்பியவளின் வேதனை ரம்யாவின் ஊமைக்காயத்தையும் வலிக்கச்செய்தது.
அனிதாவும் ரம்யாவும் தமது தொழில் நிமித்தம் தங்கியிருக்கும் விடுதியில் அறிமுகமானவர்கள். ரம்யா அனிதாவின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக்கொள்வாள். சாதாரணதரக் குடும்பத்தில் பிறந்த அனிதா பெற்றாருக்கு இளையவளாய் பிறந்தவள். உயர்தரம் முடித்த கையோடு தலைநகரில் ஒரு தொழில் கிடைக்கவும் வந்து இணைந்துகொண்டாள்.குடும்பத்தில் அநேகமாக மூத்த பிள்ளைக்குத்தான் பொறுப்புக்கள் அதிகம். ஆனால் இவள் அப்படியல்ல, குடும்ப பாரத்தையும் தாண்டி தனது மூத்த சகோதரியின் பாரத்தையும் சுமக்கின்றாள்.இல்லத்தரசியான தாயார் சாதாரண குமாஸ்தாவாக பணிபுரியும் தந்தை, பாடசாலைக்கு செல்லும் தம்பி தங்கை, திருமணம் முடித்த கையோடு பிறந்த வீட்டுக்கு வந்திட்ட அக்கா என்ற உறுப்பினர்களை கொண்ட குடும்பம். கடந்த ஐந்து வருடங்களுக்கு முதல் அனிதாவின் அக்கா சுகுணா, தான் காதலித்தவனை பிடிவாதமாக மணம் முடித்தாள்.தன்னால் முடிந்தளவு செலவு செய்து மூத்த மகளின் திருமணத்தை குடும்ப கெளரவத்துக்கு பங்கம் ஏற்படாதவாறு நடத்திமுடித்தார் அனிதாவின் அப்பா.
சீரோடு புகுந்தவீட்டுக்குள் போன சுகுணா, தான் காதலித்தவனோடு சந்தோஷமாகவே குடும்பம் நடத்தினாள்.ஆனால் சுகுணாவின் கணவனோ குடும்ப பொறுப்புக்கள் இல்லாத ஊதாரியாக இருந்தான்.ஏனோதானோவென்று தொழிலுக்கு செல்வான் சிலநேரங்களில் நண்பர்களோடு இணைந்து ஊர்சுற்றுவதற்கும் கிளம்பிவிடுவான்.பெற்றோரின் உழைப்பில் சுகம் கண்டவனுக்கு இப்போது குடும்பம் என்று ஆனவுடன் அவனால் சமாளிக்க முடியாமல் பலப்பல பிரச்சனைகள் நாளும் வெடித்தது.சில நாட்களில் தனது அலட்சியத்தினால் தொழிலையும் இழந்து போனான்.
மாமா மாமியாரின் தொந்தரவும் நாளும் குடித்துவிட்டு சண்டையிடும் கணவனோடு குழந்தையை வைத்துக்கொண்டு அங்கலாய்க்கும் சுகுணா பிரச்சனைகளிலிருந்து விடுபட தாய் வீட்டுக்குள் அடைக்கலமானாள்.
வந்தவர்களை போவென சொல்லத்தெரியாத வீட்டார் பலமுறை சமரசம் பேசிப்பார்த்தார்கள் பலனில்லை. ஊரெல்லாம் வட்டிக்கு கடன் வாங்கி மனைவியின் நகைகளை அடகுவைத்து வாழும் கணவனோடு எந்த பெண்தான் சந்தோஷமாக வாழ்ந்துவிடுவாள்? சுமையோடு வந்தவள் இங்கே இறக்கிவைத்துவிட்டாள் அதைத்தான் இப்போது அனிதா சுமந்துகொண்டிருக்கிறாள்.அக்காவின் கடன்கள் அவளது மாதச்சம்பளம் விழுங்கிவிடும். சின்னச்சின்ன சந்தோஷங்களையும் அநுபவிக்காது தனது எதிர்காலத்தையும் சிந்திக்காது சிறுகச்சிறுக சேமித்து சீட்டுக்கட்டி பல கடன்களை கட்டி முடித்து நகைகளையும் மீட்டிருந்த்தாலும் அவளது மனமும் உடலும் இயந்திரமாகவே இயங்கிக்கொண்டிருக்கின்றது.
எத்தனை வேதனை இருந்தாலும் அதை வெளியே காட்டி கண்ணீர்விட்டு அநுதாபம் தேடமாட்டாள் ஏன் தனது நெருங்கிய நண்பி ரம்யாவிடம் கூட அடிக்கடி வேதனைப்பட்டுக்கொள்ளமாட்டாள்.
சினிமாவிலும் கற்பனையிலும் மாத்திரம் சில பெண்பாத்திரங்கள் இவ்வாறு அமைவதுண்டு ஆனால் நிஜத்தில் நூறுவிகிதம் சாத்தியமில்லை.அனிதா அதில் ஒருத்தி எப்போதும் கலகலப்பாகவே இருப்பாள் அவளின் நிலமையை சிந்தித்துக்கொண்டிருந்த ரம்யாவுக்கு நேரம்போனதே தெரியவில்லை வேகமாக தன்னை தாயார் செய்துகொண்டு அலுவலகத்துக்கு புறப்பட்டாள்.
ஓறரிவுள்ள புழுவுக்கும் கூட போராட்டமிருப்பது இயற்கை ஆறறிவுள்ள மனிதன் போராடுவது ஒன்றும் வியப்பில்லை என்றாலும் சாதாரண பெண்ணான அனிதாவின் போராட்டம் சிறியாதாக தோன்றவில்லை. சுயநலத்துக்காக எத்தனையோ மனித மனங்கள் பெற்றோர்களையே மதிக்காத இந்தக்காலத்தில் தன்னை நினைக்காமல் தன் குடும்பத்தையே சிந்தித்துக்கொண்டிருக்கும் அவர்களை விசாரித்து தேவைகளை நிறைவேற்றும் அவளது பொறுப்பை வியக்காமலிருக்க முடியவில்லை. அனிதாவைப்போல வாழ்க்கையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பல பெண்களுக்கு இறைவனே வழி காட்டவேண்டுமென மனம் பிரார்த்தித்துக்கொள்கின்றது.
புன்னகைக்காக விரியும் இதழ்களைத்தாண்டி அவள் இதயத்தில் சில்லிடும் வேதனையை நினைத்து என் உள்ளம்தான் நிஜமாக அழுதது ஆனாலும் கண்கள் ஈரமாக இருந்தது.
