'ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே' என்று ஆடவர்களின் வாழ்வியலை, அவர்களின் வெற்றி தோல்விகளை பெண்களின் தலையில் திணித்துவிட்டு/ பழி சொல்லிவிட்டு தப்பித்துக்கொள்வது இந்த ஆண்களின் வேலையாகிவிட்டது. ஒருவரது திறமை, நற்பண்புகள், அறிவாற்றல், அநுபவம் என பல்வேறு காரணிகளால்தான் ஒவ்வொருவரினதும் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என சொல்லும்போது அதனை ஏற்றுக்கொள்ளமுடியாதுள்ளது.
பெண்களால் அழிந்தவர்கள் என பார்க்கும்போது,அது ஆண்களின் பழக்கவழக்கங்கள், 'பெண்மோகம்' எனும் பற்பலான அம்சங்களால் தாங்களாகவே தேடிக்கொள்ளும் விபரீதமே தவிர இது பெண்களால் ஆனது என சொல்லமுடியாது. இதற்கு உதாரணமாக சில ஆண்களின் அந்தரங்க வாழ்க்கை அநுபவங்களை கிளறிப்பார்த்தால் நன்றாக புரியும்.
இங்கேயும் இவ்வெற்றி தோல்விகளை அண்மையில் நான் வாசித்து என்னை சிந்திக்க வைத்த இரண்டு ஆண்களின் வாழ்க்கையினை வைத்து நம் வாதத்தினை இலகுவாக விளங்கலாம்.இவர்களின் வாழ்க்கையில் 'பெண்கள்' எனும் அம்சம் எவ்வாறு பங்குவகிக்கின்றது,உண்மையான வெற்றி தோல்வி என்பது என்ன என்பதுபற்றி அறியலாம்.
ஆண் பெண்(கணவன் மனைவி)உறவென்பது ஒருவர் பாவிக்கும் பற்தூரிகை போன்றது. இதற்குமேல் ஒரு விளக்கம் தேவையில்லை என எண்ணுகின்றேன். ஆனால் அதற்காக குறிப்பிட்ட காலம் பாவித்துவிட்டு புதிய பற்தூரிகை ஒன்றை வாங்கவேண்டுமே என்றெல்லாம் கேட்கக்கூடாது.
தெளிவுபடுத்துவதற்காக அல்லது வலியுறுத்திக்கூறுவதற்காகத்தான் அந்த உதாரணம். சரி விடயத்துக்கு வருவோம்.
நெப்போலியனிம் குதிரைப்படை வீரனுக்கும் படைத்தலைவனின் பெண் ஒருத்திக்கும் 1802ல் பிறந்த அலெக்ஸாண்டர் டுமாஸ் ஓர் சிறந்த எழுத்தாளர். தான் வாழ்ந்த 60 ஆண்டு காலப்பகுதியில் 1200 புத்தகங்களை எழுதி சாதனைப்படைத்த இவரே உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளன் என்றும் உலகில் எந்த எழுத்தாளனும் சம்பாதிக்காத அளவுக்கு எழுத்தின்மூலம் சம்பாதித்தவர் என்றும் அழைக்கப்படுகின்றார். 1823ல் பாரிஸுக்கு சென்ற இவர் எழுடுமாஸ் எழுதிய 'மூன்றாம் ஹென்றி' என்ற நாடகம் பெருமையை தேடித்தந்ததோடு மக்கள் மத்தியில் வரவேற்பையும் புகழையும் பணத்தையும் அள்ளிவழங்கியது.
இவ்வாறு தனது திறமையினால் உயர்நிலைக்கு வந்த டுமாஸ் பெண்மோகத்தினால் உயரம், குள்ளம், சிவப்பு, கருப்பு என பல வண்ணப்பெண்களின் அழகு அவரை ஆட்டிப்படைத்ததாக சொல்லபடுகின்றது. அதனால் அவரது மனைவி தனது குழந்தையுடன் அவரைவிட்டுப்பிரிந்து சென்றார் இப்பிரிவு அவரது காதல் லீலைகளுக்கு வசதியாகாப்போக எப்போதும் பெண்களின் மத்தியிலேயே காலங்கடத்தத்தொடங்கிய டுமாஸ் இப்பழக்கத்தினால் தனது அத்தனை சொத்துக்களையும் இழக்கத்தொடங்கினார். இறுதியில் குடியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்கமுடியாது தனது ஆடைகளை விற்றே வாழ்ந்தார்.
'கலையின் சிகரம்' என பெர்னாட்ஷாவினால் அழைக்கப்பட்ட எழுத்தாளர் அலெக்சாண்டர் டுமாஸ் தனது முறைகேடான பழக்கத்தினாலும் கண்ணியமில்லாத பண்பினாலும் சம்பாதித்த அனைத்தையும் இழந்து கடைசியாக 1870ம் ஆண்டு இவ்வுலகைவிட்டு மறைந்தார்.
இதனை அழிவதும் பெண்ணாலே என சொல்லமுடியாது ஒருவனின் தனிப்பட்ட விடயங்களே ஆதிக்கம் செலுத்துகின்றது என அதிக விளக்கம் சொல்லாமலே விளங்கிக்கொள்ளமுடியும். அதுபோலவே இன்னுமொரு பிரபலமான ஒருவரின் வாழ்க்கை முறையை பார்ப்பதினால் அறியலாம். அவர்தான் உலகில் முதலாவது பணக்காரரான 'மைக்ரோ சொப்ட்' நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ். இவர் பல வெற்றி தோல்விகளை சந்தித்தே இப்பெரிய நிலமைக்குள் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.
பில்கேட்ஸை பற்றி நாம் அதிகம் அறிந்திருப்பதால் அதுபற்றி பேசத்தேவையில்லை ஆனால் அவர்பற்றி கவிஞர் பா.விஜய் அவர்கள் தனது கவிதையில் சொல்லியிருக்கும் ஒரு விடயத்தினை நோக்குவதன் மூலம் நமது தலைப்பிற்கு தேவையான விடயத்தினை பெற்றுக்கொள்ளலாம்.
"கேட்ஸின் வெற்றிக்கு
ஒரு அந்தரங்க காரணம் அவர்
அறையில் வீசியதே இல்லை
அழகிகளின் வாசனை"
எத்தனை அழகான வரிகளில் எத்தனை ஆழமான, ஓர் பெரிய விடயத்தினை தெளிவாக எடுத்தியம்பியுள்ளார். இக்கவிதையில், 'அவர் அறைகளில் வீசியதே இல்லை ஒரு பெண்ணின் வாசனை' என குறிப்பிடவில்லை மாறாக 'அழகிகளின் வாசனை' என்றே குறிப்பிட்டுக்காட்டுகின்றார்.
இதன்மூலம் நாம் மிக தெளிவாக ஒரு விடயத்தினை விளங்கிக்கொள்ளலாம். ஓர் ஆணின் வெற்றி தோல்விக்கு பின்னால் 'ஒரு பெண்' என்று சொல்வதைவிட அவனின் திறமையும் சிறந்த பண்புகளுமே என்று கூறுவதுதான் சாலச்சிறந்தது என்பதனை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நீண்ட நாட்களாக மனதில் ஓடிக்கொண்டிருந்த விடயம் இந்த இருவரின் வாழ்க்கை முறைமை அதற்கு கைகொடுத்துவிட்டது. ஏதோ நான் சொல்லவந்ததை சொல்லிவிட்டேன் மிக்க மகிழ்ச்சி.
நன்றி!
த.எலிசபெத்
No comments:
Post a Comment