Monday, December 24, 2012
நீ மட்டும்தான் என் வாழ்க்கை!!
நீ மட்டும்தான்
என் வாழ்க்கை
நமக்கு மட்டுந்தான்
காதல் சொந்தம்
நம் காதலுக்குத்தான்
இந்த உலகம்
நம்மை வாழ்த்தத்தான்
இந்த இயற்கை
நாம் வாழத்தான்
இந்த அற்புதக்காதல்
நம் மூச்சுக்காற்றுத்தான்
இவ்வுலக சுவாசம்
நம் காதலை வெளிப்படுத்தத்தான்
இவ்வண்ண மலர்கள் என்று
நமதானவையாக மட்டும்
பார்த்தநம் காதல் கனவுகளை
இரத்தஞ் சொட்டச் சொட்டபிய்த்தெடுத்து
ஒரு கொடூர அரக்கனால்
விளையாடப்படுகின்றது
பார்த்துக்கொண்டிருக்கும் விழிகளுக்குள்
எனதுயிர் பிழியப்பட்டு
ஊற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது!!
தேடிக்கொண்டே இருக்கின்றது!!
தேடலின் பயணத்தில்
வேகத்தின் பிரயாசங்களில்
வெற்றுப்பிம்பமாய்
விழுந்துதெறிக்கின்றது மனம்...
ஓடியோடி களைத்த கால்கள்
தேடித்தேடி கனத்த இதயங்கள்
இறுதியில் பற்றிக்கொண்டதாய்
எதுவுமே இல்லாமல்...
மலரை நுகரும் வண்டுகளாய்
மாறி மாறி பறந்துதிரிந்தும்
மனதுக்கு இதமாய் எதுவும்
இன்னுமே கிட்டவில்லை...
கோடிக் கோடியாய்
கொட்டிக்கிடந்தும்
மாடி மாடியாய்
ஏற்றங்கண்டும் இதுவரை
முழுமையாயதனை அடையவில்லை...
அறிவுக்களஞ்சியங்கள்
அகிலத்தை ஆண்டாலும்
அகக்கலையகத்தை
ஆண்டுகொள்ள அவையின்னுமே
கிட்டிச்சேரவில்லை...
நேற்றைய பொழுதுக்காய்
இன்றைய பொழுதுகளை தொலைத்துக்கொண்டிருக்கும்
நாளை பொழுதுகள்
அடைந்துகொள்ள முடியாமல்
தேடிக்கொண்டே இருக்கின்றது
நிம்மதியெனும் ஜீவ ஊற்றினை...
(பூங்காவனம் கலை இலக்கிய சஞ்சிகை டிசம்பர் 2012 மாத இதழில் வெளிவந்தது)
முட்கள் முளைக்குஞ்சாபம்!!
வாழ்க்கை ஒரு நாடக மேடை
வாழ்தல் அதில் வேடக்காட்சி
உறவுகள் இங்கு பாத்திர அமைப்பு
உரிமைகள் எல்லாம் பொய்யின் அமைப்பு...
உன்னகை வெறும் அலங்காரச் சாயந்தான்
எண்ணினால் ஒவ்வொன்றும் பிரம்மையின் வடிவம்தான்
நட்பெல்லாம் வெறும் நேரக்கடத்தல்தான்
உட்பொருள் ஒன்றிலா மாயக்கிடக்கைதான்...
அன்பென்ற பொருளோ அட்டைப்பட புகழ்ச்சிதான்
ஆழமா யூடுருவா ஆயுள்ளில்லா பூச்சிதான்
வம்பென்றே விலகிடும் வலிமையில்லா உறவுதான்
நம்பிநீயும் சென்றிட்டால் வாழ்க்கையுனக்கு வலியேதான்...
பாசமழையில் நனைத்திடும் வார்த்தையெலாம் பொய்மைதான்
வாசம்வீசும் மல்லைகையாய் மலரும்நேசம் வெறுமைதான்
தேசச்சுவரில் மனிதமெலாம் தோற்றுப்போன காயந்தான்
நேசக்கொடிகள் வளர்த்துவிட்டால் முட்கள் முளைக்குஞ்சாபந்தான்...!!!
Monday, December 10, 2012
"ஒரு சுறங்கை பேரீச்சம் பழங்கள்" சிறுகதை தொகுதியில் என்னை
பாதித்தவை பற்றிய சிறுகுறிப்பு
யாத்ரா' கவிதை இதழின் ஆசிரியரும் இலங்கையின் சிறந்த எழுத்தாளரும், அறிவிப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களின் மொழி பெயர்ப்பு இலக்கியமான 'ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்' சிறுகதை தொகுதியானது ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட அரபுமொழியில் பிரசவமான மூலக்கதைகளாகும். அதனை தமிழிலக்கிய உலகுக்கு மொழிபெயர்த்து தந்துள்ளார் நூலாசிரியர்.
நூலின் முன்னுரையை பேராதனை பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் லறீனா அப்துல் ஹக் அவர்கள் அருமையாக ஆழமாக தந்திருப்பது, வாசலிலேயே வண்ண அலங்காரங்களுடனும் ஆனந்தத்துடனும் கிடைக்கும் வரவேற்புப்போல மிக நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது. நூலாசிரியர் பற்றியும் ஏனைய மொழி இலக்கியங்கள் பற்றியும் , இச்சிறுகதை பற்றிய விமர்சனமாகவும் தனது முன்னுரையை விரிவுபடுத்தி அழகுபடுத்தியிருப்பது இந்நூலுக்கு கிடைத்த மகுடமாக காணப்படுகிறதெனலாம். அதேவேளை நேர்த்தியான, தொகுபிற்கு பொருத்தமான அட்டைப்படமும் நூலுக்கு வலுசேர்த்திருக்கின்றது.
ஏனைய மொழி இலக்கியங்களை நாம் தரிசிக்கமுடியாமக்கு பல காரணங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவ்வாறான இலக்கியங்களை நாம் வாசிக்கும்போது அது எமது இலக்கிய வளர்ச்சிக்கும் வாசிப்பிற்கும் மிகுந்த உறுதுணையாக காணப்படுவதோடு பல்வேறுவகையான வார்த்தை நுட்பங்களையும் கலையம்சங்களையும் எமக்குள் ஊடறுத்துக்கொள்ள உதவுகின்றது.அப்பேருதவியை தமிழுக்கு தந்த நூலாசிரியரை வாழ்த்துவதோடு நன்றியினையும் கூற கடமைப்பட்டுள்ளோம்.
மொழிபெயர்ப்பு எனும் அம்சமானது மிகப்பெரிய சவாலான விடயமே.'கரணம் தப்பினால் மரணம்' எனும் கூற்றுக்கிணங்க மிகுந்த அவதானத்தோடு மேற்கொள்ளப்படவேண்டியது. இப்பாரிய விடயத்தினை ஆசிரியர் மிகத்திறம்பட ஆற்றியிருக்கின்றார் என்பதனை இந்நூலை வாசிக்கும்போது எம்மால் புரிந்துகொள்ளமுடிகின்றது.
இச்சிறுகதை தொகுதியில் முத்தான பத்து சிறுகதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.'கதையை படித்து முடிந்ததும் கூட அதன் தாக்கத்திலிருந்து யாராலும் உடனடியாக வெளிவர முடியாது' எனும் ஆசிரியரின் முன்குறிப்பு கூற்று மிகச்சரியானதே. ஏனெனில் இந்நூலை வாசித்துமுடித்த எனக்குள்ளும் அந்ததாக்கம் இளையோடியதை எனது அநுபவத்தினூடாக நான் கண்ட உண்மை.அதிலும் குறிப்பாக 'கருப்புப்பூனை' எனும் கதையே என்னை வெகுவாகப்பாதித்தது என்பதனையும் கூறவிரும்புகின்றேன்.
'விசர்நாய்க்கடி'என்ற முதலாவது சிறுகதை ஈராக்கின் அதிபர் சாதாம் ஹூசைன் ஆட்சிக்காலத்தை வெளிப்படுத்துவதாக சொல்லப்படுகின்றது. அதாவது ஓர் அடக்குமுறையுடன் கூடிய தான்தோன்றித்தன ஆட்சிமுறைமையினை மிகத்துல்லியமாக வெளிப்படுத்திநிற்கின்றது.
'புகையிரதம்' என்ற இரண்டாவது கதையும் யுத்தக்கொடூரத்தின் பிரதிபலிப்பை சிறுவர் பாத்திரப்படைப்பினூடாக அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாத்திரமும் நெஞ்சில் நிற்குமளவிற்கு ரசனையோடு ஆக்கப்பட்டிருப்பது எதிர்பார்ப்பினை அதிகரிக்கச்செய்யும் சூட்சுமமாக கையாளப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கேயுரிய விளையாட்டுத்தனங்கள், இயல்புகள் என்பனவும், கதை நகர்ந்துசெல்லும் விதமும் மிக ரசனை. கதையை வாசித்து முடித்ததும் குழந்தைகளை நினைத்து வருந்தாமல் இருக்கவே முடிவதில்லை.
'விற்பனைக்கான அற்புதங்கள்'சிறுகதை நகைச்சுவை ததும்பும் விதத்தில் "ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்" என்பதனை அருமையாக விளக்கியிருக்கும் இக்கதை மிகுந்த படிப்பினையை சொல்லியிருக்கின்றது. நூலின் பெயர்சொல்லும் 'ஒரு சுறங்கை பேரீச்சம்பழங்கள்' எனும் கதை 'மண் பொன் பெண்' எனும் மூன்று அம்சங்களில் 'பெண்' பற்றியதான மோகத்தின் இழப்பீடு பற்றிய மிக ஆழமான கருவை அற்புதமாக நகர்த்தியிருப்பதும் இக்கதையில் வரும் பாத்திரப்படைப்புக்களும் சுவாரஸ்யத்தை தருகின்றது.
'காஸாவிலிருந்து ஒரு கடிதம்' மனதை உருக்கும் அற்புதமான கதை. சொந்த மண்ணைவிட்டு வெளியேறிய நண்பனுக்கு எழுதப்படும் கடிதமாக இக்கதை செல்கின்றது. யுத்தத்தின் எதிரொலிகளையும் எது நடப்பினும் சொந்தமண்ணை விட்டு வெளியேறத்துணியாத காட்சியமைப்பும் நெஞ்சத்தை நெகிழச்செய்கின்றது.'கருப்புப்பூனை' முற்றிலும் மாறுபட்ட சுவாரஸ்யமான விடயத்தினை செதுக்கியிருக்கின்றது. எத்தனையோ ஆவி சம்பந்தமான கதைகளையும் உண்மைச்சம்பவங்களையும் படித்திருப்போம். ஆனால் இது முற்றிலும் வேறுபட்டு நிற்பது இவ்வாறான ஏனைய மொழி இலக்கியங்களின் மீதான ஆர்வத்தினை அதிகரிக்கச்செய்கின்றது என சொல்லலாம்.
இவ்வாறு 'சிவப்புப் புள்ளி' எனும் தலைப்பில் பெண்களின் அடிமைத்தனங்கள், திருமணம் என்ற பெயரில் இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இறுதியாக 'நெடுநாள்வாசி' என்ற தலைப்பில் சிறைவாசம் அநுபவிக்கும் ஓர் இராணுவ வீரனது கதையாகும். அவன் சிறை செல்லும் விதமும் சிறைக்குள் நடக்கும் சமபவங்களுமாக தொடர்கின்றது. இறுதி முடிவு நல்ல சுவாரஸ்யத்தோடு முடிவடைகின்றது. பார்க்கப்போனால், நாட்டிலுள்ள கல்விமான்கள், அரசியலுடன் சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள் என்று பலதரப்பட்ட ஆளுமை மிக்கவர்கள் இச்சிறையில் இருப்பது ஆச்சரியமாயும் வேதனையான விடயமாகவும் கணப்படுகின்றது. அதேவேளை இக்கதையில் அதிகமான பாத்திரப்படைப்புக்கள் காணப்படுவது 'சிறுகதை' என்ற தரத்தை மீறிவிட்டதோ என எண்ணத்தோன்றிற்று.ஆனால் சுவாரஸ்யம் குன்றாமல் வாசகரை சலிப்படையச்செய்யாமல் நகர்ந்தவிதம் பாராட்டச்செய்தது.
"ஒரு சுரங்கை பேரீச்சம்பழங்கள்" மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு நூலாகும். வேற்றுமொழி இலக்கியங்கள் மீதான ஈர்ப்பினை அதிகரிக்கச்செய்ய்யும் ஒவ்வோர் சிறுகதையும் தனித்தனிச்சிறப்புடன் காணப்படுவதோடு ஒவ்வொரு கதையின் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புக்களை தந்திருப்பது பொருத்தமானதாகவும் மிகப்பிரயோசனமானதாகவும் காணப்படுகின்றது. அரபுதேசத்து மக்களையும் அவர்களின் கலாச்சாரம், பண்புகள், குணாதிசயங்கள், உணவுவகைகள்,ஆளுமைகள், என ஓர் நீளமான அநுபவத்தினை இந்நூலினூடாக பெற்றுக்கொள்ளமுடிந்தது தமிழ்மொழி வாசகர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். எனவே மொழிபெயர்ப்பின் மூலம் ஓர் புதிய இலக்கியவீச்சுடன் தமிழிலக்கிய வரலாற்றில் தடம்பதித்திருக்கும் 'ஒரு சுரங்கை பேரீச்சம்பழங்கள்' நூலாசிரியர் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களுக்கு வாசகர்கள் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இன்னும் இதுபோன்ற பலமொழிசார் நூல்களை தமிழுலகிற்கு தரவேண்டுமென்று வாஞ்சிக்கின்றேன்.
Sunday, October 28, 2012
"தாக்கத்தி" கவிதை நூலின் மீதான ரசனைவெளிப்பாடு!!
அலையோசை அலவலாவும் அம்பாறை மாவட்டத்து சாய்ந்தமருதின் மைந்தன் கவிஞர் சம்சுதீன் ஜனூஸ் அவர்களின் கன்னிப்படைபாக கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கின்றது "தாக்கத்தி" எனும் நாமம் சூட்டப்பட்ட கவிதைத்தொகுப்பு.தலைப்பிலேயே தன் உண்ர்வுகளுக்கு உயிரூட்டி சாதாரண மக்களின் வாழ்வியலோடும் இயல்பான இயற்கையான மனவுணர்வுகளோடும் கோர்க்கப்பட்ட இத்தொகுப்பை கல்முனை தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் முதல் வெளியீடாக பிரசவமாக்கி பெருமைகொள்கின்றது.
ஆரம்பத்திலேயே ஆசிரியர் ஜனூஸ் அவர்கள் தனது கவிதையின் மீதும் அது உருவாக்கப்பட்ட விதம் குறித்தும் மிக அழகாக ஆணித்தரமாக ஒருவிடயத்தை குறிப்பிடுகின்றார். "உண்மைக்கு விலங்கிட்டும் பொய்மையை பூசி மினுக்கியும் யதார்த்தத்தை விழுங்கிவிட்டும் பொய்மைக்கால் குதிரையோடும் ஒடு 'எளவும்' விளங்காத ஒப்பனைகளோடும் பொம்மலாட்டமாட விருப்பமில்லை . எனது துயரங்களுக்கு துணைந்ன்ற நிதர்சனமான மொழியையே எனதான கவிதைகளுக்கு வரிகளாக்கியுள்ளேன். மேல்மிச்சமாய் கூட்டவும் இல்லை குறைக்கவும் இல்லை" என்ற அவரது மனவுணர்வை தொகுப்பின் எல்லா பக்கங்களிலும் உணரமுடிகின்றது. புதுக்கவிதையாக பூத்துநிற்கும் அத்தனை கவிதைகளும் வாசிப்பிற்கும் கவிதை நேசிப்பிற்கும் ஏற்றதாக யாத்திருப்பதை வாசித்தபின் நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள்.
ஒரு தந்தையின் எண்ணவோட்டத்தை தன் பிள்ளையின் மீதுள்ள ஆச்சரியங்களையும் எதிர்பார்ப்புக்களையும் "முத்தல்" என்ற தனது முதல் கவிதையிலேயே மொட்டவிழ்த்திருக்கின்றார்.
'எனதான பச்சிளம் பருவத்திற்கு
எதிமறையாக இருக்கின்றான் மகன்
யாம் சொல்வதை பார்க்கிலும்
அவனிடமிருந்து
உதிர்க்கின்ற ஒவ்வொரு வார்த்தையிலும்
உயிர் தெரிக்கின்றது'
'முத்தியது என்னால்
எனைவிடவும் முத்தலாய் இருக்கின்றான்
எனதான மகன்'
என்ற வரிகளில் இக்காலத்து பிள்ளைகளின் வயதுக்கு மீறிய சிந்தனை வளர்ச்சியையும் தேடலின் விளைவுகளையும் ஒரு தந்தையாக இருந்து விளக்கியிருக்கும் கவிஞரின் நிதர்சனமான பார்வையினை பாராட்டச்செய்கின்றது.
"அழகான பிச்சைக்காரி" என்ற தலைப்பில் நம் சமூகத்தில் காணப்படும் மிகக் கேவலமான மனித(மிருக) வக்கிரங்களை படம்பிடித்து காட்டியுள்ளார் கவிஞர். சவுக்கடியாய் வீசப்பட்டுள்ள வரிகள் உணர்வுள்ள மனங்களை தொட்டு அவர்கள் வெட்கப்படுவார்கள் என்றால் அது இக்கவிதையின் வெற்றியென்றே வாகை சூடலாம்.
"விரல் உரசி
ஒன்றுக்கு பத்து ரூபாய்
கொடுக்கும் சில விழிகளின்
விரசமான மோகவிண்ணப்பங்களில்
அந்த அழகான பிச்சைக்காரி
கூனிக்குறுகிப் போகின்றாள்"
என்ற வரிகளில் அடிமட்ட எண்ணங்கொண்ட காமப்பிசாசுகளை சுட்டிக்காட்டியுள்ளார் உணரப்படவேண்டிய வரிகள்.
இத்தொகுப்பின் பெயரிலே அதாவது "தாக்கத்தி" எனும் தலைப்பில் ஏழை விவசாயிகளின் தாக்கத்தி பற்றி கூறும் வரிகளில் நவீனத்தின் பாதிப்பையும் பழமையின் முறிவையும் அதனாலுண்டாகும் மனச்சோர்வுகளையும் வெளிப்படுத்தி வாசகனையும் வருந்தச்செய்திருக்கின்றார் கவிஞர்.இவ்வாறு ஒவ்வொரு தலைப்பின் கீழும் வாழ்வியல் யதார்த்தங்களை வரிகளாக்கி வாசகனை கவிதையின்பால் யாசகனாக்கிவிட்டிருப்பது தொகுப்பின் பெருமையே.
காதலை தொடாத கவிஞர்களில்லை எனும்போது கவிஞர் ஜனூஸ் அவர்கள் மட்டுமென்ன விதிவிலக்கா? "எனக்குள் பேசப்படுகின்ற தேவதை" "காதல் சருகுகள்" "மரணம்+அவள்" "காதல் சுனாமி" "ஈர்ப்புவிதி" போன்ற தலைப்புக்களில் காதல் பற்றிய அலசல்களையும் காதல் வலிகளையும் வரிகளாக்கி கவிதையின்பால் ஈர்ப்பை இழையோடவிட்டிருப்பது சிறப்பு. அதேவேளை 'பெண்களை புரியவில்லை'என்ற கவிதையில் கவிஞரின் வித்தியாசமான பார்வை வியக்கவைக்கின்றது
"எனக்கு ஏதுமென்றால் ஏங்கித்தவிக்கும்
என் அமாவின் அன்புக்கு அர்த்தம்
என்னவென்று புரியவில்லை" என்றும்,
"இறுதியில்
நான் நேசித்த காதலிக்கு
நேற்று திருமணமாம் என்று
யாரோ சொல்லிச் சென்றபோது
எனக்கு என்ன செய்வதென்றே
புரியவில்லை"
என்றும் பெண்களை பற்றியதான சந்தேகங்களை சீராய் கோர்த்துவிட்டிருப்பது பெண்கள் பற்றியதான புரிதலில் கவிஞர் இன்னும் சந்தேக உணர்வில் இருப்பது புரிகின்றது.
எந்தக்கவிதையை மேற்கோள்காட்டி விளக்கம் கொடுப்பதென்றே புரியவில்லை அத்தனை கவிதைகளிலும் நிதர்சனங்களை திரைவிலக்கி காட்டியிருப்பது வாசிப்பிற்கும் வாசகப்பார்வைக்கும் இதமாக இருக்கின்றது. இவ்வாறு புரட்டிய பக்கங்களில் புண்பட்ட நெஞ்சமாய் "அறிவிப்பாளனுக்கொரு அஞ்சலி" என்ற தலைப்பில் மனம் கலங்கியே நின்றதை மறுப்பதற்கில்லை. பலவருட நினைவுகளை முன்னிழுத்துச்சென்று வானொலி நிகழ்ச்சிகளுக்குள் ஊறிப்போன அந்த நாட்களையும் அறிப்பாளர் கனேஷ்வரன் ஐயா அவர்களின் நிகழ்ச்சியின் நினைவுகளையும் மீட்டுப்பார்த்ததில் மகிழ்ச்சியென்றாலும் அவரின் மரணசெய்தி ஏனோ மனதை நிதானமிழக்கச் செய்தது.
"இறந்தும் இறவாத
உனது நினைவலைகள்
தமிழ்கூறும் இதயமெங்கும்
இரு வரிக்கவிதைகளாய்
இனியெல்லாம் நிலைத்திருக்கும்" என்ற கவிஞரின் வரிகளோடு எனது அஞ்சலியையும் ஆத்மார்த்தமாய் தெரிவித்துக்கொள்கின்றேன் மெளனமாக.
சமூக அவலங்களில் ஒன்றான "கடன்" என்ற பிரச்சனை 'வட்டிக்காரி' என்ற கவிதையில் தலைநீட்டியுள்ளது. வெளிநாட்டு பயணத்தின் மோகம் வயதுபேதமின்றி ஆட்கொள்ளப்படுதலையும் அதனாலுண்டாகும் விளைவுகளையும் அநுபவித்தவர்களிடம் கேட்டால் புரியும். அதனை
'பாழாய்ப்போன
வெளிநாட்டாசை படுத்தியபாடு
வட்டியினால் வந்தது
என் வாழ்க்கைக்கு
நல்ல கேடு' என்று விளக்கியுள்ளார் கவிஞர்.
பொதுவாக சாதாரண ஒருவரின் கற்பனைக்கும் ஒரு கவிஞனின் கற்பனைக்கும் நிறைய வேறுபாடு காணப்படுகின்றது. கல்லையும் கலையாகக்காட்டும் வித்தை, கண்ணுக்கு தெரியாத விடயத்தையும் காட்சிப்படுத்தக்கூடிய வல்லமை ஒரு கலைஞனில் ஆயுதத்திற்கு உண்டு. அதனை கவிஞரின் பல கவிதைகளில் ரசிக்கமுடிந்தது. "இயற்கையின் பிரகடனம்" ஷாத்தான் குடிகொள்ளும் கன்னக்குழிகள்" போன்ற தலைப்புக்களில் கவிஞரின் கற்பனை அநுபவம் கவிதையை மெறுகேற்றியுள்ளது.
அதிகமாக ஊர்வழக்கில் கிராமத்து சாயலில் பல கவிதைகள் படைக்கப்பட்டிருப்பது நூலின் கனதியை அதிகப்படுத்தியிருக்கின்றது. அன்னையின் அன்பு, தந்தையின் அரவணைப்பு,கல்லூரி நினைவுகள், காதலின் ஸ்பரிசங்கள், வாலிபவிளையாட்டுக்கள்,கிராமத்தின் பசுமையான நினைவுகள் நிகழ்வுகள்,சமூகத்தின் மீதான கரிசனைகள், யுத்தத்தின் வடுக்கள் என்று ஏராளமான மனவுணர்வுகளில் படைத்திருக்கும் கவிஞர், கவிதைகளில் ஆங்காங்கே ஆங்கில சொற்பிரயோகத்தை பயன்படுத்தியிருப்பது வாசிப்பின்போது சிறிய இடறலை உணர்ந்தேன். பல இடங்களில் நகைச்சுவை உணர்வுகளை இழையோடவிட்டிருப்பது சிறப்பாக அமைந்திருக்கின்றது.
நான்கூறிய ஆங்கில சொற்பிரயோகமும் நகைச்சுவை உணர்வுகளுடன் சேர்ந்து இன்றைய விடலைப்பருவத்தின் 'காதல்' தரும் விளைவுகளையும்
"சாரதா இன்டைக்கு
'சைன்ஸ் படிக்குது
என்ட நண்பன் நல்லதம்பியோ
'சைக்கோ எபெக்டாகி'
அங்கொடைக்கு நன்கொடையாய் போயிட்டான்'
என்ற கவிதையில் மேற்கோள்காட்டலாம். ஆனாலும் இதற்கு பதில் தருவதைப்போல "வை திஸ் கொல வெறி" என்ற கவிதையில் ஒரு நிதர்சனமான உண்மையினை கண்டபோது வாயடைத்துப்போனேன். இங்கேதான் கவிஞர் வெற்றிபெற்று நிற்கின்றார். என்னதான் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் கொள்கைகள் கோட்பாடுகள் என கடைபிடித்தாலும் நிஜ வாழ்க்கையில் சில நெகிழ்வுகளையும் தளர்வுகளையும் சந்திக்கவேண்டியவர்களாகவே எமது சூழ்நிலைகள் பின்னப்பட்டுள்ளது.
இவ்வாறு சிறந்த அநுபவ நூலாக காணப்படும் கவிஞர் ஜனூஸ் அவர்களின் தாக்கத்தி கவிதையை நேசிக்கும் வாசிக்கும் யாசிக்கும் ஒவ்வொருவருக்கும் சிறந்த அநுபவத்தையும் திருப்தியையும் வழங்கும் என்பதில் சந்தேகமேயில்லை. வாழ்வியலையும் கலையையும் போலிகள் அகற்றப்பட்ட நிஜங்களையும் கவிதையாக்கி தந்த கவிஞரை மனப்பூர்வமாக வாழ்த்துவதோடு இன்னும் பல படைப்புக்களை அவரிடமிருந்து எதிர்பார்த்து விடைபெறுகின்றேன்
நன்றி
த.எலிசபெத் (ராஜ்சுகா)
Saturday, October 6, 2012
கன்னித்தமிழாகவே...
என்னைத்தோற்றுத்தான்
உன்னை வெல்லமுடிந்தது
நான் நானாக இருப்பதை விட
நான் நீயாக இருப்பதை விரும்பும்
நியாயவாதி நீ...
எழுத்துக்கள் எப்படியோ-உன்
எண்ணங்கள் மட்டும்
எனக்கு முரணானவை
இதயத்துக்கு வலிக்கும்-ஆனாலுன்
இதழ்கள் அப்பாவியாயிருக்கும்
மனம் புண்படும்-ஆனாலுன்
முகம் பால் வடிக்கும்...
பெண் விடுதலை சுதந்திரம் பற்றி
உன் எழுத்துக்கள் உக்கிரமாய்
குரல் கொடுத்திருந்தது -உன்னுடன்
சேர்ந்து உண்ணாத
பல நேரங்கள் எனக்கு
பட்டினியாய் கழிந்திருந்தது...
மனம் விட்டு பேசியது நம்
மணநாளில் மட்டுமாகக்கூட
இருந்திருக்கலாம்
மனம் திறக்கும் போதெலாம்-நீ
புத்தகம் திறந்துவைத்திருப்பாய்
இரவுகள் பகலாகவும்
பகல்கள் இரவாகவும்
வேற்றுக் கிரகவாசிபோல
வீட்டுக்குள் நீ...
நான் உன் அடிமையென்பதை
தெளிதமிழில் "இவள் மெளனி"யென்று
மற்றவர்களுக்காய் பட்டம் கொடுத்திருக்கிறாய்...
கடைத்தெரு முதல்
கல்யாண வீடுவரை என் பயணங்கள்
பாதை வெறுக்கும்
பாதங்களாகத்தானிருந்தது-என்
புடவை விண்ணப்பங்கள் கூட சில நேரங்களில்
புத்தகமாகத்தான் வீட்டுக்கு வந்திருக்கின்றன...
உன்னையே சுற்றும்
உள்ளமறியாது -நீ
உலகையே சுற்றிவந்தாய்
அரங்கம் காணா ஊமைகவிகளாய்
அந்தரங்கமாயெனை புதைத்துக்கொண்டிருக்கிறேன்...
தனிமை சாம்ராஜ்யத்தில் நான்
தலைமை வகித்தாலும்-நீ
மேற்பார்வைக்கேனும் வருவதில்லை
நான் உண்பதில் உறங்குவதில் உடுத்துவதில்
உன் விமர்சனம் ஆம் இல்லை மட்டுமே...
தமிழை சுவாசிக்கிறாய்
தலைவணங்குகிறேன்
தாரத்தின் சுவாசத்தையேன்
தண்டிக்கிறாய்
பரிசுகளும் பதக்கங்களும் நீ வென்றதாய்
படுக்கையறை முதல் பளிச்சிடுகிறது
பட்டம் கொடுத்தவர் எவரோ...
எனக்கான உன் விட்டுக்கொடுப்புகள் இல்லை
நான் பெற்றுக்கொண்ட உரிமை நீ
மீதம் வைக்கும் தேநீரொன்றுதான்...
உலகுக்கெலாம் தமிழூற்றிக்கொடுத்தாய்
நானின்றும் கன்னித்தமிழாகவே...
Friday, September 14, 2012
பகிர்வு கட்டுரை தொகுதி மீதான ரசனை வெளிப்பாடு
வல்வெட்டித்துறையைச்சேர்ந்த கணித ஆசிரியரும் எழுத்தாளருமான சீனா.உதயகுமார் அவர்களின் அண்மைய வெளியீடாக 'பகிர்வு'கட்டுரைத்தொகுதிஇலக்கியத்துள் கால்பதித்துள்ளது.முழுமையாக இந்நூலில் ஆசிரியர் உதயகுமார் அவர்கள் ஒரு சிறந்த வாசகனாய் நல்ல விமர்சகனாய் வெளிப்பட்டுள்ளார். தான் வாசித்த நேசித்த விடயங்களை மற்றவர்களோடு பகர்ந்துகொள்ளும்போது அது மற்றவர்களின் வாசிப்புத்திறனையும் வளர்த்துவிடுகின்றது அநத விடயத்தினை இக்கட்டுரை தொகுதியானது முழுமையாக மேற்கொண்டுள்ளது எனலாம்.
பகிர்வு எனும் பொருத்தமான தலைப்பும் அட்டைப்படமும் சிறப்பாக அமைந்துள்ளதுடன் நூலுக்கு அருட்திரு தமிழ்நேசன் அடிகளார் அவர்களின் கனதிமிக்க அணிந்துரை ம்க்கிய இடத்தினை பெறுகின்றது.புரிதலின் முழுமையினை இவ்வணிந்துரை மூலம் விளங்கிக்கொள்ளலாம்.அந்தவகையில் இத்தொகுப்பினை 4 பகுதிகளாக வகுத்து தனது கருத்தை கச்சிதமாக வழங்கியுள்ள தமிழ்நேசன் அடிகளாரின் பாணி நூலின் விளக்கங்களை இன்னும் இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியதாக அமைந்துள்ளமையை முக்கியமாக குறிப்பிடலாம்.
பரந்துபட்ட வாசிப்புத்தேடலுனூடாக தான் அநுபவித்த விடயங்களை வித்தியாசமான கோணத்தில் சுவாரஸ்யமாக பகர்ந்துள்ளவிதம் நூலின் மீதான ஆர்வத்தினை அதிகரிக்கின்றது எனலாம். 20 தலைப்புக்களில் அமைந்த கட்டுரை தொகுதியானது, "தங்கத்தமிழ் மலையின் பரகசியம்" எனு முதலாவது தலைப்பில் பேராசிரியர் கார்த்திக்கேசு சிவத்தம்பி அவர்களின் இலக்கியப்பணியின் விரிவினையும் பேராசிரியரின் ஆளுமையினையும் திறமைகளையும் சிறப்பாக எடுத்தியம்பி அவருக்கு 'தங்கத்தமிழ் மலை' என்ற மகுடத்தினையும் கொடுத்திருப்பது மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது.
'சிரிப்பில் தோன்றிய சிந்தனை சிற்பி' என கலைவாணர் என்.எஸ். கிருஸ்ணன் பற்றியும் அவரின் திறமைகள் சாதுரியங்கள் பற்றியும் தெளிவுபடுத்தி சிரிப்பின் மகத்துவத்தை தனது இரண்டாவது கட்டிரையுல் குறிப்பிட்டுள்ள ஆசிரியர் ஆறுதிருமுருகன் அவர்களையும் அவருடன் தான் பெற்ற நட்பினையும் நெகிழ்ந்து போற்றியுள்ளார்.அதேவேளை கவிஞர் மூ.மேத்தா அவர்களின் எழுச்சிமிக்க கவிதைகளை அடையாளப்படுத்தி விபரித்துள்ளமையும் பாடலாசிரியர் பா.விஜய் அவர்களின் பாடல்வரிகளை மேற்கோலிட்டு தனது ரசனை வெளிப்பாட்டை தந்துள்ள விதமும் லயிக்கச்செய்கின்றது. அதேவேளை ஈழத்து கவிஞர்கள் பற்றியும் அவர்களின் கவிதைகள் பற்றிய தேடலும் முக்கிய இடத்தினை பெறுகின்றது.
'சிந்தனை செய்! சிரி மனமே' எனும் தலைப்பில் ஆங்கில ஆசிரியரான ஷெரிடன் ,ஆபிரகாம் லிங்கன் ஆகியோரின் வாழ்க்கையினூடாக சிந்திக்கவும் சிரிக்கவும் கூடிய சம்பவத்தினை விபரித்துள்ளார். சாதியம் பற்றிய விடயத்தினை தொட்டு மிக நேர்த்தியான, சமூகம் சிந்திக்கக்கூடிய வகையில் ஆராய்ந்திருப்பது வரவேற்கக்கூடியது. சாதி ஒழிப்புபற்றிய பாடங்களும் ஆக்கங்களும் இலக்கியங்களும் அதாவது அதனை வகைப்படுத்தி தெளிவுபடுத்தும் விடங்களினால் உண்மையில் சாதியம் ஒழிந்துவிடப்போவதில்லை என்பதனை ஆழமாக சொல்லியுள்ள விதம் நிச்சயமாக சிந்திக்கச்செய்கின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது.
இவ்வாறு கல்வி, விளயாட்டு, சமூகம்சார்ந்த விடயங்கள், இலக்கிய கர்த்தாக்கள் என பல்வேறு தளங்களில் தனது கருத்துக்களை கட்டுரையாக்கியுள்ள ஆசிரியர் ஓர் சிறந்த விமர்சகராக வெளிப்பட்டுள்ளார்.வாசகர்களை நகரவிடாது பற்றிக்கொள்ளும்படியான இவரது எழுத்து உண்மையில் வாசிப்புக்கு ஏற்ற சிறந்த ஒரு தொகுதி என்பதில் ஐயமில்லை. அதேவேளை அணிந்துரையில் குறிப்பிட்டதுபோல 'ஒரு தொகுப்பிற்குள் பலவகையான கட்டுரைகளை கொண்டுவர முயற்சித்திருக்காமல் ஒரே வகையான கட்டுரைகளை மட்டும் கொண்டுவந்திருந்தால் நூலின் கனதி இன்னும் அதிகரித்திருக்கும்' என்ற கருத்தினை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.
புதியதேடல், வித்தியாசமான பார்வை, சுவாரஸ்யமான ரசனை வெளிப்பாடு, இலகுவான மொழிநடை என்ற பல்வேறு அம்சங்களை தாங்கி வந்துள்ள 'பகிர்வு' கட்டுரை தொகுதியானது இலக்கியத்தில் முக்கிய இடத்தினை வகிக்கக்கூடிய தரத்துடன் பிரசவமாகியுள்ளது. செம்மையாக அதனை தந்த ஆசிரியர் சீனா.உதயகுமார் அவர்களுக்கு வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இன்னும் பல சமூகத்துக்கு வரமாகக்கூடிய நூலகளை வழங்கவேண்டுமென்ற பிரார்த்தனைகளையும் சமர்ப்பிக்கின்றேன்.
நூல்: பகிர்வு கட்டுரை தொகுதி
ஆசிரியர்: சீனா.உதயகுமார்
தொடர்புகளுக்கு:0783015144
நன்றி!

Thursday, September 6, 2012
ஓர் ஆணின் வெற்றி தோல்விக்கு பின்னால்........ 29.06.2016 கல்குடா நேசன் இணையத்தில்
ஓர் ஆணின் வெற்றி தோல்விக்கு பின்னால்...
'ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே' என்று ஆடவர்களின் வாழ்வியலை, அவர்களின் வெற்றி தோல்விகளை பெண்களின் தலையில் திணித்துவிட்டு/ பழி சொல்லிவிட்டு தப்பித்துக்கொள்வது இந்த ஆண்களின் வேலையாகிவிட்டது. ஒருவரது திறமை, நற்பண்புகள், அறிவாற்றல், அநுபவம் என பல்வேறு காரணிகளால்தான் ஒவ்வொருவரினதும் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என சொல்லும்போது அதனை ஏற்றுக்கொள்ளமுடியாதுள்ளது.
பெண்களால் அழிந்தவர்கள் என பார்க்கும்போது,அது ஆண்களின் பழக்கவழக்கங்கள், 'பெண்மோகம்' எனும் பற்பலான அம்சங்களால் தாங்களாகவே தேடிக்கொள்ளும் விபரீதமே தவிர இது பெண்களால் ஆனது என சொல்லமுடியாது. இதற்கு உதாரணமாக சில ஆண்களின் அந்தரங்க வாழ்க்கை அநுபவங்களை கிளறிப்பார்த்தால் நன்றாக புரியும்.
இங்கேயும் இவ்வெற்றி தோல்விகளை அண்மையில் நான் வாசித்து என்னை சிந்திக்க வைத்த இரண்டு ஆண்களின் வாழ்க்கையினை வைத்து நம் வாதத்தினை இலகுவாக விளங்கலாம்.இவர்களின் வாழ்க்கையில் 'பெண்கள்' எனும் அம்சம் எவ்வாறு பங்குவகிக்கின்றது,உண்மையான வெற்றி தோல்வி என்பது என்ன என்பதுபற்றி அறியலாம்.
ஆண் பெண்(கணவன் மனைவி)உறவென்பது ஒருவர் பாவிக்கும் பற்தூரிகை போன்றது. இதற்குமேல் ஒரு விளக்கம் தேவையில்லை என எண்ணுகின்றேன். ஆனால் அதற்காக குறிப்பிட்ட காலம் பாவித்துவிட்டு புதிய பற்தூரிகை ஒன்றை வாங்கவேண்டுமே என்றெல்லாம் கேட்கக்கூடாது.
தெளிவுபடுத்துவதற்காக அல்லது வலியுறுத்திக்கூறுவதற்காகத்தான் அந்த உதாரணம். சரி விடயத்துக்கு வருவோம்.
நெப்போலியனிம் குதிரைப்படை வீரனுக்கும் படைத்தலைவனின் பெண் ஒருத்திக்கும் 1802ல் பிறந்த அலெக்ஸாண்டர் டுமாஸ் ஓர் சிறந்த எழுத்தாளர். தான் வாழ்ந்த 60 ஆண்டு காலப்பகுதியில் 1200 புத்தகங்களை எழுதி சாதனைப்படைத்த இவரே உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளன் என்றும் உலகில் எந்த எழுத்தாளனும் சம்பாதிக்காத அளவுக்கு எழுத்தின்மூலம் சம்பாதித்தவர் என்றும் அழைக்கப்படுகின்றார். 1823ல் பாரிஸுக்கு சென்ற இவர் எழுடுமாஸ் எழுதிய 'மூன்றாம் ஹென்றி' என்ற நாடகம் பெருமையை தேடித்தந்ததோடு மக்கள் மத்தியில் வரவேற்பையும் புகழையும் பணத்தையும் அள்ளிவழங்கியது.
இவ்வாறு தனது திறமையினால் உயர்நிலைக்கு வந்த டுமாஸ் பெண்மோகத்தினால் உயரம், குள்ளம், சிவப்பு, கருப்பு என பல வண்ணப்பெண்களின் அழகு அவரை ஆட்டிப்படைத்ததாக சொல்லபடுகின்றது. அதனால் அவரது மனைவி தனது குழந்தையுடன் அவரைவிட்டுப்பிரிந்து சென்றார் இப்பிரிவு அவரது காதல் லீலைகளுக்கு வசதியாகாப்போக எப்போதும் பெண்களின் மத்தியிலேயே காலங்கடத்தத்தொடங்கிய டுமாஸ் இப்பழக்கத்தினால் தனது அத்தனை சொத்துக்களையும் இழக்கத்தொடங்கினார். இறுதியில் குடியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்கமுடியாது தனது ஆடைகளை விற்றே வாழ்ந்தார்.
'கலையின் சிகரம்' என பெர்னாட்ஷாவினால் அழைக்கப்பட்ட எழுத்தாளர் அலெக்சாண்டர் டுமாஸ் தனது முறைகேடான பழக்கத்தினாலும் கண்ணியமில்லாத பண்பினாலும் சம்பாதித்த அனைத்தையும் இழந்து கடைசியாக 1870ம் ஆண்டு இவ்வுலகைவிட்டு மறைந்தார்.
இதனை அழிவதும் பெண்ணாலே என சொல்லமுடியாது ஒருவனின் தனிப்பட்ட விடயங்களே ஆதிக்கம் செலுத்துகின்றது என அதிக விளக்கம் சொல்லாமலே விளங்கிக்கொள்ளமுடியும். அதுபோலவே இன்னுமொரு பிரபலமான ஒருவரின் வாழ்க்கை முறையை பார்ப்பதினால் அறியலாம். அவர்தான் உலகில் முதலாவது பணக்காரரான 'மைக்ரோ சொப்ட்' நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ். இவர் பல வெற்றி தோல்விகளை சந்தித்தே இப்பெரிய நிலமைக்குள் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.
பில்கேட்ஸை பற்றி நாம் அதிகம் அறிந்திருப்பதால் அதுபற்றி பேசத்தேவையில்லை ஆனால் அவர்பற்றி கவிஞர் பா.விஜய் அவர்கள் தனது கவிதையில் சொல்லியிருக்கும் ஒரு விடயத்தினை நோக்குவதன் மூலம் நமது தலைப்பிற்கு தேவையான விடயத்தினை பெற்றுக்கொள்ளலாம்.
"கேட்ஸின் வெற்றிக்கு
ஒரு அந்தரங்க காரணம் அவர்
அறையில் வீசியதே இல்லை
அழகிகளின் வாசனை"
எத்தனை அழகான வரிகளில் எத்தனை ஆழமான, ஓர் பெரிய விடயத்தினை தெளிவாக எடுத்தியம்பியுள்ளார். இக்கவிதையில், 'அவர் அறைகளில் வீசியதே இல்லை ஒரு பெண்ணின் வாசனை' என குறிப்பிடவில்லை மாறாக 'அழகிகளின் வாசனை' என்றே குறிப்பிட்டுக்காட்டுகின்றார்.
இதன்மூலம் நாம் மிக தெளிவாக ஒரு விடயத்தினை விளங்கிக்கொள்ளலாம். ஓர் ஆணின் வெற்றி தோல்விக்கு பின்னால் 'ஒரு பெண்' என்று சொல்வதைவிட அவனின் திறமையும் சிறந்த பண்புகளுமே என்று கூறுவதுதான் சாலச்சிறந்தது என்பதனை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நீண்ட நாட்களாக மனதில் ஓடிக்கொண்டிருந்த விடயம் இந்த இருவரின் வாழ்க்கை முறைமை அதற்கு கைகொடுத்துவிட்டது. ஏதோ நான் சொல்லவந்ததை சொல்லிவிட்டேன் மிக்க மகிழ்ச்சி.
நன்றி!
த.எலிசபெத்

Subscribe to:
Posts (Atom)